Saturday, November 13, 2010

பிழைப்புக்காக வேலை செய்யவேண்டிய நிலையில் ஒருபோதும் இருந்ததில்லை









மினி கிருஷ்ணன் - ஒரு நேர்காணல் : டாக்டர் அழகரசன் 
தமிழில் : தேன்மொழி 






கேள்வி: மாக்மில்லன் நிறுவனத்தின் மூலம் மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிடுவது என்ற முடிவு எந்தச் சூழலில் எடுக்கப்பட்டது?

பதில்: 1980 ஆம் அண்டு நான் அந்த நிறுவனத்தில் சேர்ந்தபோது அவர்கள் கல்லூரி மாணவர்களுக்கு வரலாறு மற்றும் ஆங்கில இலக்கியம் தொடர்பான நூல்களை வெளியிடுவதில் மும்முரமாயிருந்தார்கள். பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது அந்நிறுவனத்தின் நூல்கள் சென்று சேர்ந்த பள்ளிகளின் எண்ணிக்கை கணிசமாக இருந்தபோதிலும் அந்த நேரத்தில் அது இங்கிலாந்தில் இருக்கும் மாக்மில்லன் நிறுவனத்தின் நூல்களை இங்கே விநியோகிக்கும் வேலையைச் செய்துகொண்டிருந்தது. இங்கே இருக்கும் எழுத்தாளர்கள் எத்தனைபேரை நாம் அலட்சியப்படுத்தி இருக்கிறோம் என்பதை எண்ணிப் பார்க்கிறேன். அதில் ஒரே ஒரு விதிவிலக்கு சேதுராமனும் ராமசாமியும் தொகுத்த ‘ த இங்லிஷ் க்ரிடிகல் ட்ரடிஷன்’ என்ற நூலாகும். முப்பது ஆண்டுகளைக் கடந்து திரும்பிப் பார்க்கும்போது வரலாறு அல்லது விதி எப்படி தனது கருவிகளைத் தேர்ந்து கொள்கிறது என்பது சுவாரஸ்யமாக இருக்கிறது. பேராசிரியர் அய்யப்ப பணிக்கரும் அந்த சமயத்தில் எங்கள் நிறுவனத்தின் துணைத் தலைவராக இருந்த ஆர். நாராயணசாமி அவர்களும் நல்ல நண்பர்களாக இருந்தனர். கேரள சாகித்ய அகாதமியின் வெள்ளி விழா 1980 இல் வந்தபோது அதைக் கொண்டாடும் விதமாக இந்திய ஒப்பிலக்கியம் குறித்து இரண்டு தொகுதிகளைக் கொண்டுவர விரும்பியது. பேராசிரியர் பணிக்கர் சென்னையிலிருக்கும் மாக்மில்லனின் கிளையையும் திரிச்சூரிலிருக்கும் சாகித்ய அகாதமி அலுவலகத்தையும் இதற்காக ஒன்றிணைத்து அந்தப் பணியை முன்னெடுத்தார்.இரண்டு நிறுவனங்களும் சேர்ந்து அதை வெளியிடுவதாகத் திட்டமிடப்பட்டது.எங்கள் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் நாராயணசாமியைக் கதற வைத்துவிட்டார். ஒப்பிலக்கியத்தை யார் படிக்க விரும்புகிறார்கள்? வணிகரீதியான வெளியீட்டு நிறுவனத்துக்கு அகாடமியின் வேலையைச் செய்யவேண்டிய அவசியமென்ன? என்று கேள்விகளாகக் கேட்க ஆரம்பித்துவிட்டார். பேராசிரியர் கே. எம். ஜார்ஜ்தான் அதற்கு முதன்மை எடிட்டர். அவருக்கு எழுபட்டிரெண்டு வயது. இருநூறு பேர் அதில் கட்டுரை எழுதினார்கள்.கட்டுரைகளின் கையெழுத்துப் படி நாலாயிரம் பக்கங்களைத் தாண்டிவிட்டது.இந்திய இலக்கியத்தின் மரபு மற்றும் நவீனப் போக்குகளை எடுத்துக்காட்டும் விதமாக இந்தியாவின் பதினாறு மொழிகளைப் பற்றிய ஒரு சர்வேயாகவும் அது இருந்தது. அப்படியொரு நூல் இதுவரை வந்ததில்லை.

