Saturday, November 6, 2010

தமிழ் பிராமி கல்வெட்டுகளைக் காப்பாற்றுவதற்கு உடனடியாக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்குமா?









28-4-2010
வினாக்கள்-விடைகள்


வினா வரிசை எண் 119-க்கான துணை வினா


திரு. து. ரவிக்குமார்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தமிழ் பிராமிக் கல்வெட்டுகளைப் பொறுத்தளவிலே, இந்தப் பெயர் ஒரு பிரெஞ்ச் அறிஞரால் சொல்லப்பட்டு, அதுவே இன்றைக்கு நடைமுறையிலே இருக்கிறது. திரு. சே. ராசு போன்ற கல்வெட்டு அறிஞர்களெல்லாம் இதை தமிழிக் கல்வெட்டுகள் என்றும், பழந்தமிழ்க் கல்வெட்டுகள் என்றும்தான் அழைக்க வேண்டும்; தமிழ் பிராமி என்று அழைப்பது சரியல்ல என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.  இதையும் அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
குறிப்பாக, இந்தக் கல்வெட்டுகள் குகைகளிலும், அதிலும் குறிப்பாக சமணப் படுக்கைகள் இருக்கும் இடங்களிலே அமைந்திருக்கின்ற நிலையில், இன்றைக்கு சுரங்கத் துறையின் அனுமதி பெற்று கல் குவாரி எடுப்பவர்கள், அந்தக் கல்வெட்டுகள் அமைந்திருக்கின்ற இடங்களுக்கு மிக அருகில் கல் குவாரிகளை எடுக்கும்போது, அந்தக் கல்வெட்டுக்கள் பாதிக்கப்படக்கூடிய ஒரு நிலை இருக்கிறது.  இன்றைக்கு இந்தியத் தொல்லியல் துறை, 200 மீட்டர் தூரத்திற்கு அருகிலே அந்தக் கல் குவாரிகளை அமைக்கக்கூடாது என்று உத்தரவிட்டிருக்கிறது.  ஆனால், 50 மீட்டர் அளவு வரை எடுக்கலாம் என்று ஓர் அரசு உத்தரவு இருக்கின்ற நிலையைச் சுட்டிக்காட்டி, கல் குவாரி உரிமையாளர்கள் அந்தக் கல்வெட்டுகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகின்ற அளவிற்குச் சென்றுகொண்டிருக்கின்ற நிலை இருக்கிறது.  அண்மையிலே உயர் நீதிமன்றத்திலேகூட அந்த வழக்கு வந்திருக்கிறது.  இதைக் கவனத்தில் கொண்டு நம்முடைய அரசு, இந்தியத் தொல்லியல் துறை ஏற்கெனவே அறிவித்துள்ள உத்தரவுப்படி 200 மீட்டர் வரைக்கும், அந்தக் கல்வெட்டுகள் இருக்கின்ற இடங்களுக்கு அருகிலே கல் குவாரிகளை அனுமதிப்பதில்லை என்ற ஒரு நிலையை எடுக்க முன்வருமா என்பதைக் கேட்டு அமைகின்றேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள்.

