Thursday, September 15, 2011

வேண்டாம்! வேண்டாம்! அணு உலை வேண்டாம்! - ரவிக்குமார்,





''வேண்டாம்! வேண்டாம்! அணு உலை வேண்டாம்!'' நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் ஒரே குரலில் எழுப்பிய இந்த முழக்கத்தைத் தாங்க முடியாமல் அதிகாரிகள் காதுகளை மூடிக்கொண்டார்கள். மாவட்ட கலெக்டர் கூட்டத்திலிருந்து 'தப்பித்தால் போதுமென்று' ஓடி விட்டார். கடந்த ஆறாம் தேதி கூடங்குளம் அணுமின் நிலையத்தில் புதிதாக சேர்க்கப்படவிருக்கும் நான்கு அணு உலைகள் குறித்த பொதுமக்கள் விசாரணை திருநெல்வேலியில் நடைபெற்றபோது கண்ட காட்சிகள் இவை.
'ரகசியமாக' நடத்தப்பட்ட அந்த விசாரணை பற்றி சுற்றுச்சூழலில் ஆர்வம் கொண்ட ஒரு நண்பர் மூலமாக அறிந்ததும் உடனே கிளம்பி நானும் திருநெல்வேலி சென்றேன். எனது கருத்துக்களை, எதிர்ப்பை ஆங்கிலத்தில் ஒரு மனுவாகத் தயாரித்து எடுத்துச் சென்றிருந்தேன்.
இப்படியான பொது மக்கள் விசாரணையை நன்றாக விளம்பரப்படுத்தி நடத்த வேண்டும். அதற்கு முன்னால் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சுற்றுச்சூழல் குறித்து செய்துள்ள ஆராய்ச்சி அறிக்கையை (Environment Impact Assessment-EIA)  பொதுமக்களுக்கு விநியோகிக்க வேண்டும் என்பது தான் விதி. ஆனால் இந்தப் பொது விசாரணை ஏறத்தாழ ரகசியமாகவே நடத்துவதற்கு திட்டமிடப்பட்டது. இதற்கான அறிவிப்பு 'எகனாமிக் டைம்ஸ்' பத்திரிகையில் விளம்பரப்படுத்தப்பட்டது. தமிழில் 'தினகரன்' நாளேட்டில் மட்டும் தான் விளம்பரம் வந்தது. அப்படியும் விழிப்போடிருந்த பொதுமக்கள் நூற்றுக்கணக்கில் திரண்டு விட்டனர். கடலையே நம்பி வாழும் மீனவ மக்கள் தான் திரண்டவர்களில் அதிகம்.
கல்பாக்கத்தில் உள்ள அணு உலைகளுக்கும், கூடங்குளத்தில் நிறுவப்படும் அணு உலைகளுக்கும் அடிப்படையாக ஒரு வேறுபாடு உள்ளது. கூடங்குளம் அணு உலைகள் நல்ல தண்ணீரைக் (Fresh Water) குளிர்விப்பானாக (Coolant) பயன்படுத்துபவை. இதை 'வி.வி.இ.ஆர். 1000' வகை எனக் குறிப்பிடுகிறார்கள். இந்த வகை அணு உலைகள் 1975க்குப்பிறகுதான் உலகில் அறிமுகமாயின. தற்போது இருபது வி.வி.இ.ஆர். அணு உலைகள் உலகில் இயங்கி வருகின்றன. அவற்றில் ஏழு உலைகள் ரஷியாவிலும், பதினோரு உலைகள் உக்ரேனிலும், இரண்டு உலைகள் பல்கேரியாவிலும் உள்ளன. மேலும் 25 அணு உலைகள் கட்டப்பட்டு வந்தன. செர்னோபில் விபத்துக்குப்பிறகு அவற்றில் 18 அணு உலைகள் கைவிடப்பட்டு கட்டுமானப் பணி பாதியோடு நிறுத்தப்பட்டது. இந்த அணு உலைகள் பூகம்பங்களைத் தாங்கும் சக்தியற்றவை என்பதே அதற்கு முக்கிய காரணம்.
திருநெல்வேலி பகுதி பூகம்ப ஆபத்து உள்ள பகுதி என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். சமீபத்தில் 'சுனாமி' தாக்கிய நாகர்கோவில் கடல் பகுதிக்கு மிக அருகாமையில் அமைந்துள்ளது கூடங்கும். கூடங்குளம் அணு உலைகளை அமைக்கத் திட்டமிட்டபோது 'சுனாமி' ஆபத்து பற்றி அதில் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. பூகம்ப வாய்ப்புகள் குறித்தும் கவலைப்படவில்லை.
