Sunday, November 25, 2012

தமிழ் பிராமியா ? தமிழியா ?



தமிழக சட்டப்பேரவையில் தமிழ் பிராமி கல்வெட்டுகள் குறித்தும் அவற்றைக் காப்பாற்றவேண்டியதன் தேவை குறித்தும் 2010 ஆம் ஆண்டில் நான் பேசியது: 

28-4-2010

                          வினாக்கள்-விடைகள்

வினா வரிசை எண் 119-க்கான துணை வினா

திரு. து. ரவிக்குமார்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தமிழ் பிராமிக் கல்வெட்டுகளைப் பொறுத்தளவிலே, இந்தப் பெயர் ஒரு பிரெஞ்ச் அறிஞரால் சொல்லப்பட்டு, அதுவே இன்றைக்கு நடைமுறையிலே இருக்கிறது. திரு. சே. ராசு போன்ற கல்வெட்டு அறிஞர்களெல்லாம் இதை தமிழிக் கல்வெட்டுகள் என்றும், பழந்தமிழ்க் கல்வெட்டுகள் என்றும்தான் அழைக்க வேண்டும்; தமிழ்ப் பிராமி என்று அழைப்பது சரியல்ல என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.  இதையும் அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். 

குறிப்பாக, இந்தக் கல்வெட்டுகள் குகைகளிலும், அதிலும் குறிப்பாக சமணப் படுக்கைகள் இருக்கும் இடங்களிலே அமைந்திருக்கின்ற நிலையில், இன்றைக்கு சுரங்கத் துறையின் அனுமதி பெற்று கல் குவாரி எடுப்பவர்கள், அந்தக் கல்வெட்டுகள் அமைந்திருக்கின்ற இடங்களுக்கு மிக அருகில் கல் குவாரிகளை எடுக்கும்போது, அந்தக் கல்வெட்டுக்கள் பாதிக்கப்படக்கூடிய ஒரு நிலை இருக்கிறது.  இன்றைக்கு இந்தியத் தொல்லியல் துறை, 400 மீட்டர் தூரத்திற்கு அருகிலே அந்தக் கல் குவாரிகளை அமைக்கக்கூடாது என்று உத்தரவிட்டிருக்கிறது.  ஆனால், 50 மீட்டர் அளவு வரை எடுக்கலாம் என்று ஓர் அரசு உத்தரவு இருக்கின்ற நிலையைச் சுட்டிக்காட்டி, கல் குவாரி உரிமையாளர்கள் அந்தக் கல்வெட்டுகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகின்ற அளவிற்குச் சென்றுகொண்டிருக்கின்ற நிலை இருக்கிறது.  அண்மையிலே உயர் நீதிமன்றத்திலேகூட அந்த வழக்கு வந்திருக்கிறது.  இதைக் கவனத்தில் கொண்டு நம்முடைய அரசு, இந்தியத் தொல்லியல் துறை ஏற்கெனவே அறிவித்துள்ள உத்தரவுப்படி 400 மீட்டர் வரைக்கும், அந்தக் கல்வெட்டுகள் இருக்கின்ற இடங்களுக்கு அருகிலே கல் குவாரிகளை அனுமதிப்பதில்லை என்ற ஒரு நிலையை எடுக்க முன்வருமா என்பதைக் கேட்டு அமைகின்றேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள்.
மாண்புமிகு திரு. தங்கம் தென்னரசு: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, பிராமி எழுத்துகளைப் பொறுத்தமட்டில், சிந்து எழுத்துக்களுக்குப் பிறகு இந்திய எழுத்துகளில் முதல்முறையாக உருவாக்கப்பட்ட எழுத்துகள் என்ற வகையில், அவை பிராமி எழுத்துகள் என்ற வகையில் அழைக்கப்படுகின்றன.  அவற்றில் அசோகன் காலத்தில் உருவாக்கப்பட்ட அசோகன் பிராமி, அதற்குப் பிறகு மௌரிய பிராமி, பட்டுப் புரோலு பிராமி என்று வருகிறபொழுது, தமிழகத்தில் இருக்கக்கூடிய பிராமிக் கல்வெட்டுகள் தமிழ்ப் பிராமி என்ற முறையிலே இப்போது அழைக்கப்பட்டு வருகிறது.  