23-1-2007 பிற்பகல் 12-25- 12.40
ஆளுநர் பேருரைக்கு நன்றிகூறும் தீர்மானத்தின்மீது விவாதம்
திரு. து. ரவிக்குமார்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, ஆளுநர் உரைமீது என்னுடைய கருத்துகளைப் பதிவு செய்வதற்கு வாய்ப்பு அளித்த உங்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆளுநர் உரையின் வாயிலாக முன்வைக்கப் பட்டிருக்கின்ற தமிழக அரசின் அறிவிப்புகளிலே, பல்வேறு நல்ல அம்சங்கள் இருக்கின்றன என்கின்றபோதிலும், ஒரு மூன்று அம்சங்களை நான் சுட்டிக்காட்டிப் பாராட்டக் கடமைப்பட்டிருக்கின்றேன்.
முதலிலே,எனது கோரிக்கையை ஏற்பதுபோல, வீட்டுப் பணியாளர்களுக்குத் தனியாக ஒரு நல வாரியம் அமைப்பது என்கின்ற இந்த அரசாங்கத்தின் முடிவு, இந்தியாவிலே வேறு எங்கும் எந்த மாநிலத்திலும் இல்லாத ஒரு சிறப்பான ஒரு முடிவு என்பதைச் சுட்டிக்காட்டி நான் வரவேற்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி) இந்த அரசு பொறுப்பேற்றதற்குப் பின்னாலே, பெண்களுக்கு என்று பல்வேறு நலத் திட்டங்களைத் தொடர்ந்து அறிவித்து வருகிறது.
இன்றைக்குப் பாராளுமன்றத்திலே பெண்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்பதற்காக திராவிட முன்னேற்றக் கழகமே, மாநிலமெங்கும் எங்கும் பேரணிகளை நடத்தும் என்கின்ற அறிவிப்பும்கூட வந்திருக்கிறது. அறங்காவலர் குழுவிலே பெண்களை இடம்பெறச் செய்ய வேண்டும் என்கின்ற அறிவிப்பு; அதைத் தொடர்ந்து வீட்டுப் பணியாளர்களுக்கென்று தனி வாரியம். ஏனென்று சொன்னால், வீட்டுப் பணியாளர்களாக இருப்பவர்கள், 100-க்கு 99 விழுக்காடு பெண்கள்தான். மிகவும் அடித்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த அந்தப் பெண்களுக்கு மத்திய அரசு கொண்டுவந்திருக்கின்ற அந்த-domestic violence act-அந்தக் குடும்ப வன்முறை சட்டத்திலேகூட, அத்தகைய பெண்கள்பற்றி எந்தவிதக் குறிப்பும் இல்லை. அப்படிப் புறக்கணிக்கப்பட்டு, ஒதுக்கப்பட்டு, யாரும் கவனிப்பாரற்றுக் கிடந்த அந்த வீட்டுப் பணியாளர்களைக் கவனத்தில் எடுத்து, இந்த அரசு அவர்களுக்கென்று ஒரு நல வாரியத்தை உருவாக்கியிருப்பது இந்த ஆளுநர் உரையிலேயே ஒரு சிகரமான அறிவிப்பு என்று நான் கருதி அதைப் பாராட்டுகின்றேன். (மேசையைத் தட்டும் ஒலி)
அடுத்ததாக, சிறுபான்மை மக்களுக்கு இந்த அரசு காட்டிவருகின்ற பரிவு, அக்கறை என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. இப்போது இஸ்லாமிய மக்களுடைய சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்காக மத்திய அரசால் அமைக்கப்பட்ட இராஜேந்தர் சச்சார் குழு, தன்னுடைய பரிந்துரைகளைச் சமர்ப்பித்திருக்கின்றது. அது மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை என்றாலுங்கூட, அந்த அறிக்கையையும் பரிசீலித்து, அதிலே சொல்லப்பட்டிருக்கின்ற பரிந்துரைகளை நாங்கள் நடைமுறைப்படுத்துவோம் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது என்பது இஸ்லாமிய மக்கள்பால் இந்த அரசுக்கு இருக்கின்ற அக்கறையை, அன்பை எடுத்துக்காட்டுவதாக இருக்கின்றது. அதையும் நான் பாராட்டி வரவேற்கின்றேன்.
