Saturday, November 20, 2010

இந்த முறை ஒரிசா - ரவிக்குமார்



ஒரிசாவில் கந்தமால் பகுதியில் கிறித்தவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பான வழக்குகளில் பதினான்கு பேருக்கு மூன்று ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இந்தக் கலவரம் நடந்த நேரத்தில் நான் ஜூனியர் விகடனில் எழுதிய கட்டுரை இது : 









‘‘தேர்தல் வரும் பின்னே, மதக் கலவரம் வரும் முன்னே’’ என்பது ஒரு புதுமொழியாக இந்திய அரசியலில் உறுதிப்பட்டு வருகிறது. ஒரிசா எரிந்து கொண்டிருக்கிறது. பதினாறு பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான வீடுகள் எரிக்கப்பட்டிருக்கின்றன. தேவாலயங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் & ஏன்? அனாதை விடுதிகளும்கூட விட்டு வைக்கப்படவில்லை. எல்லாம் சாம்பலாக்கப்பட்டிருக்கின்றன. ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் காடுகளில் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள். மதவாதத்தின் பரிசோதனைக்கூடம் என்று அழைக்கப்பட்ட குஜராத்தைத் தொடர்ந்து இப்போது ஒரிசா. குஜராத்தில் முஸ்லீம்கள், ஒரிசாவிலோ கிறிஸ்தவர்கள். அதுதான் வித்தியாசம்.
குஜராத்துக்கு அடுத்தது ஒரிசாதான் என்று முன்பே அபாய எச்சரிக்கை ஒலிக்கப்பட்டது. ஆனால் அரசாங்கம்தான் அதை கண்டுகொள்ளவில்லை. சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு அந்த மாநிலத்தில் தொழு நோயாளிகளிடையே சேவை செய்து வந்த ஆஸ்திரேலிய நாட்டுப் பாதிரியார் க்ரஹாம் ஸ்டூவர்ட் ஸ்டெய்ன்ஸ் என்பவரையும், அவரது மகன்கள் பிலிப் மற்றும் திமோத்தி ஆகியோரையும் சங்கப்பரிவாரத்தினர் உயிரோடு எரித்துக் கொலை செய்தபோதே அந்த அபாயச்சங்கு ஊதப்பட்டது. அதே ஆண்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அருள்தாஸ் என்ற பாதிரியார் சங்கப்பரிவாரத்தினரால் அம்பு எய்து படுகொலை செய்யப்பட்டார். 2002ஆம் ஆண்டு மார்ச் 16ஆம் தேதி திரிசூலம் ஏந்திய வி.எச்.பி. தொண்டர்கள் ஒரிசா சட்டமன்றத்துக்குள் புகுந்து அதை அடித்து நொறுக்கினார்கள். இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக ஒரிசா மாநிலத்திற்குள் மதவாத நஞ்சு ஏற்றப்பட்டது. அதை அங்கிருந்த மாநில அரசும் ஆதரித்து வளர்த்தது.
தற்போது ஏவப்பட்டுள்ள கலவரம் ஆர்.எஸ்.எஸ். ஆதரவோடு ஒரிசாவில் செயல்பட்டு வந்த சுவாமி லக்கானநந்தா என்பவர் படுகொலை செய்யப்பட்டதில் இருந்து ஆரம்பித்தது என்று செய்திகள் குறிப்பிடுகின்றன. ஆனால் இந்த கலவரத்துக்கான ஒத்திகை கடந்த டிசம்பர் மாதமே ஆரம்பமாகி விட்டது. குஜராத் மாநில சட்டமன்றத்துக்கான தேர்தல் முடிவுகள் வெளிவந்து நரேந்திரமோடி வெற்றிபெற்ற செய்தி கடந்த டிசம்பர் 23ஆம் தேதி வெளியானது. குஜராத்தில் ஒலித்த வெற்றி முழக்கத்தின் எதிரொலி அதற்கு மறுநாள் ஒரிசாவில் கேட்டது. ஒரிசாவின் கந்தமால் மாவட்டத்தில் சங்கப்பரிவாரத்தினர் உற்சாகமாகக் களத்தில் இறங்கினர். பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்த பாஸ்டர் ஜூனாஸ் திகால் என்பவரை வெளியே இழுத்துப்போட்டு அடித்து உதைத்தனர். அவரது உடைகளையெல்லாம் கிழித்து நிர்வாணமாக்கி தெருவில் ஊர்வலம் விட்டனர். கிறிஸ்துமஸுக்காக தேவாலயங்களில் செய்யப்பட்டிருந்த அலங்காரங்கள் அடித்து நொறுக்கப்பட்டுப் பந்தல்கள் எரிக்கப்பட்டன. மூன்று நாட்களுக்குள் கந்தமால் மாவட்டத்தில் ஐந்து பெரிய தேவாலயங்களும், நாற்பத்தெட்டு கிராம சர்ச்சுகளும், கன்னியாஸ்திரிகளின் ஐந்து கான்வென்ட்டுகளும், ஏழு ஹாஸ்டல்களும், ஏராளமான கிறிஸ்தவ நிறுவனங்களும் தீயிட்டு எரிக்கப்பட்டன. சங்கப்பரிவாரத்தினர் துப்பாக்கியால் சுட்டதில் சில்லு, அவினாஷ் நாயக் என்ற இரண்டு சிறுவர்கள் படுகாயம் அடைந்தனர். பல நாட்கள் வரை வன்முறையைக் கட்டுப்படுத்த மாநில அரசு முன்வரவில்லை. இப்போது நடந்து கொண்டிருக்கும் தாக்குதல் கடந்த டிசம்பரில் ஏவப்பட்ட வன்முறையின் தொடர்ச்சிதான்.
