Saturday, November 13, 2010

தமிழ் கிரந்தம் ஒருங்குறி சில விளக்கங்கள் - கி.நாச்சிமுத்து




      தமிழகத்தில்  பல்லவர் காலத்திலிருந்து (சுமார் கி.பி.5) தமிழ்மொழியையும் வடமொழியையும் எழுத வழங்கிய பொது எழுத்தாகவும்  இன்றைய மலையாளம் சிங்களம் பர்மியம் தாய் போன்ற மொழி எழுத்துக்களுக்கு அடிப்படை எழுத்தாகவும் அமைவதுமான தமிழ் கிரந்தம் எனப்படும் எழுத்துருவை ஒருங்குறியில் (Unicode) அமைக்கும்போது ஏற்படும் விவாதங்களில் சில கருத்துக்களைத் தெளிவுபடுத்திக் கொள்வதே இவ்வுரையின் நோக்கம்.

            தொல்காப்பியர் காலத்திலிருந்தே தமிழுக்கும் வடமொழிககும் தொடர்புள்ளது என்பது தொல்காப்பியர் வடமொழிச் சொற்களைத் தமிழில் எழுதும்போது வடவெழுத்துக்களை நீக்கி எழுதவேண்டடும் என்று விதி அமைப்பதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.இது தமிழுக்கும் வடமொழிக்கும் பொதுவான எழுத்துரு இருந்ததை உணர்த்துகிறது.இது தாமிழி திராவிடி என்றும் இன்று தென் பிராமி தமிழ் பிராமி என்றும் வழங்கும் எழுத்தாக இருக்கலாம். தொல்காப்பியர் தமிழிலில்லாத வடமொழி எழுத்துக்களைத் தமிழ் எழுத்துக்களால் எழுத வேண்டும் என்று மட்டும் பொதுவாகச் சொல்ல (நகம்) கி.பி.11 இல் தோன்றிய வீரசோழியம் அக்காலத்தில் வடமொழிச் செல்வாக்கு இருமொழியத்தால் மிகுதிப் பட்டிருந்ததை நோக்கி வடமொழி எழுத்துக்களைத் திரித்து எழுதும் முறை (வருடம்),மொழிமுதல் (உலோகம்) இடை (வாக்கியம்)போன்ற இடங்களில் தமிழுக்கு ஏற்ப மாற்ற வேண்டிய முறை வடமொழிச் சந்தி(கருணாநிதி,கஜேந்திரன்) போன்றவற்றை விரிவாகக் குறிப்பிடுகிறது. நேமிநாதம்(12)வீரசோழியத்தைப் பெரும்பாலும் பின்பற்ற நன்னூல் வடமொழிச் சந்தி ஒழியப் பிறவற்றை ஏற்கிறது.

            வடநாட்டில் குப்தர் காலம் தமிழ் நாட்டில் பல்லவர் காலம் எனப்படும் கி.பி.5 க்குப் பிந்திய காலகட்டத்தில் உருவான அரசுருவாக்கம் அமைந்த காலத்தில் நடந்த இந்திய மயமாதல் என்ற சூழலால் வடமொழி ஆட்சி அரசியல் தொடர்பு உயர்கல்வி சமயம் வணிகம் போன்றவற்றிற்குரிய பொதுமொழியாக உருவாகிவிட்டது.இது ஆட்சியாளர்களுக்கும் கல்வியாளர்களுககும் பிறர்க்கும் வசதியாக அமைந்துவிட்டது.இதனால் நாட்டு மொழிகளாகிய பிராகிருதம் தமிழ் போன்றவற்றை ஏற்றுப் போற்றிய சமண பௌத்த மதங்கள் கூட வடமொழியை இணைப்பு மொழியாக ஏற்றுக் கொண்டுவிட்டன. அக்காலச்சூழலுக்கு வடமொழி இன்று ஆஙகிலம் போன்று வசதியாக அமைந்துவிட்டதே இதற்குக் காரணம்.