அடுத்ததாக, வீட்டுமனை இல்லாத ஏழை மக்கள். அவர்களுக்கெல்லாம் ஆறு மாத காலத்திற்குள்ளே வீட்டுமனைகள் வழங்கப்படும் என்கின்ற ஓர் அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது என்கின்ற அறிவிப்பும், பாராட்டி வரவேற்கத்தக்க அறிவிப்பாகும்.
இங்கே இந்த அரசு பொறுப்பேற்றதிலிருந்து கல்வி என்பதுபற்றி, அது காட்டுகிற அக்கறையை நாம் எல்லோரும் பாராட்டிக் கொண்டிருக்கின்றோம். என்னுடைய முதல் உரையிலும்கூட நான் அதைக் குறிப்பிட்டுப் பாராட்டினேன். இரண்டு அமைச்சர்கள் முதல்முறையாகத் தமிழக வரலாற்றிலே, கல்விக்காக நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள். இன்றைக்கு முதல்வர் அவர்கள் எதை எண்ணுகிறார்களோ அதை நிறைவேற்றும் விதமாக நம்முடைய மாண்புமிகு முதல்வர் அவர்களுடைய சிறந்த தள கர்த்தர்களாக, உயர் கல்வித் துறை அமைச்சரும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும் விளங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அவர்களுடைய அறிவிப்புகள் காட்டுகின்றன.
இப்போது பல்கலைக்கழகங்களுக்காக, பல்கலைக்கழகப் பொதுச் சட்டம் ஒன்றை, இந்த அரசு கொண்டுவர இருக்கின்றது. அதுமட்டுமல்லாமல், இங்கே ஒரு சட்டமுன்வடிவு அறிமுகப்படுத்தப்பட்டது. பல்கலைக்கழகங்களில் இணைக்கப்பட்டிருந்த Affiliated Colleges என்கின்ற அந்த நிலையை மாற்றி, அந்தக் கல்லூரிகளையெல்லாம் அரசே தன்னுடைய நேரடி மேற்பார்வையில் கொண்டுவருகின்ற அந்த அறிவிப்பானது, பல்கலைக்கழகங்களிலே இருந்த பல்வேறு பிரச்சினைகளை, குறிப்பாக அங்கே எழுந்துகொண்டிருந்த பல்வேறு முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளை எல்லாம் ஒரு முடிவுக்குக் கொண்டுவரும் விதமாக அமைந்திருக்கிறது என்பதை நாம் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. எப்படி இந்தக் கல்லூரிகளை நேரடியாக அரசுக் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவந்தோமோ, அப்படி இந்தக் கல்வி என்பது ஏற்கெனவே மாநிலங்களுடைய பட்டியலிலே இருந்தது; பின்னாலேதான் அது பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது; அப்படிப் பொதுப் பட்டியலுக்குக் கொண்டு செல்லப்பட்ட அந்தக் கல்வியை, மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வரவேண்டும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பல்வேறு கூட்டங்களிலே பேசி வருகிறார். அது நம்முடைய அரசாங்கத்தினுடைய கொள்கையும்கூட என்பதனால், அந்தக் கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வருவதற்கு நாம் முன்முயற்சி எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்ளுகின்றேன்.
இப்போது இந்தப் பல்கலைக்கழகப் பொதுச் சட்டம் கொண்டுவருகின்ற இந்த நேரத்திலே, பல்வேறு மாநிலங்களில் இருப்பதைப்போல, அண்மையிலே இருக்கின்ற ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருப்பதைப்போல, அந்தப் பல்கலைக்கழகங்களினுடைய Senate, Syndicate போன்ற அவைகளிலே பெண்களுக்குப் பிரதிநிதித்துவம் அந்தப் பொதுச் சட்டத்திலே இருக்க வேண்டும், மாணவர்களுடைய பிரதிநிதிகள் அந்த அவைகளிலே இடம்பெற வேண்டும் என்கின்ற கோரிக்கை இன்று பல்வேறு அமைப்புகளால் முன்வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அதுபோலவே, நாம் இப்போது சமூக நீதியை அனைத்துத் தளங்களிலும் நிலைநாட்டவேண்டும் என்று பாடுபட்டுக் கொண்டிருக்கின்றோம். தனியார்த் துறைகளிலும்கூட இட ஒதுக்கீடு வேண்டும் என்று இந்த ஆளுநர் உரையிலே குறிக்கப்பட்டு இருக்கின்றது.