சுவாமி லக்கானநந்தாவை படுகொலை செய்தவர்கள் யார் என்று தெரியாத நிலையில் மாவோயிஸ்டுகள் அதைச்செய்திருக்கலாம் என்ற யூகங்கள் பத்திரிகைகளில் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன. சங்கப்பரிவாரத்தினரோ சுவாமியைக் கொன்றது கிறிஸ்தவர்கள் தான் என்று குற்றம் சாட்டுகின்றனர். கிறிஸ்தவர்களோ அதை வன்மையாக மறுத்து வருகின்றனர். சுமார் எண்பத்து மூன்று வயது கொண்ட லக்கானநந்தா தனது மதவெறிப் பேச்சின் மூலமாகப் பிரபலம் அடைந்தவர். சலவைத் தொழில் செய்யும் குடும்பம் ஒன்றில் பிறந்த லக்கான் 1969ஆம் ஆண்டு சக்கபடா ஆசிரமத்தை நிறுவியதன் மூலம் சுவாமி லக்கானநந்தா சரஸ்வதி என புது அவதாரம் எடுத்தார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த ரகுநாத் சேத்தி என்பவரால் துவக்கத்தில் வழிநடத்தப்பட்ட லக்கானநந்தா ஒரிசாவின் கந்தமால் மாவட்டத்தை ‘கிறிஸ்துஸ்தான்’ ஆக்குவதற்கு கிறிஸ்தவர்கள் சதி செய்கிறார்கள் என்ற பிரச்சாரத்தை நம்பினார். ஆதிவாசி மக்களை கிறிஸ்தவத்திலிருந்து மீட்பதே தனது லட்சியம் என்று கடந்த நாற்பது ஆண்டுகளாக செயல்பட்டு வந்தவர் அவர். 2006ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பிதாமகர்களில் ஒருவரான கோல்வால்கரின் நூற்றாண்டை லக்கானநந்தா முன்நின்று நடத்தினார். அதன்மூலம் அந்தப்பகுதியில் இந்துத்துவ செல்வாக்கை வளர்த்தார். அவருடைய பிரச்சாரத்துக்கு ஒத்துழைத்த இன்னொரு முக்கியமான நபர் குய் சமாஜ் என்ற அமைப்பின் தலைவரான லம்போதர் கன்ஹார் என்பவராவார். வழக்கறிஞரான கன்ஹார் நேரடியாக ஆர்.எஸ்.எஸ். அமைப்போடு தன்னை அடையாளம் காட்டிக்கொள்ளாவிட்டாலும் இந்துத்துவ அமைப்புகளின் ஆதரவு அவருக்கு எப்போதும் இருந்து வருகிறது.
ஒரிசா மாநிலத்தின் மக்கள் தொகையில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 2.4 விழுக்காடுதான். இப்போது கலவரத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள கந்தமால் மாவட்டத்தில் 16 சதவீதம் கிறிஸ்தவர்கள் வசிக்கின்றனர். ஒரிசாவின் ஆதிவாசி மக்களிடையே இந்துத்துவ அமைப்புகள் நீண்டகாலமாகவே வேலை செய்து வருகின்றன. சங்கப்பரிவாரத்தினர் ஒரிசாவின் ஆதிவாசி மக்களிடையே 391 சரஸ்வதி சிசு மந்திர் பள்ளிகளை நடத்தி வருகின்றனர். அவற்றில் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பயிலுகின்றனர். அதுமட்டுமல்லாமல் ஏகல் வித்யாலயா, வனவாசி கல்யாண் பரிஷத், விவேகானந்தா கேந்த்ரா, சேவா பாரதி போன்ற நிறுவனங்களும் சங்கப்பரிவாரத்தினரால் நடத்தப்படுகின்றன. ஒரிசாவில் மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் முழுநேர தொண்டர்களைக் கொண்ட ஆறாயிரம் ஷாக்காக்களை ஆர்.எஸ்.எஸ். நடத்தி வருகிறது. இப்படியான திட்டமிட்ட செயல்பாடுகளின் மூலமாகத்தான் ஒரிசாவில் கொஞ்சம் கொஞ்சமாக மதவெறி ஏற்றப்பட்டு இருக்கிறது.
