Wednesday, April 29, 2015

நேபாளம்: பூகம்பத்திலும் சரியாத சாதி

நேபாளத்தில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் இறந்தோர் எண்ணிக்கை ஒவ்வொருநாளும் உயர்ந்தபடி இருக்கிறது. பத்தாயிரம் பேர்வரை இறந்திருக்கக்கூடும் என கருதப்படுகிறது. 

நேபாள மக்களுக்காக உலகெங்குமிருந்து உதவிக் கரங்கள் நீள்கின்றன என்பது சற்றே ஆறுதல் அளிக்கும் செய்தி. ஆனால் அந்த உதவிகள் எல்லோருக்கும் போய்ச் சேரவில்லை. நகரப் பகுதிகளுக்குத்தான் முக்கியத்துவம் தருகிறார்கள் என கிராமப் புற மக்கள் குறைகூறுகின்றனர். அதிலும் தலித் மக்களுக்கு நிவாரண உதவிகள் கிடைக்கவில்லை என்கிறார்கள். 

நேபாளத்தில் 12% தலித் மக்கள் இருப்பதாக அரசாங்கம் சொல்கிறது. தீண்டாத சாதிகளை வரையறுப்பதில் இருக்கும் குழப்பம் காரணமாகவே தலித் மக்கள் தொகை குறைவாக உள்ளது. உண்மையில் தலித்துகளின் எண்ணிக்கை 20% இருக்கும் என தலித் தரப்பில் வாதிடுகின்றனர். 

இயற்கைப் பேரிடர் நேர்ந்தால் அதில் அதிகம் பாதிக்கப்படுவது தலித் மக்கள்தான். "சமூகத்தில் ஏதேனும் நன்மை நிகழ்ந்தால் அதன் பயனை நுகர்வதில் கடைசியிலும் ஏதேனும் கேடு நேர்ந்தால் அதனால் பாதிக்கப்படுவதில் முதல் இடத்திலும் தீண்டாத மக்கள் உள்ளனர்" என அம்பேத்கர் கூறியது இப்போதும் மாறிவிடவில்லை. அதைத்தான் நேபாள நில நடுக்கமும் காட்டுகிறது. 

நிவாரணப் பணிகளில் சாதி அடிப்படையில் பாரபட்சம் காட்டக்கூடாது என நேபாள அரசை வலியுறுத்துவோம். டெல்லியிலிருக்கும் ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பின் கவனத்துக்கு இந்தத் தகவலை எடுத்துச் சென்றிருக்கிறேன். 


http://indianexpress.com/article/world/neighbours/dalit-village-wonders-if-modi-govts-help-will-ever-reach-us/

No comments:

Post a Comment