இந்த நேரத்திலே நம்முடைய பல்கலைக்கழகங்களில் இருக்கின்ற Senate, Syndicate போன்ற அவைகளிலே இட ஒதுக்கீடு இல்லாமல் இருப்பது, மிகப் பெரிய வேதனையான ஒரு விஷயமாகும். இந்த அவல நிலை இனியும் தொடரக்கூடாது. மாண்புமிகு முதல்வர் அவர்கள், நிச்சயமாக இதை முடிவுக்குக் கொண்டுவந்து, இந்தப் பல்கலைக்கழகப் பொதுச் சட்டத்திலே பல்கலைக்கழகங்களுடைய Senate, Syndicate போன்ற அவைகளிலே தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கு மட்டுமல்லாமல், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும், பெண்களுக்கும், மாணவப் பிரதிநிதிகளுக்கும் இட ஒதுக்கீட்டினை வழங்குவதற்கு நிச்சயமாக வழிவகை செய்வார் என்று நாங்கள் நம்புகிறோம்.
இப்போது கல்வி வளர்ச்சியிலே நாம் காட்டுகின்ற அந்த அக்கறையின் வெளிப்பாடாகக் கல்லூரிகளுக்கு ஏராளமாக ஆசிரியர்கள் நியமிக்கப்பட இருக்கின்றார்கள் என்ற அறிவிப்பும் அரசால் வெளியிடப்பட்டிருக்கின்றது.
அப்படிக் கல்லூரி ஆசிரியர்களை நியமிக்கும்போது, ஏற்கெனவே சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கு அந்தக் கல்லூரி ஆசிரியர் பணியிடங்களிலே வழங்கப்பட வேண்டிய பின்னடைவுப் பணியிடங்களைப் பூர்த்தி செய்து, அதன் பிறகு மற்ற இடங்களையும் நிறைவு செய்ய வேண்டுமாய் உங்களிடத்திலே நான் கேட்டுக்கொள்கின்றேன்.
கடந்த சில ஆண்டுகளாக நாம் வருமான வரி முதலான வரிகளைக் கட்டும்போது, அதிலே 2 சதவீதம் Educational Cess என்று வசூலிப்பதை நாம் பார்த்திருப்போம். அந்த Educational Cess கல்வி வளர்ச்சிக்கென்று இன்றைக்கு மத்திய அரசால் Income Tax--இல் மட்டுமல்ல; Service Tax போன்ற அத்தனை வரிகளிலும், 2 சதவீத Educational Cess வசூலிக்கப்பட்டு வருகிறது. அப்படி வசூலிக்கப்படுகின்றEducational Cess என்பது, உண்மையிலேயே கல்விக்குத்தான் பயன்படுத்தப்படுகிறதா என்ற கேள்வி இன்றைக்குப் பலருக்கும் எழுந்திருக்கிறது. அதிலும் குறிப்பாக, தமிழ்நாட்டிலேயிருந்து வசூலிக்கப்படுகின்ற அந்த வரிகளிலே எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் இப்படி Educational Cess-ஆக வசூலிக்கப்பட்டது; அது நம்முடைய மாநிலத்தினுடைய கல்வி வளர்ச்சிக்காகத் திரும்பத் தரப்பட்டிருக்கிறதா என்ற கேள்வியும் இப்போது எழுகிறது. நம்முடைய மாநிலத்திற்கு உரிய அந்தப் பங்கினை நாம் கேட்டுப் பெற வேண்டும். நிச்சயமாக, நம்முடைய மாநிலத்தைச் சேர்ந்த நிதியமைச்சர் அதை மறுக்கமாட்டார் என்று நான் நம்புகிறேன்.
