Pudumaipiththan |
Rajinikanth |
மத்திய அமைச்சர் மு.க.அழகிரி இல்லத் திருமண விழாவில் நடிகர் ரஜினி சொன்ன பெங்காலி பாபா கதை அவரை ஒரு கற்பனை வளம் கொண்ட கலைஞராகக் காட்டியது. . இமயமலையில் பெங்காலி பாபா என்று ஒரு மகான் இருந்தாராம். அவர் மிகவும் ஆற்றல் பெற்றவராம். அவர் போகும்போது பனிப்பாளங்கள் சரிந்து வந்தால், பாறைகள் உருண்டு வந்தால் அப்படியே வலது கையை நீட்டி ‘ நில்லுங்கள் ‘ என்பாராம். அவை எல்லாம் அப்படியே நின்றுவிடுமாம். பாதையைக் கடந்தபின் ’இப்போ போலாம்’ என்பாராம் அவை அதன்பிறகு விழுமாம்.அந்த மகான் தமிழ்நாட்டுக்கு வந்து மதுரை, சிதம்பரம், திருவண்ணாமலை, தஞ்சாவூர் போன்ற ஊர்களுக்குப் போனாராம். அதில் மதுரையைத்தான் அவர் மிகவும் பிரமாதமாகக் குறிப்பிட்டிருக்கிறாராம்.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் விமான விபத்தில் இறக்கவில்லை . அவர் உத்தரப் பிரதேசத்தில் ஃபைசாபாத்தில் ஒரு இந்து சன்யாசியாக வாழ்ந்து 1985இல் மறைந்தார் என ஒரு கதை உண்டு. கும்நாமி பாபா என அழைக்கப்பட்ட அவர்தான் நேதாஜி என்று நம்புகிறவர்கள் இப்போதும் அவரது கல்லறையில் மரியாதை செலுத்துகிறார்கள்.நேதாஜி மறைந்ததைப்பற்றி விசாரணை செய்த நீதிபதி முகர்ஜியும்கூட இதை உறுதி செய்திருக்கிறார்.
பெங்காலி பாபாவும் கும்நாமி பாபாவைப்போல மர்மப் பின்னணி கொண்டவரோ என்னவோ ரஜினியைக் கேட்டால்தான் தெரியும். மதுரையில் நடைபெற்ற திருமணம் ஒரு சுயமரியாதைத் திருமணம் என அந்த நிகழ்வுக்குத் தலைமை தாங்கிய பேராசிரியரும், தி.க.தலைவர் கி.வீரமணியும் , முதல்வர் கலைஞரும் வலியுறுத்திப் பேசினார்கள். அவர்கள் பேசும்போது எழாத ஆரவாரம் ரஜினி சொன்ன பெங்காலி பாபா கதையைக் கேட்டு எழுந்தது.
ரஜினி சொன்ன பாபா கதை எனக்கு புதுமைப்பித்தனின் உபதேசம் என்ற சிறுகதையை நினைவுபடுத்தியது. அந்த சிறுகதையைப்ப்பற்றி நான் 15 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய கட்டுரையின் ஒரு பகுதியை இங்கே தருகிறேன்:
‘‘ஒரு பின் நவீனத்துவ கலைஞன் அல்லது எழுத்தாளன் என்பவன் ஒரு தத்துவ ஞானியைப் போன்றவன். அவன் எழுதுகின்ற ஒரு பிரதி, அவன் உருவாக்குகின்ற படைப்பு ஆகியவை முன்பே நிர்ணயிக்கப்பட்ட விதிகளினால் ஆளப்படுபவையல்ல. முன்பே அறியப்பட்ட கருத்தாக்கங்களைப் பிரயோகித்து அவற்றை மதிப்பிடவும் முடியாது. எனவேதான் இதுவரையிலும் அறியப்பட்ட சிறுகதைகளின் இலக்கணங்களை வைத்து அளக்க முற்படும்போது புதுமைப்பித்தனின் கதைகள் தப்பித்து ஒடி விடுகின்றன. அதுபோலவே மரபுரீதியான தத்துவார்த்த சட்டங்களுக்குள்ளும் அவை அடைபட மறுக்கின்றன.