Wednesday, December 26, 2012

ஈழம் : தீண்டாமை ஒழிப்பின் முன்னோடி எஸ்.ரி. நாகரத்தினம்




ஈழம் :
தீண்டாமை ஒழிப்பின் முன்னோடி எஸ்.ரி.  நாகரத்தினம்:  சில  நினைவுகளும் குறிப்புகளும்

பரந்தாமன்


சாதி ஒடுக்கு முறைகளுக்கு எதிரான போராட்டங்களில் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தினதும், அதன் தலைவர் நாகரத்தினதும் பங்கு மிகப்பாரியதாகும்.  அவருடைய துணிவு, ஒடுக்கப்பட்ட மக்கள் தொடர்பான அவரது கரிசனை, போராட்டங்களை ஒழுங்குபடுத்தும் தலைமைத்துவ ஆற்றல் போன்றன என்றென்றும் மதிக்கப்படக்கூடியவை.
இக்காலகட்டத்தில் சாதி ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டங்களைப் பற்றி புதிய தலைமுறைக்கு அறிமுகப் படுத்துவதும், அவை பற்றி பக்கச் சார்பற்ற பரிசீலனைகளை மேற்கொள்வதும் இன்று அவசியமாக  உள்ளது.  தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் வளர்ச்சியினால் சாதி ஒடுக்குமுறைகள் பற்றி பேசப்பட அவை பற்றிய சிந்தனைகள் கிடப்பில் போடப்பட்ட நிலையில் இம்முயற்சிகள் மிக மிக அவசியமாகின்றது.
ஈழத்தமிழ்ச் சமூகத்தில் யாழ்பாணக் குடாநாட்டில் மாத்திரம் சாதி ஒடுக்குமுறை இறுக்கமானதாக இருந்தது.  பிராமணியத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஆகமமயமாக்கல் குடாநாட்டில் வேரூன்றி இருந்தமை யினாலும், நில அதிகாரம் உட்பட பெரும்பாலான ஆட்சி, நிர்வாக அதிகாரங்கள் உயர் சாதியினரான வேளாளரிடம் இருந்தமையினாலும் இவையெல்லாவற்றையும் பாதுகாக்கின்ற தேசவழமைச் சட்டம் அமுலில் இருத்தமையினாலும், சிறைக்குடிகள் முறை மன்னர் ஆட்சிக் காலம் தொடக்கம் நிலவி வந்தமையினாலும் ஏனைய தமிழ்ப் பிரதேசங்களை விட யாழ்ப்பாணத்தில் சாதியமைப்பு முறை இறுக்கமானதாக இருந்தது.
இவ்  இறுக்கமான அமைப்பு முறைமையினால் சாதியால் ஒடுக்கப்பட்ட மக்கள் ஒரு மனிதக் கூட்டமாகக் கூட அங்கு மதிக்கப்படவில்லை.  பல சந்தர்ப்பங்களில் கறுப்பின நீக்ரோ மக்களிலும் பார்க்க மிக மோசமான முறையில் ஒடுக்கப்பட்டனர்.  மேலங்கி அணிதல், பெண்கள் தாவணி போடுதல், நகை அணிதல், தாலி கட்டுதல் உயர் சாதியினரின் பெயர்களை பிள்ளைகளுக்குச் சூட்டுதல், குடைபிடித்தல், பிரேதங்களை தகனம் செய்தல், பாதணிகள் அணிதல், பொதுக் கிணறுகளில் தண்ணீர் அள்ளுதல், ° வண்டிகளில் ஆசனத்திலிருத்தல், பாடசாலைகளில் அனுமதி பெறுதல் போன்ற மக்களின் அடிப்படை அபிலாசைகள் கூட மறுக்கப்பட்ட நிலையில் இவர்கள் இருந்தனர்.