            இதில் உயர்கல்வி மொழியாகவும் வடமொழி விளங்கியது.இதுவும் இன்றைய ஆங்கிலம் வழங்குவதைப்போன்ற காரணங்களால்தான்.எனவே வடமொழி வடநாட்டவர்க்கு மட்டும் உரியதாகாமல் எல்லோருக்கும் உரியதாக மாறிய சூழலைக் காட்டுகிறது.உயர் கல்வியும் ஆராய்ச்சியும் கருத்துப் பரிமாற்றங்களும் வடமொழி வழி நடந்தன.பல்லவர் சோழர் காலத்தில் வடமொழிக் கல்வி போற்றப்பட்டதற்கான பின்னணி இதுதான்.
            இந்த நிலையில் இரண்டு செய்திகளைக் கவனிக்க வேண்டும்.பல்லவர் பாண்டியர் காலத்தில் தமிழை எழுத வடடெழுத்து தமிழகத்திலும் கேரளத்திலும் வழக்கிலிருந்தது.வடமொழியைக் கிரந்த எழுத்து எனப்படும் எழுத்தில் எழுதினர்.தமிழையும் வடமொழியையும் கற்கும் மாணவர்க்கு வசதியாகப் பொது எழுத்தாகத் தமிழ் கிரந்தம் உருவாகிறது.தமிழுக்குரிய சிறப்பெழுத்துக்கள் ஐந்தும் அதில் இடம்பெறும்.எனவே வட்டெழுத்து தமிழ் கிரந்தம் என்ற இரண்டெழுத்து வழங்கிய நிலையில் சோழர் காலத்தில் தமிழுக்கும் வடமொழிக்கும் பொதுவான தமிழ் கிரந்தமே தமிழ் எழுதவும் போதும் என்று மேற்கொண்டுவிட்டார்கள்.பாண்டிய நாட்டிலும் பிற பகுதிகளிலும் பழைய வட்டெழுத்தை விடாமல் வைத்திருந்தார்கள்.ஆனால் பிற்காலத்தில் தமிழகம் முழுவதும் பொது எழுத்தான தமிழ் கிரந்தத்திற்கு மாறக் கேரளம் விடாமல் வட்டெழுத்தை விடாமல் வைத்திருந்தது.பின் கி.பி.14க்குப் பின் அங்கு வடமொழிச் செல்வாக்கு மிகுந்து வந்த நிலையில் மெல்ல மெல்லத் தமிழ் கிரந்தம் ஆரிய எழுத்து என்ற பெயரில் அண்மையில் ஓரிரு நூற்றாண்டிற்கு முன்புதான் மலையாளத்திற்கு எழுத்தாக அமைந்தது.

       தமிழ் கிரந்தம் தமிழ் வடமொழியை எழுதப் பயன்படுத்தியதைத்  தமிழ் இசுலாமிய அறிஞர்களிடையே வழங்கி வந்த அறபுத் தமிழ் நிலையோடு ஒப்பிடலாம்.அறபு எழுத்தால் தமிழுக்குரிய சிறப்பெழுத்துக்களைச் சேர்த்துக் கொண்டு தமிழை எழுதுவதே அறபுத் தமிழ்.இது செல்வாக்குப் பெறவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

            மிதமிஞ்சிய வடமொழிச் செல்வாக்கால் தமிழ் தனக்குரிய களங்களை இன்றுபோல் அன்றும் இழந்தது.கல்வித்துறையில் உயர்ந்த சிந்தனைகளை வடமொழியில் தமிழர் எழுதினர்.காஞ்சிபுரத்திலிருந்த தண்டி வடமொழியில் தண்டியலங்காரத்தை எழுதினார்.சங்கரர் இராமானுஜர்  அகோர சிவாச்சாரியார் போன்றோர் வடமொழியில் தம் கருத்துக்களை எழுதினர்.உமாபதிசிவாச்சாரியார் வேதாந்த தேசிகர் போன்றோர் வடமொழியிலும் தமிழிலும் எழுதினர்.வைணவ உரையாசிரியர்களும் சமண ஆசிரியர்களும் தமிழ் வடமொழி கலந்த மணிப்பிரவாளத்தில் எழுதினர்.தனி வடமொழியில் எழுதியதையும் விட மணிப்பிரவாளம் தமிழுக்கு அறிவு ரீதியாக ஆக்கம் செய்த பணிதான் என்று நாம் வேறு ஒரு கோணத்தில் கூறமுடியும்.கௌடில்யம் போன்ற நூல்களை இத்தகைய மணிப்பிரவாள உரை எழுதிப் படித்துள்ளனர்.அது இன்று மலையாளத்தின் தொடக்க நூல்களுள் ஒன்றாக உள்ளது.ஓரளவு வடமொழி தெரிந்தவர்களும் அந்நூலைப் படிக்க முடியும்.

