Thursday, April 30, 2015

Meena Kandasamy on my Rain Poems

" The rain is a moody woman. She's old as the earth, but she's fresher than first love. Everytime. She's fiesty and if you are to be trusted, she's almost-fascist, silencing even the trees. And you capture that heaviness of blankness beautifully, likening the experience of standing under last-night's-rain-drenched tree to a home without your lover.. 

Your shorter poems that even obliquely refer to the rain stab my heart like some of the lovelier kamathupaal kurals do. I like it especially when you accuse the rain, repeatedly. For delay that destroys crops. For indifference on where it pours out (like love, not always to those in need). Thiruvalluvar merely sang its praises. You almost carry on a lover's quarrel with her. " 

Wednesday, April 29, 2015

நேபாளம்: பூகம்பத்திலும் சரியாத சாதி

நேபாளத்தில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் இறந்தோர் எண்ணிக்கை ஒவ்வொருநாளும் உயர்ந்தபடி இருக்கிறது. பத்தாயிரம் பேர்வரை இறந்திருக்கக்கூடும் என கருதப்படுகிறது. 

நேபாள மக்களுக்காக உலகெங்குமிருந்து உதவிக் கரங்கள் நீள்கின்றன என்பது சற்றே ஆறுதல் அளிக்கும் செய்தி. ஆனால் அந்த உதவிகள் எல்லோருக்கும் போய்ச் சேரவில்லை. நகரப் பகுதிகளுக்குத்தான் முக்கியத்துவம் தருகிறார்கள் என கிராமப் புற மக்கள் குறைகூறுகின்றனர். அதிலும் தலித் மக்களுக்கு நிவாரண உதவிகள் கிடைக்கவில்லை என்கிறார்கள். 

நேபாளத்தில் 12% தலித் மக்கள் இருப்பதாக அரசாங்கம் சொல்கிறது. தீண்டாத சாதிகளை வரையறுப்பதில் இருக்கும் குழப்பம் காரணமாகவே தலித் மக்கள் தொகை குறைவாக உள்ளது. உண்மையில் தலித்துகளின் எண்ணிக்கை 20% இருக்கும் என தலித் தரப்பில் வாதிடுகின்றனர். 

இயற்கைப் பேரிடர் நேர்ந்தால் அதில் அதிகம் பாதிக்கப்படுவது தலித் மக்கள்தான். "சமூகத்தில் ஏதேனும் நன்மை நிகழ்ந்தால் அதன் பயனை நுகர்வதில் கடைசியிலும் ஏதேனும் கேடு நேர்ந்தால் அதனால் பாதிக்கப்படுவதில் முதல் இடத்திலும் தீண்டாத மக்கள் உள்ளனர்" என அம்பேத்கர் கூறியது இப்போதும் மாறிவிடவில்லை. அதைத்தான் நேபாள நில நடுக்கமும் காட்டுகிறது. 

நிவாரணப் பணிகளில் சாதி அடிப்படையில் பாரபட்சம் காட்டக்கூடாது என நேபாள அரசை வலியுறுத்துவோம். டெல்லியிலிருக்கும் ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பின் கவனத்துக்கு இந்தத் தகவலை எடுத்துச் சென்றிருக்கிறேன். 


http://indianexpress.com/article/world/neighbours/dalit-village-wonders-if-modi-govts-help-will-ever-reach-us/

Monday, April 27, 2015

ஷர்மிளா ஸெய்யித்:

இலங்கை இஸ்லாமிய அறிவுஜீவிகளின் நிலைபாட்டை இங்குள்ளோரும் வழிமொழியவேண்டும்
-ரவிக்குமார்
=======================

இஸ்லாத்தின் பெயரால் ஒருசில நபர்களின் அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கும் இலங்கை எழுத்தாளர் ஷர்மிளா ஸெய்யித்துக்கு இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம் அறிவுஜீவிகள் சிவில்சமூக செயற்பாட்டாளர்கள் ஆதரவு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அவரை அச்சுறுத்தும் நபர்கள்மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியிருக்கும் அந்த அறிக்கை முஸ்லிம் மதத் தலைவர்கள் பங்கேற்கும் ஜமைதுல் உலேமா முதலான அமைப்புகள் தலையிட்டு சக முஸ்லிம் ஒருவரைத் துன்புறுத்தும் இந்தச் செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது. 

பாலியல் தொழிலில் ஈடுபட்டிருக்கும் பெண்களைக் காப்பாற்ற விபச்சாரத்தை சட்டபூர்வமாக்கவேண்டும் என பிபிசி வானொலிக்கு அளித்த பேட்டி ஒன்றில் ஷர்மிளா கூறிய கருத்தைத் தொடர்ந்தே அவருக்கு மிரட்டல்கள் வரத் தொடங்கின என்று அந்த அறிக்கை கூறுகிறது. 

