Monday, November 22, 2010

கார்த்திகை தீபத்தின் கதை


நண்பர்களே !
ஊரெங்கும் கார்த்திகைத் திருநாள் சிறப்போடு கொண்டாடப்படுகிறது. கிராமங்களில் சிறுவர்கள் கார்த்திகை சுற்றுவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். அதற்கு மிகப்பெரிய தயாரிப்பு செய்யவேண்டும். முக்கிளையாய்ப்  பிரியும் சிறு கம்பைப் பார்த்து வெட்டி எடுத்து அதை சரியாக சீவி அதற்கிடையில் கார்த்திகைப் பூ சுற்றுவதற்கான பொடியை ஒரு பொட்டலமாக வைத்து அந்தக் கிளையைக் கையில் பிடித்துச் சுற்றுவதற்கு வாட்டமாக கயிற்றைக் கட்டி எப்போது இருட்டும் எனக் காத்திருந்து அதை பற்ற வைத்துச் சுற்றினால் நம்மைச் சுற்றி வட்டமாய் பறக்கும் தீப் பொறிகளைப் பார்க்கவே உற்சாகமாக இருக்கும். இன்று அதெல்லாம் கிராமங்களில் அருகிவிட்டது. ஆங்காங்கே பட்டாசு சப்தம்தான் கேட்கிறது. ஆனால் வீடுதோறும் அகல் விளக்குகள் அணிவகுப்பது அதிகரித்துவருகிறது. இந்த கார்த்திகைப் பண்டிகைக்கு இந்து மதவாதிகள் சொல்லிவரும் விளக்கம் நாம் அறிந்ததுதான். அயோத்திதாசப் பண்டிதர் வேறொரு விளக்கத்தைச் சொல்கிறார். அதுதான் பகுத்தறிவுக்குப் பொருத்தமாக இருக்கிறது. அவர் நடத்திய தமிழன் வார இதழில்  1907 ஆம் ஆண்டு வெளியான கட்டுரையை இங்கே தருகிறேன் : 

கார்த்திகை தீபமென வழங்கும் கார்த்துல தீப விவரம்
அயோத்திதாசப் பண்டிதர் 
நெடுங்காலங்களுக்குமுன் மலாடபுரம் என்னும் ஊரில் புத்த தன்மத்தை தழுவினின்ற சங்கத்தார் பேராமணக்கு சித்தாமணக்கென்னும் வித்துக்களிலிருந்து நெய்யெடுத்து மருந்துகளுடன் உபயோகித்து அதன் நற்பலன்களை அறிந்ததுமன்றி தீபம் ஏற்றி குளிர்ந்த பிரகாசத்தையுங் கண்டு ஆனந்தித்து அத்தேசத்தை ஆண்டுவந்த அரசனிடம் கொண்டுபோய்க் காண்பித்தார்கள். (அரசன் பெயர் விளங்கவில்லை).

பதார்த்த சிந்தாமணி
உண்டாலுதிரப்பலநோயும் ஒடுங்கிருமிகுடல்வாதம்
கண்டே சுவைக்கில் விளக்கெண்ணெய் கண்ணேகுளிருங் குணந்தேறுங்
கொண்டால் கிரந்தி சூலையுடன் கொடிய கரப்பான் பலமேகம்
விண்டோர்தோஷ கணமாந்த மகலுஞ் சித்தாமணக்கெண்ணெய்.

