Thursday, July 30, 2015

ரவிக்குமார் கவிதை



வானிலைச் செய்திகளுக்கும் 
விளையாட்டுச் செய்திகளுக்கும் இடையில் 

ஒரு இரவுக்கும்
இன்னொரு இரவுக்கும் இடையில் 

ஒருத்தனின் வாக்குறுதிக்கும்
ஒருத்தனின் வாக்குமூலத்துக்கும் இடையில் 

ஒரு கோரிக்கைக்கும் 
ஒரு நிராகரிப்புக்கும் இடையில் 

பிறந்த நாளுக்கும் 
நினைவுநாளுக்கும் இடையில் 

ஒரு நீதிமன்றத்துக்கும்
ஒரு சிறைச்சாலைக்கும் இடையில் 

அவர்களின் ஆர்ப்பரிப்புக்கும்
இவர்களின் அழுகைக்கும் இடையில் 

ஒரு மரணத்துக்கும்
ஒரு அஞ்சலிக்கும் இடையில் 

அந்தத் தலைவரது வருகைக்கும்
இந்தத் தலைவரது வருகைக்கும் இடையில்

ஒரு தோல்விக்கும்
ஒரு தேர்தலுக்கும்
இடையில் 

மௌனத்துக்கும் மௌனத்துக்கும் 
கண்ணீருக்கும் கண்ணீருக்கும் 
ரத்தத்துக்கும் ரத்தத்துக்கும் 
இடையில் இடையில் இடையில் 

இரவு முடிந்தது 
பொழுது விடிந்தது 
காலை ஏழுக்கு 
மீண்டும் இருண்டது 

கட்சிகளுக்குத் தேவை திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையங்கள் - ரவிக்குமார்



திறன் மேம்பாட்டுப் பயிற்சி என்றாலே அது வேலைதேடிக் கொண்டிருப்பவர்களுக்குத் தான் தேவை என்ற தவறான புரிதல் நம்மில் பலருக்கும் இருக்கிறது. அதனால்தான் அதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கோரிக்கை வைக்கிறோம். 

ஒவ்வொரு அரசியல் கட்சியும் ஒரு நிறுவனம் தான். அவற்றில் பல லட்சம் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஒரு அரசியல் கட்சியில் பணியாற்றுவதற்கான குறைந்தபட்ச திறன்களைப் பெற்றிருக்கிறார்களா ? என்று நாம் பார்ப்பதில்லை. பல கட்சிகளில் இரண்டாம் நிலையிலிருக்கும் தலைவர்களுக்கே தொடர்புத் திறன்  ( communicative skill ) இருப்பதில்லை. உள்ளாட்சி அமைப்புகள், சட்டமன்றம்,  பாராளுமன்றம் ஆகியவற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்படுகிற பலருக்கும் அந்த அவைகளில் பணியாற்றுவதற்கான குறைந்தபட்சத் திறன்கள்கூட இருப்பதில்லை. இதனால் அவர்கள் தற்சார்பு அற்றவர்களாக உள்ளனர். தற்சார்பற்றத் தொண்டர்களின் பெருக்கம் தனிநபர் வழிபாட்டுக்கும் , நெறியற்ற நடைமுறைகளுக்கும் இட்டுச் செல்கிறது. சுயநலம் கொண்ட அரசியல் கட்சிகளின் தலைமைகள் இந்தப் போக்கை ஊக்குவிக்கலாம். ஆனால் காலப்போக்கில் அதுவே அந்தக் கட்சிகளின் வீழ்ச்சிக்குக் காரணமாகிவிடும். 

" மூலதனம் என்பது உயிரற்ற உழைப்பு. அதுவொரு ரத்தக் காட்டேரியைப்போல உயிருள்ள உழைப்பை உறிஞ்சித்தான் உயிர்வாழமுடியும்" என கார்ல் மார்க்ஸ் குறிப்பிட்டது அரசியல் கட்சி என்னும் நிறுவனத்துக்கும்கூடப் பொருந்தும். திறனற்றத் தொண்டர்கள் மற்றவர்களை உறிஞ்சித்தான் வாழமுடியும். 


தமிழ்நாட்டில் இருக்கிற அரசியல் கட்சிகளின் முதன்மையான பிரச்சனைகளில் இதுவும் ஒன்று. இந்த சிக்கலைக் களைந்து தொண்டர்களின் திறன்களை வளர்த்தால் மட்டுமே இந்தக் கட்சிகளுக்கிருக்கும் தலைமைப் பஞ்சம் தீரும். 

ஒவ்வொரு கட்சியும் தமது தொண்டர்களுக்குத் தேவையான அடிப்படைத் திறன்களைக் கண்டறிந்து பயிற்றுவிக்க திறன் மேம்பாட்டு மையங்களைத் துவக்கவேண்டியது காலத்தின் கட்டாயம். 

Monday, July 27, 2015

யாக்கூப் மேமோனின் மரணதண்டனையை ரத்து செய்யவேண்டும் ! தமிழ் எழுத்தாளர்கள் ஊடகவியலாளர்கள் கூட்டறிக்கை

யாக்கூப் மேமோனின் மரணதண்டனையை ரத்து செய்யவேண்டும் !

தமிழ் எழுத்தாளர்கள் ஊடகவியலாளர்கள் கூட்டறிக்கை
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தமிழ் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்களாகிய நாங்கள் மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் தடா  நீதிமன்றத்தால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள யாக்கூப் மேமோனின் கருணை மனுவை ஏற்று பின்வரும் காரணங்களின் அடிப்படையில் அவருக்குத் தண்டனைக் குறைப்புச் செய்ய வேண்டுமென மாண்புமிகு குடியரசுத் தலைவர் அவர்களை வலியுறுத்துகிறோம். 

1. யாக்கூப் மேமோனின் தண்டனை தற்போது காலாவதியாகிப்போன தடா சட்டத்தின்கீழ் போலீஸாரால் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் விதிக்கப்பட்டுள்ளது. போலீஸாரிடம் அளிக்கும் வாக்குமூலத்தை வைத்து தண்டனை வழங்க வழிசெய்வது நீதிக்குப் புறம்பானது என்பதால்தான் தடா சட்டமே ரத்து செய்யப்பட்டது. 

2 மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் முதன்மைக் குற்றவாளிகளாகக் குறிப்பிடப்பட்ட தாவூத் இப்ராஹிமையோ டைகர் மேமோனையோ இந்திய அரசு இதுவரைக் கைதுசெய்யவில்லை. 

3. யாக்கூப் மேமோன் மனநிலைப் பிறழ்வு ( ஷிநீலீவீக்ஷ்ஷீஜீலீக்ஷீமீஸீவீணீ ) நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என மருத்துவர்கள் சான்றளித்துள்ளனர். அத்தகைய நோயாளிகளை தூக்கிலிடக்கூடாது என உச்சநீதிமன்றம் பல்வேறு தீர்ப்புகளில் வலியுறுத்தியுள்ளது. 

4. . யாக்கூப் மேமோன் சரணடைவதற்கு ஏற்பாடுசெய்த ஸிகிகீ உளவுப்பிரிவின் அதிகாரி காலஞ்சென்ற பி.ராமன் யாக்கூப் மேமோனுக்கு மரண தண்டனை விதிக்கக்கூடாது என எழுதியுள்ளார். 

5. இந்தியாவில் தூக்கு தண்டனை விதிக்கப்படுபவர்களில் சமூகத்தின் புறக்கணிக்கப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்தவர்களே அதிகம் என ஆய்வுகள் கூறுகின்றன. 

6. அண்மையில் இந்தியாவின் சட்ட ஆணையத்தின் உதவியோடு டெல்லி சட்டப் பல்கலைகழக மாணவர்கள் மேற்கொண்ட ஆய்வில் தூக்கு தண்டனைக் கைதிகளில் நான்கில் மூன்று பங்கினர் ஏழைகள் என்பது தெரியவந்துள்ளது. 

7. உலகம் முழுவதும் 140 நாடுகள் மரணதண்டனையை முற்றாகக் கைவிட்டுள்ளன. 

8. உலக நாடுகள் அனைத்தும் மரண தண்டனையைக் கைவிடவேண்டும் என 
ஐ. நா சபை வலியுறுத்திவருகிறது. 