மாக்மில்லனில் சேர்ந்து பத்து நாட்கள் சென்றிருக்கும், திரு நாராயணசாமி அவர்கள் என்னிடம் வந்து அந்தத் தொகுதிகளுக்கான முதல் நானூறு பக்கங்கள் கொண்ட கையெழுத்துப் படிகளை என்னிடம் கொடுத்து அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு நீ செய்யவேண்டிய வேலை இதுதானென்றார். அதற்குள் நான் ஆழ்ந்துபோனேன். அதிர்ஷ்டவசமாக அப்போது கம்ப்யூட்டர்கள் அவ்வளவாக புழக்கத்துக்கு வரவில்லை.எனவே ஒவ்வொரு பிரதிக்கும் நான் அதற்கான கவனத்தையும் அவகாசத்தையும் தருவது சாத்தியமாயிற்று.ஒவ்வொரு மொழியாக ஒவ்வொரு பிரிவாக நான் வேலை செய்தபோது ஒரு விஷயம் எனக்கு புலப்பட்டது.நவீன நாவலோ, கவிதையோ அது எழுதப்பட்ட மொழி தவிர வேறு எதிலும் கிடைக்கவில்லை என்ற உண்மையை நான் உணர்ந்தேன். அந்தப் படைப்புகளின் ஆங்கில மொழிபெயர்ப்பைப் படிக்கவேண்டுமென்ற பசி என்னுள் அதிகரித்தது.பயிற்றுவிப்பதற்கு மிகவும் எளிதான வடிவம் புனைகதைதான். அதை எங்கே சொல்லித்தருவது?ஆங்கிலத்தில் கிடைக்கும் இலக்கியப் பிரதிகளைப் போதிப்பதோடு இவற்றையும் சேர்த்துக்கொள்ளலாம்.

தனது வாழ்க்கையை தான்தான் வாழவேண்டுமென்பதை யார்தான் மறுக்கமுடியும்? பல்கலைக் கழகங்களில் உள்ள ஆங்கிலத் துறைகளில் அறிமுகப்படுத்தக் கூடிய நவீன நாவல் குறுநாவல் போன்றவற்றின் மொழிபெயர்ப்புகளைப் பற்றி நான் கனவுகாண ஆரம்பித்துவிட்டேன். பட்டியல்களைத் தயாரிப்பது ஓவியர்களின் கேட்டலாகுகளைப் பார்த்து அவற்றில் அட்டைக்கு பயன்படுத்தக்கூடிய படம் ஏதாவது இருக்கிறதா? என்று பார்ப்பது என்று காலம் போய்க்கொண்டிருந்தது.நான் தயாரித்த திட்டக் குறிப்புகள் நிறுவனத்தால் அடுத்தடுத்து நிராகரிக்கப்பட்டன.இப்படியான மொழிபெயர்ப்பு நூல்களுக்கு ஒரு மார்க்கெட் இருக்கிறது என்பதை எவரும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. தாகூரின் படைப்புகள் மற்றும் ஏ.கே.ராமனுஜன் மொழிபெயர்த்த யூ. ஆர். அனந்தமூர்த்தியின் சம்ஸ்காரா நாவல் ஆகிய இரண்டைத் தவிர ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட எதுவுமே வெற்றி பெறவில்லை. ஓரியன்ட் லாங்மன் நிறுவனம் வெளியிட்ட சங்க இலக்கிய நூல் வரிசையும்கூட வணிக ரீதியில் வெற்றிபெற்றதென்று சொல்ல முடியாது. எனவே இந்த யோசனையை எங்கள் நிறுவனம் ஒரேயடியாக நிராகரித்துவிட்டது. 

‘ வெளியிலிருந்து இதற்கான பணத்தைத் திரட்டினால் நீங்கள் அனுமதிப்பீர்களா?‘ என்று கேட்டேன். ‘ அப்படியென்றால் சரி. ஆனால் உனக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பாடநூல் தயாரிப்புப் பணியை நீ தாமதப்படுத்திவிடக்கூடாது‘ என்று அவர்கள் சொன்னார்கள். அந்த நேரத்தில் நான் அவர்களுக்குப் பொன் முட்டை இடும் வாத்தாக இருந்தேன். தமிழ்நாட்டின் மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்காக ஆண்டொன்றுக்கு பத்து பாடநூல்களை நான் தயாரித்து கொடுத்துக்கொண்டிருந்தேன்.ஒவ்வொரு ஆண்டும் அவற்றில் பத்தாயிரம் பிரதிகள் அச்சிட்டுக்கொண்டிருந்தார்கள். இன்றும்கூட அவற்றில் சில புத்தகங்கள் பயன்பாட்டில் இருக்கின்றன.நான் பல்கலைக்கழக மானியக் குழுவை அணுகினேன். அவர்கள் போட்ட நிபந்தனையை நாம் நிறைவேற்றவே முடியாதுபோலிருந்தது. கார்ப்பரேட் நிறுவனங்கள், அரசாங்க அலுவலகங்கள் போன்றவற்றின் தாழ்வாரங்களில் நான் எனது ப்ராஜக்டுக்காக உதவிகேட்டு அமர்ந்திருக்கும்போது தூக்கம்தான் வரும். அவர்கள் என்னைப் பார்க்கும் பார்வை ஒன்று அதிசயமாக இருக்கும் அல்லது வெறுப்பாக இருக்கும். ; கல்விக்காக ஏதாவது செய்யுங்கள். இலக்கியத்தையெல்லாம் அப்புறம் பார்த்துக்கொள்ளலாம்‘ என்பதுதான் பெரும்பாலும் அவர்கள் எனக்குச் சொன்ன அறிவுரை.

