Showing posts with label thirumaa. Show all posts
Showing posts with label thirumaa. Show all posts

Sunday, August 28, 2011

மரணதண்டனைக்கு எதிரான போராட்டம் :இளம்பெண் செங்கொடி தீக்குளிப்பு







தீக்குளித்து உயிர்நீத்த செங்கொடி 




 மக்கள் மன்றம் தோழர்களுக்கு 
திருமாவளவன்  ஆறுதல்

தமிழ்நாட்டில் ஒவ்வொருநாளும் மரணதண்டனைக்கு எதிரான போராட்டம் வலுப்பெற்று வருகிறது. பேரறிவாளன், சாந்தன்,முருகன் ஆகியோரது  மரண தண்டனையை ரத்து செய்யவேண்டும் என்று முழங்கி செங்கொடி என்ற இளம்பெண் தீக்குளித்து உயிர் துறந்திருக்கிறார். 
காஞ்சிபுரத்தில் உள்ள மக்கள் மன்றம் என்ற அமைப்பைச் சேர்ந்த செங்கொடி ஓரிக்கை  என்ற கிராமத்தில் பிறந்தவர்.சிறுவயதிலேயே தாயை இழந்துவிட்ட அவரை சுமார் எட்டு வயதாக இருக்கும்போதே மக்கள் மன்றத்தில் கொண்டுவந்து வளர்த்துள்ளனர். இப்போது அவருக்கு வயது இருபத்தொன்று. கலைநிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அரசியல் பாடல்களைப் பாடுவதிலும், ஆடுவதிலும் தேர்ச்சி பெற்றவர் செங்கொடி. அரசியல் ரீதியான விழிப்புணர்வுள்ளவர், பலவிதமான நூல்களையும் தேடிப்பிடித்துப் படிப்பவர். அண்மைக்காலமாக மரண தண்டனைக்கு எதிரான போராட்டங்களில் மிகுந்த ஈடுபாட்டுடன் கலந்துகொண்டிருந்தார். நேற்று இரவு மக்கள் மன்றத்தின் பொறுப்பாளர் தோழர் மகேஷ் அவர்களோடு பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரது தூக்குத் தண்டனை குறித்து அவர் வெகுநேரம் கவலையோடு விவாதித்திருக்கிறார். இன்று மக்கள் மன்றத் தோழர்கள் மறைமலை  நகரில் நடைபெற்ற மரண தண்டனை ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொள்ள சென்றுவிட்ட நிலையில் செங்கொடிகடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு எதிரில் வந்து மாலை ஐந்தரை மணியளவில் 'மரண தணடனை ஒழிக!' என முழக்கம் எழுப்பியவாறு தான் கொண்டுவந்திருந்த கேன்களில் இருந்த பெட்ரோலை தன்மீது ஊற்றி தனது உடலில் தீவைத்துக்கொண்டிருக்கிறார். அங்கிருந்தவர்கள் அவரை மருத்துவமனையில் கொண்டுவந்து சேர்த்துள்ளனர். ஆனால் அங்கு அவரது உயிர் பிரிந்துவிட்டது. அவர் உயிரிழந்த செய்தி மாநாட்டு மேடையில் இருந்தபோது எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. மாநாடு முடிந்ததும் தலைவர் திருமாவளவன் அவர்களோடு காஞ்சிபுரம் சென்றேன். அங்கு இருந்த மக்கள் மன்றம் தோழர்களுக்கு ஆறுதல் சொன்னோம். 29 அல்லது 30 ஆம் தேதி செங்கொடியின் இறுதி நிகழ்ச்சி நடத்தப்படலாம்,அதுவரை அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும். 
தோழர் செங்கொடி மிகவும் ஏழ்மையான இருளர் என்ற பழங்குடியினக் குடும்பத்தைச் சேர்ந்தவர்.அவர் எழுதிவைத்துவிட்டுச் சென்ற கடிதம்:

“ தோழர் முத்துக்குமாரின் உடல் தமிழகத்தை எழுப்பியதுபோல் என்னுடைய உடல் இந்த 3 தமிழர்களின் உயிரைக் காப்பாற்றப் பயன்படும் என்ற நம்பிக்கையுடன் செல்கிறேன்.
இப்படிக்கு 
தோழர் செங்கொடி” 


Sunday, August 7, 2011

தனி ஈழத்தை அடைவதற்காக எம்.பி. பதவியைத் துறக்கத் தயார்-திருமாவளவன்



மருத்துவர் ராமதாஸ் அவர்களுக்கு எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் சால்வை அணிவிக்கிறார். உடனிருப்போர் அ.கி.மூர்த்தி , கோ.க.மணி , ரவிக்குமார் 





