பக்கச்சார்பற்ற தன்மையை உறுதிப்படுத்துவது: மொழிபெயர்ப்பில் இதற்கு முக்கியமான இடம் உண்டு. மொழிப் பயன்பாடு தவறாக செய்யப்பட்டால், செய்தியின் நடுநிலைத்தன்மையை பாதிக்கும். சமகால அரசியல் நிலவரத்தைப் பற்றி செய்திகளை சொல்லும்போது இது போன்ற சந்தர்ப்பங்கள் நிறைய வருகின்றன.
டெர்ரரிஸ்ட் என்ற வார்த்தையை செய்திகளில் எப்படி அனுமதிக்கலாம் என்ற கேள்வி பல சந்தர்ப்பங்களில் எழுகிறது. உலகின் பல பாகங்களில் வன்செயல்கள் நடக்கையில், அந்த வன்செயல்களை எதிர்கொள்ளும் அரசுகள், இந்த செயல்களை செய்பவர்களை பயங்கரவாதிகள் அல்லது அந்த நடவடிக்கைகளை பயங்கரவாத நடவடிக்கைகள் என்று வர்ணிக்கின்றன.
ஒரு பக்க சார்பற்ற ஊடகம் இதை அப்படியே பயன்படுத்த முடியுமா என்ற கேள்வி எழுகிறது. பிபிசி தமிழோசையைப் பொறுத்தவரை, செய்தியில் நாங்கள் எந்த ஒரு இயக்கத்தையோ அல்லது தனிநபரையோ பயங்கரவாத இயக்கம் அல்லது பயங்கரவாதி என்று கூறுவது இல்லை. அரசோ, அரசு தலைவர்கள் அல்லது ராணுவம், காவல்துறை போன்ற மற்ற நிறுவனங்களோ அவர்களை அவ்வாறு கூறுவதாக மேற்கோள்காட்டுகையில் அந்த வார்த்தை அனுமதிக்கப்படுகிறது.
இதே போலத்தான் அரச பயங்கரவாதம் போன்ற சொற்றொடர்களும். அரசு, தீவிரவாதிகள் என்று அது கூறும் நபர்களுக்கு அல்லது இயக்கங்களுக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைகள் அல்லது தாக்குதல்களைப் பற்றி, அந்தக் குழுக்கள் விமர்சிக்கும் போது அவர்களை மேற்கோள்காட்டுகையில் இந்த சொற்றொடர் பயன்படுத்தப்படுகிறது.
அதே போல இத்தகைய ஆயுதமேந்திய போராட்டங்களில் ஈடுபடும் இயக்கங்கள் அல்லது குழுக்கள் தங்களை விடுதலை இயக்கங்களாக வர்ணிப்பதை அவர்கள் வார்த்தைகளை மேற்கோள்காட்டியே பயன்படுத்துகிறோம். பிபிசி , அவர்களை விடுதலை இயக்கங்கள் என்றோ அல்லது பயங்கரவாத இயக்கங்கள் என்றோ கூறுவதில்லை.
பிரச்சனைக்குரிய நிலப்பரப்புகளைப்பற்றி பேசும்போதும் பக்கச்சார்பான வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்துவதைத் தவிர்க்கிறோம். உதாரணத்துக்கு காஷ்மீர் பிரச்சினை. காஷ்மீர் பிரிந்து கிடக்கும் ஒரு பகுதி; இதை இரு தரப்பினரும் பயன்படுத்தும் வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்தாமல், இந்தியக் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட அல்லது இந்திய நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீர் என்றும் பாகிஸ்தான் கட்டுப்பாட்டுக்குட்பட்ட அல்லது பாகிஸ்தான் நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீர் என்று சொல்லிவிடுகிறோம்.
ஜிஹாத் போன்ற வார்த்தைகளையும் பொதுவாக நாங்களாகக் கூறாமல், அந்த வார்த்தைகளைப் பயன்படுத்துவோர் கூறும் வார்த்தைகளாகவே மேற்கோள்களில் பயன்படுத்துகிறோம். மிலிடன்ட், ரிபெல் போன்ற ஆங்கில வார்த்தைகளை தீவிரவாதி மற்றும் கிளர்ச்சியாளர் என்று மொழிபெயர்க்கிறோம்.
நன்றி :பி பி சி தமிழோசை
No comments:
Post a Comment