இப்போது தமிழகத்தினுடைய மக்களுடைய நன்மைக்கு, நலன்களுக்கு, எதிர்காலத்திலே மிகப் பெரிய ஒரு சவாலாக அமைந்திருக்கின்ற நீர் பங்கீட்டுப் பிரச்சினை என்பது, ஒரு முடிவுக்கு வரக்கூடிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. காவிரி நதிநீர் ஆணையம் தன்னுடைய இறுதித் தீர்ப்பினை பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி வழங்க இருக்கின்ற நல்ல செய்தி, இப்போது நமக்கெல்லாம் வந்திருக்கின்றது. ஆனால் அந்த நல்ல செய்தி வந்திருக்கின்ற அந்த நேரத்திலே இந்தக் காவிரி நதிநீர் ஆணையம் தன்னுடைய இடைக்காலத் தீர்ப்பைப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் வழங்கியபோது 1991 ஆம் ஆண்டிலே அது இடைக்காலத் தீர்ப்பை வழங்கி, அந்தத் தீர்ப்பானது அன்றைக்கு மத்திய அரசினால், அன்றைக்குப் பாரதப் பிரதமராக இருந்த திரு. நரசிம்ம ராவ் அவர்கள் தலைமையிலே இருந்த அரசினால், அரசிதழிலே வெளியிடப்பட்டபோது, 1991 ஆம் ஆண்டு, டிசம்பர் 11 ஆம் தேதி அது வெளியிடப்பட்டபோது, அன்றைக்கு கர்நாடகத்தினுடைய முதல்வராக இருந்த திரு. பங்காரப்பா அவர்கள் உடனடியாக கர்நாடக மாநிலத்திலே ஒரு
பந்த்-ஐ அறிவித்தார்கள். அந்த பந்த் -ன்போது, அங்கே வாழுகின்ற தமிழர்களுக்கு எதிராக மிகப் பெரிய கலவரம் வெடித்து, ஏறத்தாழ 3 நாட்கள், பெங்களூர், மைசூர், சாம்ராஜ் நகர், மாண்டியா போன்ற மாவட்டங்களில் எல்லாம் அந்தக் கலவரம் பரவி, அங்கே வாழ்ந்த தமிழர்களுடைய பொருட்கள், 300 கோடி ரூபாய் பெறுமானமுள்ள சொத்துகள் எல்லாம், அன்றைக்குச் சூறையாடப்பட்டன; பல தமிழர்கள் கொல்லப்பட்டார்கள்; ஏறத்தாழ 10,000 தமிழர்கள் அதிலே படுகாயப்பட்டார்கள். 2004 ஆம் ஆண்டிலே உச்ச நீதிமன்றம் அவர்களுக்கெல்லாம் இழப்பீடு வழங்க வேண்டுமென்று உத்தரவிட்டதை நாமெல்லாம் அறிந்திருப்போம். ஒரு இடைக்காலத் தீர்ப்பிற்கே அப்படியொரு கலவரம் வெடித்தது என்று சொன்னால், இப்போது இறுதித் தீர்ப்பு வருகிறது; அங்கே வாழ்கின்ற நம்முடைய தமிழ்ப் பெருங்குடி மக்கள் என்ன ஆவார்களோ என்கின்ற ஒரு அச்சமும் நமக்குக் கூடவே வருகிறது. இந்த நிலையிலே அவர்களுடையப் பாதுகாப்பிற்காக ஆக வேண்டிய காரியங்களைச் செய்ய வேண்டுமென்று சொல்லி, மத்திய அரசிடம் நாம் இப்போதே குரல் எழுப்ப வேண்டுமென்று தமிழக அரசை நான் அன்போடு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன்.