அவ்வரசன் பேராமணக்கையும் சித்தாமணக்கையும் அதிகமாக விளைவிக்கச்செய்து அவன் தேசத்துள் இருந்து அண்ணாந்து மலையினுச்சியில் வெட்டிப் பள்ளமிட்டு பருத்தி நூல் திரிசெய்து ஆமணக்கு நெய்யை வார்த்து பெருந்தீபம் ஏற்றி விடியும் அளவு எறியவிட்டு உதயத்திற் சென்று அவ்விடமுள்ள பட்சிகளுக்கும் ஆடு மாடுகளுக்கும் அத்தீபப் புகையால் ஏதேனும் தீங்க நேரிட்டுள்ளதோ என்று ஆராயுங்கால் அவ்விடம் உலாவும் பட்சிகளுக்கும் மிருகங்களுக்கும் யாதோர் தீங்கில்லாததைக் கண்டதுமன்றி அத்தீபக்காவலிலிருந்த மக்களுக்கும் ஓர் கெடுதி வராதிருந்ததினால் அரசன் குடிகைள் யாவரையும் தருவித்து ஆமணக்கு நெய்யைக் கொடுத்து தீபம் ஏற்றிக் கொள்ளும்படி ஆக்கியாபித்தான்.
இத்தீபச் சுடலை எக்காலும் காணாதக் குடிகளாதலின் தீபத்தை ஏற்றி வீட்டில் வைக்க பயந்து மூன்று நாள் வரையில் திண்ணைகளின் மீதும், தெரு மாடங்களிலும் வைத்து ஒரு தீங்குங் காணாததினால் வீட்டுக்குள் வைத்து அத்தீபம் இருளை விலக்கும் ஒளியாக விளங்கினபடியால் (கார்த்துலதீப) என்னும் பெயரை அளித்து புத்தசங்கத்தோர் கண்டுபிடித்த கார்த்திகைமாத பௌர்ணமியில் தேசம் எங்கும் தீபம் வெளியிட்டு பண்டை யீகை அளித்து பகவ தியானஞ் செய்து வந்தார்கள்.

இவ்வகை நெடுங்காலம் வருடத்திற்கு ஒருமுறை நிறைவேறிவரும் கார்த்துல தீபவெளி பண்டகையும் புத்தத் தியானத்தையுங் கண்ட சையோயாங்கென்னும்( யுவான் சுவாங்?)  சீனதேச யாத்திரைக்காரன் ஆனந்தமுற்று தன் தேசஞ் சென்று வருடந்தோருங் கார்த்திகைமாதப் பௌர்ணமிக்குள் அவர்கள் தேசக் கொடிகளும் டப்பாசுகளும் பாணங்களும் அனுப்பி கார்த்துல தீப நாளைக் குதூகலிக்கச் செய்ததாக சை யோயாயாங் யாத்திரை சரித்திரமும் விளக்குகின்றது.

பெருந்திரட்டு - பாசமாட்சி
காராமணத்தைக் கருதிக் கரைந்தங்கு / பேராமணக்கைப் பெற்றார்கள் & ஊரா
ருளப்பருத்தி நெய்யூ மீர்ந்தார் பெருவங் / களம்பார்த்த தீபக்கழல்
புரிமலாடதுபதிந்த பொற்றவசங்கத்தோர்கள்
கரதவாமணக்கு நெய்யை தூயமன்னவன்பாற் கொண்டு
பரத வெல்லை அண்ணாந்து பதிசிரம்பதித்து தீப
மொருதீங்க மேறாதலே யூரவரகத்தி லேற்றார்.

-(1:22 நவம்பர் 13, 1907. தேதியிட்ட தமிழன் வார இதழில் வெளியானது  )

2 comments:

  1. நல்ல பகிர்வு! இதில் கூறப்பட்டுள்ள செய்திகளுக்குச் சான்றுகள் தந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்!

    ReplyDelete
  2. நல்வரவு. அயோத்திதாச பண்டிதரை பற்றி விவரங்கள் மிகக்குறைவு. அவருக்கும், திரு.வி.க.வுக்கும் ஒரே நாளில் தபால் தலை வெளியிட்டு, இந்திய அரசு இருவருக்கும் அஞ்சலி செலுத்தியது. திரு.வி.க. வாலிபத்தில், அயோத்தி தாசரின் கூட்டங்களில் கலாட்டா செய்திருக்கிறர். பிற்காலம் தன் தவறுகளை உணர்ந்து, அவரை பாராட்டியிருக்கிறார்.
    இன்னம்பூரான்

    ReplyDelete