            மேலும் இசை நாட்டியம் (பரத நாட்டிய சாத்திரம்)அர்த்த சாத்திரம்(சாணக்கியர் தமிழர்) சிற்ப நூல்கள் ஆயுர்வேத மருத்துவ நூல்கள் தத்துவம் தர்க்க நூல்கள் வடமொழியில் இருப்பவை தமிழர் தந்தவை.இன்னும் இலக்கணத்தில் மாபாடியம் எழுதிய பதஞ்சலி குவலயானந்தம் எழுதிய அப்பைய தீட்சிதர்போன்றோர் தமிழரே.மிகப் பழங்காலத்தில் எழுதிய ஒலியியல் (சிட்சை) நூல் ஒன்று கடையெழு வள்ளல்களுள் ஒருவனாகிய பாரி பெயரில் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.எனவே வடமொழியில் உள்ள நூல்களில் தமிழரின் அறிவும் அடங்கியுள்ளது.எனவே நாம் வடமொழி என்று ஒதுக்கும்போது நம்மவர் அறிவை நாம் இழக்கிறோம்.இன்று நாம் ஆங்கிலத்தை வைத்துக் கொண்டாடியது போன்றுதான் நம் முன்னோர் செய்திருக்கின்றனர்.தர்க்கம் மொழித்தத்துவம் போன்ற துறைகளில் தனித்தமிழ் நூல்களை நம்மவர் எழுதாமல் போனது மேலாராய்ச்சிக்கும் அறிவுக்கும் வடமொழி போதும் என்று நினைத்த நினைப்புத்தான். சைவ சித்தாந்தத் தத்துவ நூல்களை எழுதிய மெய்கண்டார் சித்த மருத்துவம் சோதிடம் முதலிய துறைகளில் தமிழில் நூல் இயற்றும் மரபைப் பேணியவர்கள் செய்த பணி  வடமொழியின் வல்லாண்மையை நம்மவர் எதிர் கொண்ட வரலாற்று முக்கியத்துவம் உடையது.

            மேலே சொன்ன வடமொழி இணைப்பு மொழியாகவும் உயர்கல்வி அரசியல் மொழியாகவும் விளங்கியதால் ஏற்பட்ட இருமொழிச் சூழலில் தமிழையும் வடமொழியையும் கற்கத்  தமிழ் கிரந்தம் என்ற ஒரு பொது எழுத்தை உருவாக்கியதோடு சோழப் பேரரசு போன்றவை அவற்றைப் பரப்பவும் செய்தன.இவ்வெழுத்தில் அமைந்த தென்னக வடமொழிச் செல்வம் நம்முடையது. இவ்வெழுத்தில் கல்வெட்டுக்களும் பல அரிய சிற்பம் முதலிய நூல்கள் இருக்கின்றன.இது தமிழ் பேசும் பகுதிகளில்தான் இவ்வெழுத்து வழக்கிலுள்ளது.இது இக்காலத்தில் நாகரம் என்னும் நாகரி எழுத்தாகப் பொதுப் பயன்பாடு கருதி மாற்றி விட்டார்கள்.தமிழ் தெரிந்தவர்கள் சிறிது முயன்று படித்து வந்த கிரந்த எழுத்தில் அமைந்த வடமொழிநூல்கள் மணிப்பிரவாள நூல்கள் போன்றவற்றை இன்று எளிதாகப் படிக்கும் வாய்ப்பை நம்மவர் இழந்துவிட்டனர்.கிரந்தத்தில் உள்ள கல்வெட்டுக்களையும் சுவடிகளையும் நூல்களையும் படிக்க கிரந்த எழுத்து அறிவு தேவை.எனவே ஏற்கெனவே தமிழ் கிரந்த எழுத்தில் அமைந்த வடமொழிக்குரிய எழுத்துக்களும் தமிழின் ஐந்து சிறப்பெழுத்துக்களும் ஓருங்குறியில் அமைப்பது புதிய மாற்றமல்ல.எனவே அதனால் அதை எதிர்க்க வேண்டியதில்லை ,கல்வெட்டுக்களில் வடமொழிப் பகுதிகளில் பழுவேட்டரையர் போன்ற சொற்கள் வரும்போது ழு பயன்பட்டிருக்கிறது.மேலும் வடமொழியில் அமைந்த சிற்ப நூல்களிலும் இமமுறையைப் பார்க்கலாம்.அதுபோன்றே இன்று ஆங்கிலச் சொற்கள் கலந்து எழுதும்போது ஆங்கில எழுத்தில் எழுதுவது போன்று வடசொற்கள் வரும்போது வடவெழுத்தால் எழுதும் முறையும் உள்ளது.