ஆதிவாசிகளை இந்துக்களாக மாற்றுவது என்பதுதான் ஒரிசாவில் சங்கப்பரிவாரங்களின் முதன்மையான செயல்திட்டம். ஒரிசாவில் இருக்கும் ஆதிவாசி மக்களை கிறிஸ்தவர்களாகவும், இந்துக்களாகவும் மதமாற்றம் செய்கிற முயற்சி பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்திலேயே ஆரம்பமாகி விட்டது. சாதி அமைப்புக்குள் வராத ஆதிவாசி மக்களை மதமாற்றம் செய்து சாதி உணர்வு கொண்டவர்களாக மாற்றியது சங்கப்பரிவாரங்களின் சாதனை என்றே சொல்லலாம். பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் குற்றப்பரம்பரையினராக ஒதுக்கப்பட்ட பானா என்ற ஆதிவாசி பிரிவினரைத் தீண்டத் தகாதவர்களாக இந்துக்கள் நடத்திய காரணத்தினால் அவர்களில் கணிசமானவர்கள் கிறிஸ்தவத்தைத் தழுவினார்கள். அப்படி கிறிஸ்தவர்களாக மாறிய பானா ஆதிவாசிகளுக்கு எதிராக கந்தா உள்ளிட்ட ஆதிவாசிப் பிரிவினரை ஏவுகிற காரியத்தைத் தொடர்ந்து திட்டமிட்ட முறையில் சங்கப்பரிவாரத்தினர் செய்து வந்துள்ளனர். மதம் மாறினாலும் இடஒதுக்கீட்டு சலுகைகளை அனுபவித்து வந்த பானா கிறிஸ்தவர்களுக்கு ஆதிவாசி அந்தஸ்தை வழங்கக்கூடாது என்ற கோரிக்கையை முன்வைத்து குய் சமாஜ் அமைப்பினர் போராடி வருகின்றனர். அதை ஆதரித்தவர்தான் லக்கானநந்தா. பானா கிறிஸ்தவர் பிரிவைச் சேர்ந்த பத்மநாவ் பெஹரா என்பவர் நவீன் பட்நாயக் அமைச்சரவையில் சுரங்கத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வந்தார். அவரைப் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று குய் சமாஜ் அமைப்பினரும், இந்துத்துவ சக்திகளும் கொடுத்த அழுத்தத்துக்குப் பணிந்து நவீன் பட்நாயக் கடந்த டிசம்பரில் அவரை அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்கியது சங்கப்பரிவாரங்களுக்கு ஊக்கம் அளிப்பதாக அமைந்து விட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடந்த வன்முறையின்போது அரசு எந்திரமும், சங்கப்பரிவாரத்தினரும் ஒன்றிணைந்து தாக்குதல் நடத்தியதாகப் பல்வேறு செய்திகள் வெளிவந்தன. அதைச் சரி செய்வதற்கு நவீன் பட்நாயக் அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்போது நடந்து வரும் வன்முறைத் தாக்குதல்கள் அந்த மெத்தனத்தின் விளைவுகள் தான் என்று சொன்னால் அது மிகையாகாது.
ஒரிசா கலவரத்தைப் பற்றி சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று இப்போது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அதை ஏற்று ஒருவேளை உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்தாலும்கூட ஒரிசாவில் உள்ள சிறுபான்மை கிறிஸ்தவர்களுக்கு அதனால் பெரிய அளவில் பாதுகாப்பு எதுவும் கிடைத்துவிடும் எனக் கூறமுடியாது. தேர்தல் நெருங்க நெருங்க சங்கப்பரிவாரங்களின் வன்முறை வெறியாட்டம் அதிகரிக்கும் என்பது எல்லோரும் அறிந்ததுதான். மதவாத ரதத்தில் பயணம் செய்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவது என்பதுதான் சங்கப்பரிவாரங்களின் செயல் திட்டமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் சேதுசமுத்திர திட்டமும் அந்த விதத்தில்தான் அவர்களால் கையில் எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மதச்சார்பற்ற சக்திகள் வலியுறுத்த வேண்டிய முக்கியமான விஷயம் தற்போது மத்திய அரசால் கிடப்பில் போடப்பட்டிருக்கும் ‘‘மதவாத வன்முறை (தடுப்பு மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு) மசோதா-2005’’ஐ உடனடியாக சட்டமாக்க வேண்டும் என்பதுதான்.
