Saturday, November 6, 2010

“ஹஜ் பயணம்” செல்பவர்களின் எண்ணிக்கையை உயர்த்த அரசு ஆவன செய்யுமா?









21-4-2010
வினாக்கள்-விடைகள்  முற்பகல் 10-05
78-
ஹஜ் பயணம்


*104316-திரு. து. ரவிக்குமார்:


மாண்புமிகு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அவர்கள் கீழ்க்காணும் வினாவிற்கு விடையளிப்பாரா-
“ஹஜ் பயணம்” செல்பவர்களின் எண்ணிக்கையை உயர்த்த அரசு ஆவன செய்யுமா?

மாண்புமிகு திரு. டி.பி.எம். மைதீன்கான், சுற்றுச்சூழல் துறை அமைச்சர்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,
2001 ஆம் ஆண்டு முஸ்லீம் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் இந்திய ஹஜ் குழுவானது மாநிலங்களுக்கான ஹஜ் பயண இருக்கைகள் ஒதுக்கீடு செய்கிறது. இதன்படி தமிழ்நாட்டிற்கான 2009 ஆம் ஆண்டினுடைய ஒதுக்கீடு 2700 ஹஜ் இருக்கைகள் ஆகும்.  அதற்குப் பின்னாலே,  நம்முடைய தமிழகத்தின் மரியாதைக்குரிய மாண்புமிகு முதல்வர் தலைவர் கலைஞர் அவர்களும், மரியாதைக்குரிய துணை முதலமைச்சர் அவர்களும் ஹஜ் பயண இருக்கைகளைக் கூடுதலாக ஒதுக்கீடு செய்யுமாறு மத்திய அரசுக்குக் கடிதம் எழுதி, அதன்மூலமாக 2700 என்று இருந்ததை கூடுதலாக 1116 இருக்கைகளை அதிகப்படுத்தி, கடந்த ஆண்டுக்கு 3816 + 8  குழந்தைகள் உட்பட்ட நபர்கள் புனித ஹஜ் பயணம் மேற்கொண்டனர் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்:  மாண்புமிகு உறுப்பினர் திரு. து. ரவிக்குமார்.

திரு. து. ரவிக்குமார்:  மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, ஆண்டுதோறும் ஹஜ் பயணம் செய்வதற்கான பயணிகளுடைய எண்ணிக்கை குறித்து சவுதி அரேபியா அரசாங்கம்தான் முடிவு எடுக்கிறது. இந்தியாவிற்கு என்று இங்கே இருக்கின்ற இஸ்லாமியர்களுடைய மக்கள்தொகை அடிப்படையிலே இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. அவற்றை மத்திய அரசு, மாநிலங்களுக்கு இடையே பகிர்ந்து அளிக்கிறது. இது, மாநிலங்களிலே இருக்கின்ற இஸ்லாமியர்களின் மக்கள் தொகையை மட்டுமே கணக்கெடுத்து செய்யப்படுகிறது. உதாரணமாகப் பார்த்தால், நம்முடைய மாநிலத்திலே இன்றைக்கு சுமார் 15,000 பேர் இந்த ஆண்டு ஹஜ் பயணம் செல்வதற்கு விண்ணப்பித்திருக்கிறார்கள்.  பல மாநிலங்களிலே இதிலே ஆர்வம் காட்டாத நிலை இருக்கிறது.  எனவே, நாம் நம்முடைய மாநிலத்தினுடைய ஒதுக்கீட்டைக் கூடுதலாகக் கேட்டுப் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  அதுமட்டுமல்லாமல், ஹஜ் பயணம் செல்கின்றவர்கள், அங்கே சென்று தங்குவதற்கான இடத்தை, ஏற்கெனவே, advance-ஆகbooking செய்வதற்கு மத்திய அரசு ஹஜ் பயணிகளிடமிருந்து பணம் பெற்று அதைக் கொண்டுதான் செய்கிறது.  அப்படி அவர்களிடம் பணம் வசூலித்து அதைக்கொண்டு அங்கே booking செய்யும்போது காலதாமதம் ஏற்பட்டு நல்ல இடம் கிடைக்காத ஒரு நிலை உருவாகிறது.  எனவே, மத்திய அரசு முன்கூட்டியே தன்னுடைய தொகையிலிருந்து அந்த இடத்தினை booking செய்துவிட்டு, அதற்குப் பிறகு ஹஜ் பயணிகளிடமிருந்து அந்தத் தொகையைப் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  அதற்கு நம்முடைய மாண்புமிகு முதல்வர் அவர்களும், மாண்புமிகு துணை முதல்வர் அவர்களும் நவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நம்முடைய மாநிலத்திலிருந்து ஹஜ் பயணம் செல்ல விண்ணப்பிப்பவர்களுடைய அந்த எண்ணிக்கையின் கூடுதல் அளவைக் கருத்தில்கொண்டு அதை உயர்த்துவதற்கு, சிறப்பு நேர்வாகக் கருதி, நடவடிக்கை எடுக்கப்படுமா என்று தங்கள்வாயிலாக கேட்டு அமர்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அவர்கள்.

