Thursday, April 25, 2013

தர்மபுரி 2




நட்பு மட்டுமே அரும்பும் வயது
வேறுவேறு வரிசைகளில்தான்
இருக்கை என்றாலும் 
ஊரால் நெருக்கம் 

சந்தேகங்கள்
தின்பண்டங்கள்
சைக்கிள் பயணம்
- பகிர்தலின் பட்டியல் இன்னும் நீளும்
ஒரே வகுப்பு ஒன்றாய்ப் படிப்பு

அரிவாள்களும் கட்டைகளும் 
அணிவகுத்த அந்த நாளில்
ஆண்கள் பயந்தோடி
அரணற்றிருந்த ஊரில்
வீதியெங்கும் வெறுப்பை ஊற்றி
வசைகளால் எரியூட்டிச்சென்ற
கூட்டத்தில் ஒருவனாய்
அவனைப் பார்த்தாள்
வகுப்புத் தோழன்

அன்றுதான் புரிந்தது
வகுப்பு என்பதற்கு
இன்னொரு பொருளும்
இருக்கிறதென்பது

Wednesday, April 24, 2013

ரவிக்குமார் கவிதை



தர்மபுரி 1

வீடுகளை எரிப்பவர்களுக்கு இப்போது
இரவின் ஆதரவு தேவைப்படுவதில்லை
பகலில்
பெருமிதம் சுடர்விடும் முகத்தோடு
அவர்கள் கொளுத்துகிறார்கள்

அவிழ்த்துவிடப்பட்ட
பட்டி மாட்டைப்போல
தென்படுகிற அனைத்தையும் மேய்கிறது
அவர்கள் வைத்த நெருப்பு
சிறார்களின் பாடப் புத்தகங்களும்
சேலைத் தலைப்பில்
முடித்து வைக்கப்பட்ட பணமும்
ரேஷன் கார்டும் வீட்டுப் பத்திரமும்
நெருப்புக்குக் காகிதம்தான்

அறை அறையாகத் தேடி
மரச் சாமான்களைத் தின்று
உலோகப் பொருட்களை உருக்கி
'குகைக்குள் சென்ற
அலிபாபாவின் அண்ணனைப் போல'
ஆசைகொண்டு அலைகிறது நெருப்பு

நெருப்புக்குத் தெரிவதில்லை
தூளித் துணியின் அருமை
கூரைப் புடவையின் முக்கியத்துவம்

எரிக்கபட்ட வீட்டைப் பார்க்கிறவர்
சாம்பலைக் கிளறிக் கிளறி
தன் நினைவுகளின் மிச்சங்களைப்
பொறுக்குகிறார்
சமையலறையின் வாசம்
குழந்தைகளின் மழலை
அப்பா உயிர்நீத்த இடம்
படங்கள் மாட்டப்பட்டிருந்த சுவர்

இழப்பும் ஆற்றாமையும்
உந்தித்தள்ள
இடம்பெயரும் அவர்மனதில்
எரியத் தொடங்குகிறது
அணைக்கவே முடியாத பெருந்தீ







Tuesday, April 23, 2013

A page of Sthalapuranam



தற்போது இந்துக் கோயிலாக அறியப்படும் நாகர்கோயிலில் உள்ள நாகராஜா கோயில் ஒரு சமணக் கோயில்தான் என்பதை அக்கோயிலின் ஸ்தலபுராணம் ஒப்புக்கொள்கிறது. அந்த விவரங்களை இத்துடன் உள்ள பக்கத்தில் பாருங்கள்: 



                                





Nagaraja Temple Nagercoil

Monday, April 22, 2013

நீதிபதி வர்மா காலமாகிவிட்டார்

நீதிபதி வர்மா காலமாகிவிட்டார் என்ற செய்தியை பர்க்கா தத்தின் ட்விட்டர் செய்தியில் பார்த்தேன். அடடே என மனம் வருந்தியது.

பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்து அவர் அளித்த அறிக்கையை தமிழ்நாட்டில் எத்தனைபேர் படித்தார்கள் எனத் தெரியாது. அண்மைக்காலத்தில் அளிக்கப்பட்ட மிகச் சிறந்த அறிக்கை அது. அதை தயாரித்ததில் பலரும் பங்களித்திருக்கிறார்கள் எனினும் அதன் சாராம்சம் அவரால் தீர்மானிக்கப்பட்டதாகவே இருக்கவேண்டும். அவர் முன்வைத்த பரிந்துரைகள் அனைத்தையும் மத்திய அரசு நிறைவேற்றவில்லை. குறிப்பாக சாதிப் பஞ்சாயத்து, கௌரவக் கொலைகள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த சிறப்பு சட்டம் ஒன்றை இயற்றவேண்டுமென அவர் தனது அறிக்கையில் பரிந்துரைத்திருந்தார். ஆனால் அதைப்பற்றி மன்மோகன் சிங் அரசு அக்கறைகாட்டவில்லை. அதைவிட மோசம் அதை எந்தவொரு அரசியல் கட்சியும் பாராளுமன்றத்தில் வலியுறுத்தவில்லை.

நீதிபதி வர்மா அதிர்ச்சியடைந்திருக்கவும் அதனால் உயிரிழந்திருக்கவும் சாத்தியம் இருக்கிறது. தனது அறிக்கை அச்சிடப்பட்ட காகிதத்தின் மணம் மங்குவதற்கு முன்பே ஐந்து வயது குழந்தை பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டிருப்பதைக் கேட்டு அவரது நெஞ்சு துடித்திருக்கும்.

இப்படியொரு நாட்டில் நீதிபதி என வாழ்வதைவிடவும் காலத்தில் கரைந்துபோவதே சிறந்தது என அவரது ஜீவன் கருதிவிட்டதுபோலும்!
நீதிபதி வர்மா அவர்களுக்கு நாம் செய்யும் மரியாதை அவரது பரிந்துரைகள் அனைத்துக்கும் சட்ட வடிவம் கொடுப்பதுதான். அதைச் செய்யும் அளவுக்கு ஈர மனம் கொண்ட ஆட்சியாளர்களா நமக்கு வாய்த்திருக்கிறார்கள்?

