Monday, November 1, 2010

சிறப்புப் பொருளாதார மண்டலங்களிலே சமூகநீதி பாதுகாக்கப்படுமா



5-12-2006
வினா வரிசை எண் 22-க்கான துணை வினா
திரு. து. ரவிக்குமார்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் எங்கள் பகுதிக்கு வேண்டும், எங்கள் பகுதிக்கு வேண்டும் என்று உறுப்பினர்கள் இன்றைக்கு கோரிக்கை வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.  ஆனால் அந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்களிலே இருக்கின்ற தொழிலாளர் பாதுகாப்புச் சட்டங்கள் செயல்படுத்தப்பட முடியாது என்றும் அங்கே நாட்டில் இருக்கின்ற பல்வேறு சட்டங்கள், குறிப்பாக, சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற சட்டங்கள் - Environment Impact Assessment Report போன்றவை அங்கே தேவையில்லை என்றும் விதிகள் குறிப்பிடுகின்றன.  இவற்றால் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்கின்ற ஒரு அச்சத்தை, குறிப்பாக, நம்முடைய இடதுசாரி தோழர்கள் எழுப்பிக்கொண்டிருக்கின்றார்கள்.  நமது மாநிலத்திலே அமைகின்ற சிறப்புப் பொருளாதார மண்டலங்களிலே தொழிலாளர்களுடைய உரிமைகள் பாதுகாக்கப்படுமா?  அந்தப் பகுதியிலே இருக்கின்ற மக்களுக்கு அங்கே வேலைவாய்ப்பிலே முன்னுரிமை அளிக்கப்படுமா?  அந்த வேலைவாய்ப்புகளிலே சமூகநீதி பாதுகாக்கப்படுமா என்கின்ற கேள்விகளை உங்கள்வாயிலாக மாண்புமிகு முதல்வர் அவர்கள் முன்னிலையிலே வைத்து பதில் பெற விரும்புகிறேன்.
மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி: தலைவர் அவர்களே, சமூகநீதி பாதுகாக்கப்படுவது என்பது ஒரு தொழிற்கூடத்தைப் பொறுத்தது அல்ல.  பரவலாக இந்தியா முழுமையும், நாடு முழுமையும் சமூகநீதி பாதுகாக்கப்பட என்ன அளவுகோல் பயன்படுத்தப்படுகிறதோ, அந்த அளவுகோல் எல்லா இடங்களிலும் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதிலே இந்த அரசு முக்கியத்துவம் கொடுக்கும் என்பதை நான் தெரிவித்துக்கொள்கின்றேன்.  தொழிலாளர்களுக்கு எந்த பாதகமும் ஏற்படாமல் இந்த மண்டலங்களிலே  பார்த்துக்கொள்ளப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.  உள்ளூர்வாசிகளுக்கு, வேலை தருவதைப் பற்றி மாண்புமிகு உறுப்பினர் வினாவாகச் சொன்னார்.  இப்போது எந்தவொரு ஒப்பந்தத்திலே கையெழுத்திடுகிற நேரத்திலும் அவர்களிடத்திலே நான் கேட்கின்ற முதல் கேள்வி, உள்ளூர்வாசிகளுக்கு நீங்கள் எத்தனை சதவிகிதம் வேலைவாய்ப்பு அளிப்பீர்கள் என்பதுதான், அவர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்தே தீரவேண்டுமென்று அவர்களை வலியுறுத்தி, அந்த ஒப்புதலைப் பெற்றுத்தான் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன.  (மேசையைத் தட்டும் ஒலி)

No comments:

Post a Comment