மாண்புமிகு திரு. தங்கம் தென்னரசு: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, பிராமி எழுத்துகளைப் பொறுத்தமட்டில், சிந்து எழுத்துக்களுக்குப் பிறகு இந்திய எழுத்துகளில் முதல்முறையாக உருவாக்கப்பட்ட எழுத்துகள் என்ற வகையில், அவை பிராமி எழுத்துகள் என்ற வகையில் அழைக்கப்படுகின்றன.  அவற்றில் அசோகன் காலத்தில் உருவாக்கப்பட்ட அசோகன் பிராமி, அதற்குப் பிறகு மௌரிய பிராமி, பட்டுப் புரோலு பிராமி என்று வருகிறபொழுது, தமிழகத்தில் இருக்கக்கூடிய பிராமிக் கல்வெட்டுகள் தமிழ்ப் பிராமி என்ற முறையிலே இப்போது அழைக்கப்பட்டு வருகிறது.  அவர் சொன்னதைப்போல, அதைத் தமிழி என்று அழைக்க வேண்டும் என்று சில அறிஞர்களிடத்திலே கருத்து இருப்பது உண்மை.  இன்னும் சொல்ல வேண்டுமென்று சொன்னால், அந்தக் காலத்தில் உருவாக்கப்பட்ட சமண, பௌத்த நூல்களான ‘லலித வஸ்தர’, ‘பண்ணவான சுத்த’ போன்ற பல்வேறு நூல்களிலேகூட, இது தமிழி அல்லது திராவிடி என்று அழைக்கப்பட வேண்டுமென்று குறிப்புகள் இருக்கின்றன.  இருந்தாலும், தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் போன்றவர்கள் தமிழ்ப் பிராமி என்றே அழைக்கப்பட வேண்டுமென்ற கருத்தையும் நிறுவியிருக்கிறார்கள்.  எனவே, நம்முடைய அறிஞர்களின் அந்தக் கருத்தின் அடிப்படையிலேதான் தொடர்ச்சியாக தமிழ்ப் பிராமி என்ற முறையிலேயே தொல்லியியல் துறையிலும் அழைப்பதை இந்த அரசு ஏற்றுக்கொண்டிருக்கிறது.
அடுத்து, மிக முக்கியமான ஒரு கருத்தை அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.  பல்வேறு பிராமி’ கல்வெட்டுகள் இருக்கக்கூடிய இடங்களிலே, கனிமத் துறையின்மூலமாக அங்கே சுரங்கங்கள் வெட்டுவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறபோது, அந்தப் பிராமிக் கல்வெட்டுகள் அழியக்கூடிய நிலையில் இருப்பதை அவர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.  1966 ஆம் ஆண்டு சட்டத்தின்படி, பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களிலிருந்து 100 மீட்டர் தள்ளியிருக்கக்கூடிய பகுதி-prohibited area-அதாவது பாதுகாக்கப்பட்ட பகுதி. அதற்கு மேலே 200 மீட்டர் என்பது, க்ஷீமீரீuறீணீtமீபீ ணீக்ஷீமீணீ  என்று கொடுத்திருக்கிறார்கள்.  அதற்குள்ளாக எந்தப் பணிகளையும் செய்யக்கூடாது.  ஆனால், சில இடங்களிலே இதற்கு மேலாகச் செய்யக்கூடிய கல் குவாரி பணிகளினால், மொத்தமாக இந்தப் பிராமி கல்லெழுத்துகள் இருக்கக்கூடிய பகுதிகளுக்கு,  அங்கே இருக்கக்கூடிய கற்சிலைகளுக்கு ஆபத்து வந்திருக்கிறது.  எனவே, இதைத் தடுக்க வேண்டுமென்று நம்முடைய மாண்புமிகு முதல்வர் அவர்களுடைய உத்தரவின் அடிப்படையில், கடந்த 19-6-2009 அன்று நம்முடைய தலைமைச் செயலாளர் அவர்களுடைய தலைமையிலே ஒரு முக்கியமான கூட்டம் கூட்டப்பட்டு, பல்வேறு துறைத் தலைவர்களோடு இது ஆலோசிக்கப்பட்டிருக்கிறது. அந்தக் கல்வெட்டுகள், சிலைகள் அமைந்திருக்கக்கூடிய முழு மலைப் பகுதியையும் பாதுகாக்கப்பட்ட சின்னமாக அறிவித்து நடவடிக்கை எடுத்தால், இவற்றைக் காப்பாற்ற முடியும் என்ற நிலை இருக்கக்கூடிய காரணத்தினால், தொல்லியல் துறையின் சார்பாக அதைச் செய்வதற்கு முழுமையான முயற்சிகளை இப்போது நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுடைய அறிவுரையைப் பெற்று அவற்றைச் செய்வதற்கான நடவடிக்கைகளை இந்தத் துறை மேற்கொண்டிருக்கிறது.

