Thursday, July 23, 2015

மரண தண்டனை வேண்டும் என்போர் படிக்கவேண்டிய நாவல் -ரவிக்குமார்



க்ரியா வெளியிட்டிருக்கும் விக்தோர் ஹ்யூகோவின் ' மரண தண்டனைக் கைதியின் இறுதி நாள்' என்ற நூலை சற்றுமுன்னர்தான் படித்துமுடித்தேன். தூக்கிலிடப்பட்ட ஒருவனின் சடலத்தைச் சுமந்துகொண்டிருப்பதுபோல தாங்கமுடியாத பாரத்தில் மனம் அழுந்துகிறது. 

மரணதண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவனின் கூற்றாக எழுதப்பட்டிருக்கும் நூல் இது. "மனிதர்கள் அனைவரும் தொடர்ந்து ஒத்திப்போடப்பட்ட மரணதண்டனை விதிக்கப்பட்டவர்கள்தான்" என்பதால் இந்த நூலை எழுதுவதற்கு ஒருவர் மரணதண்டனைக் கைதியாக இருக்கவேண்டும் என்ற தேவை இல்லை. 

மரணதண்டனைக் கைதிகளை இந்த உலகம் " காட்சிக்கு வைக்கப்பட்ட மிருகத்தைப் பார்ப்பது" போலத்தான் பார்க்கிறது. அவர்களுக்குக் கருணைகாட்டக்கூடாது என வாதிடுவோரின் கண்கள் கொலைவெறியோடு மின்னுவதை தொலைக்காட்சி விவாதங்களின்போது நான் கவனித்திருக்கிறேன். 

இந்த நாவலின் நாயகன் யார் அவன் எதற்காகத் தண்டிக்கப்பட்டான் என்பதை இதன் ஆசிரியர் விவரிக்கவே இல்லை. அவனுக்கு ஒரு மனைவியும் மூன்றுவயதில் ஒரு மகளும் இருக்கின்றனர் என்பது மட்டும் தான் சொல்லப்பட்டுள்ளது. தண்டனை விதிக்கப்பட்டதிலிருந்து அது நிறைவேற்றப்படும்வரையிலான ஆறுவார காலத்தை இந்த நாவல் பேசுகிறது. அந்தக் காலத்தில் ஒரு கைதியின் மனோநிலை எப்படியெல்லாம் அலைக்கழிகிறது என்பதை மிகவும் நுட்பமாக ஆனால் மனிதாபிமான பாசாங்குகள் எதுவுமில்லாமல் விக்தோர் ஹ்யூகோ வாசகர் முன் வைத்திருக்கிறார். 

கதையின் நாயகன் தனது மகளை நினைத்துப் பேசுவதாக அமைக்கப்பட்டுள்ள இரண்டு பக்கங்கள் நெகிழச்செய்கின்றன. " அனைவரும் எனக்காக வருந்துகிறார்கள். அவர்கள் என்னைக் காப்பாற்ற முடியும்; இருந்தாலும் அவர்கள் என்னைக் கொல்லப்போகிறார்கள். இது உனக்குப் புரிகிறதா மரி? சிறிதும் தயங்காமல் ஒரு சடங்காக என்னைக் கொல்லப் போகிறார்கள். பொதுநலத்திற்காக!" என்ற வரிகள் மரண தண்டனை எப்படியொரு பொதுநலச் சடங்காக மாற்றப்பட்டிருக்கிறது என்பதைக் காட்டுகின்றன. 

அணுசக்தி குறித்த விவாதங்கள் முனைப்புபெற்றிருந்த போது அபாயம் நாவலையும், நூல்களுக்குத் தடைவிதிக்கப்பட்டபோது ஃபாரன்ஹீட் நாவலையும் வெளியிட்ட க்ரியா மரணதண்டனை பற்றிய சர்ச்சை உச்சமடைந்துள்ள சூழலில் இந்த நாவலை வெளியிட்டிருக்கிறது. 

இந்த நாவலை பிரெஞ்சு மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்திருக்கிற குமரன் வளவன் இன்றைய சூழலோடு இந்த நாவலைத் தொடர்புபடுத்தி ஒரு பின்னுரையையும் எழுதியிருக்கிறார். 

மரணதண்டனை வேண்டாம் என்பவர்களைவிட அந்தத் தண்டனை வேண்டும் என்பவர்களே இந்த நாவலைப் படிக்கவேண்டும்.

No comments:

Post a Comment