அம்பேத்கர் வழிவந்த சிந்தனையாளரும் தலித் வரலாற்று அறிஞருமான பகவான் தாஸ் இன்று ( 18.10.2010 )காலமானார் . அவருக்கு வயது 83. சிம்லாவில் இருக்கும் ஜுடோக் கண்டோன்மென்ட் பகுதியில் பிறந்த பகவான் தாஸ் தனது பதினாறாவது வயதில் அம்பேத்கரை சந்தித்தார். அப்போது அவர் ஷெட்யூல்டு கேஸ்ட் பெடரேஷனின் உறுப்பினராக இருந்தார். அம்பேத்கரின் இறுதிக்காலத்தில் அவருடைய அலிப்பூர் இல்லத்தில் தங்கியிருந்து ஆராய்ச்சி உதவியாளராக அவருக்கு பணிபுரிந்தார்.
பகவான் தாஸின் ஆய்வு மனம் அமைதிகொள்ளவே இல்லை. சாகும்போதும் அவர் ஒரு நூலை எழுதிக்கொண்டிருந்தார். ' ஆசியாவில் தீண்டாமை ' என்ற அந்த நூல் முற்றுப்பெறுவதற்கு முன்பே அவர் நமைவிட்டுப் பிரிந்து விட்டார்.
கடந்த ஆகஸ்டு மாதத்தில் ' உயிர்மை ' இதழில் நான் எழுதிவரும் பத்தியில் அவரைப்பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். அந்தப் பகுதியைக் கீழே தருகிறேன்.
நானும் நண்பர் எஸ்.ஆனந்த்தும் சேர்ந்து ‘நவயானா பப்ளிஷிங்’ என்ற பதிப்பகத்தை நடத்தி வருகிறோம். அதன் மூலம் ஆங்கிலத்தில் நூல்களை வெளியிட்டு வருகிறோம். அந்த நூல்களைக் கேட்டு இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து கடிதங்கள் வருவதுண்டு. ஆனால், தமிழ்நாட்டிலிருந்து ஒரு கடிதம்கூட வந்ததில்லை. இங்கு பொதுவாகவே சீரியஸான புத்தகங்களைப் படிக்கும் பழக்கம் குறைந்துவிட்டது. அதிலும், ஆங்கிலப் புத்தகங்கள் என்றால் சொல்லவே வேண்டாம். நவயானாவின் வெளியீடாக பகவான்தாஸ் என்பவரின் நினைவுக் குறிப்புகளைக் கொண்ட ''In pursuit of Ambedkar'' என்ற நூல் வெளியிடப்பட்டுள்ளது. ஹிந்தியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடபபட்டிருக்கும் அந்தப் புத்தகத்தில் கூடுதல் குறிப்புகளை எஸ்.ஆனந்த் சேர்த்திருக்கிறார். அம்பேத்கரோடு இணைந்து பணியாற்றியவர் பகவான்தாஸ். அம்பேத்கரின் பேச்சு மற்றும் எழுத்துகளைத் தொகுப்புகளாக ஆங்கிலத்தில் முதலில் வெளியிட்டவரும் அவர்தான். அவர் அம்பேத்கரோடு உரையாடிய அனுபவங்களில் சிலவற்றை இந்தப் புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார்.