இப்போது முல்லைப் பெரியாறு சிக்கலுக்காக, நாம் மீண்டும் உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றிருக்கின்றோம். உச்ச நீதிமன்றத்திலே நாம் எடுத்து வைக்கின்ற வாதங்கள் நிச்சயமாக நம்முடைய நியாயங்களை அவர்களுக்கு எடுத்துச் சொல்லும். சர்வதேச அளவிலே நதிநீர்ப் பங்கீடு பற்றிய பிரச்சினைகளிலே, ஒரு புதிய கருத்தாக்கம் இன்றைக்குப் பேசப்படுகிறது; ஏற்றுக்கொள்ளப்பட்டதாய் இருக்கின்றது. அது என்னவென்று சொன்னால், கண்ணுக்குப் புலப்படாத தண்ணீர், அதாவது virtual water என்கின்ற ஒரு concept, இப்போது நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்சினைகளிலே விவாதிக்கப்படுகிறது; ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றது. இப்போது கேரளாவிலேயிருந்து நாம் பெறுகிற தண்ணீரைவிட, அந்த மாநிலத்து மக்களுக்கு அனுப்புகிற பொருட்களிலே, மறைமுகமாக நாம் அனுப்புகிற தண்ணீரினுடைய அளவு அதிகமானது. இதைத்தான் virtual water என்று இப்போது சர்வதேச அளவிலான நிபுணர்கள் ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள். அந்த வாதத்தை, அந்த நியாயத்தை, நாம் உச்ச நீதிமன்றத்திலே எடுத்து வைப்போமேயானால், நிச்சயமாக நம்முடைய தரப்புக்கு மேலும் வலுவாக அது அமையுமென்று நான் எடுத்துச்சொல்ல விரும்புகின்றேன்.
அடுத்ததாக, இப்போது வீட்டுமனைகள் கொடுக்கப்பட்டாலும், குறிப்பாகத் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்கள், மிகவும் பிற்படுத்த மக்கள், அவர்களுக்கென்று வீடுகள் கட்டுவதற்காக, நாம் தொகுப்பு வீடுகள் திட்டம் என்ற ஒன்றைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறோம். மத்திய அரசால் ஒரு வீட்டுக்கு 25 ஆயிரம் ரூபாய் அதற்கென வழங்கப்படுகிறது. மாநில அரசு தன்னுடைய பங்குக்கு இப்போது 12 ஆயிரம் ரூபாயைக் கொடுக்கிறது. ஏற்கெனவே 9 ஆயிரம் ரூபாய் இருந்தது. கடந்த முறை நான் கேட்டுக்கொண்டதற்கிணங்க, மாண்புமிகு முதல்வர் அவர்கள் கருணை வைத்து, 3 ஆயிரம் ரூபாயை உயர்த்தி அறிவித்தார்கள். ஆக மொத்தம், 37 ஆயிரம் ரூபாய் ஒரு வீட்டிற்கு என வழங்கப்படுகிறது. இப்போது சுனாமிக்காகக் கட்டப்பட்ட வீடுகளைச் சென்று பார்க்கும்போது, வெறும் 300 சதுர அடியிலே ஒரு வீட்டை, சாதாரணமாகக் குடியிருக்கின்ற ஒரு வீட்டைக் கட்டுவதற்குக்கூட, குறைந்தது ஒன்றரை இலட்சம் ரூபாய் செலவாகிறது என்று அங்கே அந்த வீடுகளைக் கட்டித் தந்த தன்னார்வத் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் சொல்கிறார்கள். அப்படி இருக்கின்ற நேரத்திலே, வெறும் 37 ஆயிரம் ரூபாயை வைத்து நாம் ஒரு வீட்டைக் கட்டுவது என்பது, ஆகக்கூடிய காரியமல்ல. எனவே, இந்த வீடுகளுக்குத் தமிழக அரசின் சார்பிலே ஒதுக்கப்படுகிற