இந்த மொழிபெயர்ப்புத் திட்டத்துக்குத் தேவையான பணத்துக்காக நான் சுமார் ஏழு ஆண்டுகள் காத்திருந்தேன். என் கொல்லைப்புறத்தில் ஐம்பதுலட்ச ரூபாய் வந்து விழுகிறவரை அந்த ப்ராஜக்டை எல்லோரும் ஒரு ஜோக் என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தார்கள்.குடும்ப ட்ரஸ்ட் ஒன்றை நடத்திக்கொண்டிருந்த எனது நண்பர்கள் சிலர் இந்திய பண்பாட்டைக் காப்பாற்றுவதற்காக ஏதாவது உதவிசெய்யவேண்டும் என்று விரும்பினார்கள். அவர்களுக்கு லாபம் சம்பாதிக்கும் நோக்கம் எதுவுமில்லை. அதேநேரம் அவர்கள் தமது பணம் நஷ்டமடைவதையும் விரும்பவில்லை. எம்ஆர் ஏஆர் கல்விக் கழகம் என்ற அந்த ட்ரஸ்ட் கல்வி, ஆராய்ச்சி, கலாச்சாரம் ஆகியவற்றை ஆதரிப்பதற்கென்றே தோற்றுவிக்கப்பட்டிருந்தது.இந்தியாவின் பதினோரு மொழிகளில் இருந்து ஐம்பது நாவல்களை மொழிபெயர்த்து வெளியிடுவது என்ற எனது திட்டம் அவர்கள் தேடிக்கொண்டிருந்ததற்கு மிகவும் பொருத்தமாய் அமைந்துவிட்டது.

1992 க்கும் 1998க்கும் இடையில் நான் வேலை செய்ததுபோல மகிழ்ச்சியோடும், ஆற்றலோடும் நான் ஒருபோதும் வேலை செய்ததில்லை. மாக்மில்லன் நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவரும் அதில் தலையிடவில்லை. ஏனென்றால் அவற்களுக்கு அதில் ஆர்வம் இல்லை என்பது ஒரு காரணம், அவர்கள் எவருக்கும் அதைப்பற்றி ஒன்றும் தெரியாது என்பது இன்னொரு காரணம். தேசிய ஊடகங்களில் அந்த புத்தகங்கள் பற்றி பெரிய அளவில் பாராட்டு குவிந்தபோது இங்கிலாந்திலிருக்கும் மாக்மில்லன் நிறுவனத்தார் ஆச்சர்யமடைந்து நான் வெளியிட்ட பதினெட்டு நூல்களிலும் தலா இருநூறு பிரதிகளை வாங்கிக் கொண்டார்கள். அவற்றில் சிலவற்றுக்கு தேசிய விருதுகளும் கிடைத்தன. பலர் அதில் தமது பல்கலைக்கழக ஆய்வுகளை மேற்கொண்டபோது என்னைவிட ஆச்சர்யப்பட்டவர்கள் வேறு எவரும் இருந்திருக்கமுடியாது. 2000 ல் நான் ஆக்ஸ்போர்டு நிறுவனத்துக்கு மாறுவதற்குமுன் மேலும் ஐந்து குறுநாவல்களையும், ஒரு சிறுகதைத் தொகுப்பையும், கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலின் ஆறு பாகங்களையும், பாமாவின் கருக்கு நூலையும் நான் வெளியிட்டுவிட்டேன். அந்த வரிசையில் வெளியிடப்பட்ட புத்தகங்களுக்குத்தான் மிக அதிக அளவிலான மதிப்புரைகள் பத்திரிகைகளில் வெளியாகின.




கேள்வி: பாமாவை உங்களுக்குத் தெரியவந்தது எப்படி? அவரது படைப்புகளை வெளியிடுவதென்று ஏன் முடிவு செய்தீர்கள்?