9. சுமார் இருபது ஆண்டுகளாக சிறையிலிருக்கும் யாக்கூப் மேமோனைத் தூக்கிலிடுவது இயற்கை நீதிக்கு முரணானதாகும். 

10. இந்த மரண தண்டனையைக் கைவிடவேண்டுமென ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகளும்; மார்க்கண்டேய கட்ஜு, எச்.சுரேஷ்,கே.சந்துரு உள்ளிட்ட நீதிபதிகளும்; பாஜக, காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஏற்கனவே தங்களிடம் முறையீடு செய்துள்ளனர். 

தேசத்தின் மனசாட்சியாக விளங்கும் எழுத்தாளர்களின் குரலுக்கு மதிப்பளித்து மாண்புமிகு குடியரசுத் தலைவர் அவர்கள் யாக்கூப் மேமோனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையைக் குறைக்கவேண்டும் என வேண்டுகிறோம். 

இவண்

இந்திரா பார்த்தசாரதி - எழுத்தாளர்
ஞாநி- மூத்த பத்திரிகையாளர்
பேராசிரியர்  சுபவீ
பாலபாரதி- எழுத்தாளர், ச.ம.உ
ப்ரசன்னா ராமசாமி - நாடக இயக்குனர்
வெ.ஶ்ரீராம்- மொழிபெயர்ப்பாளர்
ரவிக்குமார்- எழுத்தாளர்
இளங்கோவன் - மூத்த பத்திரிகையாளர் 
இரா. நடராசன் - எழுத்தாளர்
ஜெயரஞ்சன் - பொருளாதார நிபுணர்
கவிதா முரளிதரன் - ஊடகவியலாளர் 
குமரேசன் - மூத்த பத்திரிகையாளர்
லக்ஷ்மி சரவணகுமார் - எழுத்தாளர் 
பனுவல் அமுதரசன் - இலக்கிய ஆர்வலர்
தமயந்தி - எழுத்தாளர் 
தளவாய் சுந்தரம் - எழுத்தாளர் 
இரா. முருகன் - எழுத்தாளர்
பெருந்தேவி- எழுத்தாளர்
மருதன்- எழுத்தாளர்
யுவன் சந்திரசேகர் - எழுத்தாளர் 
தியாகச் செம்மல் - ஊடகவியலாளர்
பேராசிரியர் டாக்டர் விஜய பாஸ்கர்
குமரன் வளவன் - நாடகக் கலைஞர் 
முரளி சண்முகவேலன்- ஆராய்ச்சி மாணவர்
கிராமியன் - எழுத்தாளர்
மனோன்மணி - எழுத்தாளர்
மணி மணிவண்ணன் - எழுத்தாளர் 
நெல்சன் சேவியர் - ஊடகவியலாளர் 
அ.ராமசாமி- பேராசிரியர் 
முனைவர் ம. இராசேந்திரன் - முன்னாள் துணைவேந்தர் 
கவின்மலர் - ஊடகவியலாளர்
ரவிகார்த்திகேயன்- எழுத்தாளர் 
பா. செயப்பிரகாசம்- எழுத்தாளர்
அய்யநாதன்- ஊடகவியலாளர் 
அபிமானி- எழுத்தாளர்
உ. நிர்மலாராணி - வழக்கறிஞர், எழுத்தாளர்

( கூட்டறிக்கை ஒருங்கிணைப்பு : ரவிக்குமார். அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவர்களிடம்o தொலைபேசி மூலம் ஒப்புதல் பெறப்பட்டது)

Sunday, July 26, 2015

யாக்கூப் மேமோனின் மரணதண்டனையை ரத்து செய்க!



யாக்கூப் மேமோனின் மரணதண்டனையை ரத்து செய்யவேண்டியது ஏன்? 
- ரவிக்குமார்
----------------------

1. யாக்கூப் மேமோனின் தண்டனை தற்போது காலாவதியாகிப்போன தடா சட்டத்தின்கீழ் போலீஸாரால் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் விதிக்கப்பட்டுள்ளது. போலீஸாரிடம் அளிக்கும் வாக்குமூலத்தை வைத்து தண்டனை வழங்க வழிசெய்வது நீதிக்குப் புறம்பானது என்பதால்தான் தடா சட்டமே ரத்து செய்யப்பட்டது. 

2 மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் முதன்மைக் குற்றவாளிகளாகக் குறிப்பிடப்பட்ட தாவூத் இப்ராஹிமையோ டைகர் மேமோனையோ இந்திய அரசு இதுவரைக் கைதுசெய்யவில்லை. 

3. யாக்கூப் மேமோன் மனநிலைப் பிறழ்வு ( Schizophrenia ) நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என மருத்துவர்கள் சான்றளித்துள்ளனர். அத்தகைய நோயாளிகளை தூக்கிலிடக்கூடாது என உச்சநீதிமன்றம் பல்வேறு தீர்ப்புகளில் வலியுறுத்தியுள்ளது. 

4. இந்தியாவில் தூக்கு தண்டனை விதிக்கப்படுபவர்களில் சமூகத்தின் புறக்கணிக்கப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்தவர்களே அதிகம் என ஆய்வுகள் கூறுகின்றன. 

5.  அண்மையில் இந்தியாவின் சட்ட ஆணையத்தின் உதவியோடு டெல்லி சட்டப் பல்கலைகழக மாணவர்கள் மேற்கொண்ட ஆய்வில் தூக்கு தண்டனைக் கைதிகளில் நான்கில் மூன்று பங்கினர் ஏழைகள் என்பது தெரியவந்துள்ளது. 

6.  உலகம் முழுவதும் 140 நாடுகள் மரணதண்டனையை முற்றாகக் கைவிட்டுள்ளன. 

7. உலக நாடுகள் அனைத்தும் மரண தண்டனையைக் கைவிடவேண்டும் என 
ஐ. நா சபை வலியுறுத்திவருகிறது. 

8. சுமார் இருபது ஆண்டுகளாக சிறையிலிருக்கும் யாக்கூப் மேமோனைத் தூக்கிலிடுவது இயற்கை நீதிக்கு முரணானதாகும். 

9. இந்த மரண தண்டனையைக் கைவிடவேண்டுமென ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகளும்; மார்க்கண்டேய கட்ஜு, எச்.சுரேஷ்,கே.சந்துரு உள்ளிட்ட நீதிபதிகளும்; பாஜக, காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் குடியரசுத் தலைவரை வலியுறுத்தியுள்ளனர். 

யாக்கூப் மேமோனின் தூக்குதண்டனையை ரத்துசெய்யும்படிக் கோருவது ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவர்களின் கடமை. அந்தக் கடமையைச் செய்ய தமிழ்நாட்டு அறிவுலகம் முன்வரவேண்டும் என ஒரு எழுத்தாளனாகவும் மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் ( PUCL) முன்னாள் தலைவர் என்ற முறையிலும் கேட்டுக்கொள்கிறேன். 



Saturday, July 25, 2015

பிரியச் சுமை



அப்பாவின் நினைவு ஏனோ இன்று என்னை மிகவும் அலைகழிக்கிறது. இரவு உட்கார்ந்து எழுந்தபோது என் முதுகுத் தண்டில் திடீரென ஏற்பட்ட வலியினால் நிமிர்ந்து நடக்க சற்று சிரமப்பட்டபோதுதான் அப்பாவின் நினைவு வந்தது. அவரும் இப்படித்தான் முதுகுத் தண்டு வலியால் கஷ்டப்பட்டார். 