விபச்சாரத்தை ஒரு தொழிலாகப்
பார்ப்பதும் அதில் ஈடுபட்டிருப்போரை பாலியல் தொழிலாளிகள் என அழைப்பதும் தவறு என்பதே எனது கருத்து. அப்படிச் செய்வது பெண்களை பாலியல் சுரண்டலுக்கு தொடர்ந்து ஆட்படுத்தவே வழிவகுக்கும். அதுமட்டுமின்றி பெரும்பாலான பெண்கள் அதில் வலுக்கட்டாயமாக வன்முறையின் மூலமே தள்ளப்படுகின்றனர். அதிலும் குறிப்பாக சிறார்கள் அதில் ஈடுபடுத்தப்படுவது அதிகரித்து வருகிறது. இலங்கை அத்தகைய சிறார் பாலியல் சுற்றுலா மையங்களில் ஒன்றாக மாறிவருகிறது என செய்திகள் கூறுகின்றன. இந்தப் பின்னணியில், ஷர்மிளா கூறியிருக்கும் கருத்தை என்னால் ஏற்க முடியவில்லை. ஆனால் அப்படியொரு கருத்தைக் கூறுவதற்கான உரிமை அவருக்கு இருக்கிறது. அதற்காக அவரை மதத்தின் பெயரால் அச்சுறுத்துவதும் நாட்டைவிட்டே ஓடித் தலைமறைவாகும் அளவுக்கு மிரட்டுவதும் ஏற்கத் தக்கதல்ல. 

ஷர்மிளா ஸெய்யித் பிரச்சனை ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் சகிப்புத் தன்மை அற்றதாகக் காட்டுவதற்குப் பயன்பட்டுவிடும் ஆபத்து இருக்கிறது. இப்போது முஸ்லிம் அறிவுஜீவிகள் வெளியிட்டிருக்கும் அறிக்கை ஷர்மிளா ஸெய்யித்துக்கு தனது தார்மீக ஆதரவைத் தெரிவித்திருப்பது மட்டுமின்றி முஸ்லிம் சமூகத்தையும் அவப்பெயரிலிருந்து 
காப்பாற்றியிருக்கிறது. 

பேராசிரியர்கள் ஊடகவியலாளர்கள் சமூக செயற்பாட்டாளர்கள் எழுத்தாளர்கள் என 57 பேர் அந்த அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர். தமிழ்நாட்டு இஸ்லாமிய அறிவுஜீவிகளும் அமைப்புகளும் அந்த அறிக்கையை வழிமொழிந்தால் இஸ்லாம் குறித்த அவதூறுகளைத் தடுப்பதோடு ஜனநாயகம் வலுப்படவும் உதவியாக இருக்கும். 

Sunday, April 19, 2015

தோழர் சீத்தாராம் யெச்சூரிக்கு வாழ்த்துகள்



மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக சீத்தாராம் யெச்சூரி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். சென்னையில் ஒரு தெலுங்கு பிராமண குடும்பத்தில் பிறந்த யெச்சூரி மாணவப் பருவம் முதலே அரசியலில் ஈடுபட்டுவந்தவர். இந்திய மாணவர் சங்கத்தில் பல பொறுப்புகளை வகித்தவர். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்தபோது அவசர நிலைக் காலத்தில் கைதுசெய்யப்பட்டு சிறையிலிருந்தார். அதனால் அவர் தனது பிஎச்டி ஆய்வை முடிக்கமுடியாமல் போனது. 

போட்டியின்றி யெச்சூரி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். தேர்தல் அரசியல் களத்தில் இந்திய இடதுசாரி இயக்கம் கடுமையான பின்னடைவை சந்தித்துக்கொண்டிருக்கும் இந்தச் சூழலில் தலைமைப் பொறுப்பேற்றிருக்கும் தோழர் யெச்சூரி இடதுசாரி ஒற்றுமையை வலுப்படுத்தி இந்தப் பின்னடைவிலிருந்து இடதுசாரி இயக்கத்தை மீட்டெடுக்கவேண்டும். மதச்சார்பற்ற சக்திகளை ஓரணியில் திரட்டுவதிலும் தோழர் ஹர்கிஷன்சிங் சுர்ஜித் போல முக்கிய பங்காற்றவேண்டும். வெறும் அரசியல் தலைமையாக மட்டுமின்றி கட்சியை தத்துவ தலைமையாக வளர்த்தெடுக்கவேண்டும். அவருக்கு என் வாழ்த்துகள். 

Friday, April 10, 2015

டேவிட் ஷூல்மனின் உழைப்புக்கு என் வணக்கம்



டேவிட் ஷூல்மனும் வேறு இரு ஆய்வாளர்களுமாக இணைந்து தொகுத்திருக்கும் இந்த நூலை இன்று ஃப்ரெஞ்ச் இன்ஸ்டிட்யூட் நூலகர் நரேந்திரன் எடுத்துத் தந்தார். படித்துக்கொண்டிருந்த வித்யா தெஹேஜியாவின் நூலை மேசையில் வைத்துவிட்டு இதைப் படிக்க ஆரம்பித்துவிட்டேன். 

தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் அவர் ஆய்வு செய்து வெளியிட்டிருக்கும் நூல்களின் எண்ணிக்கை தலை சுற்ற வைக்கும். இதற்கிடையில் பாலஸ்தீன இஸ்ரேல் அமைதி முயற்சிகளிலும் அவர் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்து வருகிறார். 

ஷூல்மனின் உழைப்பை நினைத்தால் வியப்பாக இருக்கிறது. இப்போதுதான் மூர்த்தி கிளாசிக் லைப்ரரி மூலம் ஒரு புத்தகம் வந்தது. தெலுங்கு செவ்வியல் பிரதி ஒன்றின் ஆங்கில மொழியாக்கம். அதன் முன்னுரையைப் படித்த மலைப்பிலிருந்து விடுபடுவதற்கு முன் இந்தப் புத்தகம். 