பதில்: எனக்கென்று தனிப்பட்ட தொலைநோக்கு ஏதும் இருந்ததென்று நான் சொல்லிக்கொள்ளமாட்டேன்.  நான் எல்லாவிதமான சாதிகளையும் சேர்ந்த  எழுத்தாளர்களின் அனுபவங்களைப் பதிவு செய்ய விரும்பினேன். மாக்மில்லன் நாவல் குழுமத்தில்  ஆண்களின் எண்ணிக்கை  அளவுக்கு பெண்களையும் இணைக்க விரும்பினேன். 1999 ல் நான் இருபத்தெட்டு நூல்களை எடிட் செய்தேன்.  பென்குயின் இந்தியா,ஓரியன்ட் லாங்மேன், கதா மற்றும் சாகித்ய அகாடமி முதலான மற்ற பதிப்பகங்களைச் சேர்ந்தவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை கவனித்துக்கொண்டிருந்தேன். மொழிபெயர்ப்பு குறித்த கருத்தரங்குகளோ, பட்டறைகளோ  எங்கு நடந்தாலும் சரி அதில் கலந்துகொள்வதற்காக எனது விடுப்பு எல்லாவற்றையும் நான் செலவிட்டேன். விடுப்பு இல்லாமல் போய்விடும் நேரங்களில் ஊதியமில்லா விடுப்புக் கூட எடுத்திருக்கிறேன்.  தகுதியுடைய எழுத்தாளர்களை அடையாளம் காண்பதற்கு கொஞ்சம் கொஞ்சமாக நான் பயிற்சிபெற்றேன். தலித் எழுத்துக்களையும், போராட்டங்களையும்பற்றிப் படிக்கும்போதும் அவர்களது அனுபவங்களை விவரிக்கும் கட்டுரைகளை வாசிக்கும்போதும் நவீன கல்வியும் சுதந்திரமும் எதையும் பெரிதாக மாற்றிவிடவில்லை என்ற ஊன்மை என்னைக் கோபமுற வைத்தது. என்னைப் போன்ற பலர் சாதிய பாகுபாடுகளை அறியாமல் இருந்தார்கள் அல்லது அதை அவர்களும் கடைப்பிடித்தார்கள். இதில் ஏதாவது நாம் செய்தாகவேண்டும் என்று தோன்றியது.

குழந்தைகளுக்காக ‘ வேல்யு எஜுகேஷன் ‘ தொடர்பான வெற்றிகரமான நூல்வரிசை ஒன்றை நான் உருவாக்கியிருந்தேன். அதில் இந்தத் தலைப்பையும் உள்ளடக்க முயன்றபோது அந்த நூல் வரிசையின் ஆசிரியர் தலித் பிரச்சனையென எதுவும் இல்லை‘ என்று கூறிவிட்டார். அந்த நேரத்தில்தான் ‘ கருக்கு ‘ என்ற ஒரு நூலைப்பற்றி எழுத்தாளர் அசோகமித்திரன் எழுதிய மதிப்புரை ஒன்றை நான் படிக்க நேர்ந்தது. அந்த புத்தம் ஒரு தனியார் வெளியீடு, புத்தகம் கிடைப்பதே அரிதாக இருந்தது. நான் அர்ஜுன் டாங்ளேவின் புத்தகங்களையும், அம்பேத்கரின் சில புத்தகங்களையும் படித்திருக்கிறேன்.  ஆனால் ஒரு தலித் பெண்ணுடைய சுயசரிதை அதுவும் கன்னியாஸ்திரீயாக இருந்த ஒருவரின் சுயசரிதை ! அதற்கான மொழிபெயர்ப்பாளரைக் கண்டுபிடிப்பதற்கு எனக்கு நான்கு வருடங்கள் தேவைப்பட்டது.   ‘லஷ்மி ஹோம்ஸ்ட்ராங்கைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’ என்று பாமா என்னிடம் கேட்ட போது நான் உடனே ஒத்துக்கொண்டேன்.  1999 ன் ஆரம்பத்தில் கருக்கு நூலினுடைய மொழிபெயர்ப்பின் முதல்கட்ட கையெழுத்து படி எனக்கு வந்து சேர்ந்தது.


கேள்வி: ஆங்கில மொழிபெயர்ப்புகளுக்கான சந்தை வாய்ப்பை நீங்கள் எப்படிப் புரிந்துகொள்கிறீர்கள்?

பதில்: நம் நாட்டில் ஏறக்குறைய 15,000 பதிப்பாளர்கள் இருப்பார்கள் என்று நம்புகிறேன்.  நம் நாட்டில் வெளியாகும் புத்தகங்களில் நாற்பது சதவீதம் நூல்கள்ஆங்கிலத்தில் வெளியாகின்றன.  புத்தக வெளியீட்டில் நாம் அமெரிக்காவுக்கும் இங்கிலாந்துக்கும் அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் இருக்கிறோம். ஆனால் ஆசியாவில் உள்ள படிக்காதவர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கினர் இந்தியாவில்தான் உள்ளனர். நமது நாடோ ஒரு ஏழை நாடு. கட்டாயம் வாங்கித்தான் ஆகவேண்டும் என்ற நிர்ப்பந்தம் இருந்தால்தான் இங்கே புத்தகத்தை வாங்குவார்கள். என்னுடைய பணக்கார நண்பர்கள் கூட இலவசப் பிரதிக்காகக் காத்திருக்கும்போது இங்கே என்ன விற்பனை நடந்துவிடும்?  இந்தச் சூழலில் என்னவிதமான விற்பனையை ஒரு பதிப்பாளர் எதிர்பார்க்க முடியும்.  ஒரு ஜோக் இருக்கிறது: ’ நீங்கள் எக்ஸ் எழுதிய புத்தகத்தைப் படித்தீர்களா? ", "இல்லை, நான் அது திரைப்படமாக்கப்படும் என்று காத்திருக்கிறேன்".   புத்தகத்தை விலைகொடுத்து வாங்கும் கலாச்சாரம் நம்மிடம் இல்லை.


