Tuesday, October 26, 2010

அருந்ததி ராய் தேசத் துரோகியா ?



( காஷ்மீர் குறித்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டங்களில் பேசியதற்காக எழுத்தாளர் அருந்ததி ராய் மீது தேசத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டு அவரைக் கைது செய்ய ஏற்பாடுகள் நடப்பதாகச்  செய்திகள் வருகின்றன. அதுகுறித்து அருந்ததி ராய்   எழுதி வெளியிட்ட அறிக்கையின் தமிழாக்கம் இது. 
தமிழில் : ரவிக்குமார்)  
-- 


நான் இதை காஷ்மீரில் இருக்கும் ஸ்ரீநகரிலிருந்து எழுதுகிறேன். காஷ்மீரைப் பற்றி அண்மையில் நடத்தப்பட்ட கூட்டங்களில் நான் பேசியவற்றுக்காக நான் கைதுசெய்யப்படலாம் என இன்றைய செய்தித் தாள்கள் கூறுகின்றன. இஙிருக்கும் லட்சக்கணக்கான மக்கள் தினந்தோறும் சொல்வதைத்தான் நான் சொன்னேன். பல்வேறு அரசியல் நோக்கர்களும் பல ஆண்டுகளாகச் சொல்லியும் எழுதியும் வருவதைத்தான் கூறினேன். நான் பேசியவற்றின் எழுத்து வடிவத்தைப் படிப்பவர்கள் அவை அடிப்படையில் நீதிக்கான அழைப்புகள் என்பதை உணர்வார்கள். உலகிலேயே மிகவும் மோசமான ராணுவ ஆக்கிரமிப்பின்கீழ் வாழும் காஷ்மீர் மக்களுக்கு நீதி கிடைக்கவேண்டும்; தங்களது தாய்மண்ணிலிருந்து விரட்டப்பட்ட துயரத்தோடு காஷ்மீருக்கு வெளியே வாழ்ந்துகொண்டிருக்கும் காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு நீதி கிடைக்கவேண்டும் ; தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் குப்பைகளுக்குக் கீழே மறைந்துகிடக்கும் புதைகுழிகளைப் பார்த்தேனே காஷ்மீரில் கொல்லப்பட்ட தலித் ராணுவ வீரர்கள் அவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும்; இந்த ஆக்கிரமிப்புக்கான விலையைக் கொடுத்துகொண்டிருக்கும் , இப்போது போலீஸ் ராச்சியமாக மாறிவிட்ட நாட்டில் பயங்கரங்களுக்கிடையே வாழப் பழகிக்கொண்டிருக்கும் இந்திய நாட்டின் ஏழை மக்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்றுதான் நான் பேசினேன்.
நேற்று தெற்கு காஷ்மீரில் இருக்கும் ஆப்பிள் நகரமான ஷோபியானுக்கு நான் போயிருந்தேன். அங்குதான் ஆசியா , நிலோஃபர் என்ற இரண்டு இளம்பெண்களின் சடலங்கள் அவர்களின் வீடுகளுக்கு அருகில் ஒரு ஓடையில் கண்டெடுக்கப்பட்டது. குரூரமாக அவர்கள் கற்பழித்துக் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டில் நாற்பத்தேழு நாட்கள் அந்த நகரம் மூடப்பட்டுக் கிடந்தது. அவர்களைக் கொன்றவர்கள் இன்னும் தண்டிக்கப்படவில்லை. நிலோஃபரின் கணவரும் ஆசியாவின் சகோதரருமான ஷகீலை நான் சந்தித்தேன்.நாங்கள் அமர்ந்திருந்த இடத்தைச் சுற்றி இந்தியாவிடமிருந்து நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை இழந்துபோன, சுதந்திரம் ஒன்றுதான் ஒரே நம்பிக்கை என்று கருதுகிற மக்கள் துக்கத்தோடும் கோபத்தோடும்  சூழ்ந்திருந்தார்கள். கல்வீசியதற்காக துப்பாக்கியால் சுடப்பட்டு கண்களுக்கிடையே தோடாவால் துளைக்கப்பட்ட இளைஞர்களை சந்தித்தேன். என்னோடு பயணம் செய்த இளைஞர் ஒருவர் அனந்த்நாக் மாவட்டத்தில் இருக்கும் தனது நண்பர்களான டீன் ஏஜ் இளைஞர்கள் மூன்றுபேரை எப்படி விசாரணைக்கு அழைத்துச் சென்றார்கள் கல் வீசியதற்காக அவர்களது விரல் நகங்கள் எப்படி பிடுங்கப்பட்டன என்பதை விவரித்தார்.
‘ வெறுப்பைக் கக்கும் பேச்சை நான் பேசியதாக நாளேடுகளில் சிலர் குற்றம்சாட்டியிருக்கிறார்கள். இந்தியா சிதைவதை நான் விருபுவதாகச் சொல்கிறார்கள். அவர்கள் சொல்வதற்கு மாறாக எனது பேச்சு அன்பிலிருந்தும் பெருமிதத்திலிருந்தும் வருகிறது. நாங்கள் எல்லோரும் இந்தியர்கள்தான் என அவர்களைப் பலவந்தப்படுத்திச் சொல்லவைக்கவேண்டும் என்பதற்காக அவர்களது விரல் நகங்களைப் பிடுங்கவேண்டாம்; கற்பழிக்கவேண்டாம் , படுகொலை செய்யவேண்டாம் என்ற உணர்விலிருந்து வருகிறது. நீதி விளங்கும் ஒரு சமூகத்தில் வாழவேண்டும் என்ற விருப்பத்திலிருந்து வருகிறது. தமது எண்ணங்களைப் பேசுகிற காரணத்தால் எழுத்தாளர்களை மௌனிகளாக்கி வைக்க இந்த தேசம் விரும்புகிறது என்பது பரிதாபகரமானது. நீதி கோருபவர்களை சிறையில் அடைக்க இந்த நாடு முயற்சிக்கிறது, ஆனால் மதவெறிக் கொலைகாரர்கள் ; இனப்படுகொலைகளைச் செய்தவர்கள் ; கொள்ளைக்காரர்கள்; கற்பழிப்பவர்கள் , ஊழல் செய்பவர்கள், ஏழைகளிலும் ஏழையான மக்களைச் சுரண்டுபவர்கள் போன்றவர்களெல்லாம் இங்கே சுதந்திரமாகச் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள்.