ஆஸ்துமாவில் அவர் பட்ட துன்பம் இப்போது நினைத்தாலும் உடம்பு சிலிர்க்கிறது. அந்த சமயங்களில் அவரோடு இரவெல்லாம் மருத்துவமனைகளில் கிடந்தேன். மூச்சு இளைக்கும்போது என் தோளை ஒரு கையால் இறுகப் பிடித்துக்கொள்வார். டாக்டரில்லாத நள்ளிரவுகளில் நர்ஸிடம் மன்றாடி அவருக்கு ஊசியோ மருந்தோ கொடுக்கச் செய்வேன். எப்போது அவருக்கு இயல்புநிலை திரும்பும் எனத் தெரியாது. வீட்டில் இருப்பதைவிட மருத்துவமனையில் இருப்பதே நல்லது எனத் தோன்றும். கிராமத்தில் எங்கள் வீட்டுக்கும் மருத்துவமனைக்கும் இரண்டு கிலோ மீட்டருக்குமேல் தொலைவு. இரவில் மூச்சுத் திணறல் வந்தால் அப்பாவை சைக்கிள் கேரியரில் வைத்து தள்ளிக்கொண்டே போவேன். வழிநெடுக அழுதுகொண்டே வந்தேன் என்பது மருத்துவமனையை நெருங்கும்போதுதான் எனக்கே உறைக்கும். ' பணத்தால் வாழ்க்கையை வாங்க முடியாது' என பாப் மார்லி சொன்னதாகப் படித்திருக்கிறேன். ஆனால் பணத்தால் மருந்து மாத்திரைகளை வாங்கலாம். அப்பா நோயில் மிகவும் துடித்த காலங்களில் நான் மாணவன். அவருக்கு நல்ல மருத்துவ வசதிகளைச் செய்திருந்தால் மேலும் சில ஆண்டுகள் வாழ்ந்திருப்பார். 

நான் வங்கியில் வேலையில் சேர்ந்து சற்றே நல்ல நிலைக்கு வந்தபோது அப்பா போய்ச் சேர்ந்துவிட்டார். என் அம்மாவிடமும், அப்பாவிடமும் காட்டாத பிரியத்தைத்தான் யாரிடம் காட்டுவதென்று தெரியாமல் இப்போது சுமந்துகொண்டு அலைகிறேனா தெரியவில்லை. 

Thursday, July 23, 2015

தோழர் ஆர். நல்லகண்ணு நினைவுகூர்ந்த பாய்ச்சலூர் பதிகம்



நேற்று ( 22.07.2015) மாலை சென்னயில் நடைபெற்ற ஆணவக் கொலைக்கு எதிரான கருத்தரங்கில் தோழர் ஆர். நல்லகண்ணு அவர்கள் பேசும்போது நான் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவனாக இருந்தபோது முதன்முதல்லாக அவரைச் சந்தித்த நிகழ்வை நினைவுக்கூர்ந்தார்.

" தோழர் ரவிக்குமாரை அவர் மாணவராக இருந்தபோதே எனக்குத் தெரியும். சிதம்பரத்தில் விவசாயத் தொழிலாளர் சங்க மாநாடு நடந்தபோது நான் ஒருவார காலம் அங்கு தங்கியிருந்தேன். அப்போது அவர் என்னை வந்து பார்ப்பார். பிறகு தோழர் மகேந்திரனோடு தொடர்பில் இருந்தார். அதற்குப் பின்னால் நிறப்பிரிகை என்று ஒரு பத்திரிகை நடத்தினார். அதில் உத்தரநல்லூர் நங்கை என்பவர் பாடிய பாய்ச்சலூர் பதிகம் என்பதை வெளியிட்டிருந்தார்கள். அந்தப் பாடல் இப்போதும் பொருத்தமானது. தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண் ஒருத்தி பாய்ச்சலூர் என்ற கிராமத்தினரைப் பார்த்துப் பாடுவதாக அமைந்தது அந்தப் பதிகம். மனிதர்களில் பேதம் பார்க்கிறீர்களே உங்கள் வேதம் எங்கே போனது? மரங்களை எரித்தால் ஒவ்வொரு மரம் ஒவ்வொரு வாசனையைத் தருவதுபோல மனிதர்களை எரித்தால் வேறு வேறு வாசம் வீசுமா? " என்றெல்லாம் அந்தப் பாடலில் வரும். " என்று தோழர் ஆர்.என்.கே பேசினார். 

1970 களின் பிற்பகுதியில் சிதம்பரத்தில் நடைபெற்ற விவசாயத் தொழிலாளர் சங்க மாநாட்டின்போதுதான் அவரைப் போய் நான் பார்த்தேன். அதுவரை திராவிடக் கட்சிகளின் தலைவர்களையே நெருங்கிப் பார்த்திருந்த எனக்கு அவரது எளிமை வியப்பளித்தது. அதன் தொடர்ச்சியாக சில நாட்கள் AISF அமைப்புடன் தொடர்பில் இருந்தேன். தோழர் சி. மகேந்திரன் அப்போது அந்த அமைப்புக்குப் பொறுப்பாக இருந்தார். அதைத்தான் தோழர் ஆர்.என்.கே குறிப்பிட்டார். 

1995 ல் வெளிவந்த நிறப்பிரிகை இலக்கிய இணைப்புக்காக பொ.வேல்சாமி பாய்ச்சலூர் பதிகம் குறித்து ஒரு முன்னுரையை எழுதி அந்தப் பதிகத்தையும் அனுப்பினார். 500 பிரதிகள் மட்டுமே அச்சிடப்பட்ட அந்த இலக்கிய இணைப்பை தோழர் ஆர்.என்.கே படித்திருப்பதோடு அதைத் துல்லியமாக நினைவில் வைத்திருப்பது அரசியல் தலைவர்களில் அவர் வேறுபட்டவர் என்பதற்கு இன்னொரு சான்று. 

மரண தண்டனை வேண்டும் என்போர் படிக்கவேண்டிய நாவல் -ரவிக்குமார்



க்ரியா வெளியிட்டிருக்கும் விக்தோர் ஹ்யூகோவின் ' மரண தண்டனைக் கைதியின் இறுதி நாள்' என்ற நூலை சற்றுமுன்னர்தான் படித்துமுடித்தேன். தூக்கிலிடப்பட்ட ஒருவனின் சடலத்தைச் சுமந்துகொண்டிருப்பதுபோல தாங்கமுடியாத பாரத்தில் மனம் அழுந்துகிறது. 

மரணதண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவனின் கூற்றாக எழுதப்பட்டிருக்கும் நூல் இது. "மனிதர்கள் அனைவரும் தொடர்ந்து ஒத்திப்போடப்பட்ட மரணதண்டனை விதிக்கப்பட்டவர்கள்தான்" என்பதால் இந்த நூலை எழுதுவதற்கு ஒருவர் மரணதண்டனைக் கைதியாக இருக்கவேண்டும் என்ற தேவை இல்லை. 

மரணதண்டனைக் கைதிகளை இந்த உலகம் " காட்சிக்கு வைக்கப்பட்ட மிருகத்தைப் பார்ப்பது" போலத்தான் பார்க்கிறது. அவர்களுக்குக் கருணைகாட்டக்கூடாது என வாதிடுவோரின் கண்கள் கொலைவெறியோடு மின்னுவதை தொலைக்காட்சி விவாதங்களின்போது நான் கவனித்திருக்கிறேன். 

இந்த நாவலின் நாயகன் யார் அவன் எதற்காகத் தண்டிக்கப்பட்டான் என்பதை இதன் ஆசிரியர் விவரிக்கவே இல்லை. அவனுக்கு ஒரு மனைவியும் மூன்றுவயதில் ஒரு மகளும் இருக்கின்றனர் என்பது மட்டும் தான் சொல்லப்பட்டுள்ளது. தண்டனை விதிக்கப்பட்டதிலிருந்து அது நிறைவேற்றப்படும்வரையிலான ஆறுவார காலத்தை இந்த நாவல் பேசுகிறது. அந்தக் காலத்தில் ஒரு கைதியின் மனோநிலை எப்படியெல்லாம் அலைக்கழிகிறது என்பதை மிகவும் நுட்பமாக ஆனால் மனிதாபிமான பாசாங்குகள் எதுவுமில்லாமல் விக்தோர் ஹ்யூகோ வாசகர் முன் வைத்திருக்கிறார். 

கதையின் நாயகன் தனது மகளை நினைத்துப் பேசுவதாக அமைக்கப்பட்டுள்ள இரண்டு பக்கங்கள் நெகிழச்செய்கின்றன. " அனைவரும் எனக்காக வருந்துகிறார்கள். அவர்கள் என்னைக் காப்பாற்ற முடியும்; இருந்தாலும் அவர்கள் என்னைக் கொல்லப்போகிறார்கள். இது உனக்குப் புரிகிறதா மரி? சிறிதும் தயங்காமல் ஒரு சடங்காக என்னைக் கொல்லப் போகிறார்கள். பொதுநலத்திற்காக!" என்ற வரிகள் மரண தண்டனை எப்படியொரு பொதுநலச் சடங்காக மாற்றப்பட்டிருக்கிறது என்பதைக் காட்டுகின்றன. 