4-5-2010
வினாக்கள்-விடைகள்
வினா வரிசை எண் 137-க்கான துணை வினா


திரு. து. ரவிக்குமார்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடைபெறவுள்ள இந்த நேரத்திலே, சங்க இலக்கிய நூல்களைப் பொருள் விளக்கத்தோடு மிக மலிவு விலையிலே தமிழ்நாடு பாட நூல் நிறுவனத்தின் சார்பிலே அச்சிட்டு மக்களுக்குக் கிடைப்பதற்கு வழிவகை செய்யப்படுமா என்று தங்கள்மூலம் அறிய விரும்புகின்றேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள்.

மாண்புமிகு திரு. தங்கம் தென்னரசு: பேரவைத் தலைவர் அவர்களே, இப்போது பல பதிப்பகங்களிலே நல்ல நூல்கள், சங்கத் தமிழ் நூல்களை மலிவு விலையிலே வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக, வர்த்தமான் பதிப்பகம் போன்ற பதிப்பகங்களிலெல்லாம்கூட குறைந்த விலையில் சங்கத் தமிழ் நூல்களை மக்களிடத்திலே எடுத்துச் செல்லக்கூடிய அந்தப் பணிகளிலே ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள்.  இன்னும் நல்ல பதிப்பகங்கள் வந்திருக்கின்றன.  தமிழ்நாடு பாட நூல் நிறுவனத்தைப் பொறுத்தமட்டில், இப்போது அவர் சொன்ன செயற்குறிப்பு ஏதும் அரசினுடைய பரிசீலனையில் இல்லை.  எதிர்காலத்திலே அப்படி ஒரு நிலை உருவாகுமென்றால், மாண்புமிகு முதல்வர் அவர்களிடத்திலே கலந்தாலோசித்துக்கொண்டு, அதைக் குறித்து அரசு பரிசீலிக்கும்.






6-5-2010
வினாக்கள்-விடைகள்  முற்பகல் 10-15
147-
கல்வெட்டுகள்
*121584-திரு. து. ரவிக்குமார்:

மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் கீழ்க்காணும் வினாவிற்கு விடையளிப்பாரா-
கல்வெட்டுகள் மற்றும் சமணப் படுக்கைகள் அமைந்துள்ள இடத்தில் 300 மீட்டர் வரை கல் குவாரிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீதிமன்றம் விலக்கியதால் கல்வெட்டுகளைப் பாதுகாக்க அரசு ஆவன செய்யுமா?

மாண்புமிகு திரு. தங்கம் தென்னரசு: பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,
கல்வெட்டுகள் மற்றும் சமணப் படுக்கைகள் அமைந்துள்ள மலைப் பகுதிக்கு அருகில் 300 மீட்டர் வரையுள்ள பகுதிகள் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

மாண்புமிகு பேரவைத் தலைவர்:  மாண்புமிகு உறுப்பினர் திரு. து. ரவிக்குமார்.

