Sunday, April 5, 2015

ஊடகங்களில் நியாயமான பங்கேற்பு - ரவிக்குமார்


========================

( 04.04.2015 அன்று நடைபெற்ற சரிநிகர் ஆலோசனைக் கூட்டத்தில் நான் முன்வைத்த  கருத்துகளில் ஒன்று) 

===========================

சுதந்திரம் என்பது ஜனநாயகத்திலிருந்து பிரிக்க முடியாதது. ஊடக சுதந்திரத்தைப் பற்றிப் பேசும்போது ஊடக ஜனநாயகம் குறித்தும் நாம் பேசவேண்டும். செய்திகள் நியாயமாக வெளிப்படவேண்டுமென்றால் ஊடகங்களில் நியாயமான பங்கேற்பு ( Fair Representation ) உறுதிசெய்யப்பட வேண்டும். 

இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் ஊடகங்கள் இருக்கும் மாநிலம் தமிழ்நாடு. பெரும்பாலான ஊடகங்கள் கொள்கையளவில் சமூக நீதியை ஏற்றுக்கொள்கிறவர்களால்தான் இங்கு நடத்தப்படுகின்றன. அனால் அவற்றில் நியாயமான பங்கேற்பு ஒன்றில்கூட கிடையாது. 

அச்சு ஊடகங்களில் தலித்துகள் புறக்கணிக்கப்படுவதை ராபின் ஜெஃப்ரி தனது ஆய்வு நூலில் வெளிப்படுத்தியிருக்கிறார். காட்சி ஊடகங்களின் நிலை அதிலிருந்து வேறுபடவில்லை. 

காட்சி ஊடகங்களில் பெண்களின் பங்கேற்பு பெரும்பாலும் அவர்களைப் பண்டங்களாக பாவிப்பதாகத்தான் இருக்கிறது. நிகழ்ச்சிகளை முடிவுசெய்யும் நிலையில் அவர்கள் அதிகம் இல்லை. 

மதச் சிறுபான்மையினர், தலித்துகள் ஆகியோரின் பங்கேற்பு இல்லையென்றே சொல்லிவிடக்கூடிய நிலைதான் உள்ளது. ஓரிருவர் இருந்தாலும் அவர்கள் கடுமையான நெருக்கடிகளை சந்திக்கின்றனர். 

கருத்தியல்சார் அரசு சாதனமாக  ( Ideological State Apparatus ) இருக்கும் ஊடகத்தில்  பங்கேற்பதென்பதை வெறும் வேலை வாய்ப்பு என்று பார்க்கக்கூடாது. கலாச்சார உற்பத்திக் கேந்திரங்களுள் ஊடகம் முக்கியமானது. கருத்தியல் மேலாண்மையை ( Ideological Hegemony) நிறுவுவதில் அது மிக முக்கிய பங்காற்றுகிறது. 

செய்திகளில் ஜனநாயகம் இருக்கவேண்டுமென்றால் ஊடகங்களில் நியாயமான பங்கேற்பு உறுதிசெய்யப்படவேண்டும். அது சமூகக் குழுக்களின் நியாயமான பங்கேற்பாக மட்டுமின்றி பலதரப்பட்ட கருத்தியல் போக்குகளின் ( Ideological Currents ) பங்கேற்பாகவும் இருக்கவேண்டும். 

இந்தக் கோரிக்கையை அரசியல் கட்சித் தலைவர்கள் எழுப்பமாட்டார்கள். ஊடக முதலாளிகளைப் பகைத்துக்கொள்ள அவர்கள் விரும்பமாட்டார்கள். எனவே இதற்காக சரிநிகர் குரல் கொடுக்கவேண்டும். 

No comments:

Post a Comment