அறிவு / விஞ்ஞானம் போன்றவற்றை விமர்சனத்தோடு அணுகுவதாலேயே புதுமைப்பித்தனை நாம் மதவாதிகளோடு சேர்த்துவிட முடியாது. ஏனென்றால் ‘‘அறிவு (சயன்ஸ்) இல்லாவிட்டால் அசட்டுத்தனம் மலியும்’’ என்பார் அவர், அவரது படைப்புகளில் மேற்கத்திய வகைப்பட்ட அறிவின் அணுகுமுறை குறித்து கடுமையான விமர்சனங்களும் கேலிகளும் செய்யப்பட்டிருந்தாலும்கூட அவற்றுக்கு மாற்றாக அவர் இயந்திர மரபு என்கிற சனாதன அணுகுமுறையை ஒருபோதும் வைத்ததில்லை.ஐரோப்பிய மருத்துவ அணுகுமுறை மீதான நேரடியான விமர்சனமாக அமைந்திருக்கும் உபதேசம் என்ற சிறுகதையை எடுத்துக்கொள்வோம். இக்கதையில் உடற்கூறு பற்றிய இந்திய ஐரோப்பிய அணுகுமுறைகளை அவற்றின் முரண்பாடுகளை போகிற போக்கில் தொட்டுக்காட்டிவிடுகிற புதுமைப்பித்தன் மேற்கத்திய அறிவின் எல்லையை உணர்த்துவதோடு மட்டுமின்றி அதனால் நிராகரிக்கப்பட்ட இந்திய மரபுகளில் ஒன்றினுடைய புதிர்த்தன்மையையும் விவரித்துச் சொல்கிறார். ஆனால் மேற்கத்திய உடற்கூறு விஞ்ஞானத்துக்கு மாற்றாக இந்திய யோக மரபை அவர் நிறுத்துகிறார் எனவும் நாம் கூறிவிட முடியாது. இங்கே இயல்பாக வந்துவிடக்கூடிய ஒரு எதிர்வு மிக சாமர்த்தியமாக படைப்பு மொழியின் லாவகத்தால் தவிர்க்கப்படுகிறது.ஐரோப்பிய வகைப்பட்ட உடற்கூறு மருத்துவமென்பது இரண்டாம் உலக யுத்த காலத்தில் ஜெர்மனியின் நாஜிப்படை முகாம்களில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புகள் முதலானவற்றை உள்ளடக்கி இருப்பதையும், குறைந்தபட்ச மருத்துவ அறத்தையும் அது உதாசீனப்படுத்திதான் வளர்ந்தது என்பதையும் நாம் இந்தக் கதையினூடே புரிந்து கொள்கிறோம். ஆனால் இந்திய மரபிலான யோக மார்க்கமோ வேறுபட்டதாக உள்ளது. ஐரோப்பிய விஞ்ஞானம் கண்ணாடியையும், விஷத்தையும் உண்டுபண்ணிக் கொண்டிருக்க, சித்தாந்த சாமியாரின் யோகமார்க்கமோ அதை விழுங்கி ஏப்பமிட்டு விட்டு கைலாசபர்வத சிகரத்தின் பனிமுடிவில் நின்றுகொண்டிருக்கிறது. இங்கே எல்லாவற்றையும் பகுத்தறிந்து தர்க்கபூர்வமாக தெளிவுபடுத்திவிட முடியுமென நம்பிய அறிவுக்கு பலத்த அடி விழுகிறது.ஒரு கதைக்குள் படைப்பாளி உண்டு பண்ணுகிற யதார்த்தமென்பது புறநிலையில் நாம் பார்க்கிற யதார்த்தமல்ல. அது கவித்துவத்தோடு மாற்றியமைக்கப்படட யதார்த்தம் என்கிறார் காப்ரியேல் கார்ஸியா மார்க்யெஸ். இப்படிப் படைப்புக்குள் மாற்றியமைக்கப்பட்ட யதார்த்தம் உண்மையில்தான் வேரூன்றியுள்ளது என்றபோதிலும் புறநிலையில் காணப்படும் யதார்த்தத்துக்கும் அதற்குமான உறவு ஒன்றுக்கு ஒன்று என்பது போல நேர்க்கோட்டு தன்மை கொண்டதல்ல, படைப்பில் வெளிப்படும் யதார்த்தம் கனவில் வெளிப்படுவதை ஒத்தது. இதுவே மாஜிக்கல் ரியாலிஸம் என்ற பின்நவீனத்துவ எழுத்து முறையாகும். இத்தகைய கூறுகள் புதுமைப்பித்தனின் படைப்புகள் பலவற்றில் வெளிப்பட்டுள்ளன ‘‘உபதேசம்’’ கதையிலும் அவற்றின் தடயங்களை நாம் எதிர்கொள்கிறோம்.