Monday, April 6, 2015

ஒடுக்கப்பட்டோர் அமைப்புகள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் ஒன்றிணையவேண்டும்! -ரவிக்குமார்



விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துவக்கப்பட்டு இந்த ஆண்டுடன் இருபத்தைந்து ஆண்டுகள் நிறைகிறது. இது வெள்ளிவிழா ஆண்டு. தமிழக வரலாற்றில் இது மிகப்பெரிய சாதனை. 

முன்னாள் அமைச்சர்கள், கல்வி வள்ளல்கள், பலம்வாய்ந்த சாதிகளின் தலைவர்கள் - எனப் பலபேர் இங்கு கட்சி ஆரம்பித்துக் காணாமல் போய்விட்டார்கள். ஆனால் எந்தவிதப் பின்புலமும் இல்லாமல் ஒடுக்கப்பட்ட மக்களை ஒன்றிணைத்து அவர்களை அரசியல் சக்தியாக உருமாற்றிய பெருமை எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் அவர்களையே சாரும். 

ஆட்சியில் இருந்த கட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்க தலித் மக்களின் குடிசைகளைக் கொளுத்தலாம் என்றிருந்த நிலையை மாற்றியது விடுதலைச் சிறுத்தைகளின் வருகைதான். சுயேச்சையான சின்னத்தில் போட்டியிட்டு சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் தலித்துகள் தடம் பதிக்க வழிகோலியதும் விடுதலைச் சிறுத்தைகள்தான். 

தமிழ்நாட்டில் ஒடுக்கப்பட்ட மக்கள்மீதான வன்கொடுமைகள் குறையவேண்டுமென்றால் தலித் மக்களின் அரசியல் பலம் அதிகரிக்கவேண்டும். தலித் இயக்கங்கள் பலவீனப்படும்போது சாதிய சக்திகள் மீண்டும் கொள்ளிக்கட்டைகளோடும் வீச்சரிவாள்களோடும் வலம்வர ஆரம்பித்துவிடுகின்றன. அண்மைக்காலமாக தமிழகத்தின் பல பகுதிகளிலும் தலித் மக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துவருவது அதைத்தான் காட்டுகிறது. இதை தலித் மக்களின்பால் அக்கறைகொண்டோர் புரிந்துகொள்ளவேண்டும்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி என்பது சாதிக் கட்சி அல்ல, சாதி ஒழிப்புக்கான கட்சி. அனைத்துத் தரப்பு மக்களின் நலன்களுக்காகவும் குரல் கொடுக்கும் கட்சி. ஆனால் அதன் அடித்தளம் என்பது ஒடுக்கப்பட்ட மக்கள்தான். 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வெள்ளிவிழா காணும் இந்த ஆண்டில் ஆங்காங்கே இருக்கும் சிறு சிறு தலித் அமைப்புகளும், தமிழ்த் தேசிய அமைப்புகளும், சிறுபான்மையினரின் இயக்கங்களும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியோடு இணைந்து ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் பலத்தை அதிகரிக்க ஏன் முன்வரக்கூடாது? 

தேசிய அளவில் ஜனதா கட்சிகள் ஒன்றிணைந்து ஜனதா பரிவார் ஆகிவிட்டன; காங்கிரஸ் கட்சியும் தன்னிடமிருந்து பிரிந்துபோனவர்களை மீண்டும் இணையுமாறு அழைப்பு விடுத்துள்ளது. இப்படி ஆதிக்க சக்திகள் ஒன்றிணைந்து பலம்பெறும்போது ஒடுக்கப்படுவோர் ஒரு கொடியின்கீழ் திரள்வது அவசியமில்லையா?

No comments:

Post a Comment