மாண்புமிகு திரு. டி.பி.எம். மைதீன்கான்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு உறுப்பினர் சொன்னதைப்போல, இந்திய அரசுக்கு சவுதி அரேபியாவின் மொத்த ஒதுக்கீடு--quota--1,23,211 இருக்கைகள்.  அதில் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ளவை 2,700 இருக்கைகள். அந்தக் கணக்கீட்டின்படி எல்லா மாவட்டங்களுக்கும் இருக்கைகள் ஒதுக்கப்படுகின்றன. அவர்கள் நல்ல யோசனையைச் சொன்னார்கள்.  அதாவது, ஹஜ் பயணிகளின் தங்கும் இடத்திற்கான அட்வான்ஸ் புக்கிங் செலவை மத்திய அரசே ஏற்கலாம் என்று மாண்புமிகு உறுப்பினர் சொன்ன யோசனையை, இந்த அரசு, மத்திய அரசுக்குத் தெரிவிக்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.  மேலும், கடந்த காலங்களின் கணக்குகளைப் பார்த்தால், 2006-இல் மனு செய்தவர்கள் 4,978 பேர்கள்; 2007-இல் 6,766 பேர்கள்; 2008-இல் 10,508 பேர்கள்; 2009-இல் 16,735 பேர்கள்.  இப்படி ஆண்டுக்காண்டு கூடிக்கொண்டே போகிறது.  அதன் அடிப்படையில் இந்த அரசும், மத்திய அரசிடம் முயற்சி செய்ததன் அடிப்படையிலே, 2006 ஆம் ஆண்டிலிருந்து 3,821, 3,703, 3,586 மற்றும் 3,241 என்று கணக்கிட்டு இருக்கைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.  இது மத்திய அரசின் ஆணையின்படிதான் செயல்படுத்தப்படுகிறது.
அங்கு தங்குவதற்கான இட வசதியைப் பற்றி மாண்புமிகு உறுப்பினரவர்கள் சொன்னார்கள்.  மாநில அரசைப் பொறுத்தவரை, ஆண்டுதோறும் ஹஜ் கமிட்டிக்கு நிர்வாக செலவிற்கு பயணிகளுக்கு என்று 10 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்குகிறது.  தங்குவதற்கான இடவசதி, பார்வையிடுவதற்கு மற்றும் ஹஜ் பயணிகளின் தொண்டு ஆகியவற்றுக்கு 14 இலட்சம் ரூபாயும், மற்ற செலவுகளுக்கு 2 இலட்ச ரூபாயும் மாநில அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல; மத்திய அரசிடமிருந்து வருகின்ற ஒதுக்கீடுகளைக் குலுக்கல் முறையில் மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து செயல்படுத்துகின்றன.  இன்னொன்று; இந்த ஆண்டிலிருந்து புதிதாக மத்தியHaj Committee  முடிவு செய்ததன்மூலமாக, மூன்று ஆண்டுகள் தொடர்ந்து மனு செய்தவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதன் அடிப்படையில், அவர்களைக் குலுக்கல் இல்லாமலேயே தேர்ந்தெடுக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது. மீதமுள்ளவர்களைக் குலுக்கல் முறையிலே தேர்ந்தெடுக்க வேண்டுமென்ற அந்த நியதி கடைப்பிடிக்கப்படும். ஹஜ் பயணம் மேற்கொள்பவர்கள் மன நிறைவோடு சென்று வருகின்றார்கள் என்பதை இந்த நேரத்திலே தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு உறுப்பினர் திரு. து. ரவிக்குமார்.