            இப்படியெல்லாம் உறவாடிய போதிலும் தமிழில் சில கிரந்த எழுத்துக்கள்தான் வந்தனவே ஒழிய வடமொழி எழுத்து முறை முற்றிலும் தமிழுக்கு வரவில்லை.எனவே கிரந்த ஒருங்குறியில் தமிழ் எழுத்துக்கள் இடம்பெற்றால் தமிழில் வடமொழி புகுந்துவிடும் என்று அச்சப்படத் தேவையில்லை. இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழ் தன் தனித்துவத்தைப் போற்றியிருக்கிறது.இன்று நம்முன்னே அச்சத்திற்குரியது ஆங்கில வல்லாண்மையே.தமிழ் நெடுங்கணக்குத் தெரியாமல் ஆங்கில நெடுங்கணக்கு முறையில் அகரவரிசைப் பட்டியல் அமைக்கிறார்கள் இக்காலத் தமிழர்.பேசுவது தமிங்கிலம். மொழிக் கலப்பும் (குறி மாற்றமும்)மொழித் தாவலும் (குறி தாவல்) வழக்காகிவிட்டன.தமிழை ஆங்கில முறையில் தட்டச்சுச் செய்கிறோம்.நம்மவர்க்கு ஆங்கிலம் வழி தான் தமிழ் வருகிறது.உயிரோடுள்ள இந்த வல்லாண்மையை எதிர்க்கவேண்டும்.உயிர் போன வடமொழி வல்லாண்மை வரலாறாகிக் கொண்டிருக்கிறது.அதனுடைய எச்சங்களாக உள்ள கோயில் சடஙகுகள் முதலியவற்றிலிருந்து அகற்ற இன்னும் எஞ்சிய போராட்டங்கள் சிலவே உள்ளன.

            வடமொழியிலே சமுக நீதிக்கு எதிரானவை அறிவுக்குப் பொருந்தாத புராணக் கற்பனை சார்ந்த பொருள்கள் இருப்பது போன்று வச்சிர சூசி போன்ற சமத்துவக் கருத்துக்கள் சமண பௌத்த சீர்திருத்தக் கருத்துக்கள் உயரிய அறிவியல் தத்துவக் கருத்துக்கள் உள்ளன.அவற்றை நாம் கற்காமல் நம் சொத்துக்களை இழந்துவிடக்கூடாது.உலகமெல்லாம் வடமொழியைக் கற்பதன் காரணம் இதுதான்.வடமொழி வல்லாண்மையை எதிர்த்து ஒரு சுற்றுவந்துவிட்டோம்,அத்தோடு அதிலுள்ள நம் சொத்துக்களைக் கற்று மீட்டெடுக்கிற பணியை இனித் தொடங்கவேண்டும்.