Sunday, April 21, 2013

கச்சத்தீவு ஒப்பந்தமும் மீனவர் பிரச்சனையும்


               ( 2008அம ஆண்டு நான் தினமணிக்கு எழுதிய கட்டுரை )

      மீனவர்களைக் காப்பாற்றுவதற்காகத் தமிழக அரசியல் கட்சிகள் யாவும் களமிறங்கியுள்ளன.சிங்கள கடற்படையின் தாக்குதலைக் கண்டிப்பதில் போட்டிபோடும் அரசியல் தலைவர்கள் கச்சத்தீவு பிரச்சனையைப் பற்றிப் பேசவும் தவறவில்லை.ஆகஸ்டு மாதத்தில் இலங்கையில் நடக்கவிருக்கும் சார்க் மாநாட்டில் இந்தப் பிரச்சனையை மத்திய அரசு எழுப்பவேண்டும், மீண்டும் கச்சத்தீவை நாம் எடுத்துக்கொள்ளவேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
      .1974ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28ஆம் தேதி அன்று இந்திய பிரதமராக இருந்த திருமதி இந்திராகாந்தியும் இலங்கை பிரதமராக இருந்த சிறீமாவோ பண்டார நாயகேவும் செய்து கொண்ட ஒப்பந்தம்தான் முதன்முதலாக வங்கக்கடலில் இந்திய&இலங்கைக் கடல் எல்லையை வரையறுத்த நடவடிக்கையாகும். அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியாவும் இலங்கையும் தமது எல்லைக்கு உட்பட்ட பகுதிகளின் மீது முழுமையான உரிமையைப் பெற்றன. அந்த நாடுகளின் கப்பல்கள் ஒன்று மற்றொன்றின் எல்லைக்குள் சென்று வரும் உரிமை தொடர்ந்து காக்கப்படும் எனக்கூறிய அந்த ஒப்பந்தத்தின் பிரிவு ஐந்தில், ‘‘இந்திய மீனவர்களும், யாத்ரீகர்களும் கச்சத்தீவுக்கு வழக்கம்போல சென்று வரலாம். அதற்கு இலங்கையிடம் அனுமதி பெறத்தேவையில்லை’’ எனத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
​1974க்குப் பிறகு 1976 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இருபத்து மூன்றாம் நாள் இலங்கையும் இந்தியாவும் அடுத்து ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. மன்னார் வளைகுடாப் பகுதியில் கடல் எல்லையை வரையறுக்கும் ஒப்பந்தம்தான் அது. இந்தியா சார்பில் கேவல் சிங்கும், இலங்கைக்காக டபிள்யூ.டி. ஜெயசிங்கேவும் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தனர். இந்த இரண்டு ஒப்பந்தங்களிலோ இவற்றுக்குப் பிறகு அதே ஆண்டு நவம்பர் 22ஆம் தேதி கையெழுத்தான இலங்கை, இந்திய, மாலத்தீவு ஆகியவற்றுக்கிடையேயான முச்சந்தியை வரையறுக்கும் ஒப்பந்தத்திலோ கச்சத்தீவு பகுதியில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கக்கூடாது என்று சொல்லப்படவில்லை. இந்த ஒப்பந்தங்களுக்குப்பிறகு பரிமாறிக் கொள்ளப்பட்ட கடிதங்களில்தான் கச்சத்தீவை இலங்கைக்குத் தாரைவார்த்துத் தந்தார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் தமிழக மீனவர்கள் கச்சத்தீவுக்குச் சென்று ஓய்வெடுக்கவும், அங்கே தமது வலைகளை உலர்த்தவும், புனித அந்தோணியார் கோயில் திருவிழாவுக்குச் செல்லவும் தொடர்ந்து உரிமை பெற்றிருந்தார்கள். 1983 ஆம் ஆண்டுவரை எந்தப் பிரச்சனையும் இல்லாமல் அவர்கள் மீன்பிடித் தொழிலைச் செய்து வந்தனர். 83ல் ஏற்பட்ட இனக்கலவரத்தைத் தொடர்ந்து கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிப்பதற்கு இலங்கை அரசு தடை விதித்தது. அந்தத் தடை 2003 வரை தொடர்ந்தது.
​தமிழக மீனவர்கள் சிறை பிடிக்கப்படுவதும், அவர்களது மீன்களும், வலைகளும், படகுகளும் இலங்கைக் கடற்படையால் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்கதையாயின. நூற்றுக்கணக்கான தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். அப்படித் தமிழக மீனவர்கள் பாதிக்கப்படும்போதெல்லாம் இந்திய அரசு இலங்கையைக் கண்டிக்கக்கூட முன்வருவதில்லை என்பது வேதனைக்குரிய செய்தியாகும். இதுவரை துப்பாக்கியால் சுட்டவர்கள் இப்போதோ கண்ணிவெடிகளை மிதக்க விட்டுவிட்டார்கள்.

      கச்சத்தீவு பகுதியில் தமிழக மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக இந்திய&இலங்கை அரசுகள் சில நடவடிக்கைகளை எடுத்தன. ‘கூட்டு நடவடிக்கைக்குழு’ என ஒரு குழு அமைக்கப்பட்டு அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தைகளும் நடந்தன. 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் கொழும்புவில் நடந்த ‘‘கூட்டு நடவடிக்கைக் குழு’’ கூட்டத்தில் சில முடிவுகளும் எடுக்கப்பட்டன. சர்வதேச எல்லையிலிருந்து ஐந்து கடல் மைல் வரை சென்று மீன் பிடிக்கின்ற மீனவர்களைக் கைது செய்வதில்லை எனவும், இரு நாடுகளின் சிறைகளிலும் வாடிக்கொண்டிருக்கும் மீனவர்களை விடுவிப்பது எனவும் அந்த ‘கூட்டு நடவடிக்கைக் குழு’ முடிவெடுத்தது. அதற்கு மாறாக இப்போது கண்ணிவெடிகளைப் போட்டிருப்பது மேலே கண்ட கூட்டு நடவடிக்கை குழுவின் முடிவுகளை இலங்கை அரசு மதிக்கவில்லை என்பதையே எடுத்துக்காட்டுகிறது.

இலங்கைக் கடற்படைக்கு இந்தியா பயிற்சி அளிப்பதா?

 
                           இந்திய அரசுக்கு தொல். திருமாவளவன் கண்டனம்

நாள்தோறும் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் தாக்கப்படுகின்றனர். பலர் சிறைபிடிக்கப்பட்டு இலங்கைச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். தமிழக மக்களும் தமிழக அரசும் எத்தனையோ போராட்டங்களை நடத்தியும்கூட இந்திய அரசு இலங்கைக் கடற்படையின் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்த எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இந்நிலையில் இலங்கைக் கடற்படையைச் சேர்ந்த 250 பேருக்கு இந்தியக் கடற்படைக் கப்பல்களில் பயிற்சி அளிக்கப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. 

