Friday, November 5, 2010

மின்னணுக் கழிவு மேலாண்மை கொள்கை உருவாக்கப்பட வேண்டும்

(நான் இந்த உரையில் எழுப்பிய பல கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கு மின்னஞ்சல் உருவாக்கப்பட்டு இருக்கிறது. மின்னணுக் கழிவு மேலாண்மைக்கான கொள்கை உருவாக்கப்பட்டிருக்கிறது. பொதுத்துறை நிறுவனங்களின் லாபத்தில் இரண்டு விழுக்காடு சி .எஸ் .ஆர் நிதியில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. )
3-5-2010  பிற்பகல் 12-40
தெழில் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை
மானியக் கோரிக்கை மீதான விவாதம்


திரு. து. ரவிக்குமார்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, சேலம் உருக்காலைக்கு நிலம் கொடுத்த மக்களுக்கு அங்கே வேலைவாய்ப்பிலே முன்னுரிமை அளிக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்தபோது, அதற்காக உடனடியாக நடவடிக்கை எடுத்த மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்களுக்கும், டெல்லிக்கே சென்று இதைப்பற்றி வலியுறுத்துகின்ற மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
அதைப்போல, இன்றைக்குN.L.C  பழுப்பு நிலக்கரி நிறுவனத்திற்கு நிலம் கொடுத்தவர்கள், இன்னும் அவர்களுடைய பிரச்சினை தீராமல் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.  அங்கே இருக்கிற N.L.C  நிர்வாகம், இன்றைக்கு அந்தப் பகுதியிலே இருக்கிற மக்கள் பிரதிநிதிகளைக்கூட அலட்சியம் செய்து அவமானப்படுத்துகிற ஒரு போக்கைக் கடைப்பிடித்து வருகிறது.  அந்த மாவட்டத்தினுடைய அமைச்சர் அவர்களைக்கூட அவர்கள் அங்கே மதிப்பது இல்லை.  அண்மையிலே அங்கே நடந்த ஒரு நிகழ்ச்சியிலே கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினரைக்கூட அவர்கள் அவமதித்திருக்கிற செய்தி நாளேடுகளில் வந்தது.  அப்படியான அந்த N.L.C  நிறுவனத்தினுடைய அந்தப் போக்கைத் தடுத்து நிறுத்துகின்றவிதமாக, அங்கேயும் நிலம் கொடுத்த மக்களுக்கு இதேபோன்ற முன்னுரிமையை வழங்குவதற்கு நம்முடைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று நான் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இத்தகைய பிரச்சினைகளையெல்லாம் தீர்க்க வேண்டுமென்று சொன்னால்-நம்முடைய அரசு, எத்தனையோ துறைகளுக்கு இன்றைக்குக் கொள்கைகளை உருவாக்கி மிகச் சிறப்பாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது;  குறிப்பாகத் தொழில் கொள்கை உருவாக்கப்பட்டு தொழில் துறையிலே தமிழகம் முன்னிலையிலே இருக்கிறது; அதைப்போல-இந்த நிலம் கொடுத்தவர்களுடைய பிரச்சினையைத் தீர்ப்பதற்கு Rehabilitation and Resettlement      Policy--ஐயும் நம்முடைய மாநில அரசு உருவாக்கிட வேண்டும்.  அதை உருவாக்குவதற்கு நம்முடைய மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
இன்றைக்கு மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்கள் ஓர் அறிவிப்பை செய்திருக்கிறார்கள்.  பார்வதி அம்மாள் அவர்களுக்கு இங்கே சிகிச்சை அளிப்பதற்கு மத்திய அரசுக்குக் கடிதம் எழுத வேண்டுமென்று சொல்லியிருக்கிறார்கள்.  அதற்காக மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்களுக்கும், முதலமைச்சர் அவர்களுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் சார்பிலே நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

வாணியம்பாடியிலே இருக்கின்ற தோல் தொழிற்சாலையில் அண்மையில் விஷக் கசிவு ஏற்பட்டு, 5 பேர்   உயிரிழந்து இருக்கிறார்கள்.  அங்கே கழிவுநீர் சுத்திகரிப்பு முறை என்பது ஒரு பயனற்ற முறையாக இருக்கின்றது.  அது மாற்றப்பட வேண்டும் என்று அங்கிருக்கின்றவர்கள் எல்லாம், குறிப்பாகச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எல்லாம் வலியுறுத்திக் கொண்டிருக்கிறார்கள்.  அதை வலியுறுத்தி உடனடியாக நம்முடைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இன்றைக்குத் தொழிற்சாலைகள் நடத்துகிறவர்கள்-Corporate Social Responsibility     என்ற ஒரு ஏற்பாடு அங்கே தொழிற்சாலைகளிலே இருக்கின்றது;  அவர்கள்-ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி, அந்தத் தொழிலாளிகளுக்கு அல்லது அந்தப் பகுதியைச் சார்ந்த சமூகப் பொருளாதார மேம்பாடுகளுக்குப் பயன்படுத்த வேண்டும் என்று விதி இருக்கின்றது.  ஆனால், இன்றைக்கு C.S.R.   என்று சொல்லப்படுகின்ற அந்த Corporate Social Responsibility-க்கான நிதி, முறையாக எந்தவொரு நிறுவனத்தாலும் பயன்படுத்தப்படுவதில்லை; செலவிடப்படுவதில்லை. அதை அரசும் மேற்பார்வையிடுவதுமில்லை.  அதைச் சரியாகப் பயன்படுத்தினால் ஒவ்வொரு தொழிற்சாலையைச் சுற்றி இருக்கின்ற அந்தப் பகுதிகளினுடைய மேம்பாட்டை மிக எளிதாக சாதித்துக்கொள்ள முடியும்.  எனவே, நம்முடைய அரசினுடைய தொழில் துறையும், சமூக நலத் துறையும் அந்தந்தப் பகுதியிலே இருக்கக்கூடிய தொழிற்சாலைகளையும் இணைத்து, இந்த Corporate Social Responsibility-இன்கீழ் ஒதுக்கப்படுகின்ற நிதியைச் செலவிடுவதற்கான ஒரு கொள்கையை உருவாக்கவேண்டும் என்று நான் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
அடுத்து, சர்க்கரை ஆலைகள் பிரச்சினை குறித்து இங்கே பல உறுப்பினர்கள் சொன்னார்கள்.  அங்கே இருக்கின்ற பணியாளர்கள் கடுமையாக உழைக்கிறார்கள்.  ஆனால் அவர்களுக்கு அரசு ஊழியர்களுக்கான சலுகைகள் எதுவும் வழங்கப்படுவதில்லை.  அந்தக் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளிலே சில ஆலைகள் இப்போது மூடப்பட்டிருக்கின்றன.  அவற்றைப் புனரமைப்பு செய்வதற்கு நம்முடைய மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். குறிப்பாக, மதுராந்தகத்தில் இருக்கின்ற சர்க்கரை ஆலை தனியார் உதவியோடு புனரமைப்பு செய்யப்படும் என்று நம்முடைய கொள்கை விளக்கக் குறிப்பிலே குறிப்பிடப்பட்டிருக்கின்றது.  அதை மீண்டும் கூட்டுறவுத் துறையின் கீழேயே புனரமைப்பு செய்து நடத்துவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று நான் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.