அவர் சொன்னதைப்போல, அதைத் தமிழி என்று அழைக்க வேண்டும் என்று சில அறிஞர்களிடத்திலே கருத்து இருப்பது உண்மை.  இன்னும் சொல்ல வேண்டுமென்று சொன்னால், அந்தக் காலத்தில் உருவாக்கப்பட்ட சமண, பௌத்த நூல்களான ‘லலித வஸ்தர’, ‘பண்ணவான சுத்த’ போன்ற பல்வேறு நூல்களிலேகூட, இது தமிழி அல்லது திராவிடி என்று அழைக்கப்பட வேண்டுமென்று குறிப்புகள் இருக்கின்றன.  இருந்தாலும், தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் போன்றவர்கள் தமிழ்ப் பிராமி என்றே அழைக்கப்பட வேண்டுமென்ற கருத்தையும் நிறுவியிருக்கிறார்கள்.  எனவே, நம்முடைய அறிஞர்களின் அந்தக் கருத்தின் அடிப்படையிலேதான் தொடர்ச்சியாக தமிழ்ப் பிராமி என்ற முறையிலேயே தொல்லியியல் துறையிலும் அழைப்பதை இந்த அரசு ஏற்றுக்கொண்டிருக்கிறது. 
அடுத்து, மிக முக்கியமான ஒரு கருத்தை அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.  பல்வேறு பிராமி’ கல்வெட்டுகள் இருக்கக்கூடிய இடங்களிலே, கனிமத் துறையின்மூலமாக அங்கே சுரங்கங்கள் வெட்டுவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறபோது, அந்தப் பிராமிக் கல்வெட்டுகள் அழியக்கூடிய நிலையில் இருப்பதை அவர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.  1966 ஆம் ஆண்டு சட்டத்தின்படி, பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களிலிருந்து 100 மீட்டர் தள்ளியிருக்கக்கூடிய பகுதி prohibited area அதாவது பாதுகாக்கப்பட்ட பகுதி. அதற்கு மேலே 200 மீட்டர் என்பது, regulated area  என்று கொடுத்திருக்கிறார்கள்.  அதற்குள்ளாக எந்தப் பணிகளையும் செய்யக்கூடாது.  ஆனால், சில இடங்களிலே இதற்கு மேலாகச் செய்யக்கூடிய கல் குவாரி பணிகளினால், மொத்தமாக இந்தப் பிராமி கல்லெழுத்துகள் இருக்கக்கூடிய பகுதிகளுக்கு,  அங்கே இருக்கக்கூடிய கற்சிலைகளுக்கு ஆபத்து வந்திருக்கிறது.  எனவே, இதைத் தடுக்க வேண்டுமென்று நம்முடைய மாண்புமிகு முதல்வர் அவர்களுடைய உத்தரவின் அடிப்படையில், கடந்த 19–6–2009 அன்று நம்முடைய தலைமைச் செயலாளர் அவர்களுடைய தலைமையிலே ஒரு முக்கியமான கூட்டம் கூட்டப்பட்டு, பல்வேறு துறைத் தலைவர்களோடு இது ஆலோசிக்கப்பட்டிருக்கிறது. அந்தக் கல்வெட்டுகள், சிலைகள் அமைந்திருக்கக்கூடிய முழு மலைப் பகுதியையும் பாதுகாக்கப்பட்ட சின்னமாக அறிவித்து நடவடிக்கை எடுத்தால், இவற்றைக் காப்பாற்ற முடியும் என்ற நிலை இருக்கக்கூடிய காரணத்தினால், தொல்லியல் துறையின் சார்பாக அதைச் செய்வதற்கு முழுமையான முயற்சிகளை இப்போது நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுடைய அறிவுரையைப் பெற்று அவற்றைச் செய்வதற்கான நடவடிக்கைகளை இந்தத் துறை மேற்கொண்டிருக்கிறது. 