அந்த நிதியை, அதிலும் குறிப்பாகத் தமிழக அரசு தன்னுடைய பட்ஜெட் ஒதுக்கீட்டிலே சிறப்புக் கூறு நிதியை ஒதுக்கும்போது, அந்த நிதியில் ஒரு பெருந்தொகையை இந்த வீடுகளுக்காக ஒதுக்கி, 75 ஆயிரம் ரூபாய் தமிழக அரசின் பங்காக ஒதுக்கி, அந்தத் தொகுப்பு வீடுகளுக்கான தொகையை, ஒரு இலட்சமாக அறிவிப்பதற்குத் தமிழக முதல்வர் அவர்கள் கருணைகூர்ந்து ஆவன செய்ய வேண்டுமென்று நான் மிகவும் பணிவோடு வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இப்போது இந்த ஆளுநர் உரையிலேயே மிக சர்ச்சைக்குரிய, விவாதத்திற்குரிய விஷயமாக பேசப்படுகிற ஒரு விஷயம், புதிய அரசமைப்புச் சட்டம் வேண்டும் என்கின்ற அந்தத் தீர்மானம்தான். ஒரு மாநில அரசு ஆளுநர் உரையின் வாயிலாக புதிய அரசமைப்புச் சட்டம் வேண்டும் என்கின்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டிருப்பது, அநேகமாக சுதந்திர இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை என்று நான் நினைக்கின்றேன். (மேசையைத் தட்டும் ஒலி) இன்றைக்கு ஏன் இந்த நிலையை நாம் எடுத்திருக்கின்றோம்? நூறு ஆண்டுகளுக்கும் மேலாக, நம்முடைய அரசியல் முன்னோடிகள் எல்லாம் மிகவும் உழைத்துப் பாடுபட்டு ஈட்டித் தந்த அந்த இட ஒதுக்கீட்டு உரிமைகள், இப்போது சிக்கலுக்கு உள்ளாகியிருக்கின்றன. அவையெல்லாம் இன்றைக்குப் பறிபோய்விடுமோ என்ற அச்சம், நம்மைச் சூழ்ந்திருக்கிறது. இன்னொரு புறம் மாநிலங்களுக்கு வரவேண்டிய உரிமைகள். கடந்த முறை முதல்வராக இருந்தபோதே நம்முடைய முதல்வர் அவர்கள் அன்றைக்குச் சொன்னார்கள்: இராஜமன்னார் குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்பட வேண்டும்; அரசமைப்புச் சட்டத்திலே 356-வது பிரிவு, 363-வது பிரிவு போன்றவை நீக்கப்பட வேண்டுமென்று அன்றைக்கு வலியுறுத்தினார்கள். ஒரு மாநில அரசு, சட்டம் ஒன்றை இயற்றி, அதைக் குடியரசுத் தலைவருடைய ஒப்புதலுக்கோ, கவர்னருடைய ஒப்புதலுக்கோ அனுப்பும்போது, அவர்கள் அதை அப்படியே வைத்துக் கொண்டிருக்கக் கூடாது; அவர்கள் கையெழுத்திட்டு அனுப்புவதற்கு ஒரு கால வரையறையை நிர்ணயிக்க வேண்டுமென்று அன்றைக்கு முதல்வர் அவர்கள் கோரிக்கை விடுத்தார்கள்.
நம்முடைய வரலாறு எல்லோருக்கும் நன்றாகவே நினைவு இருக்கும். முன்னாலே நாம் எல்லாம் திராவிட நாடு என்று தனி நாடு கோரினோம். (மணியடிக்கப்பெற்றது) பின்னாலே அதை விட்டு விட்டு, மாநில சுயாட்சி என்று நாம் இப்போது இந்திய இறையாண்மையை, ஒருமைப்பாட்டை ஏற்றுக்கொண்டிருக்கிறோம். அப்படி இருக்கின்ற நேரத்திலே நம்முடைய மாநில உரிமைகள் தொடர்ந்து பாதிக்கப்படுமேயானால், பறிக்கப்படுமேயானால், நாம் இப்படியான ஒரு தீவிரமான நிலையை எடுப்பது தவிர, வேறு வழியே இல்லை என்கின்ற ஒரு