Tuesday, April 7, 2015

ஆந்திராவில் தமிழகத் தொழிலாளர்கள் படுகொலை


நீதி விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் ஆணையிட வேண்டும்
ஆந்திர முதல்வர் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்
தமிழக முதல்வர் நேரில் சென்று பார்வையிட வேண்டும்
தொல்.திருமாவளவன் அறிக்கை


  ஆந்திராவில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாகச் சொல்லி 20 கூலித் தொழிலாளர்கள் ஆந்திர வனத்துறையால் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார்கள். அதில் 12 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.  ஆயுதம் எதுவும் அற்ற கூலித் தொழிலாளர்களை எவ்வித முகாந்திரமும் இல்லாமல் சுட்டுப்படுகொலை செய்திருக்கும் ஆந்திர வனத்துறையின் வெறிச்செயலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
இதற்காக ஆந்திர முதலமைச்சர் தமிழக மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டுமென வலியுறுத்துகிறோம். 

 இந்தப் பிரச்சனையில் இரண்டு மாநிலங்கள் சம்பந்தப்பட்டிருப்பதால் உச்ச நீதிமன்றம் தாமே முன்வந்து தற்போது பணியிலிருக்கும் நீதிபதி ஒருவரின் தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறோம்.

தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களைத் தாக்குவது என்பது ஆந்திரக் காவல்துறையினரின் அண்மைக்காலச் செயல்பாடாக இருக்கிறது.  தமிழ்நாட்டிலிருந்து வேலை தேடிச் செல்லும் கூலித் தொழிலாளர்களைக் கைது செய்வதும், ஈவிரக்கமின்றித் தாக்குவதும், அண்மைக் காலமாக அதிகரித்துக்கொண்டிருக்கிறது.  செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகத்தினரைக்கூட ஆந்திரக் காவல்துறை கடுமையாகத் தாக்கிக் கொடுமைப்படுத்தியதை நாம் அறிவோம்.  இந்தச் செயல்களைக் கண்டிக்கவோ கட்டுப்படுத்தவோ ஆந்திர அரசோ, முதலமைச்சரோ  எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.  இது இரண்டு மாநில மக்களுக்கிடையிலான நட்புறவைக் கெடுத்து பகைமையை வளர்ப்பதற்கே வழிவகுக்கும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறோம்.  எனவே, ஆந்திர வனத்துறையின் இந்த அத்துமீறிய படுகொலைக்காக ஆந்திர முதலமைச்சர் தமிழக மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும்.

சென்னையில் அடுக்குமாடிக் கட்டிட விபத்தில் ஆந்திரத் தொழிலாளர்கள் உயிரிழந்தபோது அந்த மாநில முதலமைச்சர் நேரில் வந்து பார்வையிட்டார்.  அதைப் போல படுகொலை செய்யப்பட்டிருக்கும் தமிழ்நாட்டுத் தொழிலாளர்களின் சடலங்களை தமிழக முதலமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

ஆந்திர-தமிழக மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் நீண்ட நெடுங்காலமாக, சகோதரர்களாய் அன்போடு வாழ்ந்து வருகிறார்கள். அதனைக் கெடுக்கும்வகையில் இந்தப் படுகொலை நடந்திருக்கிறது. இதனால் தமிழ்நாட்டில் ஆந்திர மக்களுக்கு எதிரான வெறுப்புணர்வு அதிகரிக்கக்கூடும்.  அது எதிர்காலத்தில் மோசமான விளைவுகளை உண்டாக்கக்கூடிய ஆபத்து இருக்கிறது.
எனவே, உச்ச நீதிமன்றம் தாமே முன்வந்து இரண்டு மாநில மக்களுக்கிடையிலான நல்லுறவைக் காக்கும்வகையில் தற்போது பணியிலிருக்கும் நீதிபதி ஒருவரின் தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்து இந்தப் படுகொலையில் தொடர்புள்ள அனைவரையும் தண்டிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

No comments:

Post a Comment