   வாழ்க்கையெனும் மலையில் ஒருவர் மேலேறிச்செல்வதற்கு பாடப்புத்தகங்கள்தான் பிடிமானமாக இருக்கின்றன. அதனால் இந்தியாவிலிருக்கும் பெரிய பதிப்பாளர்கள் அனைவருமே பாடப் புத்தகங்களைப் பதிப்பித்தல் என்னும் அடித்தளத்தின்மீதே தம்மை நிர்மாணித்துக்கொண்டிருக்கிறார்கள்.நான் மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட முடிவுசெய்தபோது நான் கொண்டிருந்த அணுகுமுறை பெண்களின் நூல்களையும், புனைவு இலக்கியப் பிரதிகளையும் வெளியிட்டுவந்த ஏனைய பதிப்பாளர்களிடமிருந்து வேறுபட்டதாயிருந்தது. கல்வி தொடர்பான நூல்களை வெளியிட்டு அனுபவப்பட்டிருந்த நான் அந்தத் துறைசார்ந்த சந்தைக்காக  புத்தகங்களை வெளியிட்டது மட்டுமின்றி அதில் தாக்கம் ஏற்படுத்தவும் செய்திருக்கிறேன். புத்தகங்கள் வாழ்க்கையை எப்படி மாற்றும் என்பதை நான் அறிவேன். ..... நான் நாவல்களை மாக்மில்லன் நிறுவனத்துக்காக வெளியிட முடிவுசெய்தபோது பல்கலைக் கழகங்களின் ஆங்கிலத் துறைகளில் அவற்றைப் பாடமாக வைக்கச்செய்வது அதன்மூலம் அவற்றின் மறுபதிப்புகளுக்கான வாய்ப்பை ஏற்படுத்துவது எனத் திட்டமிட்டேன். தேவை இல்லாவிட்டால் புதிய மொழிபெயர்ப்புகள் வராது, மறுபதிப்புகளும் வராது..... இப்போது பதிப்பகங்களைத் துவக்குகிறவர்களுக்கு பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் போட்ட எதிர்நீச்சல் தெரியாது.... அப்போது ஆங்கிலத்துறைகளில் பணியாற்றிய ஆசிரியர்கள் எந்த அளவுக்கு அதை எதிராகப் பார்த்தார்கள் என்பதை இப்போது விவரிப்பது கடினம்.

கேள்வி:  இந்தியாவில் கடந்த பத்து ஆண்டுகளாகப் பேசப்படும் மொழிபெயர்ப்புக் கோட்பாடுகள் இந்திய மொழிகளுக்குள் செய்யப்படும் மொழியாக்கங்களை கணக்கில் கொள்ளவில்லையே அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?


பதில்: நான் என்ன சொல்ல முடியும்? மொழி என்பது ஒருவருடைய கருத்துகளை நோக்கி மற்றவர்களுடைய கவனத்தை ஈர்ப்பதற்கான அதிகாரத்தைப்ப்ற்றிய விஷயம் என்று சொல்லலாம். பழங்காலத்தில் போரில் வெறவர்கள் என்ன செய்தார்கள்? அவர்கள் ஆண்களைக் கொன்றார்கள்.  பெண்களைக் கருவுறச்செய்தார்கள். தோற்றவர்களின் மதங்களைத் தடை செய்தார்கள். மொழியை அழித்தார்கள் அல்லது அதன் மதிப்பைக் குறைத்தார்கள்.  இன்றைக்கு ஆதிக்க சமூகங்கள் எப்படி இருக்கின்றன-?  சக்தியில்லாத மக்களின் கலாச்சாரத்தை அவர்கள் தம்முடையவற்றைக்கொண்டு பதிலீடு செய்தார்கள். முன்னேற்றம் மற்றும் வேலை வாய்ப்பு என்பது போன்ற போர்வையுடன் ஆங்கிலம் உள்ளே நுழைந்தது.  இந்தியாவை முன்பின் பார்த்திராதவர்களால் அதற்கான விதிகள் வகுக்கப்பட்டன.  மிகப்பெரிய கலாச்சார சக்தியாக ஆங்கிலம் உள்ளே நுழைந்தது. நம்முடைய கலைகளும் மொழிகளும் மதிப்பு குறைந்தவையென தலைமுறை தலைமுறையாக அவர்கள் நம்மை நம்பவைத்தனர்.

