Wednesday, November 3, 2010

கிரந்த யூனிகோடு : ஒரு விவாதம்








(தமிழ் மன்றம் மடல் குழுவில் நடைபெறும் இந்த உரையாடல் மற்றவர்களின் பார்வைக்காக இங்கே தரப்படுகிறது )





1.





இராம.கி. 










அன்பிற்குரிய ரவிக்குமார், 
தங்களுடைய பார்வையில் அந்தக் கூட்டத்தில் நடந்ததைப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். தாங்கள் கேட்டிருக்கும் கேள்விகளுக்கு உரிய மறுமொழியை அளிக்க முடியும். ”அங்கு எல்லோரும் பேச வேண்டும். நான் மட்டுமே பேசக்கூடாது” என்று கருதியதாலும், ”கூட்டத்தை வழிநடத்திச் சென்றது துணைவேந்தர், அவர் ஒவ்வொருவருக்கும் முன்னுரிமை கொடுத்துக் கருத்துக் கேட்கிறார்”  என்ற காரணத்தாலும் நான் என்னைக் கட்டுப்படுத்திக் கொண்டேன். ஒரு கூட்டத்தில் அப்படித்தானே இருக்க முடியும்?
கூட்டம் முடிந்து வெளிவந்தபின், நண்பர் மணிவண்ணனிடம் தொலைபேசி வழி பேசி ”கூட்டத்தில் நடந்தது பற்றி அவரே தொகுத்தளிப்பதுதான் சிறந்தது” என்று நான் கேட்டுக் கொண்டதால் இப்பொழுது சற்று பொறுக்குமாறு உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். அவர் தொகுப்புரை தந்தவுடன், உங்கள் கேள்விகளுக்கு மறுமொழிப்பேன். 
அதுவரை பொறுத்திருங்கள். அந்தக் கூட்டம் உணர்ச்சி வசப்பட்டுத் தீர்மானம் போட்டதாக நான் கருதவில்லை. கூடியிருந்த அனைவரும் தமிழரின் நாட்பட்ட எதிர்காலம் கருதியே தங்களுடைய கருத்துக்களைத் தெரிவித்தார்கள். நல்ல முறையில் நடந்த கூட்டம் என்றே நான் கருதுகிறேன். துணைவேந்தருக்கு நன்றி சொல்ல வேண்டும்.



  

2.சி . ஆர். செல்வகுமார் 




மிக்க நன்றி ரவிக்குமார்!!
மிக நன்றாகத் தொகுத்துக் கூறியுள்ளீர்கள்.
//நான் எனது சந்தேகங்கள் என இரண்டு விடயங்களை எழுப்பினேன். 
கிரந்த எழுத்துகளில் ஏற்கனவே சில தமிழ் எழுத்துகள் இருக்கின்றன;  அவற்றை என்கோடு செய்யும்போது மேலும் ஐந்து எழுத்துகளை என்கோடு செய்வதில் என்ன சிக்கல் ? அடுத்தது, தமிழ் எழுத்துகளைச் சேர்த்து கிரந்தத்தை ஒரு சூப்பர் செட் ஆக உருவாக்க நினைக்கிறார்கள் என்று சொல்கிறீர்களே தமிழை ஏன் அப்படியொரு ’சூப்பர் செட் ’ ஆக உருவாக்கக்கூடாது ? என்று கேட்டேன். அதற்கு யாரும் திருப்தியான பதிலை அளிக்கவில்லை. //
நல்ல கேள்வி! பொறுமையாக எண்ணிப்பார்க்க வேண்டுகிறேன்.
தமிழ் மொழியின் எழுத்து என்னும் கருத்தும், மற்ற உலகமொழிகளின்
"letter" என்பதற்கும் பெரும் வேறுபாடு உண்டு.
(1) தமிழில் எழுத்துகளின் ஒலிப்பு ஒழுங்குடன், இடம் சார்ந்து வருவது
மட்டும் அல்லாமல் மிகுநுட்பம் வாய்ந்தது. பிற எழுத்துக்களையும்
ஒலிகளையும் சேர்ப்பதால் இவ்வொழுக்கம் சீர்மை, எளிமை, மூச்சுச்
சிக்கனம் தமிழிலக்கணம் ஆகிய அனைத்தும் கெடும். தமிழில் ஏற்கனவே
உள்ள எழுத்துகளிலேயே எழுதும்பொழுதே பிற மொழிச் சொற்களை
பொறுப்பின்றி சேர்ப்பவர்கள் தமிழுக்குப் பெரும் தீங்கு செய்கிறார்கள்.
(இதனால் பிறமொழிச்சொற்களை உள்வாங்கக்கூடாது என்று
சொல்லவில்லை - அது வேறு தலைப்பு!!)
எடுத்துக்காட்டாக Open என்னும் சொல்லை அப்படியே தமிழில்
எழுதத நினைத்தால் ஒப்பன் என்று எழுத வேண்டும். ஆனால்
தமிழை அறியாதவர்களால் (சிலர் அறிந்தும், சுட்டிக்காட்டியும்
வேண்டுமென்றே எழுதுவோர்களால்),
ஓரெழுத்துக்கு ஓரொலி என்பதாக நினைத்து ஓபன் என்று
எழுதுகிறார்கள். இது Oban (Oben) என்று தமிழில் ஒலிக்கும்.
(இங்கு புதிய எழுத்து நுழைப்பெல்லாம் ஏதும் இல்லை).
(இரட்டை pp இல்லையே என்று நினைப்போர்,
happen, open ஆகிய சொற்களின் ஒலிப்பை "அகராதி"
பார்த்துத் தெரிந்துகொல்ல வேண்டும். )
தமிழின் நுட்ப ஒலிப்பொழுக்கம் கெட்டு, தமிழ் சிதையும்.
தமிழின் சிறப்பு (அறிவியலில் இது மிகவும் போற்றப்படுவது),
அதன் எளிமை, சிக்கனம், உள்ளிணக்கம் (இதனால் எழும்
வண்மை, ஒண்மை, இனிமை, அழகு..போற்றப்பட வேண்டியது).
குறைந்ததைக் கொண்டு கூடியதை "ஆட்சி" செய்தால்
அது சிறப்பு. எல்லா எழுத்துகளையும்,
எல்லாரும் ஏற்றுக்கொள்வதால் சிறப்பில்லை. அதைப் பலரும் உணர்வதில்லை. ஒவ்வொரு பூவுக்கும்
ஒரு மணம் இருக்கும் ஒரு நிறம் இருக்கும், சிறப்பு இருக்கும்.
மொழி என்பது என்ன எதற்காக என்பதைத்
தமிழர்கள் போல் நுட்பமுடன் அறிந்தவர்கள் யாரும் இல்லை
எனலாம் (இது மிகை, மார்தட்டுவது என்று சிலர் நினைப்பார்கள்,
அறிவேன். இப்படியான உயர்நுட்பம் சமசுக்கிருதத்துக்கும்
உண்டு, அது ஒன்றே விதிவிலக்கு எனலாம்).
இவற்றை ஒவ்வொருவரும் தாங்களாகவே அறிய வேண்டும்.