இவ் ஒடுக்கு முறைகளில் சில, மிக அண்மைக்காலம் வரை கூட தொடர்ந்திருந் தது.  இப்போது கூட குடா நாட்டில் இவர்களை உள்ளே அனுமதிக்காத ஆலயங்கள் உள்ளன.  பொருளாதாரம், கருத்தியல் என இருமுனைகளிலிருந்தும் இவர்கள் ஒடுக்கப்பட்ட போதும் பொருளாதார ஒடுக்குமுறை தற்போது சற்று தளர்ந்து வருகின்றது.  கருத்தியல் ஒடுக்கு முறை தொடர்ந்த வண்ணமே உள்ளது.  வளர்ச்சி அடைந்த தேச விடுதலைப் போராட்டம் கூட, இக் கருத்தியல் ஒடுக்கு முறையை முற்றாகத் தகர்ப்பதற்கு முனையவில்லை என்பது தான் மிகவும் கவலைக்குரிய விடயம்.  இன்றும் ஆலயங்கள் இவர்களுக்கு திறக்கப்படாமல் இருப்பதும், திருமணப் பேச்சுகளில் சாதி இன்னமும் பிரதான இடத்தை வகிப்பதும், யுத்த இடப்பெயர்வுகளின் போது கூட கலப்புக் குடியிருப்புகள் தோன்றாமல் இருப்பதும் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டுகள்.
முன்னைய ஒடுக்கு முறைகள் குறைந்தமைக்கு இம்மக்களின் தொடர்ச்சியான போராட்டங்களே பிரதான காரணங்களாகும்.  1920 களின் ஆரம்பத்திலிருந்து 1980 களின் நடுப்பகுதிவரை  இப்போராட்டங்கள் தொடர்ந்திருந்தன.  ஆரம்ப காலங்களில் சித்தாந்த ஒடுக்கு முறைகளுக்கு எதிரான போராட்டங்களாக நிலவியவை பிற்காலங்களில் பொருளாதார ஒடுக்கு முறைகளுக்கு எதிரான போராட்டங்களாக வளர்ச்சியடைந்தன.
இப்போராட்டங்களும், இலவசக் கல்வி, தாய்மொழிக்கல்வி, சர்வஜன வாக்குரிமை போன்ற அரசின் நடவடிக்கைகளும், கிறி°தவ மிஷனறிகளின் கல்விப்பணிகளும், வெளிநாட்டு வேலை வாய்ப்புகளும் இம்மக்களின் மேல்நோக்கிய அசைவினை சற்று துரிதப்படுத்தியிருந்தன.
இம்மக்களினுடைய பிரச்சினைகளுக்காக முதன் முதலாக குரல் கொடுத்தவர்கள் கிறிஸ்தவ மிஷனரிகளைச் சேர்ந்தவர்களேயாவர்.  1910ம் ஆண்டில் எஸ்.ஆர். ஜேக்கப் என்ற தாழ்த்தப்பட்ட மாணவனை வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி தனது மாணவனாகச் சேர்த்ததற்கு ஏனைய மாணவர்கள் பாடசாலையைப் பகிஷ்கரித்து எதிர்ப்புக் காட்டிய போதும் அதிபராக இருந்த கிறிஸ்தவ பாதிரியார் தாழ்த்தப்பட்ட மாணவன் தனி ஒருவனாக இருக்கும் வரை பாடசாலையை நடாத்துவேன் எனக்குறிப்பிட்டு பிடிவாதமாக இருந்தமையினால் பகிஷ்கரிப்பு தோல்வியில் முடிந்தது.
இதில் கத்தோலிக்க மிஷனறியின் பங்கும் கணிசமாக குறிப்பிடக் கூ டியது.  இவர்கள் மத்தியில் சுவாமி ஞானப்பிரகாசர் போன்றவர்கள் கல்விப் பணிகளை மேற்கொண்டு இவர்களின் வளர்ச்சிக்கு உதவினர். இந்துப் பாடசாலைகள் எல்லாம் இவர்களுக்கு கதவுகளை அடைத்திருந்தவேளை சிறிய அளவிலாவது தாழ்த்தப் பட்டவர்கள் கல்வி கற்றவர்களாக உள்ளார்கள் என்றால் அதற்குப் பிரதான காரணம் இவர்களது பணிகளேயாகும்.