அணுசக்தி குறித்த விவாதங்கள் முனைப்புபெற்றிருந்த போது அபாயம் நாவலையும், நூல்களுக்குத் தடைவிதிக்கப்பட்டபோது ஃபாரன்ஹீட் நாவலையும் வெளியிட்ட க்ரியா மரணதண்டனை பற்றிய சர்ச்சை உச்சமடைந்துள்ள சூழலில் இந்த நாவலை வெளியிட்டிருக்கிறது. 

இந்த நாவலை பிரெஞ்சு மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்திருக்கிற குமரன் வளவன் இன்றைய சூழலோடு இந்த நாவலைத் தொடர்புபடுத்தி ஒரு பின்னுரையையும் எழுதியிருக்கிறார். 

மரணதண்டனை வேண்டாம் என்பவர்களைவிட அந்தத் தண்டனை வேண்டும் என்பவர்களே இந்த நாவலைப் படிக்கவேண்டும்.

Tuesday, July 21, 2015

தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் ஆண்டறிக்கை



தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் ஆண்டுதோறும் அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும். அந்த அறிக்கையைப் பாராளுமன்றத்தில் விவாதிக்கவேண்டும் என்பது விதி. ஆணையம் உருவாக்கப்பட்டு இதுவரை நான்கு ஆண்டறிக்கைகள் மட்டும் தான் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கடைசியாகத் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை மே 2007 முதல் மே 2010 வரையிலான காலத்துக்கானது. 2014 பிப்ரவரியில்தான் அந்த அறிக்கை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 

ஆணையத்தின் ஐந்து மற்றும் ஆறாவது அறிக்கைகள் குடியரசுத் தலைவரிடம் அளிக்கப்பட்டும் இதுவரை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. 

ஆணையத்தின் அறிக்கைகளை உடனடியாகப் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு இடதுசாரிக் கட்சிகளாவது வலியுறுத்துவர்களா?

மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதில் மத்திய அரசுக்கே கூடுதல் பொறுப்பு - ரவிக்குமார்


தமிழ்நாட்டில் மதுவிலக்கை வலியுறுத்துகிற அரசியல் தலைவர்களில் பெரும்பாலோர் மாநில அரசை மட்டுமே வலியுறுத்துகின்றனர். மத்திய அரசுக்கு இதில் இருக்கும் பொறுப்பை அவர்கள் சுட்டிக்காட்டுவதில்லை. உண்மையில் மத்திய அரசுக்குத்தான் இதில் கூடுதல் பங்கிருக்கிறது. 

மதுவிலக்கு குறித்த கோரிக்கை தமிழ்நாட்டின் முதன்மையான அரசியல் பிரச்சனையாக மாறியிருக்கும் இந்தச் சூழலில் மதுவிலக்கு விசாரணைக்குழு 1955 ஆம் ஆண்டு மத்திய அரசிடம் சமர்ப்பித்த அறிக்கையில் இடம்பெற்ற சில முக்கியமான பரிந்துரைகள் கவனத்துக்குரியவையாக உள்ளன. அவற்றை இங்கே தருகிறேன்: 

 
1. மதுவிலக்கு என்பது இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் ஒரு அங்கமாகக் கருதப்படவேண்டும்
 
2. நாடுதழுவிய மதுவிலக்கை அமல்படுத்துவதற்கான தேதியாக 1,ஏப்ரல் 1958 குறிக்கப்படவேண்டும்.
 
3.மதுவிலக்கை சில பகுதிகளில் அமல்படுத்தியிருக்கும் மாநிலங்களில் 1956 ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் உணவகங்கள், மதுக்கூடங்கள்,கேளிக்கை விடுதிகள்,  சினிமா தியேட்டர்கள், விருந்துகள் ஆகியவற்றில் மது அருந்துவது தடைசெய்யப்படவேண்டும்.
 
4.ஒவ்வொரு மாவட்டத்திலும், கிராமங்களிலும் மதுவிலக்குக் கமிட்டிகள் அமைக்கப்படவேண்டும்
 
5.மது, போதைப்பொருள் விற்பனை மூலம் வசூலிக்கப்படும் வரி என்பது மிகவும் பிற்போக்கானது. அப்படி வரி வசூலிக்க எந்தவொரு நியாயமும் இல்லை. எனவே அத்தகைய வரிகள் முற்றாக ஒழிக்கப்படவேண்டும்.
 
6. மதுவிற்பனை மூலமான வரி வருவாயை நம்பியிருக்கும் மாநிலங்களுக்கு குறிப்பீட்ட காலம் வரை மத்திய அரசு நிதி உதவி அளிக்கவேண்டும்
 
7. மத்திய அரசு மதுவிலக்குதான் தேசியக் கொள்கை என்பதைத் தெளிவாக அறிவிக்கவேண்டும்.

Sunday, July 19, 2015

குடி என்பது பொருளாதார பிரச்சனை- ரவிக்குமார்



( 19.07.2015 அன்று நடைபெற்ற விசிக மாநில செயற்குழுவில் பேசியதன் ஒரு பகுதி) 

செப்டம்பர் 17 முதல் மதுஒழிப்புப் பிரச்சாரம் மேற்கொள்வது எனத் தீர்மானம் போட்டிருக்கிறோம். குடிப்பதை நாம் ஒழுக்கப் பிரச்சனையாகப் பார்க்கவில்லை. குடிப்பவர்கள் கெட்டவர்கள் குடிக்காதவர்கள் நல்லவர்கள் என்று கருதவில்லை. குடி முதன்மையாக ஒரு பொருளாதாரப் பிரச்சனை. ஒடுக்கப்பட்ட மக்கள் உழைத்து சம்பாதிக்கும் பணம் அவர்களிடம் மிச்சம் மீதி ஏதுமில்லாமல் இந்த மதுவால் உறிஞ்சப்படுகிறது. கிராமங்களில் தலித்துகளில்தான் அதிகம் விதவைகள் இருக்கிறார்கள், பெண்கள் குடும்பத் தலைவராக இருக்கும் குடும்பங்கள் தலித்துகளில் அதிகம். அதற்கு முக்கியமான காரணம் குடிதான். தலித் ஆண்கள் குடித்தே குறை வயதில் செத்துப்போகிறார்கள். 

நாடு முழுவதும் மதுவிலக்கைக் கொண்டுவரவேண்டும் என்பதுதான் அம்பேத்கரின் நோக்கம். அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 47 அதைத்தான் வலியுறுத்துகிறது. அந்த நோக்கத்தை நிறைவேற்ற மத்திய அரசு முயற்சித்தது. இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்திலும் மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்திலும் அதற்காக நிதி ஒதுக்கப்பட்டது. மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ' மதுவிலக்கு விசாரணைக் குழுவின்' பரிந்துரைகளின்படி திட்டங்கள் தயாரிக்கப்பட்டு 1958 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதிக்குள் நாடு முழுவதும் பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்த இலக்கு நிர்ணயித்தார்கள். ஆனால் அது கைகூடவில்லை. மீண்டும் நீதிபதி தேக் சந்த் தலைமையில் ஒரு குழுவை நியமித்தார்கள். அந்தக் குழு நாடெங்கும் ஆய்வு செய்து சுமார் 1200 பக்கங்கள் கொண்ட அறிக்கையை அளித்தது. அதன் அடிப்படையில் 1970 ஆம் ஆண்டுக்குள் பூரண மதுவிலக்கு என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் வரி வருவாய் வேண்டும் என்ற காரணத்தைச் சொல்லி பல்வேறு மாநில அரசுகளும் கள், சாராயக் கடைகளைத் திறந்தன. தமிழ்நாட்டில் அப்போது ஆட்சியிலிருந்த திமுக அரசு பல்வேறு அரசியல் தலைவர்களின் எதிர்ப்பையும் மீறி சாராயக் கடைகளையும் கள் கடைகளையும் திறந்தது. 