திரு. து. ரவிக்குமார்:  மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தமிழகத்திலே 31 ஊர்களில் 90 தமிழ் பிராமி கல்வெட்டுகள் இதுவரை கிடைத்துள்ளன. இந்தத் தமிழ் பிராமி கல்வெட்டுகள்தான் தமிழ் செம்மொழி என்பதற்கான ஆதாரங்களாக இருக்கின்றன. சங்க இலக்கியத்தினுடைய காலத்தை வரையறுப்பதற்கு அறிவியல்பூர்வமான ஆதாரங்களாக இருப்பவை இந்தத் தமிழ் பிராமி கல்வெட்டுகள்தான். இந்தக் கல்வெட்டுகளைக் காப்பாற்றுவதற்காக தமிழக அரசு 1966 ஆம் ஆண்டிலே கொண்டு வந்த சட்டத்தில், 300 மீட்டர் வரையிலே கல் குவாரிகளை அனுமதிக்கக்கூடாது, கட்டடங்களை எழுப்பக்கூடாது என்று தடை செய்யப்பட்டிருந்தாலுங்கூட, அதை மீறி அனுமதி அளிக்கப்பட்டிருக்கின்ற காரணத்தினாலே, அந்தக் கல்வெட்டுகள் அமைந்திருக்கின்ற ஆதாரபூர்வமான, வரலாற்றுத் தொன்மைவாய்ந்த அந்த இடங்கள் அழிகின்ற ஒரு நிலைமை இருக்கின்றது.  இதனால், தமிழினுடைய தொன்மையே கேள்விக்குறியாக மாறுகின்ற ஓர் ஆபத்து ஏற்பட்டிருக்கின்றது. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்துகின்ற இந்த நேரத்திலே, அதற்கு ஆதாரமாக இருக்கின்ற இந்தக் கல்வெட்டுகளைக் காப்பாற்றுவதற்கு உடனடியாக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்குமா என்பதைத் தங்கள்வாயிலாக அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள்.

மாண்புமிகு திரு. தங்கம் தென்னரசு: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, ஏற்கெனவே இந்த மன்றத்திலே இதுசம்பந்தமான ஒரு துணைக் கேள்விக்கு நான் விரிவாக விடையளித்திருக்கின்றேன்.  அரசைப் பொறுத்தமட்டில், இந்தக் கல்வெட்டுகள் இருக்கக்கூடிய பகுதிகளிலிருந்து 100 மீட்டர் வரையிலும் prohibited area,, அதற்கு மேலே ஒரு 200 மீட்டர் regulated area  என்ற வகையிலே, வரையறுக்கப்பட்டிருக்கிறது. அவர் குறிப்பிடுவதைப்போல, கோர்ட் தீர்ப்பு இப்போது அரசுக்குச் சாதகமாக இல்லை.  இருந்தாலுங்கூட, அதன் தொடர்பாக appeal செய்வதற்காக நமது Director of Geology சார்பில் அதற்கான நடவடிக்கையை எடுத்துக்கொண்டு வருகிறார்கள். ஏற்கெனவே நம்முடைய தலைமைச் செயலாளர் அவர்கள் தலைமையிலே குழு ஒன்று இதற்காக அமைக்கப்பட்டு, அத்தகைய பகுதி முழுவதுமாக, அந்தentire site  முழுவதுமாக protected monument ஆக நாம் அறிவித்தால்தான் இதைக் காப்பாற்றக்கூடிய ஒரு சூழ்நிலை இருக்கிறது என்று குழுவினுடைய சார்பாகத் தெரிவிக்கப்பட்டது.  இவற்றையெல்லாம் கருத்திலேகொண்டு நம்முடைய அரசு துறை ரீதியாக அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு, இப்போது தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு உறுப்பினர் திரு. து. ரவிக்குமார்.

திரு. து. ரவிக்குமார்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இந்தக் கல்வெட்டுகள் அமைந்திருக்கின்ற திருவாதவூர், கழுகுமலை, கீழவளவு, மேலகுயில்குடி, முத்துப்பட்டி, பொங்கார் புளியங்குளம் போன்ற எல்லா இடங்களிலுமே இன்றைக்குக் கல் குவாரிகள் அனுமதிக்கப்பட்டு, அந்தக் கல்வெட்டுகளில் சிதைவு ஏற்படுகிற ஓர் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. நம்முடைய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், இப்போது அந்த நீதிமன்ற உத்தரவைப் பயன்படுத்திக்கொண்டு, அந்தக் கல் குவாரியை நடத்துகிறவர்கள் இந்த ஆதாரங்களையெல்லாம் அழித்துவிடுகிற ஓர் ஆபத்து இருக்கிறது. எனவே, இந்த ஆபத்தை உணர்ந்து, உடனடியாக இதிலே செயல்படுமாறு தங்கள் வாயிலாக நான் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள்.