3. மோகனரங்கன் .வி. ஸ்ரீரங்கம் 

>>>தமிழ் எழுத்துகளைச் சேர்த்து கிரந்தத்தை ஒரு சூப்பர் செட் ஆக உருவாக்க நினைக்கிறார்கள் என்று சொல்கிறீர்களே தமிழை ஏன் அப்படியொரு ’சூப்பர் செட் ’ ஆக உருவாக்கக்கூடாது ? என்று கேட்டேன். அதற்கு யாரும் திருப்தியான பதிலை அளிக்கவில்லை.<<< 

திரு ரவிக்குமாரின் இந்தக் கருத்து சிந்திக்க வைக்கிறது. இந்த நல்ல கருத்தைக் கவனப் படுத்தியமைக்கு திரு சி ஆர் செல்வகுமாருக்கு நன்றி.



4.மணி மு. மணிவண்ணன், சென்னை




நீங்கள் உங்கள் குறிப்புகளைச் சரிபார்க்க முடியுமா? 
என்னுடைய தொடக்கவுரை தொழில்நுட்பம் சார்ந்ததாக இருந்தது.  அதைச் சொல்லுங்கள் என்றுதான் துணைவேந்தரும் கேட்டார்.  நான் என்ன சொன்னேன் என்று பின்னர் எழுதுகிறேன். ஆனால் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு இதை நான் தான் சொன்னேன், இதைத்தான் நான் சொன்னேன் என்று நினைவில் இருந்தால் நான் என்னுடைய கருத்துகளை விளக்குவதில் தவறி விட்டேனோ என்று எண்ணவேண்டியிருக்கிறது.



5.  ரவிக்குமார் 

வணக்கம் 

நான் எழுதியிருப்பது நான் புரிந்துகொண்ட அளவிலான மனப்பதிவுதான். அங்கு பேசப்பட்ட எல்லாவற்றின் தொகுப்பு அல்ல. ' சமஸ்கிருதமே தமிழிலிருந்துதான் வந்தது ' என்ற திரு. பொன்னவைக்கோ அவர்களின் கருத்தை எப்படி எடுத்துக்கொள்வதெனத் தெரியவில்லை. (அது இந்த விவாதத்துக்கு நேரடியாகத் தொடர்பில்லாதது என்ற போதிலும் ). மணிவண்ணன் அவர்கள் தொகுத்துத் தரட்டும் . மகிழ்ச்சி . மற்றவர்களும் பதியட்டும். official report என்பது கூட்டத்தை ஒழுங்கு செய்தவர்களால் அளிக்கப்படுவது. அப்படி ஒன்றை மாண்பமைத் துணைவேந்தர் அவர்கள் அளித்தால் உதவியாக இருக்கும். 
இராமகி அவர்கள் ஒப்பீட்டளவில் அதிகமாகவே பேசினார் என்றுதான் நினைக்கிறேன். மணிவண்ணனின் கருத்தாக நான் தொகுத்தளித்திருப்பதில் ஒரு தெளிவுக்காக அவர் எனக்கு எழுதிய மடலில் குறிப்பிட்டிருக்கும் கருத்துகளைப் பயன்படுத்தியிருக்கிறேன். 
இந்த கூட்டம் குறித்துத் தெரிந்துகொள்ள பலரும் ஆவலாக இருப்பார்கள். இக்கூட்டத்தின் விளைவு நன்றாக அமைந்திருந்தது என்பதை அவர்கள் தெரிந்துகொண்டால் நிச்சயம் மகிழ்ச்சி அடைவார்கள் . அதற்காகவே இந்த மடலை நான் எழுதினேன். 
இந்தப் பிரச்சனையில் வலுவான வாதங்களை முன்வைத்து வாதிடும் அளவுக்கு நான் நிபுணன் அல்ல . ஆனால், அங்கு முன்வைக்கப்பட்ட கருத்துகள் நமது கவலையை நியாயப்படுத்துவதற்குப் போதுமானவையாக இல்லை என்பது என் பணிவான கருத்து. இந்த விவாதம் அதை இட்டு நிரப்பவேண்டும் என்பதே என் வேண்டுகோள். 
தொடர்ந்து பேசுவோம். 



No comments:

Post a Comment