கிறி°தவ மிஷனறிகள் கல்விப் பணிகள் என்ற வகையில் இவர்களின் மேல் நோக்கிய அசைவுக்கு உந்து சக்தியாக இருந்தார்களே தவிர இவர்களின் உரிமைகளுக்காகப் போராடும் சக்திகளாக இருக்கவில்லை. ஆனால் அது பற்றிய விழிப்புணர்வைக் கொடுப்பதில் பெரும்பங்காற்றியிருந்தன.
இந்நிலையில் இக்குறைபாட்டினை 1924 இல் உருவாகியிருந்த யாழ்ப்பாண வாலிப காங்கிர° நீக்கியிருந்தது எனலாம். தமிழ்மக்கள் மத்தியில் சமூக மாற்றத்தை தமது முதன்மை கொள்கையாகக் கொண்டு உருவான முதலாவது அரசியல் இயக்கம் யாழ்ப்பாண வாலிப காங்கிரஸ் என்றே கூறாலாம். இந்திய தேசிய இயக்கத்தின் தீவிர கருத்துக்களாலும், பாரதி, காந்தி, விவேகானந்தர் போன்றவர்களின் சமூக சீர்திருத்தக் கருத்துக்களினாலும் பெரிதும் கவரப் பட்ட இவர்கள் தீண்டாமைக்கு எதிரான கருத்துக்களை மிகவும் தீவிரமாகக் கொண்டிருந்தார்கள். வருடா வருடம் நடைபெற்ற ஒவ்வொரு மாநாட்டிலும் தீண்டாமைக்கு எதிரான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1924-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 29, 30, 31-ம் திகதிகளில் யாழ்ப்பாணம் றிச்வே மண்டபத்தில் நடைபெற்ற யாழ்ப்பாண வாலிப காங்கிரசின் முதலாவது மாநாட்டில் பத்துத் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. அதில் மூன்றாவது தீர்மானம் தீண்டாமை பற்றியது ஆகும்.
அத்தீர்மானம் பின்வருமாறு குறிப்பிடுகின்றது.
தற்போது நாட்டில் நிலவிவரும் சாதி வேறுபாடுகள் தேசத்தின் முன்னேற்றத்திற்கு தடையென காங்கிரஸ் கருதுகின்றது. நம்மிடையே இருந்து தீண்டாமை என்னும் காயத்தை அகற்றுவதற்கு காங்கிரஸ் அங்கத்தவர்கள் முயல்வார்கள்.”
1927 நவம்பரில் மகாத்மாகாந்தி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த போது அவரை வரவேற்கும் நிகழ்ச்சிகளில் காங்கிரஸ் தாழ்த்தப்பட்டவர் களுக்கும் சமத்துவம் கொடுத்தது. இவ்வாறாக சமத்துவம் கொடுத்து சமத்துவ வரவேற்புக்காக உருவாக்கப்பட்ட பந்தலை தெல்லிப்பழைச் சந்தியில் இரவிரவாக சாதிவெறியர்கள் எரித்த போதும் உடனடியாகவே மாற்றுப் பந்தல் அமைக்கப்பட்டு காந்தி சமத்துவமாக வரவேற்கப் பட்டார்.
1929 ஏப்பிரலில் காங்கேசன் துறையில் நடைபெற்ற காங்கிரஸின் 5-வது மாநாட்டின் இறுதியில் அமைக்கப்பட்ட செயற்குழுவில் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தயோவேல் போல்அவர்களும் ஒருவராகத் தெரிவு செய்யப்பட்டார். தமிழ் மக்களுக்கான அரசியல் இயக்கமொன்றில் தீர்மானம் எடுக்கும் தலைமைத்துவக் குழுவில் தாழ்த்தப்பட்டவர் சேர்க்கப்பட்டமை  இதுவே முதலாவது தடவையாகும்.
தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்சினைகளை வெளியில் கொண்டு வரும் முயற்சிகளில் யாழ்ப்பாண வாலிப காரங்கிரஸ் ஈடுபட்டாலும், அது தனித்து தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்காக உருவாக்கப்பட்ட நிறுவனம் அல்ல. மாறாக, காலனித்துவ ஆட்சியிலிருந்து இலங்கைக்கு விடுதலையை வேண்டி நின்ற நிறுவனமே அதுவாகும். தீண்டாமையை ஒழித்தல்  அதன் ஒரு வேலைத் திட்டமாக  மட்டுமே  இருந்தது. இந்நிலையில் தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்காகப் போராட ஒரு தனியான அமைப்புத் தேவை என்ற அவசியம் உணரப்பட்டது. இதன் அடிப்டையிலேயே 1927-ம் ஆண்டு யூலைமாதம் 16-ம் திகதிஒடுக்கப் படும் தமிழ் ஊழியர் சங்கம்எனும் அமைப்பு உருவாக்கப்பட்டது. தாழ்த்தப்பட்ட மக்கள் மீது அனுதாபம் கொண்ட உயர்சாதிக் கிறிஸ்தவரான நெவின்ஸ் செல்வதுரை தலைவராகவும் (1934-1936 காலத்தில் ஊர்காவற்துறை தொகுதியின் அரசாங்கசபை உறுப்பினராகவும் இருந்தவர்.) மிஷனறிக் கல்வி கற்ற தாழ்த்தப்பட்ட இளைஞர்களான யோவேல் போல்,  டி. ஜேம்ஸ், என்பவர்கள் இணைச் செயலாளர்களாகவும் தெரிவு செய்யப் பட்டனர். தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமையை வலியுறுத்தி யோவேல் போல்ஜன போதினி’ எனும் வாராந்த பத்திரிகையையும் நடத்தினார்.
1928-இல்ஒடுக்கப்படும் தமிழ் ஊழியர் சங்கம்" சம ஆசனம், சமபோசனம் இயக்கத்தினை குடாநாட்டில் நடாத்தியது. இதன் முதல் போராட்டம் உடுவில் பெண்கள் பாடசாலையில் நடைபெற்றது. யாழ்ப்பாண வாலிப காங்கிரசின் தலைவர்கள் இதற்கு மிகுந்த ஒத்துழைப்பினை வழங்கினர்.
இவ்வமைப்பு பாடசாலைகளில் சாதி அமைப்பு நடைமுறைகளை எதிர்த்து சம ஆசனம், சம போசனம் என்பதையும் வலியுறுத்தியது. இக்காலத்தில் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு பாடசாலைகளில் ஆசனங்கள் வழங்கப்படவில்லை. வழங்கப்பட்ட ஒரு சில பாடசாலைகளிலும் அவர்களுக் கென தனியான ஆசனங்கள் ஒதுக்கப்பட்டன. உயர்சாதி மாணவர்களுடன் சமமாக போசனம் மேற்கொள்வதும் தடுக்கப்பட்டிருந்தது. சேர் பொன். இராமநாதன் போன்ற உயர் சாதித் தலைவர்கள் இது தேசவழமைக்கு உட்பட்டது என நியாயம் கூறினர். கோப்பாய் அரசினர் ஆசிரிய பயிற்சிக் கலா சாலையை உயர்சாதியினரின் தனி  ஸ்தாபனம் ஆக்குவதற்கும் இச்சங்கம் எதிர்ப்பைத் தெரிவித்தது.
ஒடுக்கப்படும் தமிழ் ஊழியர் சங்கத்தின் பலமான கோரிக்கைகளினால் 1930 இல் சம ஆசனம், சம போசனம் என்பது சட்டமாக்கப்பட்டது. இச்சட்ட மாக்கலைத் தொடர்ந்து இதனை நடைமுறைப்படுத்திய 13 பாடசாலைகள் உயர்சாதியினரால் தீ மூட்டி எரிக்கப்பட்டன.
