Friday, November 19, 2010

பொதுப் பணித் துறை ஒப்பந்தப் பணிகள் :ஆதி திராவிடர் சமூகத்திற்கு ஒதுக்கீடு செய்க






10-4-2008  பிற்பகல் 12-40
பொதுப் பணித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம்

திரு. து. ரவிக்குமார்: மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் அவர்களே, முக்கியத்துவம் வாய்ந்த பொதுப் பணித் துறையின் கட்டடங்கள், பாசனம் தொடர்பான மானியக் கோரிக்கைமீது பேச வாய்ப்பளித்த உங்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பிலே என்னுடைய பணிவான நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
கட்டடங்கள் கட்டுகின்ற பணியைப் பராமரித்துக் கொண்டிருக்கின்ற, பொதுப் பணித் துறையானது, குறிப்பாகப் பள்ளிக் கட்டடங்கள், பழைமையான கட்டடங்களை இடித்துவிட்டு சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தின்மூலமாகப் புதிய கட்டடங்களை உருவாக்குவதற்குப் பொதுப் பணித் துறைக்கு அனுமதிபெற விண்ணப்பிக்கும்போது அதிலே நீண்ட காலதாமதம் ஏற்படுகின்ற காரணத்தினாலே பல இடங்களிலே புதிய வகுப்பறைகளை உருவாக்க வாய்ப்பு இருந்தும், அதை உடனடியாக உருவாக்க முடியாத நிலை இருக்கிறது.  எனவே, வகுப்பறைகள் விஷயத்திலே அதனுடைய முக்கியத்துவம் கருதி, உடனடியாக அனுமதி அளிப்பதற்கு மாண்புமிகு அமைச்சர் அவர்கள் ஒரு சிறப்பு உத்தரவை இந்தத் துறைக்குப் பிறப்பிக்க வேண்டுமாய் உங்கள் வாயிலாக கேட்டுக்கொள்கின்றேன்.

அடுத்ததாக, பொதுப் பணித் துறையிலே ஒப்பந்தப் பணிகள், அதிலே பதிவு செய்துகொண்டிருக்கின்ற ஒப்பந்தக்காரர்கள்மூலமாக வழங்கப்படுகின்றன.  அந்த ஒப்பந்தக்காரர்கள்--அவர்களுக்கான தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றன.  அவர்கள் 5 நிலைகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறார்கள்.  இந்த ஒப்பந்தப் பணிகள் பெறுவதிலே ஆதி திராவிடர் சமூகத்தைச் சேர்ந்த ஒப்பந்தக்காரர்கள், பெருமளவிலே வாய்ப்பைப் பெற முடியாத ஒரு நிலை இருக்கிறது.  அவர்கள் அதிக அளவிலே நம்முடைய பொதுப் பணித் துறையிலே ஒப்பந்தக்காரர்களாகப் பதிவு செய்துகொள்ள முடியாத ஒரு இக்கட்டிலே இருக்கிறார்கள். அப்படிப் பதிவு செய்துகொண்டிருக்கின்ற ஒன்றிரண்டு ஒப்பந்தக்காரர்களும்கூட, அவர்களுக்கு நான்காம் நிலை, ஐந்தாம் நிலை பணிகள்தான் வழங்கப்படுகின்றனவேயொழிய, அவர்களுக்கு முதல் நிலை, இரண்டாம் நிலைப் பணிகள் பெரும்பாலும் வழங்கப்படுவதில்லை. இந்தப் பணிகளை ஒதுக்கீடு செய்கின்ற அந்த அதிகாரம், மாவட்ட அளவில் இருக்கின்ற பொறியாளர்களிடத்திலே ஒப்படைக்கப்பட்டிருப்பதால், அவர் கலந்து ஆலோசித்து இதை உறுதி செய்வார் என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கின்ற காரணத்தினாலே, அவர்களுடைய விருப்பு வெறுப்பின் அடிப்படையிலே, ஒப்பந்தப் பணிகள் வழங்கப்படுகின்றனவேயன்றி, அவர்களுக்கு. .

மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர்: மாண்புமிகு பொதுப் பணி மற்றும் சட்டத் துறை அமைச்சர் அவர்கள்.

மாண்புமிகு திரு. துரைமுருகன்: மாண்புமிகு உறுப்பினர் மெத்த விவரம் தெரிந்தவர்.  அவருக்குத் தெரிவிக்க வேண்டுமென்று சொல்கிறேன்.  ஒப்பந்தப் புள்ளிகள் போடுவதற்கு first class contract, second class contract என்று இருக்கிறார்கள்.  அது அவர்கள் செய்கிற வேலை, அவர்கள் போட்டிருக்கிற முதலீடு, இதுவரையிலே செய்திருப்பதை வைத்து அவர்களுக்கு அந்தத் தகுதி அடிப்படை வருகிறது.  ஆக, புள்ளிவிவரம்--அதாவது tender  போடுகிறபோது எத்தனை percent list  என்று யார் போடுகிறாரோ, அதிலே ஒன்றும் communal G.O.பார்ப்பது கிடையாது.  ஆகையினாலே இதில் வேலையின் தரம்தான் பார்க்க முடியுமே தவிர, communal தரம் பார்க்க முடியாது.  மாண்புமிகு உறுப்பினருக்கு யாரோ தவறான தகவல் கொடுத்திருக்கிறார்கள்.  இதிலே யாரும் ஜாதி, என்ன ஜாதி என்று கேட்பதில்லை;  tender  என்றுதான் பார்ப்பார்களே தவிர, கேட்க முடியாது.

மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர்:  மாண்புமிகு உறுப்பினர் திரு. து. ரவிக்குமார்.

திரு. து. ரவிக்குமார்: மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் அவர்களே, இப்போது நான் கேட்க விரும்புவது, இத்தகைய ஒப்பந்தப் பணிகளை ஒதுக்கீடு செய்யும்போது, குறிப்பாக மத்தியப் பிரதேச மாநிலத்திலே ஒரு முறையைக் கடைப்பிடிக்கிறார்கள். இதற்கு முன்னாலே அங்கு முதல்வராக இருந்த மாண்புமிகு திரு. திக்விஜய் சிங் அவர்கள் ஆட்சிக் காலத்திலே அறிமுகப்படுத்தப்பட்ட அந்த முறையானது, அங்கே இருக்கின்ற தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு ஒப்பந்தப் பணிகளை ஒதுக்கீடு செய்கிற ஒரு முறையாகும்.  அப்படி ஒரு முறையை நம்முடைய அரசும் பின்பற்றினால், ஆதி திராவிடர் சமூகத்தைச் சேர்ந்த, பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ஒப்பந்தக்காரர்களும் நம்முடைய அரசுப் பணிகளை, ஒப்பந்தங்களை எடுத்துச் செய்வதற்கு ஒரு வாய்ப்பு ஏற்படும்.  அந்தச் சமுதாயத்திலும் ஒரு சில, சிறு அளவிலேனும் வசதி பெற்றவர்கள், வாய்ப்புப் பெற்றவர்கள் உருவாவதற்கு வாய்ப்பு ஏற்படும்.  இதை நம்முடைய அரசு பரிவோடு, நம்முடைய மாண்புமிகு முதல்வர் அவர்கள் இந்த ஆதி திராவிடர் சமூகத்திற்கு ஏராளமான நன்மைகளைச் செய்துகொண்டிருக்கிறார்கள்.  அவர்களுடைய காலத்திலே இது நடக்கவில்லையென்றால், வேறு எப்போதும் நடக்காது.  அவர்களுக்கு உறுதுணையாக இருக்கின்ற நம்முடைய மாண்புமிகு பொதுப் பணித் துறை அமைச்சர் அவர்கள் இதைக் கருணையுள்ளத்தோடு பரிசீலித்து, இப்படி ஒரு சிறு அளவு, ஒரு குறிப்பிட்ட ஒரு விழுக்காடு, இரண்டு விழுக்காடு என்றுகூட இருக்கலாம்; அவர்கள் 10 விழுக்காடுகூட கேட்கவில்லை; ஒரு குறிப்பிட்ட அளவாவது ஒதுக்கீடு செய்து, இந்தப் பணிகளை மாவட்ட அளவிலே அவர்களுக்கு ஒதுக்குவதற்கு நம்முடைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நான் உங்களை மெத்தப் பணிவோடு கேட்டுக்கொள்கின்றேன்.