மத்திய அரசால் இப்போது வெளியிடப்பட்டிருக்கும் சமூக பொருளாதார கணக்கெடுப்பின் விவரங்களைப் பார்த்தால் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் தலித் மக்களிடம் இருந்த நிலம்கூட இப்போது இல்லை எனத் தெரிகிறது. அதற்குக் காரணம் குடிதான். சொத்தை இழந்து சுய மரியாதையை இழந்து தலித் மக்கள் இப்படி அல்லல்படுவதற்கு முக்கிய்ச் காரணம் இந்தக் குடிதான். 

தலித்துகளை ஓட்டாண்டிகளாக்கிய இந்த மது தான் இடைநிலைச் சாதிகளை செல்வந்தர்களாக்கியிருக்கிறது. கள்ளச் சாராய விற்பனையானாலும் சரி நல்ல சாராய விற்பனையானாலும் சரி அதனால்
பொருளாதார லாபம் அடைகிறவர்கள் தலித் அல்லாதவர்கள்தான். ஆனால் அதனால் அதிகம் பாதிக்கப்படுவதோ தலித் மக்கள்தான். எனவே இந்தப்
பிரச்சாரத்தை கிராமங்கள்தோறும் நாம் முன்னெடுத்துச் செல்லவேண்டும். 

மது ஒழிப்புப் பிரச்சார இயக்கம்



இன்று (19.07.2015) சென்னை தாம்பரத்தில் நடைபெற்ற விசிக மாநில செயற்குழுவில் அறிவிக்கப்பட்ட முடிவுகள்:

1. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாக அமைப்பில் மாவட்டச் செயலாளர் பொறுப்பு நீக்கப்பட்டு சட்டமன்றத் தொகுதிச் செயலாளர் என்னும் புதிய பொறுப்பு உருவாக்கப்படுகிறது. புதிய பொறுப்புக்கு நிர்வாகிகள் அறிவிக்கப்படும்வரை தற்போதுள்ள மாவட்டச் செயலாளர்கள் நீடிப்பார்கள். 

2. தமிழ்நாட்டில் அரசு மதுக்கடைகளை மூட வலியுறுத்தி தந்தை பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17 முதல் காந்திஜி பிறந்த நாளான அக்டோபர் 2 வரை விசிக சார்பில் பிரச்சார இயக்கம் மேற்கொள்ளப்படும். 

3. ஆகஸ்டு 17 ஆம் தேதி சென்னை காமராஜர் அரங்கில் ' தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி' என்ற தலைப்பில் மாநாடு நடைபெறவுள்ளது. தோழமைக் கட்சிகளின் தலைவர்கள் அதில் பங்கேற்கின்றனர். 

Saturday, July 18, 2015

ரவிக்குமார் கவிதை

முள் முடிக்காக 
முகத்தில் வழியும் குருதிக்காக அறையப்பட்ட ஆணிகளுக்காக 
கண்ணீர் பெருக்கவில்லை 
வலியை எண்ணி 
மனம் துடிக்கவில்லை 