4 comments:

  1. தங்கள் கவன ஈர்ப்புக்கள் அவசியமானவை. பாராட்டிற்கு உரியவை. இரண்டு ஆண்டுகள் கழித்து இன்றைய நிலை எவ்வாறு உள்ளத?
    அன்புடன்
    சொ.வினைதீர்த்தான்

    ReplyDelete
  2. இரவிக்குமார், கேள்விகள் எழுப்ப வேண்டியதும் அழிவைத் தடுக்க வேண்டுவதும் மிகவும் தேவை.
    இணையவழி நல்லுணர்வோடு தடுக்க வேண்டி மனு உருவாக்கலாம். சில ஆயிரம் பேராவது கையெழுத்திடுவார்கள்.
    சிலவற்றை அரசியல் கட்சிகள் தாண்டி தமிழர் நலன், உலகப் பாரம்பரிய நலன் எனப் பார்க்க வேண்டும். பார்க்கவேண்டுமாய்
    பல வழிகளின் அரசுகளையும் மற்ற அதிகாரம் படைத்தவர்களையும் உந்திச் செயல்பட வைக்க வேண்டும்.

    ஊடகங்கள், நட்பூடகங்கள், இணையம், வலைப்பதிவுகள், அஞ்சல் என்று எல்லா வழிகளிலும் வலியுறுத்த
    முற்படுவோம்.

    அன்புடன்
    செல்வா

    ReplyDelete
  3. திரு செல்வகுமார்
    நீங்கள் சொல்வது சரிதான். நான் தொல்லியல் ஆய்வரங்கில் பூலாங்குறிச்சி கல்வெட்டுகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியத் தொல்லியல் துறை பிராந்திய இயக்குனர் திரு தயாளன் அவர்களிடம் வேண்டியபோது அது பாதுகாக்கப்பட்ட சின்னம் ( protected monument ) அல்ல அதனால் அதுகுறித்துத் தாம் எதுவும் செய்யமுடியாது என்று பதிலளித்ததை நீங்கள் கவனித்திருப்பீர்கள். இன்னும் சில காலத்தில் பூலாங்குறிச்சிக் கல்வெட்டு அழிந்துபோய்விடும் நிலை . அதை முதலில் காக்க வேண்டும் . அதை பாதுகாக்கப்பட்ட தொல்லியல் சின்னமாக அறிவிக்கச் செய்யவேண்டும்.சில மாதங்களுக்கு முன் அதுகுறித்து தீராநதி மாத இதழில் நான் கட்டுரை ஒன்றை எழுதினேன். அதை எனது வலைப்பதிவில் இடுகிறேன், பாருங்கள்.
    ரவிக்குமார்

    ReplyDelete
  4. தங்களது கவன ஈர்ப்பு பாராட்டற்குரியது, மிக முக்கியமானது. ஒரு புறம் கல்
    ’தோன்றா, மண் தோன்றா’ பெருமை, இன்னொருபுரம் ‘கல்லடித்து வரும் வருமானம்’
    இதற்கிடையில் தமிழகம் ஊசலாடுகிறது. எது எமக்கு அதி முக்கியம் என்பது கூட
    அறிய முடியாத ஒரு அவல, பின் தங்கிய நிலையில்தான் தமிழக சமூகம்
    இருக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெருங்கற்கால ஓவியங்களெல்லாம்
    பாதுகாப்பற்ற நிலையில் உள்ளன. உலகின் அதிசயமாகக் காணத்தக்க பெருங்கற்கால
    கல்லறைகளெல்லாம் பாதிக்கு மேல் அழிக்கப்பட்டுவிட்டன. பாரதி பாடியபடி,
    ‘விதியே! விதியே! இந்த தமிழ்ச்சாதியை என்ன செய்ய உள்ளாய்?’ என்று
    கதறத்தோன்றுகிறது. தன்மானமற்ற ஒரு சமூகமாக இது இருக்கின்றதே! :-(

    கண்ணன்

    ReplyDelete