இந்தக் கருத்தை ஆங்கிலவழிக் கல்வி பள்ளிகள் மேலும் வலுவாக்கின. ஒருசில பள்ளிகளைத்தவிர பெரும்பாலான பள்ளிகளில் குழந்தைகள் தங்களுடைய தாய்மொழியில் பேசியதற்காகத் தண்டிக்கப்படுகிறார்கள். இதில் நான் என்ன சொல்ல முடியும்?  ஆங்கிலத்திலேயே படிக்கும் வசதிபடைத்த வர்க்கத்தினரும், அறிவுஜீவி வர்க்கத்தினரும் ஆங்கிலத்திலேயே பேசவும் எழுதவும் செய்யும்போது இப்படித்தான் ஆகும்...... பலகலைக்கழகங்களில் இருக்கும் பிராந்தியமொழித் துறைகளும் ஆங்கில இலக்கியத் துறைகளும் ஒருவரையொருவர் சந்தேகத்தோடு பார்த்துக்கொள்ளாமல் இணைந்து செயல்படவேண்டும் என்பதை நான் முக்கியமாகக் கருதுகிறேன். நேஷனல் புக் ட்ரஸ்ட் மற்றும் சாகித்ய அகாடமி ஆகியவற்றைத் தவிர இந்திய மொழிகளிலிருந்து திட்டமிட்ட அளவில் மொழிபெயர்ப்புகளை வேறு எவரும் செய்வதாகத் தெரியவில்லை.





கேள்வி: எடிட்டரின் பங்கு என்னவென்பது பற்றி யாருமே பேசியதில்லை. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? 


பதில்: ஒரு படைப்பு மொழிபெயர்க்கப்படும்போது உணர்வுபூர்வமாக அத்துடன் பிணைந்திருக்கும் மொழிபெயர்ப்பாளர் அந்தப் படைப்பு அச்சிடப்பட்டு கவனம்பெறத் தொடங்கும்போது தான் நிராகரிக்கப்பட்டதாய் உணர்வதை நீங்கள் பார்த்திருந்தால் இந்தக் கேள்வியை கேட்டிருக்கமாட்டீர்கள். பத்தில் ஒன்பது மொழிபெயர்ப்புகளில் நீங்கள் பார்க்கும் உள்ளார்ந்த படைப்பு குணம் என்பது எடிட்டரின் ரத்தத்தால் வந்ததுதான்.மொழிபெயர்ப்பாளரோடு அமர்ந்து வரிவரியாக மொழிபெயர்ப்பை செப்பனிடுவது மிகவும் சுவாரஸ்யமான விஷயம். ஆனால் அதையே நீங்கள் ஒரு மொழிபெயர்ப்பாளரிடம் கேட்டால் அதை அலுப்பூடும் விஷயமாகவே அவர்கள் சொல்வார்கள். படைப்பாளி, மொழிபெயர்ப்பாளர் இருவருக்குமிடையில் மனோதத்துவ நிபுணராகவும், நண்பராகவும் நீங்கள் நடந்துகொள்ளவேண்டும். இரண்டுதரப்பினருமே ஒருவர் மற்றவரைக் குறை சொல்லவே செய்வார்கள். அப்போது எடிட்டர் பொறுமை காக்கவேண்டும். .. நீங்கள் ஒரு முன்னுரையையோ, அட்டைக்கான டிஸைனையோ விரட்டிக்கொண்டிருக்கும்போது ‘ நான் சாவதற்குள் இந்தப் புத்தகத்தை என் கண்ணால் பார்ப்பேனா?’ என்று கேட்கும் அந்த நூலின் ஆசிரியரது கேள்வியையும் எதிர்கொள்ளவேண்டியிருக்கும். இதில் நமக்கு பைத்தியம் பிடிக்காமல் இருந்தால் அது அதிசயம்தான்.

மொழிபெயர்ப்பாளரை, மொழிபெயர்ப்பை, படைப்பாளியை கவனம்பெற வைப்பதும் எடிட்டர் பொறுப்புதான். உயர்த்துவது எடிட்டருடைய பொறுப்பு என்று நான் நினைத்துக் கொள்வேன்.  வெளியீட்டாளர்கள் விற்பனைப் பிரதிநிதிகளை வைத்திருக்கலாம், ஆனால் மொழிபெயர்ப்பை  கவனம்பெற வைப்பதற்கு ஒரு நுட்பமான பார்வை வேண்டும். அதை ஒரு எடிட்டர் பெற்றிருக்க வேண்டியது அவசியம். 




கேள்வி: உங்களுடைய உலகத்தை விரிவுபடுத்தியவர்கள், மனதை விசாலப்படுத்தியவர்கள் என யாரையெல்லாம் சொல்வீர்கள்?