மத்தியில் ஆட்சி செய்யும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இந்த சட்டத்தை கொண்டு வருவதாகத் தனது குறைந்த பட்சப் பொது வேலைத் திட்டத்தில் வாக்குறுதி அளித்திருந்தது. இடதுசாரிக் கட்சிகளின் வற்புறுத்தலின் காரணமாக கடந்த 2005ஆம் ஆண்டு மாநிலங்களவையில் இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது அதில் இருந்த குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டன. அதன்காரணமாக அது நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டது. அந்த மசோதாவின் மீது பல்வேறு திருத்தங்களை இந்தியா முழுவதும் உள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், மனித உரிமை அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் முன்மொழிந்தன. அவற்றையெல்லாம் நிலைக்குழுவும் தொகுத்து அரசிடம் அளித்திருந்தது. இருந்தபோதிலும் இந்த மசோதா இதுவரை சட்டவடிவம் பெறவில்லை. தங்களது ஆதரவை விலக்கிக்கொள்வதற்கு முன்பாக இடதுசாரிக் கட்சிகள் வலியுறுத்திய பல்வேறு விஷயங்களில் இந்த மசோதா சட்டமாக்கப்பட வேண்டும் என்பதும் இடம் பெற்றிருந்தது.
இந்த மசோதா சட்டமாக்கப்பட்டால் ஓரளவுக்கு மதவாத வன்முறைகளைக் கட்டுப்படுத்த முடியும். அடிக்கடி மதக்கலவரங்கள் நடைபெறும் பகுதிகளை மதவாத வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகள் என அறிவிக்கவும், அப்பகுதிகளில் சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இந்தச் சட்டம் அரசாங்கத்திற்கு அதிகாரம் அளிக்கிறது. மதக்கலவரங்களைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இந்தச் சட்டத்தில் வழிவகைகள் செய்யப்பட்டுள்ளது. இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் ஆகியவற்றில் ஒரு குற்றத்துக்கு வரையறுக்கப்பட்டுள்ள தண்டனையைப் போல இரண்டு மடங்கு தண்டனையை மதவாத வன்முறையில் ஈடுபடுகிறவர்களுக்கு வழங்குவதற்கும் இந்தச் சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. அரசுப் பணிகளில் இருப்பவர்கள் மதவாத வன்முறைக்கு ஆதரவாக செயல்பட்டால் அவர்களுக்குக் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டு சிறைத்தண்டனை வழங்குவதற்கு இந்தச் சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்தச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுகிற ஒருவர் ஆறு ஆண்டுகள் வரை எவ்விதப் பதவியையும் வகிப்பதற்கு தகுதியற்றவர் எனவும் இந்தச் சட்டம் குறிப்பிடுகிறது. மதவாத வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு நிதி உதவி செய்தால் அவர்களை குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கலாம் என இந்தச் சட்டம் கூறுகிறது. இப்படிப் பல்வேறு நல்ல அம்சங்கள் கொண்ட இந்தச் சட்டத்தை நிறைவேற்றுவதில் ஏனோ மத்திய அரசு மெத்தனமாக இருக்கிறது.
ஒரிசாவில் மதக்கலவரம் நடந்து கொண்டிருக்கிற இந்தச்சூழலில் தமிழ்நாட்டு அரசியலில் இந்துத்துவம் பற்றிய விவாதங்கள் சூடு பிடித்திருக்கின்றன. பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது அ.தி.மு.க. என்ன நிலையை மேற்கொண்டது என்பதைப்பற்றியெல்லாம் இப்போது விலாவாரியாகச் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. தமிழக முதல்வர் இதுகுறித்து ஆதாரப்பூர்வமான தகவல்களை எடுத்து வைத்திருக்கிறார். தமிழகத்தில் மதவாத சக்திகள் காலூன்றி விடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வோடு கருத்துக்களை வெளிப்படுத்திக்கொண்டிருக்கும் தமிழக முதல்வர் அவர்கள் அதே பொறுப்புணர்வோடு மத்திய அரசை வலியுறுத்தி, தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ள ‘‘மதவாத வன்முறை (தடுப்பு மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு) மசோதா-2005’’ஐ உடனடியாகச் சட்ட வடிவம் பெறச்செய்ய வேண்டும். இது இந்தியா முழுவதும் இருக்கும் சிறுபான்மை மதத்தவரின் எதிர்பார்ப்பு மட்டுமல்ல, மதச்சார்பற்ற சக்திகளின் வேண்டுகோளும்கூட.

03.09.2008

No comments:

Post a Comment