நிலையில்தான் புதிய அரசமைப்புச் சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும் என்கின்ற ஒரு நிலையை இன்றைக்கு அறிவிக்க வேண்டிய சூழலுக்கு ஆளாகியிருக்கின்றோம். ஆனால், இப்போது இருக்கிற அரசமைப்புச் சட்டம், நம்முடைய சமூக நீதிக் கொள்கைகளை நிறைவு செய்வதற்குத் தடையாக இருக்கிறதா என்ற கேள்வி நமக்குள் எழுகிறது. அரசமைப்புச் சட்டத்தை இயற்றிய நம்முடைய முன்னோடிகள் இந்த விஷயங்களை எல்லாம் ஆய்வு செய்து, இந்தியச் சூழலுக்கு ஏற்றபடியான, ஜனநாயக அமைப்புக்கு ஏற்றபடியான, ஓர் அரசமைப்புச் சட்டத்தைத்தான் வரையறுத்திருக்கின்றார்கள். இந்த அரசமைப்புச் சட்டத்தினுடைய சிறப்பே, இதனுடைய நெகிழ்ச்சித் தன்மைதான் என்று அன்றைக்கு அரசமைப்புச் சட்டம் பற்றி, அவையிலே அண்ணல் அம்பேத்கர் அவர்கள் சென்னார்கள். இந்த அரசமைப்புச் சட்டத்தை அறிமுகப்படுத்துகிறபோது அண்ணல் அம்பேத்கர் அவர்கள் மேலும் ஒன்றைக் குறிப்பிட்டார்கள்: இப்போது இந்த அரசமைப்புச் சட்டத்தை இங்கே நாம் அறிமுகப்படுத்தியிருக்கிறோம்; இது ஒரு நபருக்கு ஒரு வாக்கு, எல்லா வாக்குக்கும் ஒரே மதிப்பு என்கின்ற ஒரு சமத்துவத்தை ஏற்படுத்தியிருக்கிறது; அரசியல் தளத்திலே ஏற்படுத்தப்பட்டிருக்கின்ற அந்தச் சமத்துவம், பொருளாதாரத் தளத்திலே இல்லை; சமூக தளத்திலே இல்லை; சமூகத் தளத்திலே ஏற்றத்தாழ்வுகள், பொருளாதாரத் தளத்திலே ஏற்றத்தாழ்வுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன; அந்த ஏற்றத்தாழ்வுகள் சமமாக்கப்பட்டு, இங்கே முழுமையான சமத்துவம் (மணியடிக்கப்பெற்றது) நிறைவேற்றப்படாவிட்டால், ஒரு நாளைக்கு அந்த ஏற்றத்தாழ்வுகளால் பாதிக்கப்படுகிற மக்கள், இந்த அரசியல் ஜனநாயகத்தினுடைய அடிப்படைகளையே தகர்ப்பார்கள் என்று அன்றைக்கே அம்பேத்கர் அவர்கள் எச்சரித்தார்கள். அந்த எச்சரிக்கையை நாம் கடந்த 60 ஆண்டுகளாக, பல விதங்களிலே நம்முடைய அரசியலமைப்புகளைச் சரியாகக் கவனத்தில் எடுத்துக்கொள்ளாத காரணத்தினாலேதான், (மணியடிக்கப்பெற்றது) இப்போது அரசினுடைய அங்கங்களாக இருக்கின்ற Legislature, Executive, Judiciary என்கின்ற அந்த அங்கங்களுக்கிடையே ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டு, Judiciary என்கின்ற அந்த நீதித் துறையானது, எல்லாவற்றுக்கும் மேலாகத் தன்னை இறுத்திக்கொள்கின்ற ஒரு நிலைமை ஏற்பட்டு இருக்கின்றது. இதன்காரணமாக, நாம் புதிய அரசமைப்புச் சட்டம் ஒன்றைக் கொண்டுவர வேண்டுமென்று சொல்வோமேயானால், இன்றைக்கு 60 ஆண்டுகளாக இந்த நாட்டிலே ஒரு மதச் சார்பின்மையை, ஒரு ஜனநாயகத்தை, ஒரு கூட்டாட்சித் தத்துவத்தைக் காப்பாற்றிக் கொண்டிருந்த அந்த அரசமைப்பினுடைய அடிப்படையையே நாம் தூக்கியெறிந்துவிடுகிறோம் என்றுதான் பொருளாகும்.
