Wednesday, November 3, 2010

கிரந்த யூனிகோடு அட்டவணை: அவசரக் கூட்டத்தில் நடந்ததென்ன- ரவிக்குமார்


இன்று தமிழ்ப் பல்கலைக்கழக மாண்பமைத் துணைவேந்தர் அவர்களால் கூட்டப்பெற்ற அவசரக் கூட்டம் சென்னையிலிருக்கும் செம்மொழி அலுவலகத்தில் நடைபெற்றது. பதினைந்துபேர் அதில் கலந்துகொண்டனர். முன்னாள் துணைவேந்தர் திரு. பொன்னவைக்கோ, முனைவர் மறைமலை, முனைவர் ஜெயதேவன் , முனைவர். தெய்வசுந்தரம், முனைவர் நக்கீரன், மணி.மணிவண்ணன், இராமகி, ஞானபாரதி, ரவிக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்ட அக்கூட்டத்தைத் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் மா. ராசேந்திரன் அவர்கள் தலைமையேற்று ஒருங்கிணைத்தார்கள்.
கூட்டம் சரியாக மாலை நான்கு மணிக்குத் துவங்கியது. கூட்டத்தின் தலைவர் முன்னுரையாக சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். தற்போது நடந்துவரும் விவாதத்தின் மையப் புள்ளி எது என்பதை அவர் எடுத்துரைத்தார்.

” கிரந்தம் என்பது எழுத்துதானேயொழிய அதுவொரு மொழியல்ல. இந்திய அரசின் தகவல் தொழில் நுட்பத்துறையின் சார்பில் கிரந்த எழுத்துகளை யூனிகோடில் இடம் பெறச் செய்ய ஒரு முன்மொழிவு அனுப்பப் பட்டுள்ளது.
அதில் தற்போதைய கிரந்தத்தில் இல்லாத தமிழ் எழுத்துகள் ஐந்து - எ, ஒ, ழ, ற, ன - புதிதாகக் கூட்டப் பட்டுள்ளன. நமது பழமையான இலக்கிய செல்வங்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே கிரந்த எழுத்துகளை யூனிகோடில் கொண்டுவருவதாகச் சொல்கிறார்கள். அதுதான் அவர்களின் நோக்கமென்றால் தற்போது கிரந்தத்தில் இருக்கும் தமிழ் எழுத்துகளே போதுமே அதற்கு மேல் ஏன் இன்னும் ஐந்து எழுத்துகளைச் சேர்க்கிறார்கள்? ” என்று தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் வினவினார். அதற்கு, நாசா. கணேசன் சொல்லும் காரணம் அங்கே எடுத்துரைக்கப்பட்டது. தற்போது கிரந்த எழுத்துகளில் உள்ள மரபான இலக்கியங்களை கணினிக்கு மாற்ற முயன்றால் அதற்கு இப்போது கண்டறியப்பட்டிருக்கும் எந்தவொரு மென்பொருளும் பயன்படாது. ஆனால் , இந்த ஐந்து தமிழ் எழுத்துகளை சேர்த்துவிட்டால் கிரந்த எழுத்துகளைத் தடங்கலின்றிப் படிக்கலாம்.  என்பதுதான் கணேசனின் ஆலோசனை.


துணைவேந்தரையடுத்து திரு. மணி.மணிவண்ணன் பேசினார்: ” கிரந்த எழுத்துகளின் பட்டியல் உருவாக்கப்படுவதை நாம் எதிர்க்கவில்லை. மத்திய அரசு அனுப்பியுள்ள முன்மொழிவைத் தயாரிப்பதில் முக்கிய பங்காற்றிய ஷ்ரீரமண ஷர்மா என்பவரே கிரந்த எழுத்துகளோடு தமிழ் எழுத்துகளைச் சேர்ப்பதை விரும்பவில்லை. அது முழுக்க முழுக்க நாசா கணேசனின் வேலைதான். தேவாரத்தை கிரந்தத்தில் எழுதவேண்டும் என்றால் இந்த ஐந்து எழுத்துகளையும் உள்ளடக்கித்தான் ஆகவேண்டும் என்று வலியுறுத்தி இந்த முடிவை நோக்கி இட்டுச் சென்றவர் அவர்தான். இப்போது இதை நாம் தடுக்காவிட்டால் எதிர்காலத்தில் தமிழுக்கு மிகப்பெரும் கேடு உண்டாகும். கிரந்த எழுத்தைக்கொண்டே முழுத் தமிழையும் எழுதி, தமிழையும் மலையாளம் போன்ற கதம்ப மொழியாக்கும் முயற்சிக்கு இது வழி  வகுக்கும்.
 ஏற்கனவே ஆங்கிலம் கலந்து தமிங்கிலம் ஆவது போதாது என்று தமிழ் தன் தனித்தன்மையை இழந்து மலையாளம் போல ஒரு கலப்பட மொழியாகும்.
 தமிழ் மொழி, எழுத்து எல்லாமே சமஸ்கிருதத்திலிருந்து பிறந்தது என்ற பரப்புரை வருங்காலத்தில் வலுவாகும்.
  தமிழ் “நீச்ச பாஷை”, அடிமை மொழி, தேவமொழியிலிருந்து  பிறந்த இழிவான மொழி என்பவை போன்ற பரப்புரைகள் அதிகரிக்கும்.
 அழிந்து போன மணிப்பிரவாள நடை மீண்டும் உயிர்ப்பித்து எழுந்து அதுதான் உயர்ந்த நடை என்று வலுப்பெறலாம்.” என மணிவண்ணன் இந்தப் பிரச்சனை குறித்த அச்சத்தை முன்வைத்தார்.