திரு. து. ரவிக்குமார்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, ஹஜ் பயணிகளுக்கு தற்காலிக விசாவை சவுதி அரேபிய அரசாங்கம் வழங்கி வருகிறது.  ஹஜ் பயணம் மேற்கொள்பவர்கள் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அங்கே தங்க நேர்ந்துவிட்டால், அவர்களையெல்லாம் சவுதி அரேபிய அரசாங்கமே பிடித்து, அவர்கள் பொறுப்பிலேயே விமானத்தின்மூலமாக அனுப்பிவிடுகின்றார்கள்.  இதற்கிடையிலே அத்தகைய பயணிகள் அங்கே யிமீபீபீணீலீ என்கிற இடத்திலுள்ள ஒரு பெரிய பாலத்தின் கீழே கிடக்கிறார்கள்.  ஆயிரக்கணக்கானவர்கள் ஒவ்வோர் ஆண்டும் அப்படி இருக்கின்ற நிலை ஏற்படுகிறது.  கடந்த ஆண்டுகூட தமிழகத்தைச் சார்ந்த 300-க்கும் மேற்பட்ட பயணிகள் அங்கே சிக்கித் தவித்தபோது, அந்தத் தகவலை மாண்புமிகு முதல்வர் அவர்களுடைய கவனத்திற்குக் கொண்டு சென்றவுடன், முதல்வர் அவர்களுடைய தலையீட்டின்பேரில், அவர்களெல்லாம் அங்கிருந்து கொண்டு வரப்பட்டார்கள்.  ஆக, ஒவ்வோர் ஆண்டும் இதுபோன்ற நிலை ஏற்படுகின்றது.  இதைத் தவிர்ப்பதற்காக, முன்கூட்டியே அங்கே இடத்தை தீஷீஷீளீ செய்துவிட்டு, அதற்குப் பிறகு ஹஜ் பயணத்திற்கான தொகையை வசூலிப்பதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும்.  அதற்கு நமது அரசு, மத்திய அரசை வலியுறுத்த வேண்டுமென்று தங்கள்வாயிலாகக் கேட்டு அமர்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அவர்கள்.

மாண்புமிகு திரு. டி.பி.எம். மைதீன்கான்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, சிறுபான்மை சமுதாயத்தைச் சார்ந்த இஸ்லாமியர்களின் சார்பாக ஹஜ் பயணிகள் நல்ல முறையில் சென்று வரவேண்டுமென்று மத நல்லிணக்க உணர்வோடு இந்தக் கேள்வியைக் கேட்ட மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொண்டு விடைபெறுகிறேன்.

 ( இந்த வினா எழுப்பப்பட்ட பிறகு தமிழக அரசின் சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கையால் ஹஜ் பயணிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டது )

1 comment:

  1. முஸ்லிம்களின் வழிபாட்டு உரிமையையும் வாழ்வுரிமையையும் பாதுகாக்க, தோழர் திருமாவின் வழியில் உங்கள் குரல் தொடர்ந்து ஒலிக்கட்டும். இசுலாமிய சமூகம் என்றைக்கும் அதை நன்றியோடு நினைவுகூரும்.

    ReplyDelete