Friday, November 5, 2010

சிகரங்களில் உறையும் காலம்- நூல் மதிப்புரை







உந்திச் சுழியும் ஒரு துளி மொழியும் 


எப்போதும் திறந்தே இருக்கும் உந்திச் சுழி போல படைப்பாளி தன்னை அகழ்வதற்கான வழியைத் திறந்துவைத்துக் காத்திருக்கிறார்.
புயலோ ஒரு பூவோ அதை இட்டு நிரப்பமுடியும் எனினும் அது ஒரு தற்காலிக ஏற்பாடாகத்தான் இருக்கிறது.  உணர்வுகள்- தனிமையின் பல்வேறு அறைகள். சில சமயம் படைப்பாளி தன் படைப்புகளை அங்கிருந்து உற்பவிக்கிறார்.  அல்லது படைப்புகளை அங்கே கொட்டி நிரப்புகிறார்.  ஆயினும் உந்திச்சுழி தனிமையை கொண்டாடித் தீர்க்கிறது.  உந்திச்சுழி- பெண் கூடு விட்டு கூடு பாயும் சூட்சுமத்தளம். பெண்மையின் மாற்று மொழி. ஆண் அடைந்து கொள்ளும் கருவறை.


இத்தொகுப்பின் மொழிகள் உந்திச்சுழியிலிருந்து தொடங்குபவை.  தாய்மையின் கரிசைனைகூடிய தருணங்களை சுமந்து வருபவை.  கரிசனை, அக்கறை, அன்பு, அறிவுரை எல்லாம் தாய்மையின் வேறு வார்த்தைகள்.  அவை உள்மன அடுக்குகளை மெல்லக் கலைத்து வெளிப்படுகின்றன. "விழி தவிர்த்த பெருமிதம்" 
" ரௌத்திரம் ததும்ப" ஆகிய கவிதைகள் தாய்மையின் தீவிரம் வெறுப்புகளாய் எதிர்ப்புகளாய்  வெளிப்படும் தருணங்களைத் தாங்கி நிற்கின்றன.  

" நேசிக்காமல் இருந்ததில்லை
நேசித்ததைத் தொடர்ந்து 
நேசித்ததும் இல்லை
நேசிக்கத் தொடங்கியவர்
நேசித்தவராகவே
இருப்பதுமில்லை
நேசிக்காமல் வாழவும்
தெரியவில்லை "

திசைகளில் விசிறியடிக்கப்படும் மனமும் உணர்வும் இற்று விழுந்துவிடாமல் தன்னை படைப்பாளியாக அடையாளம் கண்டு புத்துயிர்ப்பை முரசறையும் 
இடம்தான் மேலே குறிப்பிட்ட கவிதை.  மனம், உணர்வுகளின் உச்சத்தைத் தொடும்போது அது தன்னை உற்பவிப்புக்களனாக மாற்றிக்கொள்கிறது.  இயலாமையை எழுதித் தீர்த்துவிடமுடியாது என்பதை அது அறிந்திருந்த போதும் இயலாமையிலிருந்து அது தன் தேவைகளையும் ஆறுதல்களையும் எதிர்பார்ப்புகளையும் கட்டத்துவங்குகிறது.  மிக பாதுகாப்பான வலுவுள்ள சிறுகுடிலுக்குள் வசிப்பதாக உணர்ந்தாலும், அப்படியே சயனித்துவிடாத படைப்பு மனம், உந்திச்சுழி போல் தன்னை வெறுமைப்படுத்தி மீண்டும் மீண்டுமாய் படைப்புகளை கோரிக்கொண்டே இருக்கிறது.  


வண்ணத்துப்பூச்சிகளாய் கனவுகளை துரத்திக்கொண்டிருக்கிறோம்.  அது வானவில்லைப்போல் எட்டாத தூரத்தில் பறக்கிறது (பக்கம்90) ஆக அது எட்டாத வரையில் மட்டுமே வாழ்க்கையும் படைப்பும் உயிர்ப்போடு இருக்கிறது.  அது எட்டிவிடும்போது, குளக்கரையின் மரக்கிளையில் மீன்கொத்தி அல்லாத பறவை ஒன்று குளத்தை எப்படி பார்த்திருக்குமோ அப்படித்தான் வாழ்க்கையை நாம் சலனமின்றி பார்க்கத்துவங்குகிறோம்.  அங்கு படைப்பு மனம் இயக்கத்தை இழந்து நிற்கிறது.  உறங்கும் வாழ்க்கையை வரலாற்றில் எழுதாமல் இருந்துவிடலாம். 