அடுத்து பேசிய திரு. இராம.கி வரைபடம் ஒன்றை வரைந்துகாட்டி கிரந்தம் ,தமிழ் இரண்டுக்கும் தனித்தனியே எழுத்துகள் இருக்கின்றன. இரண்டு மொழிகளுக்கும் பொதுவான எழுத்துகளும் உள்ளன. தமிழுக்கே உரிய தனித்தன்மை மிக்க எழுத்துகளை சேர்த்து கிரந்தத்தை ஒரு சூப்பர் செட் ஆக ஆக்கப்பார்க்கிறார்கள்.அப்படி ஆக்கிவிட்டால் தென்னிந்திய மொழிகள் நான்கையும் கிரந்த வரிவடிவத்தைக்கொண்டே எழுதிவிடலாம். அதன்பிறகு தமிழ் எப்படி வாழும்? என்று கேட்டார்.

அவர்களைத் தொடர்ந்து திரு. பொன்னவைக்கோ , முனைவர் மறைமலை உள்ளிட்டோர் அதே கருத்துகளை வலியுறுத்திப் பேசினர்.
’ கிரந்தத்தோடு தமிழ் எழுத்துகளைச் சேர்ப்பது என்பது தொழில்நுட்ப ரீதியிலும் தவறானது.’ ஒரே எழுத்தை இரண்டு இடங்களில் ‘ என்கோடு ‘ செய்யக்கூடாது என யூனிகோடு அமைப்பாளர்கள் கூறுகின்றனர்’ என்பதைப் பலரும் சுட்டிக்காட்டினர். ஆனால், ரஷ்ய மொழியில் ‘ A’ என்ற எழுத்து இருக்கிறது. அதன் யூனிகோடு எண்: 0410 ஆனால் அதே எழுத்து ஆங்கிலத்திலும் இருக்கிறது. அதன் யூனிகோடு எண்: 0041 என ழான் லுய்க் செவ்வியார் மடல் ஒன்றில் மணிவண்ணனிடம் தெரிவித்திருந்தார். அது என் நினைவுக்கு வந்தது.

வணிகரீதியான பிரச்சனைகளை சிலர் சுட்டிக்காட்டினர். ‘ பிஷிங் ‘ எனப்படும் மோசடிக்கு சாத்தியம் இருப்பதாக சிலர் சுட்டிக்காட்டினர். ஆனால் அத்தகைய மோசடிகளைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகளும் இருக்கின்றன என்பதை அந்த நண்பர்களும் அறிவார்கள். இதையும் திரு. செவ்வியார் அந்த மடலில் சுட்டிக்காட்டியிருந்தார்.

நான் எனது சந்தேகங்கள் என இரண்டு விடயங்களை எழுப்பினேன்.
கிரந்த எழுத்துகளில் ஏற்கனவே சில தமிழ் எழுத்துகள் இருக்கின்றன;  அவற்றை என்கோடு செய்யும்போது மேலும் ஐந்து எழுத்துகளை என்கோடு செய்வதில் என்ன சிக்கல் ? அடுத்தது, தமிழ் எழுத்துகளைச் சேர்த்து  கிரந்தத்தை ஒரு சூப்பர் செட் ஆக உருவாக்க நினைக்கிறார்கள் என்று சொல்கிறீர்களே தமிழை ஏன் அப்படியொரு ’சூப்பர்  செட் ’ ஆக உருவாக்கக்கூடாது ? என்று கேட்டேன். அதற்கு யாரும் திருப்தியான பதிலை அளிக்கவில்லை.

பலரும் கருத்து தெரிவித்த பின்னர் கூட்டத்தில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. ” இந்தப் பிரச்சனையின் முக்கியத்துவம் கருதி இதுகுறித்து தமிழக அரசு உடனே தலையிட வேண்டும், ஒரு நிபுணர் குழுவை அமைத்து இதை ஆராயவேண்டும் “ என்பதே தீர்மானத்தின் சாராம்சம்.

கிரந்தம் குறித்த   இந்திய அரசின் முன்மொழிவு,  தென்னாசியத் துணைக்குழுவால் ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டது.
 இந்திய அரசே அதன் முன் மொழிவிலிருந்து தமிழ் எழுத்துகளை நீக்கினால் ஒழிய, புதிய கிரந்தத்தில் இந்தத் தமிழ் எழுத்துகள் இருப்பதை யாராலும் தடுக்கமுடியாது என்பதைப் பலரும் சுட்டிக்காட்டினர்.