அக்டோபர் 26, 2010                                                        அருந்ததி ராய்

http://www.outlookindia.com/article.aspx?267656

5 comments:

  1. அன்பு மிக்க ரவிக்கு,
    நான் ஹக்ஸர் தலைமையில் செயல்பட்ட ஒரு குழுவின் அங்கத்தினனாக 1989ல் ஸ்ரீநகர்(காஷ்மீர்) சென்றிருந்தேன்.மற்றொரு உறுப்பினராகிய பிரசித்திப் பெற்ற ஓவியர் குலாம் ஷேக்கும் நானும் காஷ்மீர் பிரச்னை குறித்து பொதுமக்கள் அபிப்பிராயம் அறிய கடைவீதி மக்களுடன் அளவளாவினோம் இந்திய ஃபெடரேஷ்னக்குள், காஷ்மீர் சுய நிர்ணய உரிமையுடன் இருக்க் வேண்டும் என்று ஷேக் அப்துல்லா கோரிய போது, நேரு அவரைக் கைது செய்யாமல், அந்த உரிமையை வழங்கியிருந்தால், இப்பொழுதைய நிலைமை உருவாக்கியிருக்காது என்பதுதான் பெரும்பான்மையான மக்களுடைய கருத்தாக இரூந்தது. காஷ்மீர் முஸ்லீம்களுக்கும் காஷ்மீர் பண்டிட்களுக்கும் சுதந்திரத்து முன்னால் என்றுமே பிரச்னை இருந்ததில்லை. காஷ்மீர் இந்தியாவுடன் ஐக்கியமான பிறகுதான், இந்திய ஹிந்து மதவாதக் கட்சிகளினால் பிரச்னை உருவாகியது என்றனர். என்னுடன் தில்லிப் பல்கலைக் கழகத்தில் பணி புரிந்த காஷ்மீர் பண்டிட் பேராசிரியர்களும் இவ்வாறுதான் சொல்வது வ்ழக்கம்.. ஜம்மு ஹிந்துக்களின் அபிப்பிராயம் வேறு.ஆனால் இவ்வளவு நடந்த பிறகு, காஷ்மீர் பிரச்னைக்கு ஒரே தீர்வு, முழு சுதந்திரந்தான். இப்பொழுதைய தங்களுடைய பொருளாதாரம், இந்திய ராணுவத்தை நம்பித்தான் இருக்கிறது என்றார்கள்.