. " எந்தவொரு இலக்கிய மரபையும் வரலாற்றின் விளைபொருளாய் பார்ப்பதற்கான முயற்சி அதிலிருக்கும் புதுமையான விஷயங்களை தனியே புரிந்துகொள்வதோடு மட்டும் நின்றுவிட்டால் குறைபாடுடையதாகவே இருக்கும். மரபுமீறிய படைப்பாக்கத் தருணங்கள் அப்போது கண்டுகொள்ளாமல் விடப்படலாம். புத்துருவாக்கம் என்பது கதையை மாற்றவேண்டும். இது நிகழவேண்டும்ரஎன்றால் அதற்குப் புதிய வாசக தளம் உருவாகவேண்டும்" என ஷூல்மன் ஓரிடத்தில் குறிப்பிடுகிறார். அந்தக் கருத்து தமிழ்ச் சூழலுக்கு மிகவும் பொருத்தமானது. 

சமஸ்கிருத காவிய மரபைப் பற்றிய இந்த நூலில் ஹெர்மன் டீக்கனின் கட்டுரைகள் கணிசமாக இடம்பெற்றுள்ளன. எனக்கென ஒரு பிரதியை இன்று ஆர்டர் செய்தேன். டேவிட் ஷூல்மனின் அயராத உழைப்புக்கு என் வணக்கம்! 

Tuesday, April 7, 2015

ஆந்திராவில் தமிழகத் தொழிலாளர்கள் படுகொலை


நீதி விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் ஆணையிட வேண்டும்
ஆந்திர முதல்வர் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்
தமிழக முதல்வர் நேரில் சென்று பார்வையிட வேண்டும்
தொல்.திருமாவளவன் அறிக்கை


  ஆந்திராவில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாகச் சொல்லி 20 கூலித் தொழிலாளர்கள் ஆந்திர வனத்துறையால் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார்கள். அதில் 12 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.  ஆயுதம் எதுவும் அற்ற கூலித் தொழிலாளர்களை எவ்வித முகாந்திரமும் இல்லாமல் சுட்டுப்படுகொலை செய்திருக்கும் ஆந்திர வனத்துறையின் வெறிச்செயலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
இதற்காக ஆந்திர முதலமைச்சர் தமிழக மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டுமென வலியுறுத்துகிறோம். 

 இந்தப் பிரச்சனையில் இரண்டு மாநிலங்கள் சம்பந்தப்பட்டிருப்பதால் உச்ச நீதிமன்றம் தாமே முன்வந்து தற்போது பணியிலிருக்கும் நீதிபதி ஒருவரின் தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறோம்.

தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களைத் தாக்குவது என்பது ஆந்திரக் காவல்துறையினரின் அண்மைக்காலச் செயல்பாடாக இருக்கிறது.  தமிழ்நாட்டிலிருந்து வேலை தேடிச் செல்லும் கூலித் தொழிலாளர்களைக் கைது செய்வதும், ஈவிரக்கமின்றித் தாக்குவதும், அண்மைக் காலமாக அதிகரித்துக்கொண்டிருக்கிறது.  செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகத்தினரைக்கூட ஆந்திரக் காவல்துறை கடுமையாகத் தாக்கிக் கொடுமைப்படுத்தியதை நாம் அறிவோம்.  இந்தச் செயல்களைக் கண்டிக்கவோ கட்டுப்படுத்தவோ ஆந்திர அரசோ, முதலமைச்சரோ  எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.  இது இரண்டு மாநில மக்களுக்கிடையிலான நட்புறவைக் கெடுத்து பகைமையை வளர்ப்பதற்கே வழிவகுக்கும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறோம்.  எனவே, ஆந்திர வனத்துறையின் இந்த அத்துமீறிய படுகொலைக்காக ஆந்திர முதலமைச்சர் தமிழக மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும்.

சென்னையில் அடுக்குமாடிக் கட்டிட விபத்தில் ஆந்திரத் தொழிலாளர்கள் உயிரிழந்தபோது அந்த மாநில முதலமைச்சர் நேரில் வந்து பார்வையிட்டார்.  அதைப் போல படுகொலை செய்யப்பட்டிருக்கும் தமிழ்நாட்டுத் தொழிலாளர்களின் சடலங்களை தமிழக முதலமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

ஆந்திர-தமிழக மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் நீண்ட நெடுங்காலமாக, சகோதரர்களாய் அன்போடு வாழ்ந்து வருகிறார்கள். அதனைக் கெடுக்கும்வகையில் இந்தப் படுகொலை நடந்திருக்கிறது. இதனால் தமிழ்நாட்டில் ஆந்திர மக்களுக்கு எதிரான வெறுப்புணர்வு அதிகரிக்கக்கூடும்.  அது எதிர்காலத்தில் மோசமான விளைவுகளை உண்டாக்கக்கூடிய ஆபத்து இருக்கிறது.
எனவே, உச்ச நீதிமன்றம் தாமே முன்வந்து இரண்டு மாநில மக்களுக்கிடையிலான நல்லுறவைக் காக்கும்வகையில் தற்போது பணியிலிருக்கும் நீதிபதி ஒருவரின் தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்து இந்தப் படுகொலையில் தொடர்புள்ள அனைவரையும் தண்டிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