1931-இல் டொனமூர் அரசியல் யாப்பின் மூலம் அறிமுகப் படுத்தப்பட்ட சர்வஜன வாக்குரிமை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒரு அரசியல் அந்தஸ்தினை ஏற்படுத்திக் கொடுத்தது. டொனமூர் குழுவினர்கூட தாழ்த்தப்பட்ட மக்களின் நலனை மேம்படுத்துவதும், சர்வஜனவாக்குரிமையை சிபார்சு செய்வதற்கு ஒரு காரணம் என தமது அறிக்கையில் குறிப்பிட்டனர். இச்சர்வசன வாக்குரிமையும், இதன் அடிப்படையில் 1940களில் அறிமுகப்படுத்தப்பட்ட இலவசக் கல்வியும் தாழ்த்தப் பட்டவர்களின் மேல் நோக்கிய அசைவில் ஒரு பாய்ச்சலை ஏற்படுத்தியது.
1931 ஓக°ட் இல் சங்கானையில் நடைபெற்ற மயானப் போராட்டம் தாழ்த்தப்பட்டவர்களின் போராட்ட நடவடிக்கைகளில் ஒரு வளர்ச்சியைக் காட்டியது, வழமைக்கு மாறாக பொது மயானத்தில் தாழ்த்தப்பட்டவரின் உடலைப் புதைப்பதற்கு பதிலாக தகனக்கிரியைகளை நடாத்தி எரிக்க முற்பட்ட போது உயர்சாதியினர் தாக்கினர். தாழ்த்தப்பட்டவர்களும் எதிர்த்து தாக்கி போராட்டத்தில் வெற்றி கண்டனர். பொலி° சுட்டதில் உயர்சாதியைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார்.
1940 களின் நடுப்பகுதியில் .பி. இராசேந்திரா என்ற தாழ்த்தப்பட்டவர் உயர்சாதியினருக்கு மட்டும் வழங்கப்படுகின்றமுதலியார்பட்டத்தினை பெற்றுக் கொண்டார். 1947-இல் .தே. அரசாங்கம் இவரை செனட்டராகவும் நியமித்தது. தாழ்த்தப்பட்ட மக்களில் இருந்து சட்டசபையில் அங்கம் வகித்த முதல் தாழ்த்தப்பட்டவர் இவரேயாவர்.
1930கள் சாதியால் ஒடுக்கப்பட்ட மக்கள் சற்று விழிப்புணர்வு பெற்ற காலமாக விளங்கியது. யாழ்ப்பாண வாலிப காங்கிரஸ் ஆரம்பத்திலும், 1935-இல் உருவாக்கப் பட்ட இலங்கையின் முதலாவது இடது சாரிக் கட்சியான லங்கா சமசமாஜக் கட்சியும் இம் மக்களுக்கு துணைச் சக்திகளாக விளங்கின. தாழ்த்தப்பட்ட மக்களும் அவர்களின் முதலாவது அமைப்பானஒடுக்கப்படும் தமிழ் ஊழியர் சங்கமும்இம்மக்கள் தொடர்பான கோரிக்கைகளையும் போராட்டங்களையும் முன்னெடுக்கும் போது அவற்றை நியாயப்படுத்தி வெளி உலகுக்கு கொண்டு வருவதில் இவ்விரண்டு அமைப்புகளும் பெரிதும் துணைபுரிந்தன.
இவற்றுக்கு புறம்பாக சர்வஜன வாக்குரிமையும், பிரித்தானியர் ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்ட கட்டற்ற வர்த்தகமுறைமையும் கிறி°தவ மிஷனரிகளினதும் இந்து நிறுவனங்களினதும் ஆட்சிக்கு போட்டியான கல்வி முயற்சிகளும் இவர்கள் மத்தியில் இருந்து சுயாதீனமாக சொந்தக்காலில் தனியாக நிற்கும் கூட்டத்தை உருவாக்கியிருந்தது. சாதிய அமைப்பில் ஒடுப்பட்ட சாதியினர் உற்பத்தி உறவுகளினால் உயர்சாதியினரின் மேலாதிக்க நிலைக்கு உட்பட்ட நிலைகளில் வாழ்வதே வழக்கமானதாகும். மேற்கூறிய நிகழ்வுகளினால் இவர்கள் மத்தியிலிருந்து ஒரு கூட்டம் இந்த இரும்புப் பிடியிலிருந்து விலகியது. அரசாங்க உத்தியோகம் பார்ப்பவர் களாகவும் சொந்த நிலங்களை வைத்திருப்பவர்களாகவும், சொந்த வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களாகவும், நகர் புறத்தில் பட்டறைத் தொழில்களில் ஈடுபடுபவர்களாகவும் இவர்கள் விளங்கினர். யாழ் நகரப் பகுதி, மானிப்பாய், சங்கானை, வதிரி, மட்டுவில் போன்ற இடங்களில் இவ்வாறான ஒரு கூட்டம் உருவாகியிருந்தது. இக்கூட்டமே சாதிப் போராட்டங்களுக்கு தலைமை தாங்கியது.