இந்தியக் கடற்படை மற்றும் கடலோரக் காவல் படையைச் சேர்ந்த சுஜாதா, தரங்கிணி,வருணா ஆகிய மூன்று கப்பல்கள் இந்தப் பயிற்சியை அளித்துள்ளன. பயிற்சி பெற்ற சிங்களப் படையினருக்கு இந்திய தூதரகம் சார்பில் அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் பேசிய இலங்கைக் கடற்படை துணைத் தளபதி ஜெயந்த் கொலம்பகே என்பவர் இலங்கைக் கடற்படையினரில் 80% பேருக்கு இந்தியாதான் பயிற்சி அளிக்கிறது என்று கூறியுள்ளார்.

 இது தமிழக மக்களைப் புண்படுத்துவதாக இருக்கிறது தமிழக மீனவர்கள்மீது நடத்தப்பட்டுவரும் தாக்குதல்கள் இந்திய அரசின் ஆதரவோடுதான் நடத்தப்படுகிறதோ என்ற ஐயத்தை நமக்கு ஏற்படுத்துகிறது. 

இலங்கை ராணுவத்தினருக்கு இந்தியா பயிற்சி அளிப்பதும் அவர்கள் இந்திய மீனவர்களையே தாக்குவதும் தொடர்கதையாகிக்கொண்டிருக்கிறது. தனது நாட்டு குடிமக்களைக் கொல்பவர்களுக்குத் தாங்களே பயிற்சி அளிக்கும் இத்தகைய கேவலம் உலகில் வேறு எங்குமே நடந்ததில்லை. இந்திய அரசு இலங்கைப் படையினருக்குப் பயிற்சி அளிப்பதை உடனடியாக நிறுத்திக்கொள்ளவேண்டும் என வலியுறுத்துகிறோம். 

இலங்கைக்கான இந்தியத் தூதராக தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரை நியமிக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மத்திய அரசு தொடர்ந்து தமிழக மக்களின் உணர்வுகளுக்கு எதிராக செயல்படுவதென்பது அதற்கு தேசிய ஒருமைப்பாட்டின்மீது நம்பிக்கை இல்லையோ என்ற கேள்வியைத்தான் எழுப்புகிறது. இது இந்தியாவின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல என்று சுட்டிக்காட்டுகிறோம்.


மணற்கேணி ஆய்விதழ் குறித்து தினமணி ஆசிரியர்

21.04.2013 தினமணி நாளேட்டில் அதன் ஆசிரியர் திரு வைத்தியநாதன் அவர்கள் ' கலாரசிகன்' என்ற பெயரில் எழுதியிருக்கும் பத்தியில் மணற்கேணி ஆய்விதழ் குறித்து எழுதியிருக்கிறார். அவருக்கு நன்றி.
இங்கே அதைப் படியுங்கள்: 


"நண்பர் ஒருவரின் மேஜையில் ரவிக்குமார்  நடத்தும் "மணற்கேணி' இருமாத இதழின் நவம்பர் - டிசம்பர் 2012 இதழ் இருந்தது.  இப்படி ஓர் அற்புதமான இலக்கிய ஆய்வு இதழை நண்பர் ரவிக்குமார் நடத்தி வருவதற்காகவே அவருக்கு ஒரு பாராட்டு விழா எடுக்க வேண்டும்.

புதுவையில் "மணற்கேணி' சார்பில் நடத்திய, "தமிழும் சமஸ்கிருதமும்' என்கிற ஆய்வரங்கச் சொற்பொழிவுகள் கட்டுரைகளாகத் தரப்பட்டிருக்கின்றன. அ. மணவாளன், இரா. கோதண்டராமன், பெ. மாதையன், இரா. அறவேந்தன், பக்தவத்சல பாரதி ஆகியோரின் சிந்தனையைத் தூண்டும் வாதங்கள் வருங்கால ஆய்வுகளுக்கே கூடத் தரவுகளாக அமையும் தன்மையன.

அம்பை எழுதியிருக்கும் "மரத்தடியில் திருவள்ளுவர்' என்கிற சிறுகதை, தமிழும் தமிழனும் இன்று எப்படி இருக்கிறார்கள் என்பதை உணர்த்துவதாக இருக்கிறது. படித்து முடித்து விட்டு, அடுத்த பக்கத்தைத் திருப்புவதற்கு பதிலாக, மீண்டும் ஒருமுறை படிக்கத் தோன்றியது.
அரை நூற்றாண்டு காலத் தொல்லியல் ஆய்வைப் பற்றிய சிறப்புப் பகுதியில் படிக்க வேண்டிய 33 நூல்களையும், தொல்லியல் துறை தொடர்பாகச் செய்ய வேண்டிய 50 பரிந்துரைகளையும் தொகுத்து வழங்கி இருப்பது பயனுள்ள முயற்சி.
ஐயாயிரம் ரூபாய் கொடுத்து "மணற்கேணி'யின் புரவலராகலாம்; மூவாயிரம் கொடுத்து "மணற்கேணி' குழாமில் சேரலாம்; ஆயிரம் கொடுத்து "ஊருணி' திட்டத்தின் மூலம் யாருக்காவது "மணற்கேணி' பரிசளிக்கலாம். முன்னூற்று அறுபது கொடுத்து ஆண்டு சந்தாதாரர் ஆகலாம். என்ன செய்வது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். ஆனால், தமிழில் வெளிவந்து கொண்டிருக்கும் சிற்றிதழ்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டு, தனக்கெனத் தனித்துவமானதொரு அடையாளத்தை உருவாக்கிக்கொண்டு இலக்கியப் பணியாற்றிவரும் "மணற்கேணி' தொடர்ந்து வெளிவர உதவாமல் இருந்து விடாதீர்கள். தொடர்புக்கு9443033305 அல்லது manarkeni@gmail.com."
 http://dinamani.com/weekly_supplements/tamil_mani/2013/04/21/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/article1554066.ece

Wednesday, April 10, 2013

ரவிக்குமார் கவிதை

 
 
எலி வளைகளிலும்
தானியம் அற்றுப்போன கோடையெனக்
கழிகிறது காலம்
குழந்தைகள் பூனைகளைப் போல சிரிக்கிறார்கள் 
வானம் சாம்பலாய்ப் பொழிகிறது

குருதிக் கறை  படிந்த கைகளைக் குலுக்குவதே
நட்பாகிவிட்டது
வஞ்சகத்தைத் தியாகமென்றும்
நபும்சகத்தை மதியூகமென்றும்
அழைக்கப் பழகிவிட்டோம்
கருணை இப்போது கிழங்குவகையாகவும் இல்லை

நாம் கேட்கிறோம்
நீதி
கொல்லப்பட்டவர்களுக்காக
பலாத்காரம் செய்யப்பட்டவர்களுக்காக
அங்ககீனம் செய்யப்பட குழந்தைகளுக்காக
நாடற்றுத் திரியும் அகதிகளுக்காக 