இந்தக் கதையில் ஹடயோகியின் குடல் புண்ணுக்கு ஐரோப்பிய உடற்கூறு மருத்துவம் சிகிச்சைகளைப் பரிந்துரைக்கிறது. ஆனால் மறுநாள் நோயாளி மாயமாக மறைந்து விடுகிறான். இந்த அனுபவத்தை அறிவியலின் தர்க்கத்தால் விளக்க முடியாத. அதனால்தான் வில்கின்ஸனுக்கு திகைப்பு ஏற்படுகிறது. ஆனால் விசுவநாத் ஹடயோகியைப் பின் தொடர்கிறார், மொட்டை அடித்துக் கொள்கிறார். கஷாயம் வாங்குகிறார். ராணுவப் பாசறைகளில் உயிர்களைக் காப்பாற்ற தப்பு வழிகள் என்று சொல்லப்பட்ட முறைகளையும் பரிசீலித்துப் பரிசீலித்துப் பார்த்த விசுவநாத், அதேவித வெறியோடு யோக மார்க்கத்தையும் அணுகுகிறார். ஆனால் ஐரோப்பிய நாஸ்திகவாதியான வில்கின்ஸனுக்கு அந்தத் துணிவு இல்லாமல் போய் விடுகிறது.ஐந்து ஆண்டுகளுக்குப் பிற்பாடு வில்கின்ஸன் வருவாரென முன்னுணர்ந்து கைலாசபர்வத பனிச்சிகரத்தில் கடிதம் எழுதி வைத்துக்கொண்டு பனிக்குள் உறைந்து காத்திருக்கும் விசுவநாத்தைப் பார்க்கும்போது வில்கின்ஸனுக்கு எதுவும் புரியவில்லை. திரும்புவோமா என்றுதான் கேட்க முடிகிறது. ஐரோப்பிய விஞ்ஞானத்தின் எல்லை அங்கே உணர்த்தப்படுகிறத. பனிக்குள் உறைந்து உட்கார்ந்திருப்பது சாத்தியமா? வில்கின்ஸன் வருவாரென்பது விசுவநாத்துக்கு எப்படித் தெரியும்? என்பது போன்ற கேள்விகளை நாம் கேட்கலாம். இப்படியான கேள்விகளை எழுப்பும் தர்க்க வகைப்பட்ட அறிவு ‘‘Propositional Language’’ன் அடிப்படையிலானது. ஆனால் இலக்கியமோ தனக்கென பிரத்யேகமான ஒரு அறிதல் முறையைக் கொண்டிருக்கிறது; அதுதான் ‘‘கற்பனை’’ என்பதாகும். இது அரசியலாலோ, அறிவியலாலோ, அறவியலாலோ நமக்கு வழங்கப்படுவதில்லை. ஆனால் இதுதான் அரசியலையும், அறிவியலையும் அறவியலையும் சாத்தியப்படுத்துகிறது. ஏனென்றால் மொழியின் உருவாக்கத்தில்தான் இலக்கியம் இடம் பெற்றிருக்கிறது.
அன்புள்ள ரவிக்குமார்,
ReplyDeleteமிக நல்ல பகிர்வு. புதுமைப்பித்தனின் உபதேசம் என்ற சிறுகதையைப்
பற்றிய உங்கள் கட்டுரையில் குறிப்பிட்டிருந்த ஒரு செய்திக்கு
அண்மையிலும் வலுவான சான்றுகோள்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
இது பற்றி நானும் எழுத நினைத்திருந்தேன்!
//ஐரோப்பிய வகைப்பட்ட உடற்கூறு மருத்துவமென்பது இரண்டாம் உலக யுத்த காலத்தில் ஜெர்மனியின் நாஜிப்படை முகாம்களில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புகள் முதலானவற்றை உள்ளடக்கி இருப்பதையும், குறைந்தபட்ச மருத்துவ அறத்தையும் அது உதாசீனப்படுத்திதான் வளர்ந்தது என்பதையும் நாம் இந்தக் கதையினூடே புரிந்து கொள்கிறோம்.//
என்று நீங்கள் எழுதியிருந்தது எனக்கு இதனை மீண்டும் நினைவூட்டியது.
அண்மையில் சயன்சு (Science) என்னும் புகழ்பெற்ற ஆய்விதழில்
[சூலை 16, 2010 இதழில் (தொகுதி 329) பக்கம் 275] Confronting Anatomy's
Nazi Past என்னும் கட்டுரையில் அதிர வைக்கும் செய்திகள் உள்ளன.