    அருந்ததி ராய் சொல்வதை இந்தப்[பின்ணணியில் தான் நான் பார்க்கிறேன்.
    அன்புடன்,
    இந்திரா பார்த்தசாரதி

    ReplyDelete
  2. களிமிகு கணபதிOctober 27, 2010 at 3:08 AM

    இந்தப் “பொதுமக்கள்” என்ற பதார்த்தம் குறிப்பிட்ட ஓட்டல்களில் தயாரிக்கப்படும் ஐட்டம். தமிழ்நாட்டில் ஜெயலலிதாவை எதிர்த்துப் “பொதுமக்கள்” போராட்டம் நடத்தினார்கள் என்று கலைஞர் டிவி சொல்லும். கருணாநிதியை எதிர்த்துப் “பொதுமக்கள்” போராட்டம் நடத்தினார்கள் என்று ஜெயா டிவி சொல்லும்.

    ஹக்ஸர் தலைமையில் செயல்படும் அமைப்பால் அழைத்துச் செல்லப்பட்டு இபா சந்தித்த “பொதுமக்கள்” இந்து அமைப்புக்களால்தான் காஷ்மீரில் பிரச்சினை ஏற்பட்டது என்றுதான் சொல்லுவார்கள்.

    ஈவேரா ஸ்டாலினிஸ்ட் சோவியத்திற்குச் செய்த சுற்றுப்பயணத்தின்போது செய்த பொதுமக்களுடன் உரையாடுதலுக்கும், இந்திரா பார்த்தசாரதி அவர்கள் நடத்திய உரையாடுதலுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை.

    வோட்கா சுவையாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன்.

    ReplyDelete
  3. /இந்திய ஃபெடரேஷ்னக்குள், காஷ்மீர் சுய நிர்ணய உரிமையுடன் இருக்க் வேண்டும் என்று ஷேக் அப்துல்லா கோரிய போது, நேரு அவரைக் கைது செய்யாமல், அந்த உரிமையை வழங்கியிருந்தால், இப்பொழுதைய நிலைமை உருவாக்கியிருக்காது என்பதுதான் பெரும்பான்மையான மக்களுடைய கருத்தாக இரூந்தது./இந்திரா பார்த்தசாரதி.

    நேருவின் தீர்வில் இல்லாம‌ல், ச‌ர்தார் ப‌டேலின் வ‌ழியில் முடிவாகியிருந்தால் பிர‌ச்னை நீண்டிருக்காது என்கிறார், ப‌த்திரிக்கையாசிரிய‌ர் சோ. 1989 ல் JKLF ன‌ரால்,க‌ட‌த்தப்பட்ட‌ அப்போதைய‌ மத்திய‌ உள்துறை அமைச்ச‌ரின் ம‌களை விடுவிக்க‌‌‌ முத‌ன்முறையாய்,ப‌ய‌ங்க‌ர‌வாத‌க் கைதிக‌ளை விடுவித்தில் ஒரு மிகப்பெரிய‌ ச‌ரிவை இந்தியா ச‌ந்தித்த‌து.நன்றி பிர‌த‌ம‌ர் V.P. சிங். அத‌னால் க‌ந்த‌ஹார் விடுத‌லை த‌விர்க்க‌ முடியாம‌ல், ம‌த்திய‌ ம‌ந்திரியே ப‌ய‌ங்க‌ரவாதிக‌ளோடு ப‌யணிக்கும் கொடுமை ந‌ட‌ந்த‌து. நன்றி பிர‌த‌ம‌ர் வாஜ்பாய். இன்று, அனுப‌வமில்லாத‌, ப‌குதி நேர‌ முதல்ம‌ந்திரி ஒம‌ர் அப்துல்லாவே, அவர் தாத்தா ஷேக் அப்துல்லா கேட்ட‌தைவிட‌ அதிக‌மாக அதிகார‌ம் கேட்கிறார். கல்லெறிக‌ளுக்கு ப‌ய‌ந்தோடும் இவ‌ர்க‌ள் 1948ல் பாகிஸ்தான் கொள்ளைய‌ர்க‌ளை எதிர்க்க‌ இம‌ய‌ம‌லைக்கு டாங்குக‌ளை ப‌குதி ப‌குதியாய் பிரித்து லாரிக‌ளில்(சிறு குறுகிய‌)பாதைக‌ளில் கொண்டு பின் சேர்த்து (டாங்கியின் ச‌ப்தம் ம‌லைக‌ளில் எதிரொலிக்க‌)பாக் தீவிர‌வாதிக‌ளையும்,கொள்ளைய‌ர்க‌ளையும் விர‌ட்டி சேர்த்த‌ தேச‌ம் அது என்ப‌தை அறிவார்க‌ளா இவ‌ர்க‌ள். அர‌சிய‌ல்வாதிக‌ளின் த‌வ‌றான ஒரு முடிவால், த‌லைமுறை த‌லை முறையாய் அத‌ன் மக்க‌ள் அல்ல‌லுறுகின்ற‌ன‌ர்.