நமது பேச்சில் தெறிக்கிறது
தாய்,சகோதரி, இனம், ரத்தம்,
உரிமை,துரோகம்,வீரம், வரலாறு . . .
நாம் கேட்கிறோம்
நீதி

சக மனிதனின் வாயில்
மூத்திரம் பெய்தபடி

ஸ்ரீகாந்த் ஐ பி எஸ் : துயரங்களின் குறுகிய கணவாய் வழியே துணையேதுமில்லாமல் பயணம் செய்தவர்




ஐ.பி.எஸ் அதிகாரியும் எழுத்தாளருமான திரு ஸ்ரீகாந்த் அவர்கள் அந்தமானில் கார்நிக்கோபார் என்னுமிடத்தில் மாரடைப்பால் இன்று ( 10.04.2013 புதன் ) காலை  மரணம் அடைந்தார். புதுவை மாநிலக் காவல்துறையில் முதுநிலை காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய  டாக்டர் ஸ்ரீகாந்த் அவர்கள் ஐ.பி.எஸ் அதிகாரியாக பதவி உயர்வு பெற்று கடந்த 2012 மே மாதத்தில் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அங்கு போய் ஓராண்டு நிறைவெய்துவதற்கு முன்பே அவர்  மரணம் அடைந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

ஸ்ரீகாந்த் அவர்கள் இன்று காலை கார்நிக்கோபாரில் கடலோரக்  காவல் படையினருக்கு பயிற்சி அளித்துக்கொண்டிருந்திருக்கிறார். காலை  6.30 மணிக்கு அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டிருக்கிறது . எனவே அவரே காரை ஓட்டிக்கொண்டு அருகில் உள்ள டாக்டர் ஒருவர் வீட்டுக்கு சென்றுள்ளார் . அங்கு முதல் உதவி சிகிச்சை அளித்துக்கொண்டிருந்த போதே அவர் திடீரென மரணம் அடைந்திருக்கிறார் . மருத்துவ வசதி போதுமான அளவில் இல்லாத  கர்நிக்கொபர் என்னும் இடத்தில் இருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டதால்  அவரைக் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது. அவருக்கு மனைவியும் ஒரு மகனும் உள்ளனர். மகன் தற்போது புனேவில் எம்.பி.ஏ படித்து வருகிறார். 

தமிழ்நாட்டில்  தற்போதைய திருப்பூர் மாவட்டத்தில் மூத்தாம்பாளையம் என்ற சிறிய கிராமத்தில் 15.02.1964 இல் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் ஸ்ரீகாந்த் . கால்நடை மருத்துவப் படிப்பை முடித்து சில காலம்  டாக்டராக பணியாற்றினார். 1990ல் மத்திய தேர்வாணையம் நடத்திய  தேர்வில் டி.பி.எஸ். அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டு புதுவை போலீஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். பின்னர் ஐ.பி க்கு மாற்றல் செய்யப்பட்டார். மத்திய உளவுத் துறையில் (ஐ.பி) பல ஆண்டுகள் பல்வேறு மாநிலங்களில் பணிபுரிந்த அனுபவம் அவருக்கு ஒரு தேசந் தழுவிய பார்வையைத் தந்தது. இலக்கியத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த அவர் தீவிரமானதொரு வாசகர். பொதுப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளவேண்டும் என்ற தாகம் கொண்டவர். பிறருக்கு உதவி செய்வதை கடமையாகக் கொண்டிருந்தவர் அவர். 

 கேட்பவர்களைக் கிறங்க வைக்கும் விதமாக சுவாரஸ்யத்தோடு எதையும் சொல்லக்கூடிய வல்லமை பெற்றவர்கள் நம் கதை சொல்லிகள். அந்த மரபின் நல்ல கூறுகளைத் தன் பேச்சில் பயன்படுத்துபவர் டாக்டர் ஸ்ரீகாந்த். அவர் பேச ஆரம்பித்தால் கேட்பவர்களுக்குக் காலம், இடம் எல்லாமே மறந்துவிடும். புதுவை மாநிலத்தில் அவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் அவருக்கென்று ஒரு ரசிகர் கூட்டம் உண்டு. படித்தது மருத்துவமும், சட்டமும். பார்த்தது  போலீஸ் வேலை . என்றாலும் அவரது மனதில் நிறைந்திருந்தது என்னவோ ஒரு படைப்பாளியின் உத்வேகம்தான் . 
‘உங்களுக்குப் பிடித்த ஹீரோ யார்?’ என்று நமது இளைய தலைமுறையிடம் கேட்டால் அவர்களில் பெரும்பாலோர் சினிமா ஹீரோக்களைத் தாண்டி சிந்திக்க மாட்டார்கள். அது அவர்களின் தவறு அல்ல. வீரத்துக்கும் ரவுடித் தனத்துக்கும் வேறுபாடில்லாமல் போய்விட்ட காலமிது. நமது கல்வி முறையும்கூட நமது காவிய நாயகர்களை  இளைய தலைமுறைக்கு எடுத்துச்சொல்லத் தவறிவிட்டது. அதன் மோசமான விளைவுதான் இது. நாம் போற்றவேண்டிய தேசம் என்பது மலைகள், நதிகள், மரங்கள் மட்டுமே கொண்ட நிலப்பரப்பு அல்ல. அது ஒரு கொள்கை. அதை ஏற்றுக்கொள்வதே தேச பக்தி.  தேச பக்தியை வலியுறுத்தி  அவர் ஜூனியர் விகடனில் ' மறத்தல் தகுமோ '  என்ற தலைப்பில் எழுதிய தொடர் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. விகடன் பதிப்பகம் மூலம் நூலாகவும் வெளிவந்து ஆயிரக் கணக்கில் விற்பனையானது. 

ஒவ்வொருவருக்கும் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ள பல நண்பர்கள் இருப்பார்கள்.ஆனால் துயரத்தைச் சிலரோடு மட்டுமே நாம் பகிர்ந்துகொள்ள முடியும் . நான் எனது குடும்பக் கவலைகளையும் பகிர்ந்துகொள்ளக்கூடிய நண்பர்களில் ஒருவராக ஸ்ரீகாந்த் இருந்தார். காவல்துறையில் அவர் அர்ப்பணிப்போடு பணியாற்றினாலும் அவருக்கு அந்த வேலை மனதுக்கு உகந்ததாக இல்லை. ஆந்திராவில் ஒருவர் ஒரு ரூபாய்க்கு ஏழைகளுக்கு உணவு வழங்கி வருகிறாராம். அதைப் போல பாண்டிச்சேரியில் செய்யவேண்டும் என அவர் ஆசைப்பட்டார். சலவைத் தொழிலாளர் குடும்பத்தைச் சேர்ந்த சில இளைஞர் களை  ஒன்றிணைத்து 'இன்டஸ்ட்ரியல் லாண்டரி' ஒன்றைத் துவக்கினார் .அதில் அவர்களைப் பங்காளிகளாக்கி ஊக்குவித்தார். சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்ட பலருக்கு இலவசமாக சிகிச்சை பெற அவர் உதவி செய்தார்.