இவை நாட்ஃசி கொடுமைகளையும், எப்படி "உடற்கூறு ஆய்வாளர்கள்"
நாட்ஃசி கொலையாளர்களுடன் ஒத்துழைத்தார்கள் என்பதும்
குமட்டும் உண்மைகளை உணர்த்தும். "அறிவியல், ஆய்வு"
என்னும் சொற்களை மாந்தர்கள் கேட்டு உள்வாங்கும்
பொழுது அறநீர்மை, அறிவு நாணயம் பற்றியும் கேள்விகள்
எழுப்ப வேண்டும் என்பதற்கு இது போன்ற செய்திகள் நல்ல
எடுத்துக்காட்டு.
அண்மையில் சிஃவிலிசு (Syphilis) என்னும் நோயை
வேண்டுமென்றே ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் மீது ஊட்டி
அதன் விளைவு என்ன, எப்படி இந்நோய் வளர்கின்றது என்று
"அறிய' நிகழ்த்திய கொடுமையைப் பற்றியும் இது போல
கதிரியக்கம் முதலான "சோதனைகள்" பற்பல நடத்திய
கொடுமைகளை மக்கள் அறிய வேண்டும். சிஃவிலிசு நோயூட்டு
சோதனையை டசுக்கிகீ அல்லது டசுக்கிச்சி சிஃவிலிசு ஆய்வு
என்று அழைக்கின்றனர். இது பற்றிய செய்தி அறிய
பார்கக்வும்:
http://en.wikipedia.org/wiki/Tuskegee_syphilis_study
வெல்லசுலி கல்லூரியில் பேராசிரியராக
இருக்கும் ஃசூசன் ரெவர்பி (Susan Reverby) என்பார்
(http://www.wellesley.edu/PublicAffairs/Profile/mr/sreverby.html)
சிஃவிலிசை நோயை இசைவு தராதவர்கள் மீது
கௌத்தமாலா நாட்டில் ஊட்டியதைப் பற்றிய
தரவுகளை அடியொற்றி ஆய்வு செய்து அண்மையில்
வெளியிட்டுள்ளார். ஏதோ அறிவியல் ஆய்வு என்றால்
உடனே மக்கள் நம்புகிறார்கள் (பொதுவாக நம்பத்தான்
வேண்டும்) ஆனால் இவற்றை சற்று ஆழமாக உரசிப்
பார்க்க வேண்டும். எத்துறை ஆயினும், நேர்மை, அறநீர்மை,
அறிவு நாணயம், பொறுப்புணர்வு ஆகியவற்றை மக்கள்
வலியுறுத்தி வேண்ட வேண்டும்.
நாட்ஃசிகளுடன் ஒத்துழைத்த உடற்கூறாளர்கள் எப்படியெல்லாம்
கொடுமைகள் செய்துள்ளார்கள் பாருங்கள்:
(நன்றி: சயன்சு, சூலை 16, 2010, தொகுதி 329)
"By poring over old scientific papers and other records, they found that
Stieve was interested in the effects of stress on reproductive
systems. In the 1920s, he dissected chickens stressed by the presence of
a caged fox. After the Nazis came to power, Stieve examined the effects
of stress on the timing of human ovulation. He collected data on 200
female prisoners who were stressed by learning the date of their execution,
and he dissected them after their deaths.
Stieve worked closely with prison authorities, Winkelmann and
Schagen found. He sent an assistant to Plötzensee to obtain from prison
doctors the women’s medical histories, as well as data on their menstrual
cycles and reactions to the announcement of their execution date. He also persuaded
Plötzensee’s director to continue conducting executions in the morning, despite the
daylight air attacks in Berlin, so tissue samples could be processed the day of the execution.
Moreover, Stieve agreed to take the corpses of all the prison’s 2915 executed inmates,"
செல்வா
அன்புள்ள ரவிக்குமார்
ReplyDeleteநீங்கள் அரசியலை விட்டுவிட்டு முழுமையாக இலக்கியத்துக்கு உங்கள் நேரத்தை அர்ப்பணியுங்கள். புதுமைப்பித்தன் கதை பற்றிய உங்கள் கருத்துக்கள் படைப்புத் திறன் கொண்ட, பல்துறை அறிவுக் கூறுகளை உள்ளடக்கிய, விமர்சன நோக்கை வெளிப்படுத்துகிறது. இத்தனையும் எளிமையான மொழியில் கூறிச்செல்லும் லாகவமும் உங்களுக்கு இயல்பாகக் கைவந்திருக்கிறது.
அன்புடன்
அரவிந்தன்
Dear anna we know all yeaster year actor/actress but we don't know pudhumai pithhan,thamizh oli,jeyakanthan..at present we don't know even how rice is coming pease write and do polics also
ReplyDeleteA.Anantheeswaran