            மைய அரசின் இத்தகையசெயல்பாடுகளில் நுண் அரசியல் ஏதோ ஒளிந்திருப்பதாகத் தமிழர்கள் ஐயப்படுவது நியாயமே.எனவே அதைத் தீர்க்கவேண்டிய பொறுப்பும் அவர்களுக்கு உண்டு.எனவே உரியவர்களை அழைத்துப் பேசக் கேட்பது சரியே.


       



3 comments:

  1. //வடமொழியிலே சமுக நீதிக்கு எதிரானவை அறிவுக்குப் பொருந்தாத புராணக் கற்பனை சார்ந்த பொருள்கள் இருப்பது போன்று வச்சிர சூசி போன்ற சமத்துவக் கருத்துக்கள் சமண பௌத்த சீர்திருத்தக் கருத்துக்கள் உயரிய அறிவியல் தத்துவக் கருத்துக்கள் உள்ளன.அவற்றை நாம் கற்காமல் நம் சொத்துக்களை இழந்துவிடக்கூடாது
    //

    உலகிலே வடமொழி தாண்டி சீன, அரபிய, ஆங்கில மொழிகளில் எண்ணற்ற தத்துவமும் விஞ்ஞானமும் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றையெல்லாம் எப்படித்
    த்மிழுக்குப் பெயர்ப்பு செய்கிறோமோ அது போலத்தான் வடமொழி நூல்களையும் பெயர்த்து வருகிறோம். கம்பன் அன்றே செய்தான். வடமொழி நூல்களை தூயதமிழிற்கொண்டு வந்து தமிழை வளப்படுத்தியவர்கள் உண்டு. இன்றும் மொழி பெயர்ப்பு நூல்கள் ஆக்குநரின் பணி போற்றத்தக்கது.

    இந்த மொழிபெயர்ப்பு, அல்லது தழுவற்றமிழ் நூற்கள் செய்ய சமற்கிருத எழுத்துக்களுடன் தமிழையோ தமிழுடன் ச்மக்கையோ கலக்க வேண்டியதேயில்லை.

    வங்காள மொழியில் உள்ள நல்ல அறிவு நூல்களைக்
    கொண்டுவர வங்க் எழுத்துக்களுடன் தமிழைக் கலக்கவோ அல்லது தமிழில் வங்கத்தைக் கலக்கவேண்டும் என்பதில்லையே.

    //.உயிர் போன வடமொழி வல்லாண்மை வரலாறாகிக் கொண்டிருக்கிறது.அதனுடைய எச்சங்களாக உள்ள கோயில் சடஙகுகள் முதலியவற்றிலிருந்து அகற்ற இன்னும் எஞ்சிய போராட்டங்கள் சிலவே உள்ளன.
    //

    தமிழ்நாட்டில் உள்ள பொய்யான நம்பிக்கைகளில் இதுவும் ஒன்று. வடமொழி செத்து விட்டது என்ற
    நம்பிக்கையும் பொய்யான நம்பிக்கை.

    //மைய அரசின் இத்தகையசெயல்பாடுகளில் நுண் அரசியல் ஏதோ ஒளிந்திருப்பதாகத் தமிழர்கள் ஐயப்படுவது நியாயமே.எனவே அதைத் தீர்க்கவேண்டிய பொறுப்பும் அவர்களுக்கு உண்டு.எனவே உரியவர்களை அழைத்துப் பேசக் கேட்பது சரியே.
    //
    ஒருபுறம் தமிழ் எழுத்துக்களைக் கிரந்தத்துடன் கலப்பது தேவை என்று சொல்லி மறுபுறம் நுண்ணரசியல் பற்றிக் கவலைப்படுவது தேவையற்றதல்லவா?

    இப்படியும் அல்லாமல் அப்படியும் அல்லாமல் எழுதிவிட்டால் அது சமன்பட்ட பார்வை என்ற போலியான போக்கு தமிழ் உலகில் உலவுகிறது.

    திரு.நாச்சிமுத்து அவர்களின் எழுத்திலும் உறுதி இல்லை.