உனக்கும் தெரியும்
உயிர்த்தெழுதல் நிச்சயம் என்பது  

நிக்கனோர் பர்ரா கவிதைகள்


தமிழில்: ரவிக்குமார் 
~~~~~~~~~~~
1.

தீப்பற்றிக்கொண்டால் மின்தூக்கிகளைப் பயன்படுத்தாதீர்கள்
படிக்கட்டுகளைப் பயன்படுத்துங்கள்
வேறு அறிவிப்பு செய்யப்படாதவரை

புகை பிடிக்கக்கூடாது
குப்பை போடக்கூடாது
மலங்கழிக்கக்கூடாது
வானொலிகேட்கக்கூடாது
வேறு அறிவிப்பு செய்யப்படாதவரை

ரயில் ஸ்டேஷனில் நிற்கும் நேரம் தவிர
ஒவ்வொருமுறை பயன்படுத்தியதும் டாய்லெட்டில் தண்ணீர்விடுங்கள்
அடுத்துவரும் பயணியைப்பற்றி யோசியுங்கள்

கிறித்தவ படைவீரர்களே முன்னேறுங்கள்
உலகத் தொழிலாளர்களே ஒன்றுசேருங்கள்
நாம் இழப்பதற்கு எதுவுமில்லை உயிரைத்தவிர
புகழ் உரித்தாகட்டும் தந்தைக்கு 
புகழ் உரித்தாகட்டும் தனயனுக்கு
புனித ஆவிக்கு 
வேறு அறிவிப்பு செய்யப்படாதவரை

கூடவே 
தெள்ளத் தெளிவான பின்வரும் உண்மைகளும் இருக்கின்றன 
எல்லா மனிதர்களும் சமமாகவே படைக்கப்பட்டனர்
படைத்தவன் அவர்களுக்கு பிரிக்கமுடியாத சில உரிமைகளைத் தந்திருக்கிறான் 
அவற்றுள் சில: 
உயிர், சுதந்திரம், சந்தோஷமான வாழ்க்கை 
இறுதியாக - 
இரண்டும் இரண்டும் நான்கு
வேறு அறிவிப்பு செய்யப்படாதவரை 

2.

வதைப்பதென்றால் ரத்தம் சிந்தவைக்க வேண்டுமென்பது அவசியமில்லை
உதாரணத்துக்கு 
ஒரு அறிவுஜீவியைப் பிடியுங்கள்
அவரது கண்ணாடியை
ஒளித்துவைத்துவிடுங்கள் 

ரவிக்குமார் கவிதை


இந்த யுகத்தின் 
மிகக் கடினமான வேலை
கைபேசியில் 
எண்களை சேமிப்பது 

எந்தக் குறியீட்டில்
எந்த எண்ணை சேமிப்பது
கொடுத்த குறியீட்டை 
எப்படி நினைவில் வைத்திருப்பது

*
எல்லா கைபேசிகளிலும் இருக்கின்றன
பெயரற்ற எண்கள்

*
உங்கள் அழைப்பு காத்திருப்பில் உள்ளது 
என்பதை காலர் ட்யூனாக வைத்தாள் அவள்

வாடிக்கையாளர் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளார் என்பதை காலர் ட்யூனாக வைத்தான் இவன் 

Friday, July 17, 2015

ரவிக்குமார் கவிதை

பகலில் எரிந்துகொண்டிருக்கும் 
தெருவிளக்குபோல்
இவன் நேசம்

நாய்க்குட்டிக்கு வைக்கும் சோற்றை
கோழிகள் தின்றுவிடுகின்றன 
என்கிறாய் நீ

காக்கை வராததால் 
விரதத்தோடு காத்திருக்கிறேன் 
என்கிறான் இவன் 

ரவிக்குமாரின் நூல்கள்

 


 

கட்டுரைத் தொகுப்புகள்


1.கண்காணிப்பின் அரசியல்விடியல் பதிப்பகம், 1995

2.கொதிப்பு உயர்ந்துவரும , காலச்சுவடு, 2001

3.கடக்க முடியாத நிழல்,காலச்சுவடு,2003

4.மால்கம் எக்ஸ்,காலச்சுவடு,2003

5.வன்முறை ஜனநாயகம்தலித் வெளியீடு, 2004

6.சொன்னால் முடியும், விகடன்,2007

7.இன்றும் நமதே, விகடன்,2008

8.சூலகம், உயிர்மை, 2009

9.கற்றனைத்தூறும், உயிர்மை, 2009

10.பிறவழிப் பயணம், உயிர்மை,2010

11.பாப் மார்லிஉயிர்மை, 2010

12.அண்டை அயல் உலகம், உயிர்மை,2010

13.ஆள்வதன் அரசியல்உயிர்மை, 2010

14.தமிழராய் உணரும் தருணம்ஆழி பதிப்பகம், 2010

15.துயரத்தின்மேல் படியும் துயரம்ஆழி பதிப்பகம்,2010

16.காற்றின் பதியம், மணற்கேணி,2010

17.கடல்கொள்ளும் தமிழ்நாடு,மணற்கேணி,2010

18. மீளும் வரலாறுஉலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்,2010

19.காணமுடியாக் கனவுஆழி பதிப்பகம், 2011

20.சொல்லும் செயல்மணற்கேணி, 2011

21.அ-சுரர்களின் அரசியல்,மணற்கேணி,2014

 

கவிதை

1.அவிழும் சொற்கள்உயிர்மை, 2009

2.மழை மரம், க்ரியா,2010

 

சிறுகதை

1.கடல் கிணறு, மணற்கேணி,2014

 

மொழிபெயர்ப்பு

1.உரையாடல் தொடர்கிறது, விடியல்,1995

2.கட்டிலில் கிடக்கும் மரணம்,மருதம்,2002

3.வெளிச்சமும் தண்ணீர்மாதிரிதான்,தலித் ,2003

4.பணிய மறுக்கும் பண்பாடு,காலச்சுவடு,2003

5.வரலாறு என்னும் கதை, மணற்கேணி,2011

6.வலசைப் பறவை, மணற்கேணி,2011

7.அதிகாரத்திடம் உண்மையைப் பேசுதல்,மணற்கேணி,2011

8.மாமிசம்,மணற்கேணி,2014

9.அதிகாரத்தின் மூலக்கூறுகள், மணற்கேணி,2014

10.வெள்ளை நிழல் படியாத வீடு, மணற்கேணி,2014

11.குரல் என்பது மொழியின் விடியல்,மணற்கேணி,2014

 

ஆங்கிலம்

Venomous Touch,Samya,2010

 

தொகுப்புகள்

1.தலித் கலை இலக்கியம் அரசியல்தலித் கலைவிழாக்குழு,1996

2.தலித் என்னும் தனித்துவம், தலித் வெளியீடு ,1998

3.அயோத்திதாச பண்டிதர் சிந்தனைகள்தொகுதிகள், தலித் சாகித்ய அகாடமி,1999

4.ரெட்டைமலை ஸ்ரீனிவாசன், தலித் சாகித்ய அகாடமி , 1999

5. தலித் காலம்தலித் வெளியீடு,1998

6.மிகைநாடும் கலை,காலச்சுவடு,2003

7.தொல்.திருமாவளவன் எழுத்துகள், 17 தொகுதிகள்,கரிசல்,2008

8.ஒடுக்கப்பட்ட இந்துக்கள், கரிசல்,2008

9.எங்கள் காலத்தில்தான் ஊழிநிகழ்ந்தது, மணற்கேணி,2010

10.நூர்ந்தும் அவியா ஒளி,மணற்கேணி,2010

11.சுவாமி சகஜானந்தா, மணற்கேணி,2010

12.எல்.இளையபெருமாள், மணற்கேணி,2010

13.பள்ளிப்பருவம், மணற்கேணி,2014

14.நூல் ஏணி,மணற்கேணி,2014

 

ஆங்கில தொகுப்புகள்

1.We the Condemned, PUCL,1998

2.Waking is another dream, Navayana,2011

3.Tamil Dalit writing,Oxford,2012

 

 

 

Wednesday, July 15, 2015

தலித்துகளுக்கும் முஸ்லிம்களுக்கும் தொகுதி மறுசீரமைப்பில் நடந்த அநீதி! -ரவிக்குமார்


இந்தியா சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு தொகுதி மறுசீரமைப்பு நான்குமுறை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. 1952,1963,1973,2002 ஆகிய ஆண்டுகளில் தொகுதி மறுசீரமைப்பு ஆணையங்கள் அமைக்கப்பட்டு தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டது.

வாக்காளர்களின் எண்ணிக்கையை சமச்சீராக வைப்பதற்கும், தொகுதிகளின் எல்லைகளை வரையறுப்பதற்கும் தொகுதிகளின் எண்ணிக்கையை முடிவுசெய்வதற்கும் இந்த மறுசீரமைப்புப் பணி மேற்கொள்ளப்படுகிறது. அத்துடன் தனித் தொகுதிகளை சுழற்சி முறையில் தீர்மானிப்பதற்கும் இது தேவைப்படுகிறது. தொகுதிகளின் எல்லைகள் தீர்மானிக்கப்பட்டு வாக்காளர்களின் எண்ணிக்கையும் முடிவுசெய்யப்பட்ட பின்னர் எந்தெந்த தொகுதிகளில் எஸ்சி/எஸ்டி வாக்காளர்கள் அதிகம் இருக்கிறார்களோ அவை தனித் தொகுதிகள் என அறிவிக்கப்படும்.

ஒரே தொகுதி மீண்டும் மீண்டும் தனித் தொகுதியாக இருந்தால் அங்கிருக்கும் பிற சமூகத்தினர் போட்டியிட வாய்ப்பில்லாமல் போய்விடும் என்பதால் மேலிருந்து கீழ் என்ற அணுகுமுறையில் தனித் தொகுதிகள் முடிவுசெய்யப்படுகின்றன. அதனால்  எஸ்சி/எஸ்டி வாக்காளர்கள் அதிகம் உள்ள தொகுதிகள் முதலில் தனித் தொகுதிகளாக இருந்தால் அவை மாற்றப்பட்டு அதற்கு அடுத்து அதிகம் உள்ள தொகுதிகள் தனித் தொகுதிகளாக்கப்படுகின்றன.

இந்த சுழற்சி முறையில் சில நல்ல அம்சங்கள்  இருந்தபோதிலும் எஸ்சி / எஸ்டி மக்களுக்குக் கெடுதல்களும் உள்ளன. இந்தியாவில் உள்ள பாராளுமன்ற சட்டமன்றத் தொகுதிகளில் எஸ்சி/எஸ்டி வாக்காளர்கள் 50% க்கும் கூடுதலாக இருப்பதென்பது மிகவும் அரிதான ஒன்றாகும். கணிசமான அளவில்