என்னை அந்தமானுக்கு வரச் சொல்லி   வற்புறுத்திக்கொண்டே இருந்தார். ஒரு மாதம் வந்து தங்கியிருந்து ஒரு புத்தகம் எழுதுங்கள் என்றார். அந்தமானில் இருக்கும் தமிழர்கள் படும் துயரங்கள் தொடர்பாக இரண்டு மாதங்களுக்கு முன்பு அவரிடம் பேசினேன். மீண்டும்  ஐ.பி யில் சேர்வதற்கு முயற்சித்து வருவதாகச் சொன்னவர் டெல்லிக்கு வரும்போது நேரில் சந்திப்போம் என்றார். இப்போது அவரது குரல் மட்டும்தான் காதில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. 

புதுச்சேரியிலிருந்து மாற்றலாகிச் செல்வதற்கு முன்பு கிழக்குக் கடற்கரைச் சாலையில் பல வருடங்களாக இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி அந்த சாலை நேரடியாகப் போகும்படி ஏற்பாடு செய்தார். நேரு வீதியில் பழைய சிறைச்சாலை இருந்த இடத்தை வாகனங்கள் நிறுத்துமிடமாக மாற்றினார். புதுச்சேரிக்கு எத்தனையோ ஆளுநர்கள் வந்தாலும் புதுவை மக்கள் சேத்திலால்  காலத்தைப் பொற்காலம் என்பார்கள் அதுபோல எத்தனையோ போலிஸ் அதிகாரிகள் வந்தாலும் ஸ்ரீகாந்த் காலத்தை புதுவை மக்கள் மறக்கவே மாட்டார்கள். 

Tuesday, April 9, 2013

தலித்துகள் மீதான வன்கொடுமைகள் அதிகரிப்பது ஏன் ?



தமிழக அரசுக்கு தொல் .திருமாவளவன் கேள்வி 

கடந்த பதினைந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2012 ஆம் ஆண்டில் தலித் மக்கள் மீதான சாதிய வன்கொடுமைகள் உச்சகட்டத்தை எட்டியிருப்பதாக மதுரையைச் சேர்ந்த 'எவிடன்ஸ்'என்ற அமைப்பு ஆதாரங்களோடு அம்பலப்படுத்தியிருக்கிறது. விழுப்புரம், விருதுநகர்,தருமபுரி,தேனி  ஆகிய  மாவட்டங்கள் சாதி வெறியாட்டத்தில்  முன்னணியில் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டில் 2048 வழக்குகள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டிருப்பதாக அரசாங்கத்தின் புள்ளிவிவரம் கூறுகிறது. ஆனால் அந்த வழக்குகளில்  உருப்படியான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
நாடு முழுவதும் பெண்கள்மீதான பாலியல் வன்முறைகளுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்ற கடந்த 2012 ஆம் ஆண்டில் தலித் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் தொடர்பாக தமிழ்நாட்டில்  62 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன . ஆனால் அதில் ஒரு குற்றவாளிகூடத் தண்டிக்கப்படவில்லை. பெண்கள் மீதான வன்கொடுமைகளைத் தடுக்க இந்தியாவிலேயே முதல் மாநிலமாக முந்திக்கொண்டு திட்டங்களை அறிவித்த தமிழக முதல்வர் தலித் பெண்கள்மீதான வன்கொடுமைகளைக் கண்டும் காணாமல் இருப்பது ஏன் ?
வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என்று சட்டம் இருந்தபோதிலும் நீதிமன்றம் தலையிட்டு ஆணைப் பிறப்பித்த தருமபுரி வழக்கில் மட்டும்தான் இழப்பீடு வழங்கப்பட்டிருக்கிறது. மற்ற வழக்குகளில் தமிழக அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தலித் மக்கள் மீதான வன்கொடுமைகள் அதிகரித்திருப்பதற்குக் காரணம் என்ன? என்பதைத் தமிழக அரசு ஆராய்ந்து பார்க்கவேண்டும். தலித் மக்களுக்கு எதிராக வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும் சாதிவெறியர்களை அரசு கட்டுப்படுத்தாததே இதற்கு முதன்மையான காரணம். அவர்கள்மீது சட்டபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குப் பதிலாக தமிழக அரசு அவர்களின் வெறுப்புப் பிரச்சாரத்தை  சுதந்திரமாக அனுமதித்து வருவது வேதனை அளிக்கிறது.இதே நிலை தொடர்ந்தால் தமிழ்நாட்டின் அமைதி கெடுவதோடு மாநிலத்தின் வளர்ச்சியும் வெகுவாகப் பாதிக்கும் என்பதைத்  தமிழக அரசுக்கு  சுட்டிக்காட்டுகிறோம்.
பாராளுமன்ற தேர்தலை மனதில் வைத்து சாதிவெறியர்களை தமிழக அரசு ஊக்குவித்து வருகிறதோ என்ற ஐயம் நமக்கு எழுகிறது. அத்தகைய குறுகிய நோக்கத்தில் செயல்பட்டால் தமிழ்நாடு கலவர பூமியாக மாறிவிடும் என்பதைத்தான் இந்தப் புள்ளி விவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
ஈழத் தமிழர் உரிமைகளைப் பெற்றுத் தருவதற்காகவும், தமிழக உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும் தமிழக மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு நிற்கவேண்டிய சூழலில் அவர்களிடையே பகையை ஏற்படுத்திப் பிரிவினையைத் தூண்டும் சாதி வெறியர்களைத் தனிமைப்படுத்த வேண்டுமென்றும், நலிந்த பிரிவினரான தலித் மக்களைப் பாதுகாப்பதற்கு தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட வேண்டுமென்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது. 

