Friday, November 5, 2010

தமிழ்ப் பல்கலைக் கழகத்துக்கு பத்து கோடி கொடுங்கள்









14-5-2010 முற்பகல் 11-40


சட்டமன்ற மானியக் கோரிக்கை மீதான விவாதம்

திரு. து. ரவிக்குமார்: மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் அவர்களே, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு சிறப்பாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்ற இந்த நேரத்திலே, அதற்கு வித்திட்ட நம்முடைய மாண்புமிகு முதல்வர், முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களை, இன்றைக்கு உலகமெல்லாம் இருக்கின்ற தமிழர்கள் போற்றிப் பாராட்டிக் கொண்டிருக்கின்றார்கள்.  இது தமிழுக்குச் செம்மொழி அந்தஸ்து கிடைத்ததற்குப் பிறகு நடைபெறுகின்ற முதல் மாநாடு என்ற அளவில் மட்டுமல்லாது, இன்றைக்குத், தமிழ் மொழியின் தொன்மையைப் பற்றிக் கேள்வி எழுப்புகிறவர்களுக்கெல்லாம் பதில் அளிக்கின்ற ஒரு மாநாடாகவும் விளங்கப் போகிறது என்பதுதான் இந்த மாநாட்டின் முக்கியமான ஒரு சிறப்புத் தன்மையாகும்.
இன்றைக்கு சமஸ்கிருதத்திலே ஆய்வுகளை மேற்கொண்டிருக்கின்ற பல்வேறு அறிஞர்கள், மேலைநாட்டு சிந்தனையாளர்களெல்லாம் ஒரு கருத்தைத் தொடர்ந்து பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.  தமிழினுடைய தொன்மைத் தன்மையைப் பற்றி அவர்கள் தொடர்ந்து சந்தேகங்களை எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.  குறிப்பாக, ஷெல்டன் பொல்லாக்  , ஹெர்மன் டீக்கன் போன்ற அறிஞர்கள், சங்க இலக்கியங்களுடைய காலமே பல்லவர் காலத்திற்குப் பிற்பட்டது, அதாவது, கி.பி. எட்டாம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டது என்கின்ற கருத்தைத் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.  கி.மு. 3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று நாம் சங்க இலக்கியத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கின்ற இந்த நேரத்திலே, சமஸ்கிருத ஆய்வுகளிலே ஈடுபட்டிருக்கின்ற அறிஞர்கள் சங்க இலக்கியத்தின் தனித்துவமான தன்மை என்று இன்றைக்கு உலகே வியந்து ஏற்றுக்கொண்டிருக்கின்ற திணைக் கோட்பாடுகூட சமஸ்கிருதக் கோட்பாடுகளிலிருந்து அல்லது அதனுடைய, குறிப்பாக, நாட்டிய சாஸ்திரத்திலிருந்து கடன் வாங்கப்பட்டது என்கின்ற கருத்தைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய தவறான கருத்துகளுக்கெல்லாம் விடையளிக்கும் விதமாகத்தான் இன்றைக்கு உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.
குறிப்பாக, இந்த மாநாட்டிலே இந்தப் பிரச்சினையை, அதாவது, சங்க இலக்கியத்தின் காலத்தை வரையறுப்பதற்கென்றே ஒரு சிறப்புக் கருத்தரங்கமும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது.  அந்த விதத்திலே, தமிழினுடைய சிறப்பை அறிவிப்பதாக மட்டுமல்லாமல், தமிழினுடைய தொன்மையை உலகிற்கு உணர்த்துவதாகவும் இந்த மாநாடு அமையப் போகிறது. அத்தகைய மாநாட்டை ஏற்பாடு செய்த நம்முடைய முதல்வர் அவர்களுக்கு மீண்டும் என்னுடைய நன்றியை நான் தெரிவித்துக்கொள்கின்றேன்.
அடுத்து, ஒவ்வொரு முறையும் இங்கே உலகத் தமிழ் மாநாடு நடந்தவுடனேயே, ஒரு நிறுவனம் ஒன்றைத் துவக்குகிற ஒரு மரபு தமிழகத்திலே இருக்கின்றது.  அப்படித்தான் தமிழ்ப் பல்கலைக்கழகம் துவக்கப்பட்டது.  உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனமும் துவக்கப்பட்டது.  இன்றைக்கு உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெற இருக்கின்ற நேரத்திலே, அந்த மாநாட்டைத் தொடர்ந்து இதுபோன்றே ஒரு நிறுவனத்தை நாம் துவக்க வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்கின்றேன்.
குறிப்பாக, இன்றைக்குத் தமிழுக்குச் செம்மொழி அந்தஸ்து கிடைத்திருப்பது போலவே, உலகில் பல்வேறு செம்மொழிகள் இருக்கின்றன. அந்தச் செம்மொழிகளையெல்லாம் ஒப்பிட்டு ஆய்வு செய்வதற்கென்று தனியான நிறுவனம் எதுவும் இதுவரை தமிழகத்திலே இல்லை.  எனவே, உலகச் செம்மொழிகள்v ஒப்பாய்வு  நிறுவனம் ஒன்றை நம்முடைய மாநாட்டைத் தொடர்ந்து நம்முடைய அரசு உருவாக்க வேண்டுமென்று நான் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன்.
நம்முடைய தமிழ் மொழிக்கென்று உருவாக்கப்பட்டிருக்கின்ற ஒரே பல்கலைக்கழகம் தஞ்சையிலே இருக்கின்ற தமிழ்ப் பல்கலைக்கழகம்.  1981 ஆம் ஆண்டிலிருந்து மிகச் சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கிற அந்தப் பல்கலைக்கழகம் நிதித் தட்டுப்பாட்டினால் தடுமாறிக் கொண்டிருக்கிறது.  கடந்த ஆண்டு அதற்கு 3.81 கோடி ரூபாயைத் தொகுப்பு நிதியாக நம்முடைய அரசு வழங்கியிருக்கிறது. என்றாலும், அந்த நிதி அந்தப் பல்கலைக்கழகத்தினுடைய செயல்பாடுகளுக்குப் போதுமானதாக இல்லை.  அங்கே சுமார் 55 பேராசிரியர் பதவிகள், விரிவுரையாளர் பதவிகள் sanction என்று தொடர்ந்து சொல்லப்பட்டு, அவர்களுக்கான ஊதியங்கள் அரசால் வழங்கப்படாத நிலை இருக்கிறது.  அவற்றை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு  ஊதியம் வழங்கப்படவேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கின்றேன்.

அதுமட்டுமல்லாமல், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தை சீரமைப்புச் செய்வதற்காக        திரு. அனந்தகிருஷ்ணன் அவர்களுடைய தலைமையிலே அமைக்கப்பட்ட சீராய்வுக் குழு தன்னுடைய அறிக்கையைச் சமர்ப்பித்து  இரண்டு, மூன்று ஆண்டுகள் ஆகியும்கூட, இன்னும் அது தொடர்பான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.  எனவே தமிழ்ப் பல்கலைக்கழக...

மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர்: உரையை முடித்துவிடுங்கள்,  (குறுக்கீடு) உட்காருங்கள்.

திரு. து. ரவிக்குமார்: தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்குக் குறைந்தபட்சம் ஆண்டுக்கு 10 கோடி ரூபாயாவது நம்முடைய அரசு நிதி ஒதுக்கி, தமிழ் மொழி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கவேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டு, அமைகின்றேன். நன்றி.

No comments:

Post a Comment