Saturday, November 27, 2010

அனார் கவிதைகள்




நிசப்தத்தில் குளிரும் வார்த்தை


நமக்கிடையே மழைக்காடுகளென
நிசப்தம் வளர்கிறது
ஆற்றுக்கரையில் மெல்லிய குளிர்மையுடன்
நிசப்தம் என்னில் தொற்றுகின்றது
நட்சத்திரங்கள் கக்கும் நிசப்தத்தை
உன்னுடைய பதில்களாக கருதுகிறேன்
ஆற்றுப்படுக்கையில் திட்டுத் திட்டாக தெரிகின்ற
எனது நிசப்தங்கள் மீது
கோடையென தீய்கிறாய்
உனதான பள்ளத்தாக்குகளில்
ஊமை முயல்கள் வளர்கின்றன
எனது நிசப்தங்களின் புல்வெளியை
அவை பசியாறுகின்றன
நீயும் நானும் மறைக்க விரும்புவதும்
கூற நினைப்பதும்
ஒரே வார்த்தை
எப்போதுமிருந்தது அந்த வார்த்தையில் குளிர்
கடலின் ருசி
மழையின் குரலென
நிசப்தமான குளிர் பேசப்படாத வார்த்தையாய்
அலைகின்றது நமது அறைகளில்
சிறுத்தையின் புள்ளிகள்
என்னுடைய நிசப்தம்
உன்னுடையதோ
முட்டைகளைப் பெருக்கிக்கொண்டிருக்கும் ஆமை
முகமில்லாத வார்த்தைகளை
உரையாடுகின்றோம்
இசை பாறையாகிவிட்டது
வார்த்தை பாறையாகிவிட்டது
காலம் நிசப்தமாகிவிட்டது
அன்பின் உணர்வுகளில்
தூறல் சொட்டும் குரலில்
மறைந்திருக்கிறது கொலைவாள்
நமக்கிடையே
தூக்குமேடைக்குமேல் தொங்கும் கயிறு
அல்லது
ஆலகால விசம்












நிலாக்குட்டி


சொர்க்கத்திலிருந்து பறித்துவரப்பட்ட
பேரீச்சம் பழங்களின்
தித்திப்பு மிகுந்த அணைப்பினால்
முத்தங்களால் தீண்டுகிறான் குழந்தை

என்னிரு காதுகளை
இரு கைகளாலும் இழுத்து மூடி
நிலாக்குட்டியின் ரோசாப்பு வாயினால் ஊதுகிறான்
வளராத இறகுகளுடன்
அவனது சொற்கள் மின்னி மின்னிப் பறக்கின்றன

மடி மீது குலுக்கி உதிர்ந்திட்ட
பிள்ளையின் மழலைச் சொற்கள்
ப+ரித்துப் பொங்குகின்றது
பால் மணமாய்

என் கருவறை நிறைய
திரண்டு கிடந்த கவிதை
ஒரு துண்டு மேகமாகி ஆகர்சிக்கின்றது
கபடமறியாத குறுஞ்சிரிப்புகளால்

அவனது கைகளில்
ஒரு பிஸ்கட் யானையின் வடிவிலிருந்தது
தும்பிக்கையை
மொறு மொறுவனெத் தின்கிறான்
ஆகச்சிறந்த பயில்வானின் தோரணைகளுடன்

தோட்டத்தில்
தத்திச்செல்லும் பிள்ளையின் பாதச்சுவடுகள்
நிலவு பொறுக்கியுண்ணும்
மிக இனிக்கின்ற உணவோ

ஏதேதோ சாகசங்களில் ஜெயித்தவனாக
உறக்கத்தில் மென்மையாக புன்னகைக்கின்றான்
பூக்களது ப+ச்சிகளது வண்ணங்களதும்
ஆரவாரங்களுக்கு மத்தியில்
அங்கே அவனை
ரசித்தபடியிருக்கும் என்னைப்பார்த்து

என் பசுங்குருத்துச் சூரியன்
உதிக்க அதிகாலை இருள் நீங்கும்
உறங்க பொன்னந்தி பாய்விரிக்கும்








பருத்திக் காய்கள் வெடிக்கும் நாள்


பழுத்த பருத்தி இலைகள்
மட மடத்து உதிர்கின்றன
உலர்ந்த சருகுகளின் குவியல்
காற்றின் ஞாபகங்களில்
விலகி விலகி அசைகின்றது

வெடித்த பருத்திக் காய்களிலிருந்து
பிரிந்த பஞ்சுகள்
வேனிற்காலப் பொழுதொன்றைத் தூக்கிப்பறக்கின்றன

பச்சை இலைகளின் மணம்
இயற்கையை நடனமாடும்
பரவசத்தின் குரலென சிணுக்கமிடும்

தீப்பொறிகளென உதிர்ந்திடும் இலைகள்
காற்றைத் தீண்டும் பொழுது
மறுபடியும் குருத்துவிடும் உதடுகள்

அதிகாலைக் குளிரின் காமம்
மரத்தினில் இன்னும் தங்கியிருக்கிறதா
பருத்தி இலைகளில் தன்னை வழியவிட்டு
துடிக்கின்றது சூரியன்

ஒளிச் சேர்க்கையின் நிறப்பிரிகை
மூன்று காலங்களிலும்
தங்கிவிடுகின்றது

பருத்திக் காய்கள் வெடிக்கும் நாளொன்றில்
கண்களில் காடென வளரும்
பசிகொண்டவளுக்காக
விரைந்து வித்துக்களை உதிர்க்கின்ற
பஞ்சுகள்
காற்று வெளியெல்லாம் பரப்புகின்றன
அவன் வருகையின்
விநோதமான சமிக்ஞைகளை




2 comments:

  1. கவிதைகள் அருமை ! பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  2. கறுவறை நிறைய
    திரண்டு கிடந்த கவிதை...
    அர்த்தம் மறைந்தும் கருத்தை அறிந்து கொள்ளும்படியாக தற்கால நிலையில் பிறக்கும் அற்புதமான கவிதை.

    ReplyDelete