The plight of Australia’s Tamil refugees


By Mar 25, 2013 

He lay in agony on the ground on a tarpaulin sheet in the open, bandaged in rags in the scorching tropical heat after two major surgeries on his leg and hip, but Thevam considered himself extremely lucky. Just the day before he’d been moved out of the school building turned into a makeshift hospital. A day later and he too would have been among the eight dead and many more injured in the shell attack on the hospital.  No matter that the building had a clear red cross painted on its roof, visible to government drones and surveillance planes.
A sign is posted by asylum seekers on the roof of a detention centre in Australia. Pic: AP.
Thevam is a 39-year-old Tamil shopkeeper with a wife and two young children from northern Sri Lanka. He is a witness to war crimes whose mother was killed while sheltering in a bunker, and himself still bears huge angry scars on his body. He was granted refugee status in Australia two years ago but is not free to restart his life. Thevam is one of 51 Tamils who have failed their security clearance and shockingly he hasn’t even been told why.
How the security clearance process operates is unclear. When Australia screens refugees from Sri Lanka the intention may be to keep out former members of the Tamil Tigers – a group widely proscribed as a terrorist outfit, though not in Australia – that recruited teenagers and pioneered suicide bombing. That may sound sensible but it misses many key points.
Refugee advocates believe it’s possible Australia’s security screening could be based on information supplied by the very government from which the refugees are seeking sanctuary. Sending names to Sri Lanka to ask if individuals have cases outstanding against them is a nonsense if you know how random the persecution of war survivors has been. In most cases the Sri Lankan security forces detain Tamils on suspicion of being terrorists and then extract large bribes to release them and help them flee the country. Detainees are routinely tortured and then forced to sign a confession in a language they can’t understand. Any adult man who lived in the warzone is a potential suspect for the Sri Lankan authorities– but also a witness to the government’s war crimes and crimes against humanity now documented by UN lawyers.
In the UK Tamil asylum seekers actually strive to prove they were members of the rebel movement, knowing it will convince a tribunal that they are still at risk after the war. I’ve testified in appeals to confirm an individual was a Tiger and that’s clinched their case. In Australia  refugees have to hide their connection to the organization for fear of a negative security assessment.
It’s also necessary to understand that in the patch of Sri Lanka ruled by the Tigers every family had to hand over one child to fight, whether they liked it or not. Civilians in that area also had to pay taxes and give free labour to the rebel movement that ran the administration.
I have interviewed scores of survivors from the final phase of Sri Lanka’s civil war in which the UN says possibly 70,000 civilians were killed in just five months in an area of at most 35 square kilometres. In terms of intensity and speed, the former Norwegian peace mediator Erik Solheim says the slaughter in Sri Lanka in 2009 was probably the worst in the world this century.
Those who survived are deeply traumatised – often suicidal. None of the hardened fighters I met wanted to take up arms again. They’ve had it crushed out of them. Most just want to hide somewhere quiet and try and rebuild their lives, haunted by the memories of babies’ heads blown off and the cries of the injured as they died in agony. These broken people cannot be a security risk to Australians.
What’s posing a security risk is the continued persecution of Tamils in Sri Lanka, which threatens to rekindle the civil war. In 2009, when the Tigers were defeated, the government had a window of opportunity to reconcile communities. That’s long gone.  Now it’s clear that Tamils who survived the war are being targeted for detention, torture and extortion. There’s one soldier for every five civilians in the north – the army actually increased in size after the end of the war.  Sexual harassment by the security forces is rife – especially of women Tigers.  Recently I met a Tamil girl who’d been continuously gang raped, beaten and burned with cigarettes in a Sri Lankan police station for 47 days – as recently as last November. Australian politicians who say everything is fine in Sri Lanka should meet her and many like her turning up in Europe.
The repression of Tamils in northern Sri Lanka today is so intense that anger is bubbling up. Almost every family lost someone in the war zone but the United Nations High Commissioner for Human Rights, Navi Pillay, has documented how the authorities prevent survivors from holding religious gatherings to mourn their dead. None of the root causes of the conflict has been addressed – a triumphalist government refuses to devolve power to Tamil areas. So it’s only a matter of time before violence erupts again from another humiliated generation with nothing to live for.
Meanwhile many of Sri Lanka’s top military commanders, in charge when war crimes were committed, have been posted abroad as Ambassadors, benefiting from diplomatic immunity. Instead of locking up recognised refugees at great expense, Australia would do better to target the perpetrators of war crimes who roam free.

- Frances Harrison is the author of Still Counting the Dead: Stories from Sri Lanka’s Hidden War, published by Allen and Unwin in Australia. 
(Thevam is not the refugee’s real name)

ஃ புக்குஷிமா : கதிர்வீச்சு கொண்ட நீர் ஒழுகுகிறது



ஜப்பானில் விபத்து நேர்ந்த ஃ புக்குஷிமா அணுமின் உற்பத்தி நிலையத்தில் மீண்டும் அணுக்கதிர்வீச்சு கொண்ட நீர் இரண்டு தொட்டிகளிளிருந்து ஒழுகுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. டோக்யோ எலெக்ட்ரிக்  பவர் கம்பெனி இந்தத் தகவலை வெளியிட்டிருக்கிறது.

2011 ஆம் ஆண்டு நிகழ்ந்த பூகம்பம் மற்றும் சுனாமியால் சேதமடைந்த
ஃ புக்குஷிமா அணு மின் நிலையம் உலக அளவில் அணுமின் திட்டங்களுக்கான எதிர்ப்பை அதிகரிக்கச் செய்தது.அங்கிருக்கும் ரியாக்டர்களில் உருகிப்போன உலோகத் தண்டுகளைக் குளிரிவிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட நீர்தான் இப்போது ஒழுகுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

அங்கே இருக்கும் இரண்டு தொட்டிகளிளிருந்து கதிர்வீச்சு கொண்ட நீர் ஒழுகுகிறது என்றும் ஆனால் அது கடலில் கலக்கவில்லைஎன்றும் சொல்லப்படுகிறது . கூடங்குளம் பகுதியில் கட்டப்பட்டிருக்கும் அணு உலைகளில் தரமற்ற இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதாகக் குற்றச் சாட்டுகள் எழுந்துள்ளன. ஃ புக்குஷிமாவிலேயே இப்படியென்றால் கூடங்குளத்தின் பாதுகாப்பு குறித்து என்ன சொல்வது ?
http://asiancorrespondent.com/104760/more-radioactive-water-leaking-at-japan-nuke-plant/

 