அவர்கள் இருக்கும் தொகுதிகளிலேயே அவர்களது வாக்குகளைவிட பிற சாதியினரின் வாக்குகள்தாம் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கின்றன. அப்படியான சூழலில் அவர்கள் மிகவும் சிறுபான்மையினராக இருக்கும் தொகுதிகள் தனித் தொகுதிகள் ஆக்கப்பட்டால் அங்கு அவர்களது வாக்குகளுக்கு மதிப்பு மிக மிகக் குறைவாகிவிடுகிறது. அங்கெல்லாம் பிற சாதியினரின் கையாட்களே வெற்றிபெற முடியும். இது தனித் தொகுதி முறையையே கேலிக்கூத்தாக்கிவிடுகிறது.

கடந்தமுறை தொகுதி மறுவரையறை செய்யப்பட்டபோது அதற்கான குழுவில் இடம்பெற்றிருந்த பெரிய கட்சிகளின் பிரதிநிதிகள் தமக்கு ஏற்றபடி தொகுதிகளை வரையறுத்துவிட்டார்கள். தனித் தொகுதிகளைத் தீர்மானிப்பதிலும்கூட எந்தவொரு தர்க்கமும் பின்பற்றப்படவில்லை. இதில் மணிசங்கர் அய்யர் செய்த குளறுபடிகள் ஏராளம். அவரால்தான் சிதம்பரம் பாராளுமன்ற தனித்தொகுதி கடலூர், பெரம்பலூர், அரியலூர் என மூன்று மாவட்டங்களை உள்ளடக்கியதாக இருக்கிற அவலம் ஏற்பட்டது. தலித் கட்சிகள் அதைப்பற்றிப் போதிய அக்கறை காட்டி கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்திருந்தால் இந்த நிலையை மாற்றியிருக்கலாம்.

இந்த மறுசீரமைப்பில் இன்னொரு சதித்திட்டமும் நிறைவேறியிருக்கிறது. முஸ்லிம்கள் கணிசமாக இருக்கும் தொகுதிகளைத் திட்டமிட்டு தனித் தொகுதிகளாக்கியிருக்கிறார்கள். அதன்மூலம் அங்கெல்லாம் முஸ்லிம்கள் தமக்கு சீட் கேட்கும் வாய்ப்பைக்கூட இழந்துவிட்டனர்.

2002 ஆம் ஆண்டு மறுசீரமைப்பு சட்டத்தில் திருத்தம்கொண்டுவந்த மத்திய அரசு 2026 வரை தொகுதி மறுசீரமைப்பு இல்லை எனவும் அதற்கு அடுத்ததாக வரும்
மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் அடுத்த மறுசீரமைப்பு ஆணையம்
அமைக்கப்படும் எனவும் தெரிவித்துவிட்டது. அதாவது 2031 மக்கள்ததொகைக் கணக்கெடுப்புக்குப் பின்னர்தான் இனி தொகுதி
மறுவரையறை செய்யப்படும். இது மிகப்பெரிய அநீதியாகும். பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தொகுதிகள் சீரமைக்கப்பட்டால்தான் வாக்காளர்களின் எண்ணிக்கை சமச்சீராக இருக்கும். இப்போதே ஒரு பாராளுமன்றத் தொகுதியில் 10 லட்சம் வாக்காளர்கள் இன்னொரு தொகுதியில் 15 லட்சம் வாக்காளர்கள் இருக்கின்றனர். இன்னும் இருபது ஆண்டுகளில் அது பல மடங்காகப் பெருகும். தொகுதிக்குத் தொகுதி வித்தியாசமும் அதிகரிக்கும். அது பிரதிநிதித்துவத்தில் ஏற்றத்தாழ்வை அதிகரிக்கச் செய்யும்.

காங்கிரஸ் அரசின் மக்களநலத் திட்டங்களையும் சட்டங்களையும் மாற்றுவதில் முனைப்புகாட்டும் பாஜக அரசு தற்போதிருக்கும் தொகுதி மறுசீரமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து புதியஆணையத்தை அமைக்குமா? அதற்காக அரசியல் கட்சிகள் குரல் கொடுப்பார்களா? தலித்துகளுக்கும் முஸ்லிம்களுக்கும் இழைக்கப்பட்ட அநீதி அப்போதாவது சரிசெய்யப்படுமா?

தண்டனைக் குறைப்பு அதிகாரத்தை மாநில அரசுகளிடமிருந்து பறிக்கக்கூடாது



ராஜிவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஏழு பேருக்கு தண்டனைக் குறைப்பு வழங்கக்கூடாது என மத்திய அரசு தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் விதித்த தடையால் அனைத்து மாநிலங்களிலும் இருபது ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த ஆயுள் சிறைவாசிகள்கூட விடுதலைபெறாமல் அல்லலுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. 

மாநில அரசுகளின் தண்டனைக் குறைப்பு அதிகாரத்தைப் பற்றியும் வேறு சில சட்ட சிக்கல்கள் குறித்தும் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டிருக்கும் உச்சநீதிமன்ற அரசியல்சாசன அமர்வு இன்று விசாரணையைத் துவக்கியது. இருபது ஆண்டுகளைக் கழித்த சிறைவாசிகளை விடுவிக்க அனுமதிக்கவேண்டும் என மாநில அரசுகளின் சார்பில் கோரப்பட்சது. ஆனால் அதற்கு உச்சநீதிமன்ற அமர்வு இசைவளிக்கவில்லை. " நாங்கள் இந்த வழக்கை விரிவாக விசாரிக்கப்போகிறோம். இறுதியில் நாங்கள் தீர்ப்பளித்த பின்பே அவர்களை வெளியில் விடுவதா சிறையிலேயே வைத்திருப்பதா என்பது தெரியும்" என தலைமை நீதிபதி கூறியிருக்கிறார். 

இது ஆயுள் சிறைவாசிகளின் விடுதலை பற்றிய மனித உரிமைப் பிரச்சனை மட்டும் அல்ல; இது மாநில உரிமை குஇத்த பிரச்சனை. மாநில உரிமைகளை விரிவுபடுத்தவேண்டும் எனக் கேட்ட காலம் போய் இப்போது இருக்கிற உரிமைகளையாவது காப்பாற்றினால் போதும் என நினைக்கிற நிலை. இந்தப் பிரச்சனையில் பாஜக ஆளாத மாநிலங்கள் அனைத்தையும் ஓரணியில் திரட்டவேண்டும். அதை யார் செய்வது? இந்த விஷயத்தை ராஜிவ் கொலையோடு மட்டும் சுருக்கிப் பார்க்கிற காங்கிரஸ் செய்யாது, மாநில உரிமை என்ற விஷயத்தில் இந்தியாவுக்கே வழிகாட்டியது தமிழ்நாடுதான். இங்கிருந்துதான் இப்போதும் அதற்கான முன்முயற்சி செய்யப்படவேண்டும். 

Thursday, July 9, 2015

தமிழ்நாட்டில் தலித்துகளுக்கு எதிரான வன்முறை

2011 முதல் தமிழகத்தில்   தாழ்த்தப்பட்டவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்களின் விவரத்தை இன்று (09.07.2015) சென்னையில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத் தலைவர் திரு புனியா வெளியிட்டார். தலித்துகளுக்கென ஒதுக்கப்பட்ட நிதியை பிற பணிகளுக்கு அதிமுக அரசு திருப்பி விடுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். 

கொலை

2011 - 43
2012 - 57
2013 - 37
2014 - 60
2015 - ஏப்ரல் வரை - 16

கற்பழிப்பு சம்பவங்கள்

2011 - 41
2012 - 22
2013 - 23
2014 - 18
2015 ஏப்ரல் வரை - 14

கொடுங்காயங்கள் ஏற்படுத்தப்பட்டது

2011 - 59
2012 - 72
2013 - 23
2014 - 27
2015 ஏப்ரல் வரை - 11

தாழ்த்தப்பட்டவர்கள் மீதோ அல்லது இருப்பிடங்கள் மீது தீ வைத்தல்

2011 - 14
2012 - 13
2013 - 12
2014 - 12
2015 ஏப்ரல் வரை - 2

தாழ்த்தப்பட்டவர்கள் மீதான வன்முறைகள்.

2011 - 1170
2012 - 1372
2013 - 1497
2014 - 1464
2015 ஏப்ரல் வரை - 571

வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

2011 - 3
2012 - 0
2013 - 0
2014 - 8
2015 ஏப்ரல் வரை - 0

தேசிய தாழ்த்தப்பட்ட ஆணைய தலைவர் புனியா இன்று கொடுத்த தகவல்

Wednesday, July 8, 2015

பாமாவின் சிறுகதைத் தொகுப்பு



பாமாவின் 25 சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பு ஒன்றை விடியல் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே கொண்டாட்டம் என்ற தொகுப்பில் வெளியான 20 கதைகளோடு ஐந்து புதிய கதைகளைச் சேர்த்து இந்தத் தொகுப்பு வெளியாகியிருக்கிறது. 