அடுத்து, நம்முடைய தொலைத் தொடர்புத் துறை, I.T. Industry    தொடர்பான சில கருத்துகளை முன்வைக்க விரும்புகிறேன்.  மின்னணுக் கழிவு மேலாண்மை குறித்து நாம் அக்கறை காட்டவேண்டும்    -இன்றைக்கு ஏராளமான Mobile Phone-களைப் பயன்படுத்துகிறோம்.  அதுமட்டுமல்லாமல், ஏராளமான மின்னணுப் பொருட்களையும் பயன்படுத்துகிறோம். அந்த மின்னணுக் கழிவுகள் மிகப் பெரிய அச்சுறுத்தல்களாக மாறிக்கொண்டிருக்கின்றன,.  இது தொடர்பாக ஐ.நா. சபைகூட ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறது.  நம்முடைய மாநிலத்திலே மின்னணுக் கழிவுகளை மேலாண்மை செய்வதற்கு என்று ஒரு குறிப்பான கொள்கை ஏதும் இதுவரை வரையறுக்கப்படவில்லை.  அத்தகைய கொள்கை ஒன்றை உருவாக்கி, பாதுகாப்பான முறையிலே மின்னணுக் கழிவுகளை மேலாண்மை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
அடுத்து, e-Governance  என்று சொல்லப்படுகின்ற இந்த மின்னணு மேலாண்மை   நிருவாகத்திலே நம்முடைய மாநிலம் நல்ல முன்னேற்றம் கண்டிருக்கின்றது என்று சொன்னாலும், பாராளுமன்றத்திலே, மாநிலங்கள் அவையிலே பேசுகின்ற உறுப்பினர்களின் உரைகள் அன்றையதினமே அந்த இணைய தளத்திலே வெளியிடப்படுகின்றன. அதேபோல் இங்கே சட்டப் பேரவையில் பேசுகின்ற உறுப்பினர்களுடைய உரைகள் சட்டப் பேரவை இணைய தளத்திலே உடனுக்குடன் இந்த விவாதங்கள் வெளியிடப்பட்டால், இது பத்திரிகையாளர்களுக்கும், உறுப்பினர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.  அதைப்போல, இங்கே இருக்கின்ற சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கு ஒரு மின்னஞ்சல் முகவரியினை நம்முடைய அரசே உருவாக்கித் தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
அதைப்போல, இப்போது மாவட்ட நிருவாகத்திற்கு என்று ஒரு தனி இணைய தளம் உருவாக்கப்பட்டிருக்கின்றது.  ஒவ்வொரு சட்டப் பேரவை தொகுதிக்கும் இணைய தளம் உருவாக்கப்பட்டு, அந்தத் தொகுதிகள் குறித்த அடிப்படை விவரங்களை அந்த இணைய தளத்திலே தருவது மட்டுமல்லாமல், அந்தச் சட்டப் பேரவை உறுப்பினர்கள் செயல்பாடு குறித்த விவரங்களையும் அந்த இணைய தளத்திலே கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்தால் இன்னும் நமது செயல்பாடுகள் வெளிப்படையாக அமையும்.
அதுபோல,Rural B.P.Os  எனச் சொல்லப்படுகின்ற அந்த நிறுவனங்கள், மாவட்டத்திற்கு ஒன்று என உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு ஓராண்டு ஆகிறது.  ஆனால் அதற்கான செயல் திட்டம் எதுவும் இதுவரை அறிவிக்கப்படாமல் இருக்கின்றது.  அத்தகைய Rural B.P.Os  . -க்களை உருவாக்கி  நம்முடைய கிராமப்புறங்களிலே இருக்கின்ற தகுதிவாய்ந்த  இளைஞர்கள் இந்த வேலைவாய்ப்பைப் பெறுவதற்கும், நல்ல ஊதியத்தைப் பெறுவதற்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, வாய்ப்புக்கு நன்றி கூறி அமர்கிறேன்.  நன்றி வணக்கம்.

No comments:

Post a Comment