Monday, July 6, 2015

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பேராபத்து! - ரவிக்குமார்



சமூக பொருளதார சாதி கணக்கெடுப்பின் விவரங்கள் இப்போது வெளியிடப்பட்டுள்ளன. வடமாநிலங்கள் பலவற்றைவிட தமிழ்நாட்டின் சமூக பொருளாதார நிலை மோசமாக இருப்பதை அந்த விவரங்கள் காட்டுகின்றன. தமிழ்நாட்டை ஆண்டவர்களும் ஆள ஆசைப்படுகிறவர்களும் அதைப்பற்றி வாய்திறக்கவில்லை. மாறாக சாதிவாரிக் கணக்கெடுப்பு விவரங்களை வெளியிடுங்கள் எனக் கேட்கிறார்கள். creamy layer போல இந்த கணக்கெடுப்பும் பிற்படுத்தப்பட்ட மக்களில் பலருக்குத் தீங்காக முடியும் ஆபத்து இருக்கிறது. 

இந்தக் கணக்கெடுப்பு எதற்காக எடுக்கப்படுகிறது என்பதை விளக்கும்போது  "அரசாங்கத்தின் நலத் திட்டங்கள் தகுதியுள்ளவர்களுக்குக் கிடைக்கவும் தகுதியற்ற பயனாளிகளை நீக்குவதற்கும் இந்த கணக்கெடுப்பின் விவரங்கள்  பயன்படுத்தப்படும் எனக் கூறப்பட்டிருக்கிறது"ச. (  " to ensure that all eligible beneficiaries are covered, while all ineligible beneficiaries are excluded" ) 

வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்களின் பட்டியலில் ஒரு குடும்பத்தைச் சேர்க்கலாமா அல்லது விலக்கலாமா என்பதைத் தீர்மானிக்க 14 அம்சங்கள் இந்தக் கணக்கெடுப்பில் குறிப்பிடப்பட்டுள்ளன. அந்த அம்சங்களில் சில: 
1. இரு சக்கர வாகனம் இருக்கும் குடும்பம்
2. அரசு ஊழியர் இருக்கும் குடும்பம்
3. மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பாதிப்பவரின் குடும்பம்
4. விவசாயம் அல்லாத தொழில் செய்யும் குடும்பம்
5. தொலைபேசி உள்ள குடும்பம்
6. ஃப்ரிட்ஜ் வைத்திருக்கும் குடும்பம்
7. மூன்று அறை உள்ள வீடு உள்ள குடும்பம்

மேற்குறிப்பிட்ட குடும்பங்கள் யாவும் வறுமைக்கோட்டிலிருந்து தாமாகவே நீக்கப்பட்டுவிடும் என இந்த அறிக்கை கூறுகிறது. அப்படி நீக்கப்பட்ட குடும்பங்கள் இனி சமூகநலத் திட்டங்களின் பயனாளிகளாக இருக்க முடியாது என்பதே இதன் பொருள். 

தகுதியான பயனாளிகளைக் கண்டறிவதே நேரடி மானியத் திட்டத்தின் நோக்கம் என்று கூறப்பட்டது, ஆனால் பொது விநியோகத் திட்டத்தை ஒழிப்பதுதான் மத்திய அரசாங்கத்தின் நோக்கம் என்பது இப்போது புரிய ஆரம்பித்துள்ளது. அதுபோலத்தான் இந்தக் கணக்கெடுப்பின் விவரங்களும் பயன்படுத்தப்படப்போகின்றன. 

இந்தக் கணக்கெடுப்பு 2011 ல் மேற்கொள்ளப்பட்டபோது ஊரக மேம்பாட்டுத்துறையின் அமைச்சராக இருந்த ஜெய்ராம் ரமேஷால் வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளிலேயே சாதிவாரிக் கணக்கெடுப்பின் விவரங்கள் public domain ல் வெளியிடப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இப்போது கோரிக்கை விடுபவர்கள் அப்போது ஏன் அமைதி காத்தார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம். 

இந்தக் கணக்கெடுப்பில் மொத்தமுள்ள ஊரகப் பகுதிகளில் வாழும் 17.91 கோடி குடும்பங்களில் 7.05 கோடி குடும்பங்கள் அதாவது சுமார் நாற்பது சதவீத குடும்பங்கள் வறுமைக் கோட்டிலிருந்து விலக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இதனால் அதிகம் பாதிக்கப்படப் போகிறவர்கள் கிராமப்புறங்களில் உள்ள பிற்படுத்தப்பட்ட மக்கள்தான். இந்த ஆபத்தை எதிர்ப்பதை விட்டுவிட்டு சாதிவாரி விவரங்களை வெளியிடுங்கள் எனக் கேட்பது மாட்டை விட்டுவிட்டு அதன் நிழலைப் பிடிக்கும் முயற்சி என்று சொல்லத்தோன்றுகிறது. இந்தக் கோரிக்கை பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உதவுமா அல்லது சாதியை வைத்து அரசியல் நடத்துகிறவர்களுக்கு கைகொடுக்குமா என்பதை மக்களின் முடிவுக்கே விட்டுவிடுவோம். 

No comments:

Post a Comment