இந்தப் பொது விசாரணையில் நான் அளித்த 'ஆட்சேபனை மனுவில்' ஒரு பிரச்சனையை மட்டும் தான் நான் குறிப்பிட்டிருந்தேன். ஏற்கனவே தண்ணீர் பற்றாக்குறையுள்ளது நெல்லை. இந்த அணு உலைகளுக்கான தண்ணீர் பேச்சிப்பாறை அணையிலிருந்து எடுக்கப்படும் என்று கூறப்பட்டிருப்பதால் அதனால் ஏற்படப்போகும் விளைவுகளைப்பற்றிய எனது கவலைகளை நான் எனது மனுவில் எழுப்பியிருந்தேன்.
''கூடங்குளத்திலிருந்து மேற்கில் 65 கி.மீ. தொலைவில் உள்ள பேச்சிப்பாறையிலிருந்து தண்ணீர் கொண்டுவரப்படும் என அறிக்கையில் (Environment Impact Assessment-EIA.) கூறியுள்ளனர். கட்டப்படவுள்ள நான்கு அணு உலைகளைச் சேர்த்து மொத்தமாக ஆறு அணு உலைகளுக்கும் நாளொன்றுக்கு 30891 க்யூபிக் மீட்டர் தண்ணீர் தேவைப்படும். அவ்வளவு தண்ணீரை எடுத்தால் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் பாலைவனம் ஆகிவிடும் என்பதுதான் எனது வாதம்.
நூறு ஆண்டுகளுக்கு முன்னால் 1906ல் கட்டப்பட்ட பேச்சிப்பாறை அணை 1963க்குப்பிறகு தனது முழு கொள்ளளவை எட்டியதில்லை. அந்தப்பகுதியில் போதுமான மழை இல்லை என்பதை புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. கடந்த எண்பத்தெட்டு ஆண்டுகளில் (1901\1989) பதினோரு ஆண்டுகள் கடும் வறட்சியும் 41 ஆண்டுகள் வறட்சியும் நிலவியதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது 88 வருடங்களில் 52 வருடங்கள் வறட்சி. இதுமட்டுமல்லாமல் கோதையாறு ஆற்றுப்படுகையும் கூட போதுமான நீரின்றியே உள்ளது.
இந்த நிலையில் இருக்கிற தண்ணீரிலும் பெரும் பகுதியை அணு உலைகளுக்கு எடுத்துக் கொண்டால் பொதுமக்களின் நிலை என்ன ஆவது? தற்போது பொதுமக்கள் அந்தப்பகுதியில் பயன்படுத்தி வரும் தண்ணீரில் 38 சதவீதம் தண்ணீர் கூடங்குளத்துக்குத் தேவைப்படுகிறது. அந்தப் பகுதியில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளும் பயன்படுத்துவது போல ஐந்து மடங்கு தண்ணீர் கூடங்குளத்துக்கு வேண்டும். திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலுள்ள கால்நடைகள் அனைத்துக்கும் தேவைப்படுகிற தண்ணீரைப் போல மூன்று மடங்கு தண்ணீரை கூடங்குளம் அணு உலைகள் குடித்து விடும்.
அணு உலைகள் இயங்குவதற்கு தண்ணீர் இருந்தே தீர வேண்டும் என்பதால் பஞ்சமோ, வறட்சியோ பேச்சிப்பாறை தண்ணீரில் கூடங்குளம் அணு உலைகளுக்கே முன்னுரிமை தரப்படும். அவர்கள் பயன்படுத்தியது போக மிச்சமிருக்கும் தண்ணீரைத் தான் மக்கள் பயன்படுத்த முடியும்.
பேச்சிப்பாறையிலிருந்து குழாய் மூலமாகத் தண்ணீர் கொண்டு வருவதும் பாதுகாப்பானதல்ல என்று அணு சக்தித்துறை விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். பூகம்பம் ஏற்பட்டு குழாய்களில் உடைப்பு ஏற்பட்டால் அணு உலைகளுக்கு நீர் செல்ல முடியாத ஆபத்தான நிலை ஏற்படும் என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த கூடங்குளம் அணு உலைகளால் கதிர்வீச்சு அபாயம் ஏற்படுவது பற்றி பொதுமக்கள் அச்சம் தெரிவித்தனர். இந்த அணு உலைகளில் பயன்படுத்தி வெளியேற்றப்படும் அணுக்கழிவுகளை திரும்ப வாங்கிக் கொள்ள முடியாது என ரஷ்யா கூறிவிட்டது. தற்போதுள்ள இரண்டு அணு உலைகளிலிருந்து ஆண்டொன்றுக்கு 50 டன் அணுக்கழிவு வெளியேறும். தற்போது மேலும் நான்கு அணு உலைகள் உருவாக்கப்படுகின்றன. இன்னும் இரண்டு வர உள்ளது. ஆக மொத்தம் எட்டு அணு உலைகள். அனைத்தும் சேர்ந்தால் ஆண்டொன்றுக்கு 200 டன் அணுக்கழிவு வெளியேறும். இதை என்ன செய்யப்போகிறீர்கள் என்று அதிகாரிகளிடம் கேட்டேன். ''அவற்றை மறு சுத்திகரிப்பு செய்து அதிலிருந்து புளூட்டோனியத்தைப் பிரித்து எடுப்போம். மிச்சமுள்ள கழிவுகளை கான்கிரீட் தொட்டிகளில் வைத்து அங்கேயே புதைத்து விடுவோம்'' என்று பதில் சொன்னார்கள். இப்படித்தான் ரஷ்யாவில் சேர்த்து வைத்தார்கள். கிஷ்டிம் என்ற இடத்தில் 1957 ஆம் ஆண்டில் பெரிய விபத்து ஏற்பட்டு கதிர்வீச்சால் பயங்கரமான பாதிப்புகள் ஏற்பட்டன. அதுபோல இங்கும் ஏற்பட்டால் நமது கதி என்ன ஆகும்?