    அன்புடன்
    நாக.இளங்கோவன்

    ReplyDelete
  2. சுத்தி வளைத்து பரப்பான வாடா மொழி ஆதிக்கத்துக்கு ஆதரவாகவே இந்தப் பதிவு உள்ளது. கிரந்த எழுத்தும் தமிழ் எழுத்தும் வேறு வேறானவை. எப்படி ரோமன் எழுத்தினை தமிழில் சேர்க்க முடியாதோ அதே போல் கிரந்தமும் தமிழில் சேர்க்க முடியாது. இதனைப் படித்தல் நாச்சிமுத்துகு தெளிவு பிறக்கும் http://bit.ly/c2D8qY

    ReplyDelete
  3. பேராசிரியர் நாச்சிமுத்து அவர்கள் எழுதிய வரலாற்றில் உண்மை இருக்கலாம் ஆனால் அது தமிழர்கள் தோற்ற வரலாறு. கத்தியின்றி ரத்தமின்றி வடமொழி தமிழைச் சூழ்ந்து பிடித்த வரலாறு. இந்த வரலாற்றிலிருந்து நாம் பெற்றுக்கொள்ளவேண்டியது என்ன செய்யவேண்டும் என்பதைக் காட்டும் பாடமல்ல. என்ன செய்யக்கூடாது என்பதை அறிவுறுத்தும் பாடம். இன்று வட மொழி செத்த மொழி என்று சொல்லிக்கொண்டிருக்கலாம். ஆனால் இன்னும் தமிழின் தனித்துவத்துக்கு ஊறு விளைவிப்பதில் அது உயிர்ப்புடனேயே இருக்கிறது எனலாம். இல்லாவிட்டால், வடமொழிக்குரிய எழுத்துக்களைத் தமிழுக்குள் கொண்டுவருவதற்காக மிகவும் உயர்ந்த மட்டங்களில் கூட இவ்வளவு முனைப்புடன் முயற்சி எடுக்கப்படுமா? வடமொழியில் உள்ள அறிவுச் செல்வங்கள் பல தமிழர்களின் அறிவுச் செல்வங்கள் என்பது உண்மைதான் ஆனால் அதற்காக வடமொழியில் தமிழையோ, தமிழில் வடமொழியையோ கலக்கவேண்டும் என்பது சரியாகப் படவில்லை. இன்றைக்குப் பல தமிழர்கள் ஆங்கிலத்தில் எழுதி வருகின்றனர் அதனால் அச் செல்வங்களை மீள்விக்கவேண்டும் என்று ஆங்கிலத்தில் தமிழ் எழுத்துக்களைச் சேர்க்க முடியுமா? வடமொழியிலுள்ள தமிழர் அறிவுச் செல்வங்களை மட்டு மன்றி பிறர் எழுதிய அறிவுச் செல்வங்களையும் தமிழுக்குக் கொண்டு வருவது முக்கியமானது ஆனால் அது ஒவ்வொரு தமிழனும் செய்யக்கூடிய வேலை அல்ல. அதற்கு வடமொழியிலும் தமிழிலும் சிறப்புப் பயிற்சி பெற்ரவர்கள் தேவை மிகச் சிறுபான்மையாக இருக்கக்கூடிய அவர்களது தேவைக்காகத் தனியாக மென்பொருட்களை உருவாக்கிக் கொள்ளலாம்.

    இன்று வடமொழியை விட ஆங்கிலமே தமிழுக்குப் பயமுறுத்தலாக உள்ளது என்பது உண்மையே. ஆனால் வடமொழி எழுத்துக்களையும் தமிழ் எழுத்துக்களையும் கலந்து தமிழரிடையே பரப்ப முயல்வது ஆங்கிலமும் தமிழில் இலகுவாக ஊடுருவ வழி சமைக்கும் என்பதை நாங்கள் உணர வேண்டும். தமிழ் எழுத்து முறை தமிழில் பிறமொழிக் கலப்பைத் தடுப்பதில் ஒரு பாதுகாப்பு அரணாக விளங்கி வருகிறது. இந்த அரணில் ஓட்டைகள் போடுவதை ஏற்றுக்கொள்வதன் மூலம் தமிழ் வேகமாகத் தனது தனித்துவத்தை இழப்பதற்கு வழி சமைத்துக் கொடுக்கிறோம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

    ReplyDelete