Monday, September 26, 2011

பரமக்குடி : மறந்த மரணம் - ரவிக்குமார் கவிதை





சாவு விழுந்தால்
சடலத்தைக் கொண்டுசெல்ல
விதிமுறைகள் உள்ளன

சிலரது சடலங்கள் ராணுவ வண்டிகளில்;
சிலரது சடலங்கள் அலங்கரிக்கப்பட்ட
ரதங்களில்;
சிலரது சடலங்கள் சந்தனப் பேழைகளில்

அதிகாரமோ வசதியோ அற்றவராயினும்
அவரது சடலம்
வீதியில் சென்றால்
வாகன ஓட்டிகள் வழிவிட வேண்டும்
அமர்ந்திருப்போர் எழுந்திருக்கவேண்டும்

விதிகள்
மனிதர்களுக்கானவை
விலங்குகளுக்கும்கூட இருக்கின்றன
வரைமுறைகள்

நாம் ஒரு சடலத்தைப் பார்த்தோம்

ஆளுக்கொரு கை
ஆளுக்கொரு கால்
தூக்கிச் சென்றார்கள்
தொங்கியது தலை
குண்டுபாய்ந்த இடத்திலிருந்து
கொட்டிக்கொண்டே போனது
குருதி
வாயிலிருந்து சொட்டிக்கொண்டே போனது
வார்த்தை
கண்களிலிருந்து சிந்திக்கொண்டே போனது
கனவு

அதை
மனிதனாக நினைத்திருந்தால்
மதிப்பு கிடைத்திருக்கும்
விலங்கின் உடலென்றால்
விருந்துக்குப் போயிருக்கும்

நாம் அந்த சடலத்தைப் பார்த்தோம்
நகரும் மேகங்களுக்கிடையேயிருந்து
கடவுளும் பார்த்திருப்பான்

தீண்டப்படாத ஒருத்தனின்
சடலம்

பார்த்தோம்
மறந்துபோனோம்

4 comments:

  1. மறக்கவில்லை
    மரத்து போனோம்..
    யாரோ ஒருவன் என்ற நினைப்பில்,
    நாளை நாமும்
    யாரோ ஒருவன்
    யாருக்கோ என்ற புரிதல் இல்லாமல்...

    ReplyDelete
  2. A very touching poem Ravi. Thanks for sending me.

    Ambai

    ReplyDelete
  3. இந்த நாட்டில், இந்த சமூகத்தில், இந்த காலத்தில் பிறக்க நேர்ந்தவர்கள் ஒவ்வொருவரும் அவமானப்படவேண்டிய, சுயசித்ரவதை செய்து நொந்துகொள்ள வேண்டிய விஷயம் இது. எதையும் சகித்துக்கொள்ளமுடியவில்லை.

    செந்தில்

    ReplyDelete
  4. idharkellam padhil sollum neram varum

    ReplyDelete