Friday, April 5, 2013

ஜெயங்கொண்டம் மின் உற்பத்தித் திட்டத்தைத் தமிழக அரசே நிறைவேற்ற வேண்டும்




தமிழக அரசுக்கு தொல் .திருமாவளவன் வேண்டுகோள் 

ஜெயங்கொண்டம் மின் உற்பத்தித் திட்டத்திலிருந்து நெய்வேலி நிலக்கரி நிறுவனம் வெளியேறியுள்ளது. அங்கு பத்தாயிரம் ஏக்கர் நிலத்தை தமிழக அரசு கையகப்படுத்தி என் எல் சி நிறுவனத்திடம் ஒப்படைப்பது என்று ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. தமிழக அரசு நிலத்தைக் கையகப்படுத்தி ஒப்படைக்காததால் தற்போது என்.எல்.சி நிறுவனம் இந்த முடிவை எடுத்திருக்கிறது. துவக்க நிலையிலான ஆய்வுகளுக்காகப்  பலகோடி ரூபாய்  செலவு செய்யப்பட பிறகு இந்தத் திட்டத்தை என்.எல்.சி நிறுவனம் கைவிட்டிருப்பதால் அந்தத் தொகை முழுவதும் வீணாகியிருக்கிறது. தற்போது சீர்காழியில் துவக்கப்பட இருக்கும் திட்டத்துக்கும் இதேபோல மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். எனவே அந்தத் திட்டமும் செயல்படுத்தப்படமுடியாத நிலை உருவாகலாம். இப்படி ஒவ்வொரு திட்டமும் கைவிடப்பட்டால் அது மாநில வளர்ச்சியை வெகுவாகப் பாதிக்கும் என்பதை விடுதலைச் சிறுத்தைகள் சுட்டிக்காட்டுகிறது. எனவே தமிழக அரசு ஜெயங்கொண்டம் திட்டத்தை என்.எல்.சி துணையின்றி மாநில அரசின் திட்டமாக நிறைவேற்ற உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்துகிறது.  

நிலம் கையகப்படுத்துவதில் உள்ள முதன்மையான பிரச்சனை நிலத்துக்கு மிகவும் குறைவான விலை நிர்ணயிக்கப்படுவதுதான். அதனால் தான் விவசாயிகள் நிலத்தைக் கொடுக்க எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். நிலத்தின் விலை குறைவாக நிர்ணயிக்கப்படுவதற்கு அடிப்படை காரணம் மத்திய அரசின் மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்த்தக் கொள்கையை ( National Rehabilitation and Resettlement Policy  2007 ) அப்படியே மாநில அரசு பின்பற்றுவதுதான். மாநில அரசு தனக்கென்று ஒரு கொள்கையை உருவாக்கினால் நிலத்துக்கான விலையை நிர்ணயிப்பதிலும், மறு குடியமர்த்தம் தொடர்பான அணுகுமுறையிலும் மாநிலத்தின் சூழலை மையப்படுத்தி நடவடிக்கை எடுக்க முடியும். அதன்மூலம் நிலம் கையகப்படுத்தும் பிரச்சனையை வெகுவாகத் தீர்த்துவிட முடியும். 

ஜெயங்கொண்டத்தில்  நிலத்தைக் கையகப்படுத்துவது வெறுமனே கட்டிடங்கள் கட்டுவதற்கு அல்ல. நிலத்துக்குக் கீழே இருக்கும் நிலக்கரியை வெட்டி எடுப்பதற்குத்தான். எனவே இப்படி கனிமவளத்துக்காக நிலத்தைக் கையகப்படுத்தும்போது அந்த நிலத்தின் விலையை அந்த நிலத்தின்கீழே இருக்கும் கனிம வளத்தின் மதிப்பை வைத்து நிர்ணயிக்கவேண்டும்.  அத்துடன் மறு குடியமர்த்தம் செய்யும்போது இடம்பெயரும் மக்களுக்குத்  தரமான வீடுகளைக் கட்டித் தருவதற்கும், அவர்களுக்கு வாழ்க்கை உத்தரவாதங்களை ஏற்படுத்தித் தருவதற்கும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய திட்டத்துக்கான பணியாளர்களை இடம்பெயரும் குடும்பங்களிலிருந்தே தேர்வு செய்யவேண்டும். அதற்கு ஏற்ப அவர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை வழங்க வேண்டும். 

தற்போது நெய்வேலியில் செயல்படும் என்.எல்.சி திட்டங்களுக்கு நிலம் கொடுத்தவர்கள் பிரச்சனையே இதுவரை தீர்க்கப்படாமல் தொடரும் நிலையில் புதிய திட்டங்களுக்கு எவரும் நிலம் கொடுக்க முன்வர மாட்டார்கள். இதைத்  தமிழக அரசு புரிந்துகொண்டு மாநில அளவிலான மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்த்தக் கொள்கையை உருவாக்க முன்வரவேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் வலியுறுத்துகிறோம். 

இதுமட்டுமின்றி,  தான் வழங்கும் மின்சாரத்துக்கான விலையை இனிமேல் ஏலத்தின் மூலம் தீர்மானிக்கப்போவதாகவும் நெய்வேலி நிர்வாகம் கூறியிருக்கிறது.  அதனால் எதிர்காலத்தில் தமிழக அரசு கூடுதல் விலையை செலுத்த நேரிடும். அந்த சுமை  மக்கள் தலையிலேயே வந்து முடியும். எனவே என்.எல்.சி நிர்வாகம் தற்போது இருக்கும் விலைக் கொள்கையையே தொடர்ந்து கடைப்பிடிக்கவேண்டும் என வலியுறுத்துகிறோம். 


தமிழகப் போலீஸ்காரர்கள் முப்பது பேரைக் கைது செய்ய பிரஸ் கவுன்சில் உத்தரவு






2011 ஆம் ஆண்டு அப்போதிருந்த தி.மு.க ஆட்சியின்போது தினபூமி நாளேட்டின் ஆசிரியர் மணிமாறன் வீட்டில் போலிஸ் ரெய்டு நடத்தியது தொடர்பான புகாரில் அந்த ரெய்டில் சம்பந்தப்பட்ட முப்பது போலிஸ்காரர்களையும் உடனடியாக கைது செய்யவேண்டும் என பிரஸ் கவுன்சிலின் தலைவர் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருக்கிறார். 

விசாரணையில் தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அது முந்தைய ஆட்சியில் நிகழ்ந்த சம்பவம் என்று சொன்னபோது கோபமடைந்த திரு கட்ஜு ' யார் ஆட்சி செய்கிறார்கள் என்பது பற்றி எங்களுக்குக் கவலையில்லை. இப்போது சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் அல்லது பதவியிலிருந்து முதல்வர் விலகட்டும் ' என்று கூறியிருக்கிறார். 
" போலீஸ்காரர்கள் இன்னும் பிரிட்டிஷ் ஆட்சி நடப்பதாக நினைத்துக்கொண்டிருக்கிறார்களா? அவர்கள் பாடம் கற்றுக்கொள்ள இதுவே சரியான தருணம் " என்றும் அவர் கூறியிருக்கிறார். 
போலீஸ்காரர்களைக் கைது செய்யும்படிச் சொல்ல பிரஸ் கவுன்சில் தலைவருக்கு அதிகாரம் உள்ளதா? என்ற கேள்வி எழலாம்.  நீதிமன்றத்துக்கு இருக்கும் அதிகாரம் பிரஸ்  கவுன்சிலுக்கு இருக்கிறது என சட்டம் சொல்கிறது. 