மாண்புமிகு திரு. தங்கம் தென்னரசு: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, அரசும் அந்த ஆபத்தை உணர்ந்திருக்கிறது. நான் இன்னும் இந்த அவைக்கு ஒரு கருத்தைச் சொல்ல வேண்டுமென்றால், நம்முடைய மதிப்பிற்குரிய ஐக்கிய முற்போக்குக் கூட்டணியினுடைய தலைவி, பெருமதிப்பிற்குரிய அன்னை சோனியா காந்தி அம்மையார் அவர்கள், இந்தக் கல்வெட்டுகளைக் காப்பாற்ற வேண்டுமென்றும், இத்தகைய சமணப் படுக்கைகளைக் காப்பாற்ற வேண்டுமென்ற நோக்கில் நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுடைய கவனத்திற்கு அவர்களே நேராக எடுத்துச் சென்று, தலைவர் கலைஞர் அவர்கள் அவர்களுக்கு நேரடியாகக் கடிதமும் எழுதியிருக்கிறார்கள். இத்தகைய விஷயங்கள் காப்பாற்றப்பட வேண்டுமென்ற அம்மையார் அவர்களுடைய உணர்வைப் புரிந்துகொண்டு, தலைவர் கலைஞர் அவர்கள் அரசு அதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.  The Tamil Nadu Minor Minerals  (Concession) Rules, 1959 - என்பது Ancient Monuments and Archaeological Sites and Remains Rules என்ற அந்தத் துறையினுடைய சார்பாக இருக்கக்கூடிய விதிகளுக்கு ஏற்புடையதாக இல்லை. It is not in conformity with AMASAR Rules எனவே, இந்த நிலையில் அதற்குத் தேவையான திருத்தங்களை உருவாக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.  நம்முடைய உயர் கல்வித் துறையின் சார்பாக ஒரு குழுவும் அதற்காக அமைக்கப்பட்டு, அத்துறையும் அதை ஆய்வு செய்துகொண்டிருக்கிறது.  தேவையான நடவடிக்கைகளை அரசு இந்த விஷயத்தில் உறுதியாக எடுக்கும் என்பதை நான் அவைக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்.



10-5-2010


வினாக்கள்-விடைகள்
வரிசை எண் 154-க்கான துணை வினா


திரு. து. ரவிக்குமார்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, அண்மையில் கேரள மாநிலத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் கிடைத்திருக்கின்ற ஆதாரங்கள் எல்லாம் தமிழக வரலாறு தொடர்பாக குறிப்பாக, சங்ககாலம் பற்றிய ஆதாரங்கள் ஏராளமாகக் கிடைத்திருக்கின்றன.  இதுபற்றிய தகவல்கள் பத்திரிகைகளில் ஒரு வாரத்திற்கு முன்பு வெளியாகி இருக்கின்றன.  அந்த ஆதாரங்களைப் பெற்று தமிழகத்தில் வைப்பதற்கு நம்முடைய அரசு ஏதேனும் நடவடிக்கை எடுக்குமா என்பதைத் தங்கள்வாயிலாக அறிய விரும்புகின்றேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள்.

மாண்புமிகு திரு. தங்கம் தென்னரசு: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, கேரளப்  பகுதிகளில்  குறிப்பாக, சில கடற்கரைப் பகுதிகளில்  காந்தலூர் சாலை போன்ற பகுதிகளிலே, விழிஞ்ஞத்திலே இதுபோன்ற ஆய்வுகள் கேரள தொல்லியல் துறையின் மூலமாக மேற்கொள்ளப்பட்டபோது அங்கே இருக்கக்கூடிய ஆதாரங்கள் நம்முடைய சங்க காலத்தின் தொடர்புடைய ஆதாரங்களாக இருக்கின்றன என்ற தகவலை அரசும் அறிந்திருக்கிறது.  எனவே, இதுகுறித்து தேவைப்பட்டால் தொடர்ந்து கேரள அரசோடு பேச்சுவார்த்தை நடத்தலாம்.

No comments:

Post a Comment