    ReplyDelete
  4. ஜானகி.இராசாOctober 27, 2010 at 9:39 AM

    கடுமையான இராணுவச் சட்டங்களால் கட்டமைக்கப்படும் நாட்டின் இறையான்மை என்பது தற்காலிகமானதே. நீண்ட நாட்களுக்கு காஷ்மீர் மக்களை துப்பக்கிகள் கொண்டு அடக்கிவைக்க முடியாது. மக்களின் ஒற்றுமையை விடவும் வலிமையான ஆயுதத்தினை இந்த மனிதகுலம் இன்னும் கண்டுபிடித்துவிடவில்லை. ஆகவே தான் ஆட்சியாளர்கள் ஏதெதோ காரணங்களைச் சொல்லி மக்களின் ஒற்றுமையை சிதைத்து வருகின்றனர். காஷ்மீரத்தில் இந்த ஒற்றுமை வலுப்பட்டு வருகிறது. இதற்கு அருந்ததிராய் போன்ற சமுகம்சார் எழுத்தாளர்களின் பணி குறிப்பிடத்தக்கது. இதனை அரசு வெறுக்கவே செய்யும். இதன் வெளிப்பாடுதான் அருந்ததி ராய் அவர்களைக் கைது செய்ய வேண்டும் என்ற வேண்டுகோளும் அறிவிப்புகளும்.
    மொழிமாற்றம் செய்து வெளியிட்ட ரவிக்குமார் அவர்களின் பணி பாராட்டுதளுக்கு உரியது. அருந்ததிராய்-க்கு எப்போதும் துணை நிற்போம்.

    ReplyDelete
  5. ஆம்.அருந்ததிராயை காப்பாற்றவேண்டும்.
    அன்னியக்கம்பெனிகளுக்கு சாமரம் வீசும் கூட்டம் அருந்ததி ராயின் உண்மையான
    சொற்கள் மிகுந்த ஆத்திரம் ஊட்டுவதாக உள்ளது. ஊடகங்களை காசை வீசி
    வளத்துப்போட்ட்வர்களுக்கு அருந்ததிராய் ஒரு சமாளிக்க முடியாத சக்தி.

    காசுமீரம் அதன் இயற்கை எவ்வளவு உண்மையோ அதற்கு கொஞ்சமும் குறையாத உண்மை:
    அங்குள்ள மாகளின் இதயத்தில் ரத்தம் கசிந்துகொண்டிருக்கிறது.அந்த
    பனிமலையின் வசீகரத்தில் மனம் லயிக்கும்போது : "இந்திய நாய்களே: என்று
    காரி உமிழும் சாதாரண காசுமீரியின் நெஞ்சத்தணல் சுடுகிறது.பலருடன்
    பேசிப்பார்த்தேன். பல குடும்பங்கள் குறைந்தது ஒரு உறுப்பினரையாவது
    துப்பாக்கிச்சனியனுக்கு இரையாக்கித் தந்திருக்கிறது.

    எவ்வளவு ராணுவம்.முகாம்கள்.சாலைகளில் ,கடைதெருக்க ளில் என எத்தனை ஆயிரம்
    ராணுவ வீரர்கள். எப்படியெல்லாம் சாகிறார்கள்.எந்த எல்லையை காக்க இவர்கள்
    சாகிறார்கள்.அல்லது எந்த கோட்டையைப்பிடிக்க போராடுகிறார்கள். ஒன்றை நாம்
    உணர வேண்டும்.துப்பாக்கி முனையில் காசுமீரிகளை அடிபணிய வைக்க முடியாது
    பிறகு எதற்கு இந்த அறிவறற ஆக்கிரமிப்பு.

    அருந்ததி ராயி ன் உணர்வுகள் ஒரு நியாய உணர்வுமிக்க தாயுள்ளத்தின்
    வெளிப்பாடுகள். உலகவங்கிக்ககு உழைக்கும் கூட்டம் இதை உணரும் ஒரு நாள்.

    அன்புடன்
    அரசு

    ReplyDelete