வாழ்க்கை குறுகியது
நூறு வயது ஆகுமுன்பே
இறந்துபோவீர்கள் நீங்கள்
( இல்லாவிட்டால் முதுமை
உங்களைக் கடைசியில் அங்கு
கொண்டுபோய்ச் சேர்த்துவிடும்)
நீங்கள் கொண்டாடிய ஒன்று
மறைந்துவிடும்போது
துக்கப்படுகிறீர்கள்
ஆனால் எதுவும் நிரந்தரமில்லை
சொத்துக்களைச் சேர்ப்பது அர்த்தமற்றது
வசதியான உங்கள் வீட்டுக்குள்ளேயே
முடங்கிவிடாதீர்கள்
உங்களுடையது என நினைத்த
யாவும் இங்கேயே இருக்கின்றன
நீங்கள் இறந்துவிடும்போது.
புத்திசாலியாக இருங்கள்
சொத்து சேர்ப்பதை மறங்கள்
உண்மைக்கு உங்களை
அர்ப்பணியுங்கள்
நீங்கள் கனவில் சந்திப்பவர்
விழித்துப் பார்க்கும்போது
இருப்பதில்லை
நீங்கள் விரும்பும் ஒருவர்
இறப்பதும்கூட அப்படித்தான்
நான் உன்னைப் பார்த்தேன்
நீ பேசுவதைக் கேட்டேன்
உன்னை அழைத்தேன்
நீ இறந்துவிட்டாய்
உன் பெயர் மட்டும்தான் எஞ்சியிருக்கிறது
(சுத்த நிபாதாவில் மூப்பு என்ற பாடலின் ஒரு பகுதி. தமிழாக்கம் : ரவிக்குமார் )
No comments:
Post a Comment