" எங்கிருந்தாவது. . . 
பொறுக்கி வருவோம்
உயிர்க் காம்புகளற்ற வார்த்தைகளை
கயிறாய்த் திரித்த பின் 
கழைக்கூத்தாடியின் லாவகத்தோடு
அவற்றின் மீது நடக்க " (பக்கம் 89)

விரும்பாத லாவகத்தோடு தன்னைக் கடந்து செல்ல வாழ்க்கை மனிதனை நிர்ப்பந்திக்கிறது. அதை உணரவைக்கின்றன மேற்காணும் வரிகள்.  வாழ்க்கை மனிதனை எப்படியும் துரத்திப்பிடித்துவிடுகிறது.  மனிதன் வாழ்க்கைக்குள் எதையோ துரத்தியபடியே இருக்கிறான்.  எதையும் அவன் பிடித்துவிடாதவரை வாழ்ந்து கொண்டிருக்கிறான்.  


" எல்லையற்ற வானில்
சில வெண்புறாக்களை 
பறக்கவிடுவோம்
அவை தவறவிட்ட
சிறகு ஒன்றை எடுத்துத் தருகிறேன் " (ப்க்கம் 54)

அதிகபட்ச சுதந்திரம் என்பதைவிடவும் மிகச்சிறந்த சுதந்திரம் மனதின் அழுக்குகளை துடைத்துவிடுகிறது.  அது நட்புமனநிலையில் உறவுப்புறாக்களை பறக்கவிடுகிறது.  புன்னகையை ஊட்டிவிடக் காத்திருக்கிறது.  சுதந்திரம் என்பதை படைப்புமனம் கருவறையின் அடர் இருட்டில் கண்கள் மூடித் தரிசிக்கும் பக்தன் பெறும் நிறைவொளியைப் போல கண்டுகளிக்கிறது.  

"அவன் எப்போதும்
இங்கேதான் இருப்பான்
எத்தனையோ ஆண்டுகளாய்
கடந்து போகிறேன் அவனை
கண்கள் சந்திக்கும்போது
அரைப் புன்னகையைப்
பகிர்ந்து கொண்டிருக்கிறோம்
அவன் இல்லாதுபோன
தினத்திலிருந்து எல்லோரையும்
கேட்கிறேன், அவன் யாரென்று" (பக்கம் 84) 

நமது வாழ்வின் அபத்தத்தை எடுத்துரைக்கும் இக்கவிதை வாழ்க்கையில் தேடல்தான் அடிப்படை என்பதையும் சுட்டிக் காட்டுவதாக  இருக்கிறது . வாழ்வு தொலைத்தவற்றையும், தொலைக்காதவற்றையும் கூட தேடிக்கொண்டே இருக்கிறது. ஆனால்  படைப்பு மனம் எதையும் தொலைப்பதில்லை, தேடுவதுமில்லை .  அது தொலைத்தவற்றையும், தொலைக்காதவற்றையும் பத்திரப்படுத்துகிறது.  அகம், புறம், சூழல், நொடி, பூக்களின் சிற்றசைவு, மரணத்தின் தேம்பல் என எல்லாவற்றையும் நினைவுக்குடுவைக்குள் பத்திரப்படுத்துகிறது.  பின்பொருநாள் கலைநயமிக்க குவளைகளில் அவற்றைப் பரிமாறிப் பருகுகிறது.  சதுக்கப்பூதங்களாய் அழிவைச்சுமந்தபடி ஏறிவரும் அலைகளுக்குள்ளும், படைப்பு மனம் நீந்திப்பார்க்கும் என்பதே அதன் மாட்சிமை.  

ஆழிக் கூத்தையும் ஊழிக்காற்றையும் கொண்டாடித்தீர்க்கும் தீரமுடையது படைப்பு மனம்.  அது வன்மத்திற்கு எதிராய் உதிரத்தின் நெடியோடு குருதியில் தோய்த்த கத்திகளை பதுக்கிவைத்திருக்கிறது.  ஆயினும் கேட்டறியாப் பறவைகளையும், பெயர் தெரியாப் பூக்களையும், கொலை அறியா ஆயுதங்களையும், வலிதராத வார்தைகளையும், சுருளாத மனதையும் கூவி அழைத்தபடி காலம் சிகரங்களை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கிறது. 


- தேன்மொழி


 
---------------------------------------------
சிகரங்களில் உறைகிறது காலம்
கனிமொழி கவிதைகள்
வ.உ.சி.நூலகம், 2009
விலை 100/--&
( இந்த நூல் மதிப்புரை மணற்கேணி - முதல் இதழில் வெளியானது)

No comments:

Post a Comment