Thursday, September 29, 2011

வாச்சாத்தி பாலியல் கொடுமை வழக்கு-126 வனத்துறையினர் உள்பட 215 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு!




 வாச்சாத்தி மலை கிராமத்தில் போலீசார், வருவாய்த்துறையினர், வனத்துறையினரால் 18 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 19 ஆண்டுகளுக்குப் பின் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் நான்கு இந்திய வனப்பணி அதிகாரிகள் உள்பட குற்றம் சாட்டப்பட்டவர்களில் உயிருடன் உள்ள 215 பேருமே குற்றவாளிகள் என்று தர்மபுரி கோர்ட் இன்று பரபரப்புத் தீர்ப்பை வழங்கியது.

இவர்களுக்கான தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என தர்மபுரி மாவட்ட செஷன்ஸ் நீதிபதி குமரகுரு தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு உரிய நேரத்தில் நடத்தி முடிக்கப்படாமல், பெரும் இழுத்தடிப்புக்குப் பின் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 269 பேரில் 54 பேர் விசாரணையின்போதே இறந்து விட்டனர். உயிருடன் உள்ள 215 பேர் மீதான தீர்ப்பை இன்று நீதிபதி குமரகுரு அறிவித்தார்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கின் தீர்ப்பை அறிவதற்காக வாச்சாத்தி சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் உள்ளிட்ட கிராமத்தினர் நூற்றுக்கணக்கில் கோர்ட் வளாகத்தில் திரண்டிருந்தனர். பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று காலை முதல் நீதிபதி குமரகுரு தீர்ப்பை வாசித்து வந்தார். பிற்கல் ஒன்றரை மணியளவில் அவர் தீர்ப்பை வாசித்து முடித்தார். அதாவது எத்தனை பேர் குற்றவாளிகள் என்பதை சொல்லி முடித்தார்.

யார் யார் குற்றவாளி?

வாச்சாத்தி பாலியல் கொடுமை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட, உயிருடன் உள்ள 215 பேரில் வனத்துறையினர்தான் அதிகம். தீர்ப்பில் ஐஎப்எஸ் எனப்படும் இந்திய வனப் பணி அதிகாரிகள் பாலாஜி, ஹரிகிருஷ்ணன், முத்தையன், நாதன் ஆகியோர் உள்ளிட்ட 126 வனத்துறையினர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட இன்னொரு ஐஎப்எஸ் அதிகாரியான சிங்காரவேலு ஏற்கனவே இறந்து விட்டார்.

மேலும் 5 வனத்துறை ரேஞ்சர்களும் குற்றவாளிகள் என நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்தார்.

காவல்துறையிலிருந்து 84 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 2 பேர் இன்ஸ்பெக்டர்கள், 6 பேர் சப் இன்ஸ்பெக்டர்கள். மற்றவர்கள் காவலர்கள்.

வருவாய்த்துறையிலிருந்து தாசில்தார் ஆவுடையப்பன், வருவாய் ஆய்வாளர் ஆறுமுகம், கிராம நிர்வாக அதிகாரிகள் பொன்னுச்சாமி, ராஜு உள்ளிட்ட ஐந்து பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட 17 பேர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி அறிவித்துள்ளார். அதன்படி அருணாச்சலம், ஆறுமுகம், ராஜகோபால், பெரியநாயகம், ராஜமாணிக்கம், பச்சியப்பன், வேடியப்பன், சிதம்பரம், பழனி, பெருமாள், காளியப்பன், ஜானகிராமன், ரத்னவேல், அழகிரி, மாதையான் உள்ளிட்ட 17 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

54 பேர் ஏற்கனவே இறந்து விட்டனர்

வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 269 பேரில் 29 வனத்துறையினர், 24 போலீசார், ஒரு வருவாய்த்துறை ஊழியர் உள்பட மொத்தம் 54 பேர் இறந்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

என்னென்ன பிரிவுகளில் குற்றச்சாட்டு?

குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது ஐபிசி 147, 149, 323, 342 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மேலும் அத்தனை பேர் மீ்தும் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

அதேபோல பலர் மீது பாலியல் பலாத்காரத்திற்காக 376வது பிரிவின் கீழும் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இதேபோல ஆதாரங்களை மறைத்தது தொடர்பாக ஐஎப்எஸ் அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. மேலும், தாக்கிக் காயப்படுத்தியது, சட்டவிரோதமாக அடைத்து வைத்தது ஆகிய பிரிவுகளின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. 

நடந்தது என்ன?

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவுக்கு உட்பட்டது வாச்சாத்தி கிராமம். இங்கு வசிப்பவர்களில் பெரும்பான்மையினர் மலை ஜாதியினர் .