வலயப்பட்டியின் வாசிப்பு! - ரவிக்குமார்




வலயப்பட்டி என்று அழைக்கப்படும் தவில் இசை மேதை திரு. சுப்ரமணியன் அவர்களை நேற்று ( 06.04.2015) மாலை நண்பர்களோடு சென்று சந்தித்தேன். அவர் கடந்த பத்து ஆண்டுகளாகப் புதுவையில்தான் வசிக்கிறார் என்பது நேற்றுதான் எனக்குத் தெரியும். சுமார் இரண்டுமணி நேரம் பேசிக்கொண்டிருந்தோம். அப்படிச் சொல்வதைவிட பேசிக்கொண்டிருந்தார் என்று சொல்வதே பொருத்தம். 

சுவர் முழுதும் பல்வேறு தலைவர்களோடு அவர் இருக்கும் படங்கள், மேசையில் அவரைப்பற்றி செய்திகள் வெளியான மலர்கள், இதழ்கள். டிவியில் அவர் கலைஞருக்கு தங்க நாதஸ்வரம் பரிசளித்த விழாவின் வீடியோ ஓடிக்கொண்டிருந்தது. 

வலயப்பட்டி என்னவெல்லாம் பேசினார் என எழுதினால் அது நூறு பக்கங்களுக்கு நீளும். நானி பல்கிவாலாவின் ஜப்பான் பயணத்தில் ஆரம்பித்து வலயப்பட்டிக்குச் சென்று தமிழகத்துக்கும் கேரளத்துக்குமிடையே சஞ்சரித்து நிற்காமல் ஓடிக்கொண்டிருந்த பேச்சு வண்டியிலிருந்து நாங்கள் குதித்துத்தான் இறங்கினோம். நேரம் ஆகிவிட்டது என்பதும் அதற்கு ஒரு காரணம். 

வலயப்பட்டியின் பேச்சில் தமிழ்ப் பற்றும் சமயப் பற்றும் ; தமிழ் அடையாளமும் இந்து அடையாளமும் பிரிக்கமுடியாதபடி பின்னிக் கிடந்தன. நாட்காட்டியில் தமிழ்த் தேதியை அச்சிடவேண்டும், தமிழ்த் தேதியை வைத்தே பிறந்த நாளைக் கொண்டாடவேண்டும் - எனப் பல்வேறு யோசனைகள் அவரிடம் உள்ளன. தத்துவ நாட்டமும் இருக்கிறது.  சிவாஜிகணேசனின் நடையழகை சாய்பாபா ரசித்த கதை; புறாக்கள் தற்கொலை செய்துகொள்ளும் கதை எனப் பல்வேறு சுவாரஸ்யங்கள் உண்மைபோலவே பேச்சினூடே வந்துவிழுகின்றன. 

பிரபலங்களைப் பேரும் புகழும் இயல்பாக இருக்கமுடியாமல் நாசமாக்கிவிடுவதுண்டு. வலயப்பட்டி புகழால் சீர்கெடவில்லை. எளிமையும் நேசமும் அவரது இதயத்தை உற்சாகத்தோடு வைத்திருக்கின்றன. ஆனால் வயது அவரது வாயைத் திறந்துபோட்டுவிட்டுப் போய்விட்டது. அவர் கைகளால் வாசிக்கும் தவிலுக்கு சற்றும் குறைவற்றது அவரது பேச்சு. வாத்திய இசையைக் கேட்டுக்கொண்டிருக்கலாம், வார்த்தைகளை ? அதற்கு நிறையவே பொறுமைவேண்டும். 

வலயப்பட்டியிடம் விடைபெற்றுத் திரும்பும்போது எனது முதுமைக் காலம் குறித்த பயம் அதிகரித்துவிட்டது. ஒருவேளை நான் 75 வயது வரை வாழ நேர்ந்தால் ( அந்தக் கொடுமை வேண்டாம் என்பதே என் வேண்டுதல்) அப்போது எனக்குப்பேசமுடியாமல் போய்விட்டால் நல்லது என நினைத்துக்கொண்டேன். 

Monday, April 6, 2015

ஆம்லேட் சாப்பிட்டால் ஆறுமாத சிறை என சட்டம் வருமோ?


மாட்டிறைச்சி உண்பதைத் தடைசெய்து மகராஷ்டிர அரசு கொண்டுவந்திருக்கும் சட்டத்தை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அது நேற்று விசாரணைக்கு வந்தபோது ' மாட்டிறைச்சிக்கு மட்டும் தடை விதித்தது ஏன்? ஆட்டிறைச்சியை ஏன் தடைசெய்யவில்லை என நீதிபதி அரசு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினார். " எல்லாவிதமான இறைச்சி உணவுகளுக்கும் அரசு தடைவிதிக்கவுள்ளது. அதன் முதல் கட்டமாக மாட்டிறைச்சிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது" என அரசு வழக்கறிஞர் கூறியுள்ளார். 