பதில்: ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள். நான் நண்பர்கள் என்று சொன்னது படைப்பாளிகளைத்தான். அவர்கள் என்னுடைய உறுதியான நண்பர்கள் மட்டுமல்ல என்மீது தாக்கத்தை ஏற்படுத்துபவர்களும்கூட. ஒருவரது வாழ்க்கையிலிருந்து மற்றவர்  கரைந்து மறைந்துபோகிற தருணங்கள் எங்களுக்கு வந்ததுண்டு என்றபோதிலும் அந்தத் தாக்கம் இருந்துகொண்டுதானிருக்கும். என் வாழ்க்கையில் இடர்களும், பிரச்சனைகளும் வரும்போதெல்லாம் நான் என்னுடைய நண்பர்களின் அறிவுரையைத்தான் கேட்பேன், என்னுடைய  குடும்பத்தாருடையதை அல்ல. சி.டி.நரசிம்மையா, பேராசிரியர். வி.எஸ்.சேதுராமன், திருமதி. சுசீலா புனிதா (கல்லூரியில் எனக்கு ஆசிரியையாக இருந்தவர்.தற்போது யு.ஆர்.அனந்தமூர்த்தியினுடைய பாரதிபுராவை மறுமொழிபெயர்ப்பு செய்து கொண்டிருக்கிறார்) பேரா. எஸ். கிருஷ்ணஸ்வாமி (உயிரியலாளர், தலைவர், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உயிரியல் துறையின் தலைவர்) ஆகியோர் எனது ஆசிரியர்களாகவும், குருமார்களாகவும் இருப்பவர்கள்.  வசந்தி சங்கரநாராயணன், வள்ளி அழகப்பன், மற்றும் வால்சன் தம்பு போன்ற எனது நண்பர்கள், எனது மனதை விசாலமாக்கியவர்கள். இன்னும் இருவரைப்பற்றி நான் கண்டிப்பாகச் சொல்லியாக வேண்டும். முதலில் திரு.ஆர் நாராயணசாமி, நான் பணிபுரிந்த நிறுவனத்தின் தலைவராக 16 ஆண்டுகள் இருந்தவர்.  இரண்டாவது என் குரு சுவாமி பரமார்த்தனந்தா. கற்பித்தலுடன் அடையாளம் காணுதல் என்பதில் எனக்கும் சில பிரச்சினைகள் இருக்கின்றன.அது ஆண்களுக்கானது, மேல்சாதியினருக்கானது, வசதிபடைத்தவர்களுக்கானது. ஆனால் அதை எனது வாழ்வின் சில பகுதிகள்மீது பிரயோகித்ததால்தான் நான் இன்னமும் பேதலிக்காத மனநிலையோடு இருக்கிறேன். வேதாந்த தத்துவத்தில் ஈடுபாடு கொண்டதற்குப்பிறகு தனிமையின் ஏக்கமோ, சுய இரக்கம் கொள்வதோ எனக்கு நேர்வதே இல்லை.

கேள்வி: தங்களுடைய பள்ளிப்படிப்பு, பெற்றோர் மற்றும் ஒரு எடிட்டராக நீங்கள் உருவானவிதம்பற்றிச் சொல்ல முடியுமா-?