அண்ணல் அம்பேத்கர் அவர்கள் அன்றைக்கே சொன்னார்கள் ‘இந்த அரசமைப்புச் சட்டம் துஷ்பிரயோகம் செய்யப்படுமேயானால், அதை எரிக்கிற முதல் நபராக நான் இருப்பேன்’ என்று அன்றைக்கு அவர்கள் அறிவித்தார்கள். அப்படியாக துஷ்பிரயோகம் செய்யப் படுகின்ற நேரத்திலே, இத்தகைய ஒரு தீவிரமான நிலையை நாம் எடுப்பது தவறில்லை. அரசமைப்புச் சட்டம் என்பது, ஒரு புனித நூல் அல்ல; அது மாற்றக்கூடாத விஷயம் அல்ல; ஏற்கெனவே, நூறு முறை அளவிற்கு அது திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது. ஆனாலும்கூட, இப்போது உலகத்திலேயே இருக்கின்ற அரசமைப்புச் சட்டங்களிலே, மிக நீளமான, மிக விரிவான அரசமைப்புச் சட்டம் நம்முடைய அரசமைப்புச் சட்டம்தான். இன்றைக்கு வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு. ஒரு கூட்டாட்சித் தத்துவத்தை. ஒரு மதச் சார்பின்மை தத்துவத்தை, ஜனநாயகத்தைத் தன்னுடைய ஆதாரமாகக் கொண்டிருப்பது, நம்முடைய அரசமைப்புச் சட்டம். நாம் வலியுறுத்துகிற இந்தச் சமூக நீதியானது, அரசமைப்புச் சட்டத்தினுடைய ‘‘Preamble' ' என்கின்ற ‘முகவுரை’-யிலேயே உறுதியளிக்கப்பட்டிருக்கிறது. அந்த ‘‘Preamble' ' என்பதும், அரசமைப்புச் சட்டத்தின் மற்ற பிரிவுகளைப் போலவே அதற்கு இணையாக வைத்துப் பார்க்கப்படவேண்டியதுதான் என்று பல்வேறு உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் கூறியுள்ளன.
மாண்புமிகு பேரவைத் தலைவர்: திரு. ரவிக்குமார், 19 நிமிடங்களுக்குமேல் பேசிவிட்டீர்கள்; இன்னொரு உறுப்பினர் பேசவேண்டியிருக்கிறது. (குறுக்கீடு) உரையை முடியுங்கள் சீக்கிரம்.
திரு. து. ரவிக்குமார்: எனவே, இந்தப் புதிய அரசமைப்புச் சட்டம் என்கின்ற அந்தக் கோரிக்கையை நாம் விரிவாகப் பரிசீலித்து, ஏற்கெனவே இருக்கின்ற அரசமைப்புச் சட்டத்திலேயே நம்முடைய கோரிக்கைகளையெல்லாம் உள்ளடக்கமுடியும்; நம்முடைய சமூக நீதியை அதன்மூலமாகவே காப்பாற்றிவிடமுடியும் என்கின்ற நிலை இருக்கின்ற காரணத்தினாலே, புதிய அரசமைப்புச் சட்டம் வேண்டாம்; ஏற்கெனவே இருக்கின்ற அரசமைப்புச் சட்டத்திலே இவற்றையெல்லாம் உள்ளடக்கக்கூடிய திருத்தங்கள் மட்டும் போதும் என்கின்ற அளவிலே நாம் ஒரு தீர்மானத்தை இங்கே எடுக்கவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
அண்மையில் இருக்கின்ற, இலங்கையிலே மீண்டும் நம்முடைய தமிழ் மக்கள் அல்லல்படுகிறார்கள்...
மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு உறுப்பினர் திரு. கே. திருநாவுக்கரசு. (குறுக்கீடு) எவ்வளவு நேரமாக நான் சொல்லிக்கொண்டு இருக்கிறேன்; நீங்கள் திரும்பத் திரும்பப் பேசிக்கொண்டிருக்கிறீர்களே?
(குறுக்கீடு) முடியுங்கள் சீக்கிரம்.
திரு. து. ரவிக்குமார்: அவர்களுடைய பிரச்சினைகளுக்கான தீர்வினைக் காண்பதுபற்றி இதிலே, நம்முடைய ஆளுநர் உரையிலே வாக்குறுதிகள் தரப்பட்டிருக்கின்றன. நம்முடைய மாண்புமிகு முதல்வர் அவர்கள் எடுத்துக்கொண்டிருக்கின்ற முன்முயற்சிகள் காரணமாக இப்போது அவர்களுக்கு ஓரளவிற்குப் பாதுகாப்பு ஏற்பட்டிருந்தாலுங்கூட, முழுமையானத் தீர்வு அங்கே எட்டப்படுவதற்கு, மேலும் நாம் கவனம் செலுத்தி பாடுபடவேண்டுமாய்க் கேட்டுக்கொண்டு, இந்த வாய்ப்புக்கு நன்றி சொல்லி அமைகிறேன். வணக்கம்.
No comments:
Post a Comment