தனி ஈழத்தை அடைவதற்காக எம்.பி. பதவியைத் துறக்கத் தயார்-திருமாவளவன்


ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 7, 2011,


சென்னை : தனி ஈழமே ஈழத் தமிழ் மக்களின் ஒரே தீர்வு. அந்தத் தீர்வை அடைவதற்காக எனது எம்.பி. பதவியையும் துறக்கத் தயார் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

தனி ஈழமே தீர்வு என்ற தலைப்பில் சென்னையில் இன்று(07.08.2011) கருத்தரங்கம் நடந்தது. இலங்கைத் தமிழ் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நடந்த இந்தக் கருத்தரங்கில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டார். பாமக தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார். விடுதலை சிறுத்தைகளின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் முன்னிலை வகித்தார்.

ரவிக்குமார் பேசும்போது, ”இலங்கையில் நடைபெற்ற படுகொலைகளை போர்க்குற்றம் என்று மட்டும் பார்க்கக்கூடாது, அதுவொரு இனப்படுகொலை. சமமான இரண்டு தரப்புகளுக்கு இடையே நடப்பதுதான் போர். ஆனால் வல்லரசுகளான சீனா, ரஷ்யா, அமெரிக்கா, இந்தியா அகியவற்றின் துணையோடு, அரசு என்ற சர்வதேச அங்கீகாரத்தோடு இலங்கையின் பேரினவாத சிங்கள அரசின் ராணுவம் மேற்கொண்ட தாக்குதல் போர் அல்ல. அது இனப் படுகொலை. முள்ளிவாய்க்காலில் ஒரே நாளில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்கள் அவர்களெல்லாம் தமிழ் இனத்தில் பிறந்த ஒரே காரணத்துக்காகக் கொல்லப்பட்டார்கள். போரிட முடியாத முதியவர்கள், போரை விரும்பாத பெண்கள், நடப்பது இன்னதென்று புரிந்துகொள்ள முடியாத குழந்தைகள் அங்கே ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர். அங்கு நடந்தது போர்க்குற்றம் என்பதை ஒப்புக்கொண்டால் இரண்டு தரப்பினருமே குற்றவாளிகள் ஆவார்கள். தற்காப்புக்கென ஆயுதம் தாங்க நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள் தமிழர்கள் இதை நாம் வலியுறுத்த வேண்டும். இப்போதும் அங்கு இன ஒடுக்குமுறை தொடர்கிறது. தமிழர்கள் சிங்களம் படிக்கவேண்டும், சிங்களவர்கள் தமிழ் படிக்கிறோம் என புதிய எமாற்றுத் தந்திரத்தை இலங்கை அரசு இப்போது கையாள்கிறது. தமிழர்களின் பாரம்பரியத் தாயகத்தில் சிங்களக் குடியேற்றம் நடக்கிறது. தமிழ் எம்.பிக்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு ஏற்பாடு நடக்கிறது. மொழி,நிலம்,அரசியல் உரிமை ஆகிய அனைத்தும் பறிக்கப்படுகின்றன. அதைத் தடுத்து நிறுத்த நாம் ஒன்றிணைந்து வலுவாகக் குரலெழுப்பவேண்டும்” என்றார்.

கூட்டத்தில் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன், ஈழத் தமிழர்களின் போராட்ட அரசியல் வரலாற்றை விவரித்தார்.அவர்கள் எவ்வாறு ஆயுதம் ஏந்திப் போராட நேர்ந்தது என்பதையும் விளக்கினார். “ அன்று ஈழத் தமிழ் இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கியது இந்தியா. ஜெயவர்த்தனே காலத்தில் இலங்கையை மிரட்டுவதற்காகத் தமிழருக்கு உதவுவதுபோல நடித்தது. இந்தியாவால் பயிற்றுவிக்கப்பட்ட போராளிக் குழுக்கள் பல அவர்கள் சொன்னபடி கேட்டு நடந்தபோது இந்தியாவுக்கு நாங்கள் கைப் பாவைகளாக இருக்கமாட்டோம் என்று துணிச்சலோடு சொன்னவர்கள் புலிகள். தமிழர்களைக் காப்பாற்றுகிறோம் என்ற பெயரில் இலங்கைக்குச் சென்ற இந்திய அமைதிப்படை அங்கு தமிழர்களுக்கு எதிராக நடந்துகொண்டது. ஜானி உட்பட பலரைக் கொன்றது. புலேந்திரன், குமரப்பா உள்ளிட்ட போராளிகள் சயனைடு அருந்திச் சாவதற்குக் காரணமாகியது. பிரபாகரன் அவர்களைப் பிடிப்பதற்காகப் பலமுறை முயற்சித்தது. அப்படித்தான் அங்கே இருக்கும் புலிகள் இந்தியப் படையை எதிர்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.”