ஒரு அணு உலை அமைக்கப்பட்டால் அதிலிருந்து முப்பது கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் அதிக மக்கள் வசிக்கும் நகரங்கள் இருக்கக்கூடாது என்பது சர்வதேச விதி. ஆனால் கன்னியாகுமரியும், நாகர்கோவிலும் கூடங்குளத்துக்கு மிக அருகாமையில் உள்ளன. கூடங்குளம் அமைந்துள்ள ராதாபுரம் பஞ்சாயத்து யூனியனும் மக்கள் நெருக்கமாக உள்ள பகுதிதான்.
பொது விசாரணையின்போது ராதாபுரம் எம்.எல்.ஏ. திரு. அப்பாவு வந்து மக்களை அமைதிப்படுத்த முயற்சித்தார். ஆனாலும் பயனில்லை. ஏனென்றால் அவரது ஆறுதல் வார்த்தைகளை விட உயிர் பற்றியும், தண்ணீர் குறித்துமான அச்சமே மக்களிடம் மேலோங்கி இருந்தது.
பல்லாயிரம் கோடி ரூபாய்களைக் கொட்டி கட்டப்படுகிற அணு உலைகளிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவு மிக மிகக்குறைவு. மொத்த மின் உற்பத்தியில் அணு மின்சாரத்தின் பங்கு ஐந்து சதவீதம் கூட கிடையாது. அனல் மின்சாரமும், புனல் மின்சாரமும் குறைந்து வருகின்றன என்பது உண்மை தான். மின் உற்பத்திக்கு மாற்று வழிகளைக் கண்டுபிடித்துதான் ஆகவேண்டும். அதில் மறுப்பில்லை. காற்றாலை மின்சாரம் போல ஆபத்தில்லாத வழிகளைக் கண்டறிவது தான் நல்லது. அதை விட்டு விட்டு அணு குண்டுகளை மடியில் கட்டிக்கொள்வது அறிவுடைமை ஆகாது.
கூடங்குளம் அதிகாரிகள் நாம் எதைக் கேட்டாலும், ''அதை நாங்கள் அறிவோம்'' என்ற விதத்தில் தான் பேசுகிறார்கள். அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்  உள்ள விஷயங்களைக்கூட அவர்கள் மூடி மறைக்கப்பார்க்கிறார்கள். பொது விசாரணை நிறுத்தப்பட்ட பின் திருநெல்வேலி கலெக்டர் திரு.பிரகாஷ் அவர்கள் என்னை அழைத்துப் பேசிக்கொண்டிருந்தார். ''நாம் என்ன எதிர்ப்பு தெரிவித்தாலும் இந்த அணு உலைகள் வருவதை நிறுத்த முடியாது. இது மாநில அரசின் கையில் இல்லை'' என்று அவர் சொன்னார். உண்மை தான். இது மத்திய அரசால் முடிவு செய்யப்படுவது தான். ஆனால் தமிழக அரசு மக்களின் கவலைகளை, அச்சத்தை மத்திய அரசிடம் எடுத்துச் சொல்லலாமில்லையா? அதைத்தான் பொதுமக்கள் கேட்கின்றனர்.
கோக் தொழிற்சாலைக்கு தாமிரபரணியில் தண்ணீர் எடுப்பதில் தனக்கு உடன்பாடு இல்லை என சில நாட்களுக்கு தமிழக முதல்வர் தெரிவித்த கருத்து நமக்கெல்லாம் உற்சாகமளிக்கிறது. கூடங்குளம் அணு உலை விஷயத்தில் தமிழக மக்களின் உணர்வை அவர் மத்திய அரசுக்கு எடுத்துச்சொல்ல முன்வரவேண்டும் என்பதே நம் கோரிக்கை.

நன்றி : ஜூனியர் விகடன் ௦      
05.10.2006

1 comment: