Saturday, October 23, 2010

புத்துயிர் பெறும் ‘தமிழன்’ - ரவிக்குமார்



1907 ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி அயோத்திதாசரால் துவக்கப்பட்ட ‘தமிழன்’ வார இதழின் நூற்றாண்டு நெருங்கி வருகிறது. “உயர்நிலையையும் இடைநிலையையும், கடை நிலையையும்  பாகுபடுத்தி அறிய முடியாத மக்களுக்கு  நீதி, சரியான பாதை மற்றும் நேர்மையைக் கற்பிப்பதற்காக” துவக்கப்பட்ட ‘தமிழன்’ ஏடு அயோத்திதாசர் காலமாகும்வரை (5.5.1914)  தொடர்ந்து வெளிவந்தது.
இடஒதுக்கீடு, இந்தி எதிர்ப்பு, தமிழ் மொழியின்  சிறப்பு முதலானவை குறித்து தமிழ்ச்சூழலில் வேறு எவரும் பேசுவதற்கு முன்னமேயே ‘தமிழன்’ பேசியது. பெண்களுக்கென ‘பத்தி’ (சிஷீறீuனீஸீ) ஒன்றும் அதில் வெளியாகிவந்தது.
தமிழ்நாட்டில் மட்டுமின்றி தமிழர்கள் அடர்த்தியாய் வசித்த கர்னாடகாவின் கோலார் தங்கவயலிலும், பர்மா, தென்னாப்பிரிக்கா, இலங்கை முதலான அயல்நாடுகளிலும் அது விநியோகிப்பட்டது. உலகெங்கும்  பரவியிருந்த ‘ஒடுக்கப்பட்ட தமிழர்களை’ ஒருங்கிணைப்பதாகவும் அவர்களுக்கு உணர்ச்சி ஊட்டுவதாகவும் ‘தமிழன்’விளங்கியது. தன் சமகாலத்தில் வெளிவந்துகொண்டிருந்த ‘இந்தியா’ ‘சுதேசமித்திரன்’ முதலான ஏடுகள் முன்னெடுத்த சுயராச்சிய அரசியலின் பிற்போக்குத்தனத்தைத் தொடர்ந்து ‘தமிழன்’ அம்பலப்படுத்திவந்தது.
தமிழ்நாட்டு நடப்புகள் மீது மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றில் நடந்த அரசியல் நிகழ்வுகள் குறித்தும் ‘தமிழன்’ கருத்து தெரிவித்து வந்தது. அதில் வெளியான வாசகர் கடிதங்கள்கூட கூர்மையான அரசியல் பார்வையை வெளிப்படுத்துவனவாய் உள்ளன.
‘தமிழன்’ இதழைத் துவக்கியவரும், ‘தமிழ்த் தேசியத் தந்தை’ என அறியப்படுபவருமான அயோத்திதாசர் இந்தியாவில் காங்கிரஸ் கட்சி துவக்கப்படுவதற்கு முன்பே அரசியல் பணிகளில் ஈடுபட்டிருந்தவர். 1845ஆம் ஆண்டு மே மாதம் இருபதாம் தேதி பிறந்த அவர் தனது இருபத்தைந்தாவது வயதிலேயே சமூகப் பணியில் ஈடுபாடுகொள்ளத் துவங்கிவிட்டார். 1876ல் நீலகிரியில் ‘அத்வைதானந்தசபை’ அவரால் நிறுவப்பட்டது. 1881ல் இந்திய குடிக்கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டபோது ‘சாதியற்ற திராவிடர்கள் / ஆதித்தமிழர்கள்’ எனத் தம்மைப் பதிவு செய்து கொள்ளும்படி தீண்டாத மக்களுக்கு  அவர் வேண்டுகோள் விடுத்தார். தவறுதலாக அவர்கள் தம்மை சாதி அடையாளத்தோடு பதிவு செய்தால் அதைப்புறக்கணித்து அவர்களை  சாதியற்ற திராவிடர்கள் / ஆதித்தமிழர்கள் என்றே பதிவு செய்ய வேண்டும் என அரசாங்கத்தாரிடமும் அவர் கோரிக்கை மனு அளித்தார்.
1891ஆம் ஆண்டு ‘திராவிட மகாஜனசபை’ அவரால் நிறுவப்பட்டது. 1898வாக்கில் அயோத்திதாசரின் தலைமையில் தீண்டாதமக்களின் பிரதிநிதிகள் ஒரு குழுவாக கர்னல் ஆல்காட் அவர்களிடம் சென்று தங்களது பூர்வமதம் பௌத்தமேயென்றும் சென்னை நகரில் ‘பௌத்த சங்கம்’ ஒன்றை நிறுவ உதவி செய்ய வேண்டுமெனவும் கோரினர். அவர்களது கோரிக்கையை ஏற்ற கர்னல் ஆல்காட், அயோத்திதாசரையும் தாம் நடத்தி வந்த ‘பறையர் பள்ளி’ ஒன்றில் தலைமையாசிரியராயிருந்த பி.கிருஷ்ணசாமி  என்பவரையும் இலங்கைக்கு அழைத்துச் சென்று அங்கு அவர்களுக்கு முறைப்படி தீட்சைப் பெற்றுத் தந்தார். தமிழ் நாட்டுக்குத் திரும்பிய பிறகு 1898ல் சாக்கைய பௌத்த சங்கத்தை சென்னையில் அயோத்திதாசர் உருவாக்கினார். 1900 ஆவது ஆண்டில் ‘மஹா போதி’ சொசைட்டியின் கிளையும் சென்னையில்  துவக்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் ஒருங்கிணைந்து செய்யப்பட்ட இந்த இரு அமைப்புகளும் பின்னர் தனின்தனியே   தத்தமது அடையாளத் தோடு இயங்கி வந்தன.
மஹாபோதி சங்கத்தோடு தமக்கேற் பட்ட கருத்து வேறுபாடு எத்தகையது என்பதை அயோத்திதாசர் இவ்வாறு விளக்குகிறார்:
“நமது சங்கத்தின் பெயர் சாக்கைய பௌத்த சங்கம். அவர்களுடைய சங்கத்தின் பெயர் மகாபோதி சங்கம். நமது சங்கத்தின் கருத்தோவென்னில் பொய்யாகிய சாதிக் கட்டுப்பாடு களைக் கனவிலும் நம்பப்படாது. அதை அனுசரித்து ஒற்றுமெய்க் கேட்டை உண்டு செய்து கொள்ளப் படாது என்பது துணிவு.
அவர்களது சங்கத்தின் கருத்தோ வென்னில் புத்த தன்மத்தில் சாதி பேதம் என்னும் சொல்லே இல்லாதிருக்கத் தாங்கள் புத்த தன்மம்  போதித்தோமென்று  கூறி அவற்றைத் தாழ்ந்த வகுப்பார்களுக்குப் போதிக்கப் போகின்றோமென்று தங்களைத் தாங்களே உயர்த்திக்கொண்டு புத்தர்தன்ம மென்று கூறுகின்றார்கள்”. (தமிழன் 17.5.1911)
 ஆக, சாதியைப் பற்றிய அணுகுமுறையின் காரணமாகவே மகாபோதி சங்கத்தோடு அயோத்திதாசர் முரண்படநேர்ந்தது. ‘தங்களை உயர்ந்த வகுப்போர்களாக எண்ணிக்கொண்டு தாழ்ந்த வகுப்போர்களுக்கு தன்மம் சொல்லப்போகிறோமென்றே’ அவர்களது கூற்று மகாபோதி ஜர்னலில் வெளிவந்ததையும் அயோத்திதாசர் சுட்டிக் காட்டியுள்ளார்.
தமிழ் அடையாளமானாலும், பௌத்த அடையாளமானாலும் அது சாதியற்றதாக உள்ளதா என்பதிலேயே அயோத்திதாசர் கவனமாக இருந்தார். சாதியை ஏற்றுக்கொண்ட அல்லது சாதியோடு சமரசம் செய்துகொண்ட எதனையும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தக் கூரிய பார்வை அவர் நடத்திய தமிழன் இதழ் நெடுகிலும் வெளிப்படக் காண்கிறோம்.
தமிழ் இதழியல் வரலாற்றில் வியக்கத்தக்கப் பங்களிப்பினை செய்துள்ள ‘தமிழன்’ இதழில்தான் அயோத்திதாசரின் முக்கியமான படைப்புகள் பலவும் வெளியாயின. தமிழில் அதுவரையிலும் கவனம் பெறாதிருந்த படைப்புகள் பல அவரால் புதுவிளக்கமும், மதிப்பும் பெற்றன.
தமிழ்நாட்டில் பார்ப்பனரல்லாதாரின் அரசியல் முயற்சிகள் 1916ல்தான் துவங்குகின்றன. ஆனால், அதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே பார்ப்பனீயக் கருத்தியலை அம்பலப்படுத்தியவர் அயோத்திதாசர் ஆவார். அவர் முன்வைத்த விமர்சனம் என்பது வெறுப் பினை அடிப்படையாகக் கொண்டதல்ல.  எவரும் பதிலளிக்க முடியாத கருத்தியல் வலிமையைக் கொண்டவை அவை.
‘இந்தியா’ ‘சுதேசமித்திரன்’ முதலான ஏடுகள் முன்வைத்த சுயராச்சிய அரசி யலை விமர்சனம் செய்தது மட்டுமின்றி பாரதியார், வ.உ.சிதம்பரனார் முதலான வர்களின் வாதங்களையும் கண்டித்து தமிழனில் பல்வேறு  கட்டுரைகள் வெளிவந்தன. சிதம்பரம்பிள்ளை அவர் களும் சுப்பிரமணிய சிவா அவர்களும் தாங்கள் எடுத்துள்ள கப்பல் வியா பாரத்தை விரிவுபடுத்தும் வழிமுறை களைக் கண்டறிவதைவிட்டுவிட்டு “அரசாங்கத்தோர் மீது விரோத விருத்தியை நாடி வாயில் வந்ததைப்பாடி மீளாதுக்கத்தைத் தேடிக்கொண்டார்கள்” என அயோத்திதாசர் எழுதினார் (தமிழன் 15.7.1908) அது போலவே  பாரதி “ஈனப் பறையர்களேனும்” என்று குறிப்பிட்டு எழுதியதை அயோத்திதாசர் கண்டித்தார்.
“ஓர் சீர்திருத்தக்காரன் வந்து பிரசங்கிக்குங்கால் சிலக் கூட்டத்தார் செவியில் நாராசங் காய்த்து விட்டது போல் (ஈனப் பறையர்களேனும்) என வாய்மதங் கூறலை மற்றொருவன் கேட்டு (ஈனப் பார்ப்பார்களேனும்) என மறுத்துக் கூறுவானாயின் ஒற்றுமெய் நிலைக்குமோ? ஒருக்காலும் நிலைக்கா?
என்ற சாடிய அயோத்திதாசர் ‘பாட்டுப் பிரசங்க பாரதி யார்கள்’ சொல்லும் பிரசங்கங்களால் இந்த நாடு சீர்பெறாது என இடித்துரைத்தார். (தமிழன் 9.10.1907)
சுதேசி அரசியல் பேசியவர்களின் சாதிச் சார்பைக் கண்டித்த காரணத்தால் ‘தமிழன்’ பத்திரிகை ஆங்கிலேய ஆட்சியின் ஆதரவுப் பத்திரிகை என விமர்சிக்கப்பட்டது. அதை மறுத்துரைத்த அயோத்திதாசர்;
“நாம் சுதேசிகளைத் தூற்றுவதற்கும், பரதேசிகளைப் போற்றுவதற்கும் வந்தோமில்லை. சகல மக்களின் சுகங்களைக் கருதி தங்களது நீதியை  செலுத்துகிறவர்கள் யாரோ அவர்களைப் போற்றியும், ஏற்றியும் கொண்டாடு வோம். இதுவே எமது சத்திய தன்மமாகும்.”
என விளக்கமளித்தார் (தமிழன் 18.8.1909) சுதேசி மற்றும் சுயராச்சிய இயக்கங்களின் உந்து சக்தியாக இருப்பது நான்குவகைத் திமிர்கள் தாம் எனக்குறிப்பிட்ட அயோத்திதாசர் சாதித்திமிர், மதத் திமிர், அறிவுத்திமிர் மற்றும் பணத்திமிர் என அவற்றை அடையாளப்படுத்தினார். அந்நியப் பொருட்களைப் புறக்கணிப்பதைவிட சாதிப்பெருமையைப் புறக்கணிப்பதே முதன்வீமானது எனக் குறிப்பிட்ட பண்டிதர் “நீங்கள் குறிப்பிடும் தாய் நாட்டில் பறைச்சேரி உள்ளதா?” என்றும் கேள்வி எழுப்பினார். தென்னாப்பிரிக்காவில் உள்ள இந்தியர்கள் மோசமாக நடத்தப்படுவது பற்றிக் கூக்குரல் எழுப்புகிற காங்கிரசுகாரர்கள் மனிதத்தன்மையற்ற முறையில் தாம் பூர்வ குடிகளை நடத்துவது பற்றி வாய்திறப்பதில்லை என்பதையும் சுட்டிக் காட்டினார்.
‘பூர்வத் தமிமொழியாம் புத்தரது ஆதிவேதம்’ என்ற தலைப்பில் 1912ல் நூலாக வெளியிடப்பட்ட நீண்ட தனித்துவம் மிக்க ஆய்வு ‘தமிழன்’முதல் இதழிலிருந்தே வெளியாகத் தொடங்கியிருந்தது. இந்திரர் தேச சரித்திரம், பௌத்த மதப் பண்டிகைகள், யதார்த்த பிராமண வேதாந்த விவரம், வேஷபிராமன வேதாந்த விவரம், விபூதி ஆராய்ச்சி, அரிச்சந்திரன் பொய்கள் எனப் பல நூல்களும் தொடராக வெளியிடப்பட்டன. பௌத்த நெறிநின்று திரிக்குறளுக்கும்,  ஔவையின் படைப்புகளுக்கும் விளக்கமளிக்கும் பணியும் நடந்தது. சாதிபேதமற்ற திராவிடர்களின் வியாபார சங்க (லிமிடெட் கம்பெனி) த்துக்கு பங்குகளை சேர்ப்பதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டதை நோக்கும் போது, பொருளாதார நோக்கிலான பணிகள் திட்டமிடப்பட்டு முன்னெடுக்கப் பட்டதையும் அறிய முடிகிறது.
இப்படி ஒவ்வொரு தளத்திலும் ‘தமிழன்’ ஏடு ஒரு இயக்கமாக செயல்பட்டிருந்ததை நாம் உணர முடிகிறது. இத்தகைய செழுமையான பங்களிப்பைச் செய்துள்ள ‘தமிழன்’ ஏட்டின் நூற்றாண்டை அரசு சார்பில் விழாவாக எடுக்கவேண்டும். பண்டிதரின் நூல்களை அரசுடமை ஆக்கிட வேண்டும் என நான் சட்டப் பேரவையில் கோரிக்கை விடுத்தேன். அதை ஏற்றுக்கொண்ட முதல்வர் கலைஞர் தமிழன் இதழின் நூற்றாண்டு  அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என பட்ஜெட் உரையிலேயே அறிவித்து அந்த விழாவைச் சிறப்பாக நடத்தினார்கள். பண்டிதரின் நூல்களும் நாட்டுடமை ஆக்கப்பட்டது. . 

No comments:

Post a Comment