மாட்டிறைச்சி தடையோடு நிற்கப்போவதில்லை. சைவ உணவு மட்டும்தான் சாப்பிடவேண்டும் என சட்டம் போடப்போகிறார்கள் என்பதைத்தான் மகராஷ்டிர அரசு சழக்கறிஞரின் பதில் சுட்டிக்காட்டுகிறது. மாட்டிறைச்சி தடை சட்டத்தை இந்தியா முழுமைக்கும் கொண்டுவரவேண்டும் என ஏற்கனவே மத்திய  அமைச்சர் ராஜ்நாத்சிங் பேசியதாக செய்தி வெளியானது. 'ஆம்லேட் சாப்பிட்டவருக்கு ஆறுமாத சிறைதண்டனை' என செய்தி வெளியாகும் நாள் நெருங்கிக்கொண்டு இருக்கிறதா? 

ஒடுக்கப்பட்டோர் அமைப்புகள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் ஒன்றிணையவேண்டும்! -ரவிக்குமார்



விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துவக்கப்பட்டு இந்த ஆண்டுடன் இருபத்தைந்து ஆண்டுகள் நிறைகிறது. இது வெள்ளிவிழா ஆண்டு. தமிழக வரலாற்றில் இது மிகப்பெரிய சாதனை. 

முன்னாள் அமைச்சர்கள், கல்வி வள்ளல்கள், பலம்வாய்ந்த சாதிகளின் தலைவர்கள் - எனப் பலபேர் இங்கு கட்சி ஆரம்பித்துக் காணாமல் போய்விட்டார்கள். ஆனால் எந்தவிதப் பின்புலமும் இல்லாமல் ஒடுக்கப்பட்ட மக்களை ஒன்றிணைத்து அவர்களை அரசியல் சக்தியாக உருமாற்றிய பெருமை எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் அவர்களையே சாரும். 

ஆட்சியில் இருந்த கட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்க தலித் மக்களின் குடிசைகளைக் கொளுத்தலாம் என்றிருந்த நிலையை மாற்றியது விடுதலைச் சிறுத்தைகளின் வருகைதான். சுயேச்சையான சின்னத்தில் போட்டியிட்டு சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் தலித்துகள் தடம் பதிக்க வழிகோலியதும் விடுதலைச் சிறுத்தைகள்தான். 

தமிழ்நாட்டில் ஒடுக்கப்பட்ட மக்கள்மீதான வன்கொடுமைகள் குறையவேண்டுமென்றால் தலித் மக்களின் அரசியல் பலம் அதிகரிக்கவேண்டும். தலித் இயக்கங்கள் பலவீனப்படும்போது சாதிய சக்திகள் மீண்டும் கொள்ளிக்கட்டைகளோடும் வீச்சரிவாள்களோடும் வலம்வர ஆரம்பித்துவிடுகின்றன. அண்மைக்காலமாக தமிழகத்தின் பல பகுதிகளிலும் தலித் மக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துவருவது அதைத்தான் காட்டுகிறது. இதை தலித் மக்களின்பால் அக்கறைகொண்டோர் புரிந்துகொள்ளவேண்டும்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி என்பது சாதிக் கட்சி அல்ல, சாதி ஒழிப்புக்கான கட்சி. அனைத்துத் தரப்பு மக்களின் நலன்களுக்காகவும் குரல் கொடுக்கும் கட்சி. ஆனால் அதன் அடித்தளம் என்பது ஒடுக்கப்பட்ட மக்கள்தான். 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வெள்ளிவிழா காணும் இந்த ஆண்டில் ஆங்காங்கே இருக்கும் சிறு சிறு தலித் அமைப்புகளும், தமிழ்த் தேசிய அமைப்புகளும், சிறுபான்மையினரின் இயக்கங்களும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியோடு இணைந்து ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் பலத்தை அதிகரிக்க ஏன் முன்வரக்கூடாது? 

தேசிய அளவில் ஜனதா கட்சிகள் ஒன்றிணைந்து ஜனதா பரிவார் ஆகிவிட்டன; காங்கிரஸ் கட்சியும் தன்னிடமிருந்து பிரிந்துபோனவர்களை மீண்டும் இணையுமாறு அழைப்பு விடுத்துள்ளது. இப்படி ஆதிக்க சக்திகள் ஒன்றிணைந்து பலம்பெறும்போது ஒடுக்கப்படுவோர் ஒரு கொடியின்கீழ் திரள்வது அவசியமில்லையா?

Sunday, April 5, 2015

ஊடகங்களில் நியாயமான பங்கேற்பு - ரவிக்குமார்


========================

( 04.04.2015 அன்று நடைபெற்ற சரிநிகர் ஆலோசனைக் கூட்டத்தில் நான் முன்வைத்த  கருத்துகளில் ஒன்று) 

===========================

சுதந்திரம் என்பது ஜனநாயகத்திலிருந்து பிரிக்க முடியாதது. ஊடக சுதந்திரத்தைப் பற்றிப் பேசும்போது ஊடக ஜனநாயகம் குறித்தும் நாம் பேசவேண்டும். செய்திகள் நியாயமாக வெளிப்படவேண்டுமென்றால் ஊடகங்களில் நியாயமான பங்கேற்பு ( Fair Representation ) உறுதிசெய்யப்பட வேண்டும். 

இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் ஊடகங்கள் இருக்கும் மாநிலம் தமிழ்நாடு. பெரும்பாலான ஊடகங்கள் கொள்கையளவில் சமூக நீதியை ஏற்றுக்கொள்கிறவர்களால்தான் இங்கு நடத்தப்படுகின்றன. அனால் அவற்றில் நியாயமான பங்கேற்பு ஒன்றில்கூட கிடையாது. 

அச்சு ஊடகங்களில் தலித்துகள் புறக்கணிக்கப்படுவதை ராபின் ஜெஃப்ரி தனது ஆய்வு நூலில் வெளிப்படுத்தியிருக்கிறார். காட்சி ஊடகங்களின் நிலை அதிலிருந்து வேறுபடவில்லை. 

காட்சி ஊடகங்களில் பெண்களின் பங்கேற்பு பெரும்பாலும் அவர்களைப் பண்டங்களாக பாவிப்பதாகத்தான் இருக்கிறது. நிகழ்ச்சிகளை முடிவுசெய்யும் நிலையில் அவர்கள் அதிகம் இல்லை. 

மதச் சிறுபான்மையினர், தலித்துகள் ஆகியோரின் பங்கேற்பு இல்லையென்றே சொல்லிவிடக்கூடிய நிலைதான் உள்ளது. ஓரிருவர் இருந்தாலும் அவர்கள் கடுமையான நெருக்கடிகளை சந்திக்கின்றனர். 

கருத்தியல்சார் அரசு சாதனமாக  ( Ideological State Apparatus ) இருக்கும் ஊடகத்தில்  பங்கேற்பதென்பதை வெறும் வேலை வாய்ப்பு என்று பார்க்கக்கூடாது. கலாச்சார உற்பத்திக் கேந்திரங்களுள் ஊடகம் முக்கியமானது. கருத்தியல் மேலாண்மையை ( Ideological Hegemony) நிறுவுவதில் அது மிக முக்கிய பங்காற்றுகிறது. 

செய்திகளில் ஜனநாயகம் இருக்கவேண்டுமென்றால் ஊடகங்களில் நியாயமான பங்கேற்பு உறுதிசெய்யப்படவேண்டும். அது சமூகக் குழுக்களின் நியாயமான பங்கேற்பாக மட்டுமின்றி பலதரப்பட்ட கருத்தியல் போக்குகளின் ( Ideological Currents ) பங்கேற்பாகவும் இருக்கவேண்டும். 

இந்தக் கோரிக்கையை அரசியல் கட்சித் தலைவர்கள் எழுப்பமாட்டார்கள். ஊடக முதலாளிகளைப் பகைத்துக்கொள்ள அவர்கள் விரும்பமாட்டார்கள். எனவே இதற்காக சரிநிகர் குரல் கொடுக்கவேண்டும். 

Friday, April 3, 2015

வாயுரிஸமும் பாசிஸமும் - ரவிக்குமார்

 


மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கோவாவிலிருக்கும் ஃபேப்இண்டியா துணைக்கடையின் ஆடை மாற்றும் அறையில்ரகசிய காமிரா இருப்பதைக் கண்டுபிடித்த செய்தி இந்தியாவில்தனி மனித அந்தரங்கம் என்பது எந்த அளவுக்குஆபத்திலிருக்கிறது என்பதை உணர்த்துகிறதுஹோட்டல்அறைகளிலும்கழிவறைகளிலும்ஆடை மாற்றும்அறைகளிலும் இப்படி ரகசிய வீடியோ காமிராக்கள்இருப்பதாக அவ்வப்போது செய்திகள் வெளியாவதுண்டு.ஆனால் மத்திய அமைச்சர் ஒருவருக்கே ப்படியொரு கதிஏற்படும் என எவரும் நினைத்திருக்கமுடியாது. தற்போதுஅந்தக் கடையின் ஊழியர்கள் சிலர்கைதுசெய்யப்பட்டிருப்பதாகவும் அவர்கள் மீது இந்தியதண்டனை சட்டத்தின் பிரிவு 354 சி மற்றும் பிரிவு 509 ன் கீழ்வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் செய்திகள்தெரிவிக்கின்றன


இந்திய தண்டனை சட்டத்தில் பெண்ணின் கண்ணியத்தைக்குலைப்பவர்கள்மீது நடவடிக்கை எடுப்பதற்கு வகை செய்வதுசெக்ஷன் 354 ஆகும். அதில் இப்படி வேவு பார்த்தல் ரகசியமாகபடம் பிடித்தல் போன்றவை முன்னர்உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை. 2013 ஆண்டில்கொண்டுவரப்பட்ட திருத்தத்தின் பின்னர் 354 சி என ஒருஉட்பிரிவு சேர்க்கப்பட்டு வாயுரிஸம் என்று சொல்லப்படும்வக்கிர செயல்பாட்டுக்குத் தண்டனை அளிக்கவழிசெய்யப்பட்டதுஅந்தப் பிரிவின் படி “ அந்தரங்கமானசெயல்பாட்டில் ஈடுபட்டிருக்கும் ஒரு பெண்ணை ஒரு ஆண்பார்த்துக்கொண்டிருந்தாலோ அதைப் படம் பிடித்தாலோஅந்த படத்தைப் பிறருக்குப் பகிர்ந்தாலோ அவருக்கு ஒருஆண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனைவிதிக்கலாம்இரண்டாவது முறை அதே நபர் அதே செயலில்ஈடுபட்டால் அவருக்கு ஏழு ஆண்டுகள் வரை ண்டனைவிதிக்கலாம்.    செக்ஷன் 509 ம் கூட ஏறக்குறைய அதேபொருள் கொண்டதுதான்.


