Thursday, December 27, 2012

சந்தியா படுகொலை - ஒரு போராட்டத்தின் தற்காலிக முடிவு




சிதம்பரத்தில் 25.12.2012 அன்று கொலையுண்ட சந்தியாவின் பிரேதப் பரிசோதனை இன்று 27.12.2012 காலைதான் நடந்தது. நான் இன்று சென்னையில் நடக்கவிருந்த ஆர்ப்பாட்டத்துக்குப் போகாமல் கடலூருக்குப் போனேன். அங்கு சந்தியாவின் வழக்கில் நீதிகேட்டு ஒரு ஆர்ப்பாட்டம் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது. காலையில் துவங்கிய ஆர்ப்பாட்டம் பகல் இரண்டரை  மணிவரை நீண்டது .நான் இறுதியாகப் பேசிக்கொண்டிருந்தபோது கடலூர் மாவட்ட ஆட்சியர் அழைப்பதாகத் தகவல் சொன்னார்கள். கட்சி நிர்வாகிகள் திருமாறன், திருமார்பன், தாமரைச் செல்வன், செல்லப்பன் ,அழகப்பன் ஆகியோரோடு சந்தியாவின் பெற்றோர்களையும் அழைத்துக்கொண்டு ஆட்சியரின் அலுவலகத்துக்குப் போனேன்.

காலையில் செய்யப்பட்ட சந்தியாவின் போஸ்ட்மார்ட்டத்தின் ஆரம்பகட்ட அறிக்கை ஆட்சியருக்கு வந்திருந்தது. அதன் அடிப்படையில் சந்தேக மரணம் எனப் பதிவுசெய்திருந்த வழக்கை தற்கொலைக்குத் தூண்டிய வழக்காக மாற்றுவதாகவும் ஸ்டுடியோ உரிமயாளரைக் கைதுசெய்வதாகவும் ஆட்சியர் சொன்னார். அது தற்கொலை என்பதை நாங்கள் ஏற்க மறுத்தோம். சந்தியா தற்கொலை செய்துகொள்வதற்கான காரணம் எதுவுமில்லை என அவரது பெற்றோரும் சொன்னார்கள். முழுமையான அறிக்கை வந்ததும் விசாரணையின் அடிப்படையில் தேவைப்பட்டால் கொலை வழக்காக மாற்றுகிறோம் என ஆட்சியர் உறுதியளித்தார்.

வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவுகளையும் சேர்க்கவேண்டுமென நாங்கள் வலியுறுத்தினோம்.அதற்கும் உடன்பட்டார்கள். தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி சந்தியாவின் சகோதரிகளில் ஒருவருக்கு சத்துணவுத் திட்டத்தில் வேலை வழங்குவதாகவும், முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து இழப்பீடு கிடைக்க பரிந்துரைப்பதாகவும் ஆட்சியர் உறுதியளித்தார்.அதை ஏற்று சந்தியாவின் சடலத்தை வாங்கிக்கொள்வதென அவரது பெற்றோர் சம்மதம் தெரிவித்ததால் நாங்களும் உடன்பட்டோம். அதன் பின்னர் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த சந்தியாவின் சடலத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டு உடல் அவரது ஊரான சம்மந்தம் கிராமத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.அத்துடன் கடந்த மூன்று நாட்களாக விடுதலைச் சிறுத்தைகள் நடத்திவந்த போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது.

25 ஆம் தேதி முதல் இந்தப் போராட்டம் நடந்துவந்தாலும் எந்தவொரு அரசியல் கட்சியும் அதில் கலந்துகொண்டு ஆதரவு தெரிவிக்க முன்வரவில்லை. அவர்கள் சார்பில் ஒரு அறிக்கைகூட வெளியிடப்படவில்லை. காட்சி ஊடகங்களில் புதிய தலைமுறை மட்டும் இந்தப் பிரச்சனையைப் பற்றிய செய்தியை ஒளிபரப்பியது. தினத்தந்தி நாளேட்டில் மட்டுமே விரிவாக செய்தி வெளியிடப்பட்டது.

இன்று காலை எனக்கு அறிமுகமான சில ஊடக நண்பர்களிடம் நான் பேசினேன். அவர்களும்கூட இதில் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. தூத்துக்குடியில் போராட்டம் நடத்திய தி.மு.க குணமங்கலத்தில் தலித் பெண் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட வழக்கிலோ சந்தியாவின் கொலை வழக்கிலோ எந்தவொரு அக்கறையையும் வெளிப்படுத்தவில்லை. இடதுசாரிக் கட்சிகளும்கூட இதில் ஈடுபடாதது வருத்தம் அளிக்கிறது. அவர்களை அழைத்திருந்தால் வந்திருக்கக்கூடும்.ஆனால் அவர்களாகவே ஏதேனும் செய்யவேண்டும் என எதிர்பார்த்தோம். குறைந்தபட்சம் ஒரு அறிக்கையாவது வெளியிட்டிருக்கலாம்.

இந்த வழக்கில் அவ்வலவு எளிதாக நீதி கிடைத்துவிடாது,விழிப்போடு தொடர்ந்து கண்காணித்தால் மட்டுமே உண்மைக் குற்றவாளிகள் கைதுசெய்யப்படுவார்கள்.அத்தகைய கண்காணிப்பைச் செய்யக்கூடிய அளவுக்கு சந்தியாவின் பெற்றோர்கள் விவரமானவர்கள் அல்ல. தினக்கூலிகளான அவர்களுக்கு அது சாத்தியமும் இல்லை.விடுதலைச் சிறுத்தைகளும்கூட அதைச் செய்துவிட முடியாது. ஊடகங்களும், சமூகத்தில் உள்ள ஜனநாயக சக்திகளும் இந்தக் கடமையைச் செய்ய முன்வரவேண்டும்.செததவர் தலித் பெண் என்பதால் அரசியல் கட்சிகள் நமக்கென்ன என்று இருக்கும் போக்கு கவலை அளிக்கிறது. தம் கண்ணெதிரில் நடந்த கொடுமையைக் கண்டிக்காதவர்கள் எப்படி நாளை இந்த நாட்டில் நீதியை நிலைநாட்ட முடியும் ?

No comments:

Post a Comment