பாமா பிறந்த ஊரின் வட்டார வழக்கு சில கதைகளிலும் பணியாற்றும் உத்திரமேரூரின் வட்டார வழக்கு சில கதைகளிலும் கையாளப்பட்டுள்ளது. முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் தலித் இலக்கியம் எப்படி இருக்கவேண்டுமென தலித் அல்லாத காருண்யவான்கள் ஆசைப்பட்டார்களோ அதற்குப் பொருத்தமான கதைகள். தலித்தியம் பெண்ணியம் சூழலியம் எனப் பல்வேறு இஸங்களுக்கு உதாரணங்களாக சொல்லக்கூடிய கதைகள். மானுடவியல் ஆய்வாளர்களுக்கு உதவக்கூடிய தலித் வாழ்க்கை குறித்த விவரணைகள். வலி, எள், அந்த, இழப்பு முதலான கதைகளை தலித் ஸ்டீரியோடைப் எனக் கூறலாம். 

துர்காவும் நானும், அம்மாவுக்குப் புரிந்தது ஆகிய கதைகளில் பாமா கொஞ்சம் கதை சொல்ல முயன்றிருக்கிறார். தவுட்டுக் குருவி கதை கே.ஏ.குணசேகரன் பாடும் ஆக்காட்டி ஆக்காட்டி என்ற ஒப்பாரிப் பாடலை நினைவுபடுத்துகிறது. 

இந்தத் தொகுப்பு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு தமிழ் தலித் இலக்கியத்தின் மாதிரியாக முன்வைக்கப்படலாம். மொழிபெயர்ப்பாளர்களுக்கும் ஆங்கிலப் பதிப்பாளர்களுக்கும்  இந்தத் தொகுப்பு நிச்சயம் பிடிக்கும். 

Monday, July 6, 2015

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பேராபத்து! - ரவிக்குமார்



சமூக பொருளதார சாதி கணக்கெடுப்பின் விவரங்கள் இப்போது வெளியிடப்பட்டுள்ளன. வடமாநிலங்கள் பலவற்றைவிட தமிழ்நாட்டின் சமூக பொருளாதார நிலை மோசமாக இருப்பதை அந்த விவரங்கள் காட்டுகின்றன. தமிழ்நாட்டை ஆண்டவர்களும் ஆள ஆசைப்படுகிறவர்களும் அதைப்பற்றி வாய்திறக்கவில்லை. மாறாக சாதிவாரிக் கணக்கெடுப்பு விவரங்களை வெளியிடுங்கள் எனக் கேட்கிறார்கள். creamy layer போல இந்த கணக்கெடுப்பும் பிற்படுத்தப்பட்ட மக்களில் பலருக்குத் தீங்காக முடியும் ஆபத்து இருக்கிறது. 

இந்தக் கணக்கெடுப்பு எதற்காக எடுக்கப்படுகிறது என்பதை விளக்கும்போது  "அரசாங்கத்தின் நலத் திட்டங்கள் தகுதியுள்ளவர்களுக்குக் கிடைக்கவும் தகுதியற்ற பயனாளிகளை நீக்குவதற்கும் இந்த கணக்கெடுப்பின் விவரங்கள்  பயன்படுத்தப்படும் எனக் கூறப்பட்டிருக்கிறது"ச. (  " to ensure that all eligible beneficiaries are covered, while all ineligible beneficiaries are excluded" ) 

வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்களின் பட்டியலில் ஒரு குடும்பத்தைச் சேர்க்கலாமா அல்லது விலக்கலாமா என்பதைத் தீர்மானிக்க 14 அம்சங்கள் இந்தக் கணக்கெடுப்பில் குறிப்பிடப்பட்டுள்ளன. அந்த அம்சங்களில் சில: 
1. இரு சக்கர வாகனம் இருக்கும் குடும்பம்
2. அரசு ஊழியர் இருக்கும் குடும்பம்
3. மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பாதிப்பவரின் குடும்பம்
4. விவசாயம் அல்லாத தொழில் செய்யும் குடும்பம்
5. தொலைபேசி உள்ள குடும்பம்
6. ஃப்ரிட்ஜ் வைத்திருக்கும் குடும்பம்
7. மூன்று அறை உள்ள வீடு உள்ள குடும்பம்

மேற்குறிப்பிட்ட குடும்பங்கள் யாவும் வறுமைக்கோட்டிலிருந்து தாமாகவே நீக்கப்பட்டுவிடும் என இந்த அறிக்கை கூறுகிறது. அப்படி நீக்கப்பட்ட குடும்பங்கள் இனி சமூகநலத் திட்டங்களின் பயனாளிகளாக இருக்க முடியாது என்பதே இதன் பொருள். 

தகுதியான பயனாளிகளைக் கண்டறிவதே நேரடி மானியத் திட்டத்தின் நோக்கம் என்று கூறப்பட்டது, ஆனால் பொது விநியோகத் திட்டத்தை ஒழிப்பதுதான் மத்திய அரசாங்கத்தின் நோக்கம் என்பது இப்போது புரிய ஆரம்பித்துள்ளது. அதுபோலத்தான் இந்தக் கணக்கெடுப்பின் விவரங்களும் பயன்படுத்தப்படப்போகின்றன. 

இந்தக் கணக்கெடுப்பு 2011 ல் மேற்கொள்ளப்பட்டபோது ஊரக மேம்பாட்டுத்துறையின் அமைச்சராக இருந்த ஜெய்ராம் ரமேஷால் வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளிலேயே சாதிவாரிக் கணக்கெடுப்பின் விவரங்கள் public domain ல் வெளியிடப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இப்போது கோரிக்கை விடுபவர்கள் அப்போது ஏன் அமைதி காத்தார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம். 

இந்தக் கணக்கெடுப்பில் மொத்தமுள்ள ஊரகப் பகுதிகளில் வாழும் 17.91 கோடி குடும்பங்களில் 7.05 கோடி குடும்பங்கள் அதாவது சுமார் நாற்பது சதவீத குடும்பங்கள் வறுமைக் கோட்டிலிருந்து விலக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இதனால் அதிகம் பாதிக்கப்படப் போகிறவர்கள் கிராமப்புறங்களில் உள்ள பிற்படுத்தப்பட்ட மக்கள்தான். இந்த ஆபத்தை எதிர்ப்பதை விட்டுவிட்டு சாதிவாரி விவரங்களை வெளியிடுங்கள் எனக் கேட்பது மாட்டை விட்டுவிட்டு அதன் நிழலைப் பிடிக்கும் முயற்சி என்று சொல்லத்தோன்றுகிறது. இந்தக் கோரிக்கை பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உதவுமா அல்லது சாதியை வைத்து அரசியல் நடத்துகிறவர்களுக்கு கைகொடுக்குமா என்பதை மக்களின் முடிவுக்கே விட்டுவிடுவோம். 

Saturday, July 4, 2015

கலைஞர் பேட்டி எழுப்பும் கேள்வி

நிலையான ஆட்சியா ? ஜனநாயக ஆட்சியா? 
============
இன்று (05.07.2015) தமிழ் இந்துவில் வெளியாகியிருக்கும் கலைஞரின் நேர்காணலில் ஒரு முக்கியமான பிரச்சனை ஓரிரு வரிகளில் கடந்துசெல்லப்பட்டிருக்கிறது. " இந்தியாவுக்கு ஒரு நிலையான ஆட்சி வேண்டும் என்ற அடிப்படையில்தான் ' நேருவின் மகளே வருக நிலையான ஆட்சியைத் தருக ! ' என்று கூறவேண்டிய நிலைக்கு திமுக வந்தது " என கலைஞர் பதிலளித்திருக்கிறார். 

இதிலிருந்து நமக்கு எழும் கேள்விகள்: 

1. மக்களுக்குத் தேவை ஜனநாயக ஆட்சியா? நிலையான ஆட்சியா? ஜனநாயக ஆட்சி வேண்டுமென்பதால்தானே பெரும்பான்மை பலம் கொண்ட இந்திராவின் அரசை அதன் அவசரநிலைப் பிரகடனத்தை திமுக எதிர்த்தது? 

2. நிலையான ஆட்சிதான் திமுகவின் நோக்கமென்றால் அது எப்படி வி.பி.சிங் ஆட்சி முதற்கொண்டு பல்வேறு கூட்டணி ஆட்சிகளை மத்தியில் ஆதரித்தது? அவற்றில் பங்கெடுத்தது? 

நிலையான ஆட்சி என்றால் அது ஒரு கட்சியின் தலைமையில் உருவாகும் பெரும்பான்மை ஆட்சிதான் என்ற தவறான கருத்து இந்திய அரசியலில் அண்மைக்காலமாக உடைத்தெறியப்பட்டுள்ளது. நிலையான ஆட்சி என்பதால் ஒரு சர்வாதிகார ஆட்சியை ஆதரிக்க முடியாது. தற்போதுகூட பெரும்பான்மை பலத்தோடு பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்திருக்கிறது. அது நிலையான ஆட்சிதான். அதற்காக பாஜக அரசின் மக்கள்விரோத நடவடிக்கைகளை திமுக ஆதரிக்கமுடியுமா? 

பெரும்பான்மை பலம் இருந்தாலும் சர்வாதிகார ஆட்சி நிலையானதாக இருக்கமுடியாது. அது மக்கள் சக்தியால் எப்போது வேண்டுமானாலும் தூக்கியெறியப்படலாம். அதைத்தான் அவசரநிலைக் காலம் உணர்த்தியது. கொடுங்கோலர்கள் இங்கே நிலைத்து கோலோச்ச முடியாது என்பதே அது தந்த பாடம். மக்களுக்குத் தேவை ஜனநாயக ஆட்சிதான். ஜனநாயக ஆட்சியே நிலையான ஆட்சியாகவும் இருக்கும்.