அடுத்து, நம்முடைய நதி நீர் உரிமைகள். இவற்றைப்பற்றி இங்கே பேசிய, மாமன்றத்திலே பேசிய பல்வேறு உறுப்பினர்களும் குறிப்பிட்டார்கள்.  நாங்களும் விடுதலைச் சிறுத்தைகள் சார்பிலே நம்முடைய நதிநீர் உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றோம்.  குறிப்பாக, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை எந்தவிதத்திலாவது நாம் நிறைவேற்றியே தீரவேண்டும்.  அதிலே எந்தவித விட்டுக் கொடுத்தலும், சமரசமும் செய்துகொண்டு விடக் கூடாது என்ற தமிழக மக்களின் கவலையை நாங்களும் பகிர்ந்துகொண்டு, அதை இந்த மாமன்றத்திலே பதிவு செய்கின்றோம்.  (மணியடிக்கப்பெற்றது)
அடுத்து, என்னுடைய தொகுதியிலே இருக்கின்ற வீராணம் ஏரி, அதனுடைய முழு கொள்ளளவிற்குத் தேக்கப்படுகின்ற காரணத்தினாலே--சென்னைக்குக் குடிநீர் அளிப்பதற்காக முழு கொள்ளளவு தேக்கப்படுகின்ற காரணத்தாலே--இன்றைக்கு அதைச் சுற்றியுள்ள, அதிலும் குறிப்பாக மேற்குப் பகுதியைச் சுற்றியுள்ள, ஏறத்தாழ 15 கிராமங்கள் இன்றைக்கு நீரிலே மூழ்கியுள்ளன.  குறிப்பாக, அங்கே கரும்புப் பயிர்களெல்லாம் வெட்டவே முடியாத அளவிற்கு இன்றைக்கு விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறார்கள்.  எனவே, இதிலே சிறப்புக் கவனம் எடுத்துக்கொண்டு, அந்த வீராணம் ஏரியில் முழு கொள்ளளவிற்குத் தண்ணீரைத் தேக்குவதால் ஏற்படுகின்ற இடையூறுகளைக் களைவதற்கு நம்முடைய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். குறிப்பாக. . .
மாண்புமிகு திரு. துரைமுருகன்:  மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு உறுப்பினர் அவர்களின் கூற்றை இந்த அரசு ஆய்ந்துதான், (குறுக்கீடு) அந்த மீன்சுருட்டி ரோடில்தானே சொல்கிறீர்கள்? (குறுக்கீடு)  அதற்கு வேண்டிய நடவடிக்கையை எடுத்திருக்கிறோம்.  எனவே, விரைவில் பணியைத் தொடங்க, வேண்டிய நடவடிக்கை எடுக்கப்படும்.  

மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர்:  அடுத்தது, மாண்புமிகு உறுப்பினர் திரு. இரா. இராம்பிரபு.  (குறுக்கீடு) சரி, Please, conclude.   (குறுக்கீடு)  உரையை முடித்துவிடுங்கள்.

திரு. து. ரவிக்குமார்:  அடுத்ததாக, இன்றைக்கு நீர்ப் பாசனத் துறை என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த துறையாக மாறியிருக்கின்ற காரணத்தினாலே, நீர்வள ஆதாரத் துறை என்று புதிதாக ஒரு துறையை உருவாக்கியிருப்பதாக நம்முடைய கொள்கை விளக்கக் குறிப்பிலே குறிப்பிடப்பட்டிருக்கின்றது.  அதைப்போலவே, நீர்ப் பாசனத்திற்கென்று தனி அமைச்சகத்தை உருவாக்கவேண்டுமென்ற கோரிக்கையை வைத்து, நன்றி சொல்லி, அமர்கிறேன். வணக்கம்.

No comments:

Post a Comment