பதில்: என்னுடைய வாழ்க்கையைப் பற்றி பத்துநிமிடங்களில் சொல்லிவிடலாம். நான் கட்டுப்பெட்டியான தாய்க்கு மகளாகப் பிறந்தேன்.  நான் பார்த்ததிலேயே அவரலவுக்கு தாராள மனப்பான்மை உடையவர் எவருமில்லை. நம்பூதிரி குடும்பத்தைச் சேர்ந்தவரெனினும் எனது அப்பா எல்லாவிதமான  கடவுள் நம்பிக்கைகளையும் வெறுப்பவர். நான் அவரிடமிருந்து நல்ல நண்பராய் இருப்பது எப்படி என்பதைக் கற்றுக்கொண்டேன். அவர் நல்ல நண்பர்களைப் பெற்றிருந்தார். என் அப்ப இறந்தபோது அவருடன் பணியாற்றிய ஏ. ஜனார்த்தனன் என்ற நண்பர் மனநிலை பாதிக்கப்பட்டு அப்படியே தனது இறுதிக்காலம்வரை இருந்தார். நான் என்னுடைய அம்மா போல இருக்க விரும்பினாலும், எதிர்ப்புகளைப்பற்றி பயப்படாமலிருப்பது , முடிவுகளை செயல்படுத்துவது ஆகியவற்றில் எனது அப்பாவைப்போலத்தான் இருக்கிறேன். என் சிறுவயதில் அவர்கள் இருவருமே இறந்துவிட்டார்கள்.ஆனால் சாதீயம் கடந்த பார்வை ஒன்று எனக்கு இருக்குமானால் அது என் பெற்றோர்களால் வந்ததுதான் என்பேன். குறிப்பாக என்னுடைய அப்பாவால் வந்தது என்று சொல்லலாம்.பிராமண மேலாதிக்கத்தைச் சாடியவர், அனைத்துவிதமான சமூகப்பிரிவினைகளையும் எதிர்த்தவர் அவர்.  எனது பால்யகாலம் மிகவும் உன்னதமானது. இரட்டைப் பிள்ளைகளாகப் பிறந்த என் சகோதரர்களின் துணை முக்கியமானது. பொதுவான பாதுகாப்பு மற்றும் நடத்தை பற்றிய வழிகாட்டுதல்கள் தவிர வேறு எந்த அபிப்ராயங்களையும் எவரும் எங்கள்மீது திணித்ததில்லை. காஸ்மோபாலிட்டன் நகரமான பெங்களூரில் தானே முளைத்து வளரும் தாவரம்போல சுதந்திரமாக நாங்கள் வளர்ந்தோம்,  எங்கள் குடும்பம் பணக்காரக்குடும்பம் இல்லையென்றாலும், வாழ்வதற்குப் போதுமான அடிப்படை வசதிகள் நிறைந்திருந்தன.  நான் ஆங்கிலவழிப் பள்ளியில் படித்தேன். அறுபதுகளில் சுதந்திரத்திற்குப் பிறகான தலைமுறையைச் சேர்ந்த  ஆசிரியர்கள் இருந்தார்கள். அவர்கள் தேசபக்தியும், மேற்கத்திய நாகரீகமும், சுயசிந்தனையும் கொண்ட கலவையாக இருந்தார்கள்.  முதுநிலை கல்விக்காக நான் டெல்லி சென்றேன்.  படிப்பு முடிந்து திரும்பிய பிறகு, ஆங்கில ஆசிரியையாக விரும்பி வேலைதேடி அலைந்தேன்.  ஆனால் கிடைக்கவில்லை.  அப்போது தமிழ்த் தேர்வு ஒன்றில் தேர்ச்சி பெற்றால்தான் ஆசிரியை வேலை கிடைக்கும் என்றிருந்தது. அப்போது ஓரியன்ட் லாங்மனில் வேலைசெய்துகொண்டிருந்த ரீத்துமேனன் ஓரியன்ட் லாங்மனிலோ, மாக்மில்லனிலோ முயற்சிக்கும்படி என்னிடம் சொன்னார்.  இரண்டு இடங்களிலும் படிப்பதற்காக கையெழுத்துப்படிகளை என்னிடம் கொடுத்தார்கள்.  மாக்மில்லனில் ஒரு வெற்றிடம் உருவானபோது அதை நான் நிரப்பினேன். பாதிநாள்வேலை, அரை சம்பளம். ஏழுவருடங்கள் அப்படிப் போனது. வீட்டில் எனது சிறிய மகள்களைக் கவனித்துக்கொண்டு ஸ்கிரிப்டுகளின்மீது நான் வேலை செய்தேன். எனக்கு ஏதோ அதிர்ஷ்டம் இருந்தது.  நான் முடித்துக் கொடுத்த எல்லா புத்தகங்களும் மிகப்பெரிய வெற்றியைப்பெற்றன. உண்மையில் சொன்னால் நான் எவருடைய நிர்ப்பந்தமும் இல்லாமல் என்னை உருவாக்கிக்கொண்டேன். என் பணியில் யாரும் குறுக்கிடவும் இல்லை ஆதிக்கம் செய்யவுமில்லை.  புதிய புத்தகங்களுக்கான தேவை அதிகரித்துக் கொண்டே வந்தது. என்னிடம் ஜெயன் மேனன் என்ற சிறந்த தயாரிப்பு, வடிவமைப்பு எடிட்டர் இருந்தார்.  சிறந்த விற்பனையாளரான சுகன்யா சந்தோக் எங்களோடு இணைந்தபிறகு எங்கள் பயணம் முன்னோக்கியதாகவே இருந்தது. என்னுடைய கணவர் பி.டி. கிருஷ்ணன். நாசுக்காக நடந்துகொள்ளத் தெரியாத எனது எழுத்தாள நண்பர்களை அவருக்குப் பிடிக்காது என்றபோதிலும், நான் இணைந்து பணியாற்றுகிறவர்களோடு எனக்கிருக்கும் நெருக்கத்தை அவரால் புரிந்துகொள்ள முடியாது என்றபோதிலும் நான் என்ன செய்ய நினைக்கிறேனோ அதை நான் செய்ய முடியும். அதற்குக் காரணம் அவர் போட்டுவைத்திருக்கும் வலுவான அஸ்திவாரம்தான். நான் பிழைப்புக்காக வேலை செய்யவேண்டிய நிலையில் ஒருபோதும் இருந்ததில்லை.












No comments:

Post a Comment