இந்த கிராம மக்கள் காட்டுப் பகுதியில் உள்ள சந்தன மரங்களை வெட்டி, கடத்தி விற்பனை செய்வதாக 1992ம் ஆண்டு வனத்துறை வழக்குப் பதிவு செய்தது.

இதையடுத்து அந்த ஆண்டு ஜூன் 20ம் தேதி வனத்துறை 155 பேர், போலீசார் 108 பேர், வருவாய்த் துறையினர் 6 பேர் என மொத்தம் 269 பேர் ஆகியோர் அடங்கிய கூட்டு குழு இந்த கிராமத்தில் சோதனை நடத்தியது.

வாச்சாத்தி கிராமத்தில் இவர்கள் வீடு, வீடாக சோதனை நடத்தினர். பின்னர் ஏரிப் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சந்தனக் கட்டைகளை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக 15 ஆண்கள், 90 பெண்கள், 28 குழந்தைகள் மீது வழக்குப் பதிவு செய்து, 133 பேரை கைதும் செய்தனர்.

ஆனால், இந்த சோதனைகளின்போதும், சோதனைகளைத் தொடர்ந்து நடந்த கைது நடவடிக்கைகளின்போதும் ஜெயா, செல்வி, சித்ரா, காந்தி, அபரக்கா, பாப்பாத்தி, காந்தி, மாரிக்கண்ணு, லட்சுமாயி, கம்சலா, முத்துவேதி, பூங்கொடி, மல்லிகா, சுகுணா, பாப்பாத்தி, முத்துவேதி, தேன்மொழி, பழனியம்மாள் உள்ளிட்ட 18 மலை கிராம பெண்களை கூட்டு குழுவினர் கற்பழித்ததாக புகார் எழுந்தது.

விசாரிக்க மறுத்த போலீஸ்

இது தொடர்பாக கிராம மக்கள் கூட்டு குழுவினர் மீது, அரூர் போலீஸில் தந்த புகாரை போலீசார் பதிவு செய்ய மறுத்து விட்டனர்.

இதையடுத்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க பொது செயலாளர் சண்முகம் மற்றும் சமூக நல அமைப்புகள் வாச்சாத்தி கிராமத்தில் ஆய்வு செய்தனர். அப்போது, கூட்டு குழுவினரால் மலைவாழ் பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் மற்றும் பாலியல் தொல்லைக்கு ஆளாகப்பட்டதாகவும் வீடுகள் சூறையாடப்பட்டதாகவும், இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

உச்சநீதிமன்றம் கொடுத்த சூடு

இதைத் தொடர்ந்து வாச்சாத்தி கிராமத்தில் கூட்டு குழு விசாரணையின் போது நடந்த சம்பவங்களை அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த 1992ம் ஆண்டு செப்டம்பரில் உத்தரவிட்டது.

இதையடுத்து தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நல ஆணைய தென் மண்டல ஆணையர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு இந்த கிராமத்தில் நேரடி விசாரணை நடத்தப்பட்டு, அந்த அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யுமாறு அரூர் போலீசாருக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரே, வழக்கு பதிவு செய்யப்பட்டது.

சிபிஐக்கு மாறிய வழக்கு

ஆனாலும் போலீசார் முறையாக இந்த விவகாரத்தை விசாரிக்காததால் பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள் இந்த வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கக் கோரி 1993ம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து கடந்த 1995ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி இந்த வழக்கை சி.பி.ஐக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

சி.பி.ஐ. நடத்திய விசாரணையில் கூட்டுக்குழுவினரின் அட்டகாசங்கள் வெளியில் வந்தன. இதையடுத்து அந்தக் குழுவைச் சேர்ந்த 269 பேரையும் சிபிஐ கைது செய்தது. மேலும் கடந்த, 1996ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி கோவை நீதிமன்றத்தில் சி.பி.ஐ குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.

2006ம் ஆண்டு இந்த வழக்கு கிருஷ்ணகிரி நீதிமன்றத்துக்கு வழக்கு மாற்றப்பட்டது. பின்னர், 2008ம் ஆண்டு பிப்ரவரி, 17ம் தேதி தர்மபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்துக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது.

பெரும் இழுத்தடிப்புக்குப் பின் இந்த வழக்கு நடந்து முடிந்துள்ளது.

வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 269 பேரில் 29 வனத்துறையினர், 24 போலீசார், ஒரு வருவாய்த்துறை ஊழியர் உள்பட மொத்தம் 54 பேர் இறந்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
.

1 comment:

  1. ஊடகங்களின் இருண்ட மூலைகளில் ஒளிந்து கொண்ட செய்தியை வெளிக் கொண்டு வந்தமைக்கு நன்றி

    ReplyDelete