"நெய்யா லெரிநுதுப்பே மென்றற்றாற் ..." என்ற திருக்குறள் வரியை திரு. செவ்வியார் அவர்கள் சில நாட்களுக்கு முன்னால் மடல் ஒன்றில் சுட்டிக்காட்டியிருந்தார். அவர் சொல்வது உண்மைதான்.  உணர்ச்சிவசப்பட்ட மனநிலையோடு இப்பிரச்சனையை அணுகுவது ஒரு பயனையும் தராது என்பது மட்டுமின்றி சேதத்தையும் ஏற்படுத்திவிடும். இந்தக் கூட்டத்தில் சமஸ்கிருத அறிஞர்கள் ஒருசிலரேனும் கலந்துகொண்டிருந்திருந்தால் அனைத்துதரப்பு வாதங்களையும் கேட்பதற்கு வாய்ய்ப்பு ஏற்பட்டிருக்கும். அது ஒரு குறைதான். எனினும் , தமிழக அரசைத் தலையிடச் செய்வதற்கு இந்தக் கூட்டம் பயன்படுமெனில் அதுவே போதும்.

இந்தப் பிரச்சனையின் முக்கியத்துவம் கருதி சில மணி நேர இடைவெளியில் இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்த தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் அவர்களுக்கும், கலந்துகொண்ட அறிஞர் பெருமக்களுக்கும் நன்றி. இதுகுறித்த விவாதங்களை மேலும் பரந்த தளத்துக்கு எடுத்துச் செல்வதே இதுபற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கச் செய்யும். அதற்குத் தமிழ் அறிவுலகம் முன்வரவேண்டும்.

:

5 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. // தமிழ் எழுத்துகளைச் சேர்த்து கிரந்தத்தை ஒரு சூப்பர் செட் ஆக உருவாக்க நினைக்கிறார்கள் என்று சொல்கிறீர்களே தமிழை ஏன் அப்படியொரு ’சூப்பர் செட் ’ ஆக உருவாக்கக்கூடாது ? என்று கேட்டேன்//

    ​​தென்னிந்திய ​​மொழிகள் அ​னைத்​தையும் கிரந்தத்​தை ​வைத்து எழுதிவிடலாம் என்றால் தமிழ் வார்த்​தைக​ளைச் ​​சேர்ப்பதன் மூலமாக தமிழ் எப்படி 'சூப்பர் ​செட்' ஆக உருவாகும்? திரு. மணி.மணிவண்ணன் அவர்களின் கருத்து சரியானது என்பது என் தாழ்​மையான கருத்து நண்ப​ரே.

    ReplyDelete
  3. உங்களின் முயற்சிக்கு பாராட்டுகள் .

    தமிழ் தன்னை கணினிக்கு ஏற்றவாறு மாற்றிக்கொண்டு வாழும் வல்லமை பெற்றது . இணையதினாலேயே தமிழ் இன்னமும் வேகமாக பரவுகிறது . மேலும் உலகெங்கும் செற்றுள்ள தமிழர்களாலும் அது மேலும் வளரும் அழியாது ஒருபோதும் !!!

    ReplyDelete
  4. நாக. கணேசன் என்ற தனி மனிதர், இணைய மாநாடு 2010 நடக்க ஆதரவுக் குரல் கொடுத்தவர். கணேசன் கிரந்த ஆதரவாளர் என்பது உலகறிந்த செய்தி.

    கணினிப் பிர்ச்சினை இல்லாதது போலக் கணேசன் பிரச்சனை மட்டும் பேசியது...................

    ReplyDelete
  5. தமிழ் எழுத்துக்களை ஒரு சூப்பர செட்டாக செய்வது இன்றைய காலக்கட்டத்தில் தேவைப்படுகின்றது. அதாவது இந்திய மொழிகள் அனைத்தும் ஒரு குடும்பமே. இதில் ஆரியர் திராவிடர் என்ற பிரச்சினை இல்லை. ஆங்கிலேயர் வந்தனர் சென்றனர் என்பது போல், முன்பொரு காலக்கட்டத்தில் ஆரியர் வந்தனர் சென்றனர் இப்போது ஆரியர் எவரும் இந்தியாவில் இல்லை. அனைவரும் தமிழர்கள் அல்லது தமிழர்வழி வந்தவர்களே. தமிழ்தான் அனைத்து இந்திய மொழிகளுக்கும் தாய்மொழி. எனினும் மற்றவர்கள்தேவையில்லாமல் கூடுதலாக எழுத்துக்களை யும் கூட்டு எழுத்துக்களையும் பெருக்கிக்கொண்டு இன்னல் உறுகின்றார்கள். எனவே, மற்ற மொழியினரின் கூடுதல் எழுத்து மற்றும் கூட்டு எழுத்துச் சுமையைக் குறைத்து கல்வித் திறனை அதிகரிக்க வேண்டும். அதற்காக தமிழ் எழுத்துக்களை இந்திய மொஇகள் அனைத்திற்கும் பொது வரிவடிவமாக்கிட வேண்டும்.இதற்கான கருத்துரையை மத்திய மாநில அரசுகளுக்கு ஏற்கனவே அனுப்பிவைத்துள்ளேன்.

    ReplyDelete