Thursday, September 15, 2011

பரமக்குடி: குரலற்றவர்களின் குரலாக இருப்போம் - சிவா சின்னப்பொடி



 பரமக்குடி சம்பவத்தை முன்வைத்து ஊடக ஜனநாயகம் பற்றி ஒரு விவாதத்தை நீங்கள் ஆரம்பித்திருப்பது மகிழ்ச்சியை தருகிறது.
'பரமக்குடி சம்பவத்தை தமிழ் ஊடகங்கள் இருட்டடிப்புச் செய்துவிட்டன.அல்லது திசை திருப்பி செய்தி வெளியிட்டுவிட்டன.ஆளும் வர்க்கத்தின் குரலையே இந்த ஊடகங்கள் எப்போதும் பிரதிபலிக்கின்றன.பார்ப்பனிய  ஆதிக்கம் என்று காலகாலமாக குற்றம் சாட்டப்பட்டு வந்த தமிழ் ஊடகப்பரப்பில் இன்று அவர்கள் ஓரங்கட்டப் பட்டு தமிழ் தேசிய முதலாளிகள் அல்லது தரகு முதலாளிகள் அவர்களின் இடத்தை பிடித்துவிட்ட நிலையில் அடித்தட்டு மக்களுக்கு எதிரான ஊடகக் கருத்தியல் வன்முறை தொடர்கிறது. தமிழ் ஊடகப் பரப்பில் ஜனநாயகம் இல்லை.என்பது போன்ற எண்ணம் அல்லது குற்றச்சாட்டு பலரிடம் இருக்கிறது.'

இன்றைய உலகமயமாதல் சூழலில் ஊடகம் என்பதே ஐனநாயக விரோத வடிவமாக இருக்கும் போது அதற்குள் எப்படி ஜனநாயகத் தன்மையை எதிர்பார்க்க முடியும்? என்பது முக்கியமானதொரு கேள்வி. சந்தைக்கான உற்பத்தி என்பது பின்தள்ளப்பட்டு உற்பத்திக்கான சந்தையை திட்டமிட்டு உருவாக்குவது என்பது முதன்மைப்படுத்தப்பட்டுள்ள இன்றைய சூழலில் தனிமனிதனுடைய கருத்தில் தளத்தில் அத்துமீறி நுழைந்து அவனை புதிய தயாரிப்புக்களுக்கான நுகர்வோனாக மாற்றுகின்ற வேலையைத் தான் ஊடகங்கள் செய்கின்றன.ஊடகம் என்பது மக்களுக்கானது மக்களுடைய குரலைப் பிரதி பலிப்பது என்பதெல்லாம் இன்று காலாவதியாகிப் போன வார்த்தைகளாகும்.

பல்தேசிய கம்பனிகளின் அல்லது உலகப் பெருமுதலாளித்துவத்துவத்தின் தேவைகளுக்கு அல்லது நலன்களுக்கு மக்களை தயார்படுத்துகின்ற பொறிமுறை அமைப்புக்களாகத்தான் இன்றைய ஊடகங்கள் இருக்கின்றன.

இங்கே மேற்குலகிலே ஊடகங்களின் கருத்தியல் வெளிப்பாட்டு முறையென்பது
நேர் கோட்டுமுறை
சமாந்தரமுறை
ஊடறுக்கும் முறை
சமூகப் பிரதிபலிப்பு முறை
என்கின்ற நான்கு அடிப்படைகளை கொண்டிருக்கின்றன. உள்ளதை உள்ளபடி சொல்வதாக சொல்லிக் கொள்ளும்  நேர்கோட்டு முறையும் (தினத்தந்தி, மாலை முரசு என்பன) எதிரெதிர் முரண்பாடுகளை கட்டமைத்து இருதரப்பு கருத்துக்களையும் நடுநிலைமையாக சொல்லிக் கொள்ளும் பிபிசி பாணியாலான (ஹிண்டு, இந்தியா ருடே, தினமணி, இந்தியன் எக்ஸ்பிரஸ்) சமாந்தர முறையும்,எதிரெதிர் முரண்பாடுகளை கட்டமைத்துச் சென்று ஒரு முக்கிய திருப்பத்தில் ஒரு தரப்பை நிராகரித்து மறுதரப்பை நேரடியாகவே மறைமுகமாவோ நியாயப்படுத்தம் சிஎன்என் என்பிசி முதலான அமெரிக்க ஊடகங்கள் பின்பற்றும் ஊடறுக்கும் முறையும்(சண்குழுமம் மற்றும் அதிமுக சார்பு ஊடகங்கள் உட்பட அனைத்து அரசியில் கட்சி சார்பு ஊடகங்கள்  தினமலர் முதலானவை பின்பற்றும் முறை) தமிழகத்திலே இருக்கிறது.
ஆனால் உரிமை மறுக்கப்பட்ட மக்களின் மனச்சாட்சியாக குரலற்றவர்களின் குரலாக இருக்கக் கூடிய சமூகப் பிரதிபலிப்பு முறையிலான ஊடகங்கள் அதாவது ஒரு செய்தியின் செய்திப் பெறுமதியை தான் சார்ந்த மக்கள் தளத்தில் அல்லது சமூகத்தளத்தில் வைத்துப் பார்க்கும் அல்ஜசீரா போன்ற ஊடகக் கட்டமைப்பு  தமிழகத்தில் இல்லை.

பரமக்குடி கலவரமும் துப்பாக்கி  சூடும் சமூகப் பிரதிபலிப்பு முறையை கையாழும் ஒரு ஊடகத்துக்குத்தான் முக்கியமான ஒன்றாக இருக்கும். ஏனைய முறைகளை கையாளும் ஊடகங்களுக்கு பரமக்குடி சம்பவத்தைவிட அஜித்தினுடைய மங்காத்தா படம் எவ்வளவு வசூலைக் குவித்தது இன்றைய நிலவரப்படி அது இன்னும் எவ்வளவு வசூலைக் குவிக்கும் என்பதே முக்கியமானதாகவும் அவர்களது வங்கியிருப்பை நிரப்புவதற்கு தேவையானதாகவும் இருக்கும்

இந்த யதார்த்தத்தை புரிந்து கொண்டு எங்களுக்கென்று சமூகப் பிரதிபலிப்பு முறையிலான ஊடகங்களை நாங்கள் உருவாக்காதவரை அவ்வாறு உருவாகும் ஊடகங்களை ஊக்குவிக்காதவரை எதுவுமே மாறப் போவதில்லை.

அடுத்து இந்தியாவிலுள்ள ஆதிக்க ஊடகங்களில் தலித்துகளுக்கு இடம் இருப்பதில்லை என்பது உண்மைதான். ஆனால் அதன் மறுபக்கம் பார்த்தால் தலித்துக்கள் அதிக்க சக்திகளுக்கு துணைபோகும் ஆதிக்க ஊடகவியலாளர்களாக உருவாகாமல் இருப்பது அல்லது உருவாக்கப்படாமல் இருப்பது சிறந்தது.

( ஊடகத் துறையில் பணியாற்றும் இக் கட்டுரையாளர் ஈழத்தைச் சேர்ந்தவர் , தற்போது பாரீசில் வசிக்கிறார் )

No comments:

Post a Comment