‘‘1956ஆம் ஆண்டு நான் அம்பேத்கரோடு சேர்ந்து பணியாற்றிக் கொண்டிருந்த நேரத்தில் அவருடைய உடல் நிலை மோசமடையத் தொடங்கியிருந்தது. அவர் தனது பெரும்பான்மையான நேரத்தை தன்னுடைய நூலகத்தில் செலவிட்டுக் கொண்டிருந்தார். மாலை ஏழு மணி அளவில் வீட்டு வராண்டாவில் சில புத்தகங்களோடு அவர் அமர்ந்திருப்பது வழக்கம். அங்கேயே பார்வையாளர்களைச் சந்திக்கவும் செய்வார். ஒரு சம்பவம் எனக்கு நினைவுக்கு வருகிறது. சௌராஷியா என்பவர் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் அறிக்கையையும், அதன்மீது தனது விமர்சத்னத்தையும் எடுத்துக்கொண்டு அம்பேத்கரைச் சந்திப்பதற்கு வந்திருந்தார். அப்போது அம்பேத்கரின் அறையில் பௌத்தம் குறித்த அரசியல் விவாதம் நடந்து கொண்டிருந்தது. ஷோகன்லால் சாஸ்திரி உள்ளிட்ட டெல்லியைச் சேர்ந்த தலித் இயக்கங்களின் தலைவர்கள் அங்கே குழுமி இருந்தனர். சௌராஷியா அம்பேத்கரைப் பார்த்துச் சொன்னார், ‘‘துப்புரவுத் தொழிலாளிகளைப் பற்றி நான் புத்தகம் ஒன்று எழுதிக்கொண்டிருக்கிறேன்’’ அதற்கு அம்பேத்கர் சொன்னார், ‘‘ஓ! துப்புரவு தொழிலாளிகளா அவர்கள் முஸ்லிம்கள் இந்த நாட்டுக்கு வந்த பிறகுதான் உருவானார்கள்’’ அங்கிருந்தவர்கள் எல்லோருமே அம்பேத்கர் சொன்னதை ஆமோதித்தார்கள். ஆனால், எனக்கு அவர்களெல்லாம் தவறான அபிப்பிராயத்தைக் கொண்டிருப்பதாகப் பட்டது. தைரியத்தை வரவழைத்துக் கொண்டு நான் பேசினேன். அம்பேத்கரோ உலகப் புகழ் பெற்ற அறிவாளி. அங்கிருந்தவர்களும் சமஸ்கிருதத்தில் புலமை கொண்டவர்கள். நான் கேட்டேன், ‘‘முஸ்லிம்கள் வந்ததற்குப் பிறகுதான் துப்புரவு தொழிலாளிகள் உருவானார்கள் என்றால், பௌத்தப் பிரதிகளில் அவர்களைப் பற்றி சொல்லப்பட்டிருப்பது எப்படி?’’ அம்பேத்கர் என்னிடம் கேட்டார், ‘‘எந்தப் பிரதிகளை நீ குறிப்பிடுகிறாய்’’ நான் பாஹியானைப் பற்றிச் சொல்லவில்லை. யுவான் சுவாங்கைப்பற்றியும் குறிப்பிடவில்லை. நான் ஐ சிங் என்பவர் எழுதியதைப் பற்றிக் கூறினேன். அவர் தூய்மை, துப்புரவு மற்றும் துப்புரவு தொழிலாளர்கள் குறித்து நுணுக்கமாக எழுதியிருக்கிறார். அம்பேத்கர் எரிச்சலோடு என்னைப் பார்த்து சொன்னார், ‘‘ஐ சிங் என்ற பெயர் கொண்ட சீன நாட்டவர் எவரும் இந்தியாவுக்கு வந்ததில்லை.’’ நான் மன்னிப்பு கோரும் விதத்தில் அவரிடம் சொன்னேன், ‘‘என்னுடைய உச்சரிப்பு வேண்டுமானால் தவறாக இருக்கலாம். அவருடைய பெயர் அதுதான்’’ அவர் என்னிடம் கேட்டார், ‘‘அவர் என்ன எழுதியிருக்கிறார் அதை என்னிடம் காட்டு’’ அந்த நேரத்தில் அதை அவரிடம் காட்டுவதற்கு என்னால் முடியவில்லை. ஆனால், அந்தப் புத்தகம் சென்ட்ரல் செகரட்டரியேட் நூலகத்தில் இருப்பதை நான் அறிவேன். பிறகு நான் அதை எடுத்து வந்து அம்பேத்கரிடம் காட்டினேன். அதில் கழிப்பறைகளைப் பற்றியும் அவற்றை எப்படி சுத்தம் செய்வது என்பது பற்றியும் அவர் விரிவாக குறிப்பிட்டிருந்தார்.’’
பகவான்தாஸின் புத்தகத்தில் பாஹியான், யுவான் சுவாங் போன்றவர்கள் தீண்டாமை குறித்து எழுதிய குறிப்புகளெல்லாம் தரப்பட்டிருக்கிறது. ஐ சிங் எழுதியதும் விரிவாக மேற்கோள்காட்டப்பட்டிருக்கிறது. நண்பர் ஆனந்த் பகவான்தாஸ் குறித்து அருமையான ‘டாக்குமென்ட்டரி’ படம் ஒன்றையும் எடுத்திருக்கிறார். மிக அற்புதமாக வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ள அந்த நூலுடன் அந்த டாக்குமென்ட்டரி இலவசமாகத் தரப்பட்டிருக்கிறது. (இப்போது உயிர்மை பதிப்பகம் சார்பில் அந்த நூல் தமிழில் வெளிவர இருக்கிறது )
No comments:
Post a Comment