கல்வி, பொருளாதாரம், அரச உத்தியோகங்களில் வாய்ப்பினைப் பெறுதல் என்பதில் இந்த கூட்டம் அதிக கவனம் செலுத்தியது. பாடசாலை அனுமதியில் சமத்துவம், ஆசிரிய கலாசாலையில் சமத்துவம் போன்ற விடயங்களில் ஆரம்பத்தில் கவனம் செலுத்தியவர்கள் 30-களின் இறுதியில் தாழ்த்தப்பட்டவர்களின் பொருளாதார முன்னேற்றங்களில் கவனம் செலுத்தினர்.
இதன் ஒரு நடவடிக்கையாக தாழ்த்தப்பட்டவர்களின் பிரதான தொழிலான கள் இறக்கும் தொழிலில் உள்ள சிரமங்களை நீக்கும் பொருட்டு 1933-இல் வட இலங்கைகள் இறக்கும் தொழிலாளர் சங்கம் உருவாக்கப்பட்டது. .வி. தம்பையா இச்சங்கத்தினை உருவாக்குவதில் முன்னின்றார்.
1931-இல் சர்வஜன வாக்குரிமை அறிமுகப்படுத்தப்பட்டதனால் அரசாங்க சபையில் பிரதிநிதிகளான உயர்சாதித் தமிழர்களும் தாழ்த்தப்பட்டவர்களினதும் வாக்குகளை பெறுவதற்காக தமது சாதி அகங்காரத்தை சற்று அடக்கி வாசித்து அவர்களின் நலன்களிலும் தவிர்க்க முடியாமல் அக்கறை காட்டினர்.
தாழ்ந்த சாதியினரும் வாக்குகளைப் பெற்று விடுவார்களே என்பதற்காக சர்வஜனவாக்குரிமையை கடுமையாக எதிர்த்த சு.நடேசன் (சேர்.பொன் இராம நாதனின் மருமகன்) பின்னர் இவர்களின் வாக்குகளைப் பெறுவதற்காக 1936-ம் ஆண்டு அரசாங்கசபையில் மரவரி முறையை சட்டமாக்கினார். ஆரம்பத்தில் இவரது தொகுதியான காங்கேசன் துறைத் தொகுதியில் பரீட்சார்த்தமாக அறிமுகப்படுத்தப்பட்ட மரவரி முறை வெற்றியளித்ததைத் தொடர்ந்து பின்னர் குடாநாடெங்கும் அமுலாக்கப் பட்டது. இம்மரவரிமுறை உயர்சாதியினரின் கெடுபிடிகளிலிருந்து இவர்களது சீவல் தொழிலை பாதுகாக்க பெரிதும் உதவியது.