வாயுரிஸம் என்ற சொல் ஆண் பெண் எனஇருபாலினத்துக்கும் பொதுவானது. ஆனால் இந்தியதண்டனை சட்டத்திலோ ஒரு பெண்ணை ஆண் பார்ப்பதும்படம் எடுப்பதும்தான் குற்றம் எனசொல்லப்பட்டிருக்கிறது.அதாவது இதில் பாதிக்கப்பட்டவர்பெண்ணாக இருந்தால்தான் இந்தப் பிரிவுகளைப் பயன்படுத்தமுடியும்ஒரு ஆணுக்கும் கூட அந்தரங்கம் இருக்கமுடியும்என்பதை இந்தப் பிரிவு கணக்கில் கொள்ளவில்லை.அதுபோலவே அரவாணிகளும் இந்த சட்டப் பிரிவுகளின்கீழ் நீதிபெற முடியாது. இந்த நிலை மாற்றப்படவேண்டும். இந்த சட்டப்பிரிவுகளை பாலின வேறுபாடு இன்றி அனைவருக்கும்பொதுவானதாக ஆக்கவேண்டும்.


டிஜிட்டல் யுகம் என வர்ணிக்கப்படும் இன்றைய காலத்தில்அந்தரங்கம் என்பதற்கு இடம் இருக்கிறதா என்ற கேள்விநம்முள் எழுகிறது. ‘ கண்ணியக் குலைப்பு’ (Outrage of Modesty )  என்ற பதத்தை இப்போது ஆழமான பொருளில் நாம்புரிந்துகொள்ளவேண்டும்முன்னர் பொது வெளியில் ஒருபெண்ணின் கண்ணியம் குலைக்கப்படுகிறதென்றால் அதுதற்காலிகத் தன்மை கொண்டதாக இருந்தது. அதைப்பார்க்கிறவர்களும் குறைவான என்ணிக்கையிலேயேஇருப்பார்கள். ஆனால் டிஜிட்டல் தொழில் நுட்பம் அதைஉடனடித் ன்மை கொண்டதாகவும் (Instant ) நிரந்தரத்ன்மை கொண்டதாகவும் (Permanent ) மாற்றிவிட்டதுஇன்றுபொது வெளியில் மட்டுமல்ல அந்தரங்கமாக ஒருவருக்குக்கண்ணியக் குலைவு ஏற்பட்டாலும் அடுத்த நொடியே அதைஉலகம் முழுவதும் கொண்டு சென்று பரப்புவதை டிஜிட்டல்தொழில் நுட்பம் எளிதாக்கிவிட்டது.இணையம் என்றபொதுவெளியில் பகிரப்படும் அத்தகைய பிம்பப் பதிவுகள்நீக்கப்படவே முடியாதபடி என்றென்றைக்குமானதாக நிரந்தரத்தன்மைகொண்டதாக இருக்கின்றன.தொழில் நுட்பம்சாத்தியப்படுத்தியிருக்கும் இந்தப் பண்பு மாற்றத்தைசட்டங்களை இயற்றுவோர் கவனத்தில் கொள்ளவேண்டும்அதன் அடிப்படையில் இந்தக் குற்றங்கள்வியாக்கியானப்படுத்தப்படவேண்டும்அதற்கேற்பதண்டனைகளும் அதிகமாக்கப்படவேண்டும்.


இன்று பெரும்பாலான மொபைல் ஃபோன்களில் வீடியோகாமிரா இருக்கிறது. அதைத் தடை செய்ய முடியாது. சீனாவில்அப்படி முயற்சித்துப் பார்த்து கைவிட்டுவிட்டார்கள். ஆனால்சில நாடுகளில் மொபைல் காமிரா மூலம் படம் பிடித்தால் அதுமற்றவர்களுக்குத் தெரியும்விதமாக சப்தம் கேட்குமாறுசெய்யப்பட்டிருக்கிறது. அந்தத் தொழில் நுட்பத்தை இங்கும்கட்டாயமாக்கலாம். கடைகள்ஹோட்டல்கள் போன்றஇடங்களில் இப்படி ரகசிய காமிரா இருப்பதுவெளிப்படுத்தப்பட்டால் அந்த நிறுவனத்தை நிரந்தரமாகமூடிவிட சட்டத்தில் வகைசெய்யப்படவேண்டும். அதற்கானதண்டனையும் அதிகரிக்கப்படவேண்டும்.


வாயுரிஸம்’ ஒரு மனிதரை வெறும் உடலாக சுருக்குகிறது.பண்டமாக்கை இழிவுபடுத்துகிறது. அதுவெறும் ஒழுக்கம்சார்ந்த விஷயம் மட்டுமல்லவாயுரிஸம் உள்ளிட்ட மனவிகாரங்களை அடிப்படையாகக்கொண்டுதான் இன்றையபோர்னோகிராபி தொழில் நடக்கிறது. உலகில் அதிகம் லாபம்ஈட்டப்படும் தொழில்களில் ஒன்றாக அது இருக்கிறது. எனவேவாயுரிஸத்தின் பொருளாதார அடிப்படையையும் நாம்கவனத்தில் கொள்ளவேண்டும்.

