எந்த ஒரு ஊடகமும் மொழியறிவை வாசகர்களுக்கோ அல்லது நேயர்களுக்கோ புகட்டுவதற்காக நடத்தப்படுவதில்லை. மொழி என்பது இங்கே செய்தியை சொல்லப் பயன்படும் ஒரு கருவியாகவே பயன்படுகிறது.
இந்த வரையறைக்குள் செயல்பட்டாலும், பிபிசி தமிழோசை, மொழியை இலக்கணப்பிழையின்றி பயன்படுத்தும் ஒரு அடிப்படையான நோக்கத்தைக்கொண்டிருக்கிறது.
தமிழ் மொழி பெயர்ப்பிலும் சரி, மற்றபடி எழுத்து வடிவத்தில் நாங்கள் பயன்படுத்தும் மொழியிலும் சரி, இலக்கண மற்றும் எழுத்துப்பிழைகள் நேரக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம்.
குறிப்பாக, பெயர்ச்சொல்லும் வினைச்சொல் விகுதியும் சரியாக உடன்படுவது, செய்வினை-செயப்பாட்டு வினைப் பிரச்சினை போன்றவைகளில் கவனக்குறைவாக இருந்தால் பிழைகள் ஏற்பட வாய்ப்புண்டு. இதைத் தவிர்க்கக் கூடியவரை முயல்கிறோம்.
உதாரணத்துக்கு,
ஒரு வாக்கியம். பிரான்சும் இந்தியாவும் அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது என்று கூறுவது பிழை, கையெழுத்திட்டன என்று கூறுவது இலக்கணமரபுப்படி சரி.
எழுத்து வடிவில், வார்த்தைகளுக்குப் பின்னர் ஒற்றெழுத்து மிகுவது என்ற விஷயங்களை கவனமாகக் கையாள்கிறோம்.
எம்மையும் மீறி, செய்தியை ஒலிபரப்பும் அவசரகதியிலோ அல்லது இணையதளப்பக்கங்களை பிரசுரிப்பதில் ஏற்படும் நேரப்பிரச்சினைகளாலோ பிழைகள் ஏற்படுவதுண்டு. அவற்றைப் பின்னர் நாங்களே கவனிக்க நேர்ந்தாலோ அல்லது நேயர்கள் சுட்டிக்காட்டினாலோ உடனடியாக அப்பிழைகளைத் திருத்திக்கொள்கிறோம்.
No comments:
Post a Comment