”தமிழ் ஈழமே தீர்வு என்று இந்த நேரத்தில் நாம் உரக்க முழங்குவதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. தமிழ் ஈழத்தைப் பற்றி யாரும் பேசமாட்டார்கள். தமிழ் ஈழக் கோரிக்கையை யாரும் முன் வைக்க மாட்டார்கள். ஏதேனும் ஒரு தீர்வைச் சொன்னால் அதை ஒப்புக்கொண்டு அங்கே உள்ளவர்கள் அடிபணிந்து கிடப்பார்கள் என்கிற மமதை சிங்கள இனவெறி ஆட்சியாளர்களிடம் உருவாகியிருக்கிறது. அவர்களின் ஆணவத்திற்கு, மமதைக்கு சம்மட்டி அடி கொடுக்கிற வகையில் இந்த கருத்தரங்கம் நடைபெறுகிறது.”

”தமிழர்களின் துயரத்திற்கு தமிழ் ஈழம் அமைந்தால் தான் தீர்வு கிடைக்கும். பல ஆயிரம் தமிழர்களை ரத்த வெள்ளத்தில் கொன்று குவித்த ராஜபக்சே கும்பல் மீது போர்க் குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும். காங்கிரஸ், பாஜக என மத்தியில் ஆட்சிக்கு வந்த எந்தக் கட்சியும் தமிழ் ஈழம் அமைவதை விரும்பவில்லை.கட்சி எதுவாக இருந்தாலும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் ஏற்படவில்லை. தனித் தமிழ் ஈழத்திற்காக எனது எம்.பி. பதவியையும் கூட துறக்கத் தயாராக இருக்கிறேன். தமிழ் ஈழத்தை அடைய வேண்டும் என்பதற்காகவே பாமகவுடன் கை கோர்த்துள்ளேன். இந்தக் கோரிக்கைக்காக நாங்கள் தொடர்ந்து செயல்படுவோம்” என்றார்.

இறுதியாகப் பேசிய மருத்துவர் ராமதாஸ் அண்மைக்காலங்களில் உலகில் உருவாகியிருக்கும் புதிய நாடுகளைப் பட்டியலிட்டார். அத்தகைய நாடுகள் புதிதாக உருவாகும்போது ஏன் தமிழ் ஈழம் மலரக்கூடாது என்று அவர் கேட்டார். “ ஈழமே தீர்வு என்கிற நாங்கள் ஒரு தரப்பாக இருக்கிறோம். ஒன்றுபட்ட இலங்கைக்குள்தான் தமிழ் மக்கள் வாழவேண்டும் என்பவர்கள் இன்னொரு தரப்பாக இருக்கட்டும். வெளிப்படையாக விவாதிப்போம். எவர் வேண்டுமானாலும் வந்து சொல்லட்டும். தமிழ்நாட்டில் ஈழப் பிரச்சனைக்காகப் பேசுவதற்கு முழு தகுதியுடைய கட்சிகள் பாட்டாளி மக்கள் கட்சியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும்தான். இனிமேல் திராவிடக் கட்சிகளை நம்பவேண்டாம். தைலாபுரம் தோட்டத்தில் என்னை சந்திக்க வந்தபோது தம்பி திரும்மாவிடத்திலும் தம்பி ரவிக்குமாரிடத்திலும் ஒரு தகவலைச் சொன்னேன். ஈழத் தமிழர்கள் அழிவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார் ஒரு தலைவர். அவரை தமிழ்மக்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள் . அந்தத் தலைவர் யாரென்பது உங்களுக்கெல்லாம் தெரியும்” என்று மருத்துவர் ராமதாஸ் பேசினார்.

சுமார் ஐந்தாண்டுகால இடைவெளிக்குப் பிறகு தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் மீண்டும் செயல்படத் தொடங்கியிருக்கிறது.அதன் முதல் நிகழ்ச்சியாக இந்த கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் தமிழ் உணர்வாளர்களும், பா.ம.க மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தொண்டர்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.