பாசிஸ அரசு குடிமக்களுக்கு அந்தரங்கம் என்பதே இல்லாமல்அழிக்கிறது. அது எவரையும் நம்பாமல் எல்லோரையும் வேவுபார்க்கிறது.ஒடுக்கும் நோக்கம் இல்லாவிட்டாலும்கூ ாயுரிஸமும்அதே அடிப்படையில்தான் இயங்குகிறதுஅதனால் பாசிஸ மனோபாவத்துக்கு வாயுரிசம் இயைபானஒன்றாக இருக்கிறது.

அரசியல் தளத்தில் பாசிஸத்தை எதிர்ப்பதுபோலவே கலாச்சாரதளத்தில் வாயுரிஸத்தை நாம் எதிர்க்கவேண்டும்.அதைத்தான்அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு கோவாவில் நேர்ந்த இந்தக்கொடுமை வலியுறுத்துகிறது

 

 

விடுதலைச்சிறுத்தைகளின் விருதுகள் பெறுவோர் பட்டியல்

2015ஆம் ஆண்டுக்கான 
விடுதலைச்சிறுத்தைகளின் விருதுகள் பெறுவோர் பட்டியல்தொல்.திருமாவளவன் அறிவிப்பு

===========



 ஏப்ரல் 14 - புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாளில், 2007ஆம் ஆண்டு முதல், ஆண்டுதோறும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பல்வேறு துறைகளில் தொண்டாற்றிவரும் சான்றோருக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.  குறிப்பாக, அரசியல், சமூகம், பண்பாடு, மொழி மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் சாதி ஒழிப்பு, தமிழ்த் தேசியம், பெண்ணுரிமை, கல்வி மேம்பாடு, சமூக நல்லிணக்கம், சிறுபான்மையினரின் சனநாயக உரிமைகள் போன்றவற்றிற்காகப் பணியாற்றுவோருக்கு ‘அம்பேத்கர்சுடர்’, ‘அயோத்திதாசர்ஆதவன்’, ‘பெரியார்ஒளி’, ‘காமராசர்கதிர்’, ‘காயிதேமில்லத்பிறை’ மற்றும் ‘செம்மொழிஞாயிறு’ ஆகிய விருதுகள், பாராட்டுப் பட்டயம் மற்றும் ரூ. 50,000 பொற்கிழியுடன் அளிக்கப் படுகின்றன.  
அந்த வகையில், 2015ஆம் ஆண்டுக்கான விருதுகளைப் பெறுவோர் பட்டியல் பின்வருமாறு:

அம்பேத்கர்சுடர் - எழுத்தாளர் அருந்ததி ராய்
அயோத்திதாசர்ஆதவன் - பேராசிரியர் க.நெடுஞ்செழியன்
பெரியார்ஒளி - திரு. கோவை கு.இராமகிருட்டிணன்
காமராசர்கதிர் - திரு. ஜி.கே.மூப்பனார் (மறைவுக்குப் பின்னர் வழங்கும் முறையில்)
காயிதேமில்லத்பிறை - பேராசிரியர் ஜவாஹிருல்லா
செம்மொழிஞாயிறு - முனைவர் அவ்வை நடராசன்

விருதுகள் வழங்கும் விழா வரும் மே 2ஆம் நாள் சென்னையில் நடைபெறுகிறது.

Wednesday, April 1, 2015

அருந்ததி ராய்க்கு அம்பேத்கர் விருது தொல். திருமாவளவன் அறிவிப்பு



விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆண்டுதோறும் அயோத்திதாசர், அம்பேத்கர், பெரியார், காமராசர், காயிதேமில்லத் உள்ளிட்ட தலைவர்களின் பெயரால் ஆறு விருதுகள் வழங்கப்பட்டுவருகின்றன. அந்த விருதுகள் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14 அன்று வழங்கப்பட்டுவருகின்றன. 

2015 ஆம் ஆண்டுக்கான அம்பேத்கர் விருது உலகப் புகழ்பெற்ற எழுத்தாளரும் ஆதிவாசி மக்களுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துவருபவரும் அம்பேத்கரின் கருத்தியலை ஏற்று பரப்பி வருபவருமான அருந்ததி ராய் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இதை இன்று (01.04.2015) மதுரையில் செய்தியாளர்களிடம் தொல். திருமாவளவன் அறிவித்தார். மே மாதத்தில் சென்னையில் நடைபெறவுள்ள விழாவில் அருந்ததி ராய் அவர்கள் கலந்துகொண்டு இவ்விருதினைப் பெறுகிறார். 

இதற்குமுன் அம்பேத்கர் விருது பெற்றவர்களில் முன்னாள் முதல்வர் கலைஞர், கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் என். வரதராஜன், மருத்துவர் ராமதாஸ், கவிஞர் இன்குலாப், பேராசிரியர் கல்யாணி, பி.எஸ்.கிருஷ்ணன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். 

இந்த விருது பட்டயமும், ரூபாய் ஐம்பதாயிரம் பொற்கிழியும் கொண்டது.