பிரஸ்  கவுன்சிலில் நடத்தப்படும் விசாரணை ஒவ்வொன்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 193 மற்றும் 228 இன் அடிப்படையிலான நீதி விசாரணைகளாகவே கருதப்பட வேண்டும் என சட்டம் சொல்கிறது. பிரஸ்  கவுன்சிலின் அதிகாரம் என்ன என்பதை இங்கே  பாருங்கள் :  



General powers of the Council

5 of 1908

15. (1) For the purpose of performing its functions or holding any inquiry under this Act, the Council shall have the same powers throughout India as are vested in a civil court while trying a suit under the Code of Civil Procedure, 1908, in respect of the followings matters, namely:

(a) summoning and enforcing the attendance of persons and examining them on oath;

(b) requiring the discovery and inspection of documents;

(c) receiving evidence on affidavits;

(d) requisitioning any public record or copies thereof from any court or office;

(e) issuing commissions for the examination of witnesses or documents; and

(f) any other matter, which may be prescribed

(2) Nothing in sub-section (1) shall be deemed to compel any newspaper, news agency, editor or journalist to disclose the source of any news or information published by that newspaper or received or reported by that news agency, editor or journalists.

45 of 1860

(3) Every inquiry held by the Council shall be deemed to be a judicial proceeding within the meaning of sections 193 and 228 of the Indian Penal Code.

(4) The Council may, if it considers it necessary for the purpose of carrying out its objects or for the performance of any of its functions under this Act, make such observations, as it may think fit, in any of its decisions or reports, respecting the conduct of any authority, including Government.


http://presscouncil.nic.in/home.htm


Wednesday, April 3, 2013

ஈழம் இனி' ஒருநாள் ஆய்வரங்கம்

நண்பர்களே வணக்கம்!

ஈழத் தமிழர் பிரச்சனை தமிழகத்தில் அனைத்துத்தரப்பு மக்களையும் எட்டியிருக்கிறது. அரசியல் தளத்தின் ஒருபகுதியில் மட்டும் பேசப்பட்டுவந்த நிலை மாறி இப்போது சிவில் சமூகம் என சொல்லப்படும் பகுதியையும் அது ஆக்கிரமித்திருக்கிறது. இதில் ஊடகங்களின் பங்களிப்பு முதன்மையானது.

இப்போது உணர்வு நிலையில் ஏற்பட்டிருக்கும் எழுச்சியை அறிவுத் தளத்துக்குக் கொண்டு செல்வதன்மூலமே அதைப் பயனுள்ள வகையில் வளர்த்தெடுக்க முடியும்.
தற்போதைய எழுச்சியை தேர்தல் அரசியலுக்குப் பயன்படுத்திக்கொள்ளவே அரசியல் கட்சிகள் முனையும். அது ஈழத் தமிழர் பிரச்சனைக்கு நன்மை பயப்பதாக இருக்காது.

ஒருபுறம் வலதுசாரித் தன்மைகொண்டு அடிப்படைவாதமாக உருவெடுக்கும் தமிழ்த் தேசியவாத அமைப்புகள்; இன்னொருபுறம் சுயநிர்ணய உரிமையைக்கூட அங்கீகரிக்காமல் தேசிய சகதியில் சிக்குண்டு கிடக்கும் மைய நீரோட்ட இடதுசாரிக் கட்சிகள். இவற்றுக்கு அப்பால் இன்னும் தமிழக அரசியலில் ஆதிக்கம் செலுத்திவரும் திராவிடக் கட்சிகள், தமிழ்த் தேசியத்துக்கும் தலித் அரசியலுக்குமிடையே ஊடாடும் தலித் இயக்கங்கள்- இப்படி தமிழக அரசியல் களம் கூறுபட்டுக் கிடக்கிறது. அதனால் கருத்தியல் தளத்திலும் குழப்பம் நிலவுகிறது.

இந்திய அரசியலில் தமிழகம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்த நிலை மாறி இப்போது தனிமைப்படுத்தப்படும் சூழல் துலக்கமாகத் தெரிகிறது. டெல்லியை மட்டுமே மையப்படுத்தி சிந்திக்கும் அதிகாரவர்க்கம் தமிழகத்தை ஒவ்வாமையோடும் வெறுப்போடும்தான் பார்க்கிறது. அதன் காரணமாகத் தமிழகத்தை ராணுவமயப் படுத்தவும்,வடகிழக்கு மாநிலங்களைப்போல பதற்றமான பகுதியாக அறிவிக்கவும் அவர்கள் முனையக்கூடும்.

மாநில உரிமைகளுக்கான நியாயமான போராட்டங்களே பிராந்தியக் கட்சிகள் உருவெடுக்கக் காரணம். அவை அதிகாரத்துக்கு வந்தபிறகு தேசியக் கட்சிகளின் பிரதி பிம்பங்களாகிவிட்டன. தற்போது எழுந்திருக்கும் குரல்களும் அவர்களால் தன்வயப்படுத்தப்படலாம் அல்லது அவை வலுவிழந்து காணாமல் போகலாம். ஜனநாயகத்தை விரும்புவோர் அதற்கு அனுமதிக்கக் கூடாது.

இந்நிலையில், தற்போதைய எழுச்சிக்கு அரசியல் தலைமை கொடுப்பது யார் என்பதைவிடவும் கருத்தியல் தலைமை கொடுப்பது எப்படி என ஆராய்வதே உடனடித் தேவை என மணற்கேணி கருதுகிறது. அதற்காகவே இந்த ஆய்வரங்கு. ஈழப் போராட்டத்தின் கடந்த காலத்திலிருந்து படிப்பினைகளைப் பெற்று எதிர்காலத்துக்கு ஒளியேற்றும் ஆய்வுகளை மணற்கேணி வரவேற்கிறது. வெற்று முழக்கங்களைத் தவிர்த்து விவாதங்களை முன்னெடுக்க விழைகிறது.
...........

'ஈழம் இனி' ஒருநாள் ஆய்வரங்கம்
மே மாதம் 4ஆம் தேதி, புதுச்சேரி

இருங்கிணைப்பு: மணற்கேணி

பதிவு செய்துகொள்ள : manarkeni@gmail.com