Wednesday, December 26, 2012

சந்தியா படுகொலை - தற்போதைய நிலவரம்


சிதம்பரத்துக்கு அருகில் உள்ள சம்மந்தம் என்ற கிராமத்தைச் சேர்ந்த தலித் பெண் சந்தியாவின் மரணத்துக்குக் காரணமான குற்றவாளிகளைக் கைது செய்யவேண்டும் என வலியுறுத்தி இன்று கடலூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியள் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். நான் கடலூருக்குச் சென்று மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து இது தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினேன். மருத்துவர்கள் அடங்கிய குழுவின் மூல பிரேத பரிசோதனை நடத்தப்படுமெனவும், அது வீடியோகிராப் செய்யப்படுமெனவும் பிரேத பரிசோதனை அறிக்கை உடனடியாக வழங்கப்பட உத்தரவிடுவதாகவும் அந்த அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார். 

சந்தியாவின் பெற்றோரையும் சந்தித்துப் பேசினேன். அவர் வேலை பார்த்த இடத்தில் இதுவரை எந்தப் பிரச்சனையும் ஏற்படவில்லை என அவர்கள் சொன்னார்கள். தமது மகள் தற்கொலை செய்துகொள்ளவில்லை. அப்படியான மனநிலை உள்ளவரல்ல அவர். அவரை யாரோ பலாத்காரம் செய்திருக்கிறார்கள். அதற்கு உடன்படாததால் அவரைக் கொன்றுவிட்டார்கள். அவரைப் பிணமாகத்தான் மாடியிலிருந்து கீழே வீசியெறிந்திருக்கிறார்கள் என அவர்கள் சொன்னார்கள். 
சந்தியாவின் பெற்றோர் 
சிதம்பரம் இன்ஸ்பெக்டரையும் சந்தித்து அவரிடமும் பேசினேன். ஸ்டுடியோ இருக்கும் மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொள்வது சாத்தியமா எனக் கேட்டபோது அவ்வாறு இருப்பதாகத் தெரியவில்லை என்று சொன்ன அவர், ஸ்டுடியோ உரிமையாளர் திட்டியதால் சந்தியா மாடியிலிருந்து குதித்தாரா என்ற கோணத்திலும் விசாரணை நடப்பதாகக் கூறினார்.

இறந்த சந்தியா குதித்ததாகச் சொல்லப்படும்  இடத்தில் ரத்தம் சிந்திய அடையாளம் எதுவும் இல்லை. அந்தப் பெண்ணின் ஆடையிலும் ரத்தக்கறை இல்லை. அவரது தலையிலோ வேறு பகுதிகளிலோ ரத்தக் காயங்கள் எதுவுமில்லை என இன்ஸ்பெக்டர் சொன்னார். பாத எலும்பு மட்டும் முறிந்திருப்பதாக அவர் கூறினார். மருத்துவமனையில் நினைவின்றி இருந்ததால் அவரிடம் வாக்குமூலம் பெறவில்லை எனவும் இன்ஸ்பெக்டர் தெரிவித்தார். ஆனால் சந்தியாவின் பெற்றோரோ தமது மகளை மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற ஆட்டோ ஓட்டுனர் அந்தப் பெண் ஆட்டோவில் ஏற்றப்படும்போதே சடலமாகத்தான் இருந்தாரெனச் சொன்னதாகத் தெரிவித்தனர். 

பொதுவாக பிரேத பரிசோதனை அறிக்கைகள் போலிஸ் சொல்வதுபோலவேதான் அமையும். அறிக்கையின் அடிப்படையில் வழக்கை மாற்றுகிறோம் எனக் காவல்துறையினரும் , மாவட்ட ஆட்சியரும் சொல்வதை நாம் நம்பமுடியவில்லை. ஆனாலும் அவர்கள்தான் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதால் நியாயம் வழங்குங்கள் என அவர்களிடம் கேட்பதுதவிர வேறு வழியில்லை. குற்றவாளிகள் கைதுசெய்யப்படும்வரை சந்தியாவின் உடலை வாங்கமாட்டோம் என காவல்துறை அதிகாரிகளிடம் சந்தியாவின் பெற்றோரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும் தெரிவித்துள்ளனர். 

16.11.2012 அன்று கடலூர் அருகில் படுகொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி பிரியாவின் வழக்கில் இதுவரை கடலூர் மாவட்ட காவல்துறை எவரையும் கைதுசெய்யவில்லை. அவரும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்தான். கடலூர் மாவட்டத்தில் அணமைக்காலமாக தலித் பெண்கள்மீது தாக்குதல்கள் அதிகரித்திருப்பது தற்செயலானதாகத் தெரியவில்லை. இதைத் தமிழக அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டு இந்தக் கொடுமையைக் கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். 1 comment:

  1. எங்கு பார்த்தாலும் ஏதோ ஒரு வகையில் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் நடந்து வருகின்றன. தற்போது இது அதிகரித்திருப்பது தெரிகிறது. நாட்டில் அசாதாரண நிலை இருப்பது
    புலப்படுகிறது.

    ReplyDelete