Monday, April 27, 2015

ஷர்மிளா ஸெய்யித்:

இலங்கை இஸ்லாமிய அறிவுஜீவிகளின் நிலைபாட்டை இங்குள்ளோரும் வழிமொழியவேண்டும்
-ரவிக்குமார்
=======================

இஸ்லாத்தின் பெயரால் ஒருசில நபர்களின் அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கும் இலங்கை எழுத்தாளர் ஷர்மிளா ஸெய்யித்துக்கு இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம் அறிவுஜீவிகள் சிவில்சமூக செயற்பாட்டாளர்கள் ஆதரவு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அவரை அச்சுறுத்தும் நபர்கள்மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியிருக்கும் அந்த அறிக்கை முஸ்லிம் மதத் தலைவர்கள் பங்கேற்கும் ஜமைதுல் உலேமா முதலான அமைப்புகள் தலையிட்டு சக முஸ்லிம் ஒருவரைத் துன்புறுத்தும் இந்தச் செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது. 

பாலியல் தொழிலில் ஈடுபட்டிருக்கும் பெண்களைக் காப்பாற்ற விபச்சாரத்தை சட்டபூர்வமாக்கவேண்டும் என பிபிசி வானொலிக்கு அளித்த பேட்டி ஒன்றில் ஷர்மிளா கூறிய கருத்தைத் தொடர்ந்தே அவருக்கு மிரட்டல்கள் வரத் தொடங்கின என்று அந்த அறிக்கை கூறுகிறது. 

விபச்சாரத்தை ஒரு தொழிலாகப்
பார்ப்பதும் அதில் ஈடுபட்டிருப்போரை பாலியல் தொழிலாளிகள் என அழைப்பதும் தவறு என்பதே எனது கருத்து. அப்படிச் செய்வது பெண்களை பாலியல் சுரண்டலுக்கு தொடர்ந்து ஆட்படுத்தவே வழிவகுக்கும். அதுமட்டுமின்றி பெரும்பாலான பெண்கள் அதில் வலுக்கட்டாயமாக வன்முறையின் மூலமே தள்ளப்படுகின்றனர். அதிலும் குறிப்பாக சிறார்கள் அதில் ஈடுபடுத்தப்படுவது அதிகரித்து வருகிறது. இலங்கை அத்தகைய சிறார் பாலியல் சுற்றுலா மையங்களில் ஒன்றாக மாறிவருகிறது என செய்திகள் கூறுகின்றன. இந்தப் பின்னணியில், ஷர்மிளா கூறியிருக்கும் கருத்தை என்னால் ஏற்க முடியவில்லை. ஆனால் அப்படியொரு கருத்தைக் கூறுவதற்கான உரிமை அவருக்கு இருக்கிறது. அதற்காக அவரை மதத்தின் பெயரால் அச்சுறுத்துவதும் நாட்டைவிட்டே ஓடித் தலைமறைவாகும் அளவுக்கு மிரட்டுவதும் ஏற்கத் தக்கதல்ல. 

ஷர்மிளா ஸெய்யித் பிரச்சனை ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் சகிப்புத் தன்மை அற்றதாகக் காட்டுவதற்குப் பயன்பட்டுவிடும் ஆபத்து இருக்கிறது. இப்போது முஸ்லிம் அறிவுஜீவிகள் வெளியிட்டிருக்கும் அறிக்கை ஷர்மிளா ஸெய்யித்துக்கு தனது தார்மீக ஆதரவைத் தெரிவித்திருப்பது மட்டுமின்றி முஸ்லிம் சமூகத்தையும் அவப்பெயரிலிருந்து 
காப்பாற்றியிருக்கிறது. 

பேராசிரியர்கள் ஊடகவியலாளர்கள் சமூக செயற்பாட்டாளர்கள் எழுத்தாளர்கள் என 57 பேர் அந்த அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர். தமிழ்நாட்டு இஸ்லாமிய அறிவுஜீவிகளும் அமைப்புகளும் அந்த அறிக்கையை வழிமொழிந்தால் இஸ்லாம் குறித்த அவதூறுகளைத் தடுப்பதோடு ஜனநாயகம் வலுப்படவும் உதவியாக இருக்கும். 

No comments:

Post a Comment