40-களின் ஆரம்பத்தில் இச் சுயாதீனப் பிரிவினர் மத்தியில் தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டுமானால் அவர்களின் ஒன்றுபட்ட குரல் அவசியம் என்பது உணரப்பட்டது. வட இலங்கையில் வாழும் தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்த அமைப்பை உருவாக்க வேண்டும் என இவர்கள் தீர்மானித்தனர். எஸ்.ஆர். ஜேக்கப் ,.. செல்லத்துரை, வி.ஜே. அரியகுட்டி போன்றவர்கள் இதில் முன்னனியில் நின்றனர். இவர்களின் முயற்சியினால்வடஇலங்கை ஒடுக்கப்படும் தமிழர்களின் மாநாடு” 1943-ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 24-ம் திகதி கூட்டப்பட்டது. இம்மாநாட்டிலேயேவட இலங்கைச் சிறுபான்மைத் தமிழர் மகாசபைஎனும் அமைப்பு உருவாக்கப்பட்டது. இதன் தலைவராக ஒடுக்கப்படும் தமிழ் ஊழியர் சங்கத் தலைவராகவும் சாதிப் போராட்டங்களை நடத்தி, அவர்கள் மத்தியில் பிரபல்யமாகவும் இருந்தவரானயோவேல் போல்தெரிவு செய்யப்பட்டார். 1944-இல் இவ் அமைப்பு இலங்கையில் வாழும் அனைத்து தாழ்த்தப்பட்ட தமிழர்களையும் இணைக்கும் வகையில்அகில இலங்கைச் சிறுபான்மைத் தமிழர் மகாசபைஎனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
சிறுபான்மைத் தமிழர் மகாசபையின் இரண்டாவது மாநாடு, 1944-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24-ம் திகதி யாழ்நகர மண்டபத்தில் நடைபெற்றது. தாழ்த்தப் பட்டவர்கள் மத்தியிலிருந்து முதலியார் பட்டம் பெற்ற .பி. இராமச்சந்திரா மாநாட்டிற்குத் தலைமை வகித்தார்.
இம் மாநாட்டிலும் சாதிய உற்பத்தி உறவுகளிலிருந்து விடுபட்ட கூட்டத்தினரின் நலன்களே முதன்மைப்படுத்தப்பட்டன. தாழ்த்தப்பட்ட மாணவர்களின் கல்வி நிலையை முன்னேற்றுதல், ஆசிரிய பயிற்சிக் கலாசாலைத் தெரிவில் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் வாய்ப்பளித்தல், சிறு உத்தியோகங்களில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்தல், தாழ்த்தப் பட்டவர்களுக்கென தனியான சட்டசபைப் பிரதிநிதித்துவத்தைப் பெறுதல் போன்ற விடயங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. அத்துடன் அடிநிலை தாழ்த்தப்பட்டவர்களின் பிரச்சினைகள் என்ற வகையில் சீவல் தொழிலைப் பாதுகாத்தல், பனைவள குடிசைக் கைத்தொழிலை வளர்த்தல் என்பன பற்றிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
1944-ம் ஆண்டு சோல்பரிக் குழுவினர் புதிய அரசியல் யாப்பினை சிபார்சு செய்வதற்காக இலங்கைக்கு வந்தபோது மகாசபையும் சாட்சியம் அளித்தது. உயர் சாதியினரது எதிர்ப்பையும் மீறி இரகசியமாக சோல்பரிக்குழு உறுப்பினர்களுக்கு தாழ்த்தப்பட்ட மக்களின் வசிப்பிடங்களும் காட்டப்பட்டது. இச்சாட்சியங்களில் மகாசபையின் இரண்டாவது மாநாட்டு தீர்மானங்களையே இவர்கள் அதிகளவில் வலியுறுத்தினர். ஆயினும் யாப்பில் உயர்சாதித் தமிழர்களின் கோரிக்கைகள் கவனத்தில் எடுக்கப்பட்டதே தவிர இவர்களின் கோரிக்கைகள் ஏறெடுத்தும் பார்க்கப்படவில்லை.
1945-ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 2-ம் திகதி மகாசபையின் மூன்றாவது மாநாட்டின் போது இவர்களின் கோரிக்கைகளும் இந்திய தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவரான அம்பேத்கரின் கோரிக்கைகளோடு பெருமளவிற்கு ஒத்திருந்தன. தாழ்த்தப்பட்ட சட்டசபையில் விசேட பிரதிநித்துவத்தினை உருவாக்குதல், தாழ்த்தப் பட்டவர்களின் பொருளாதார கஷ்டங்களை விசாரிக்க ஒரு தனி ஆணைக்குழுவை உருவாக்குதல், கல்விப்பிரச்சினைகளில் சலுகைகளை வழங்குதல், உள்ளூராட்சிச் சபைகளில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஏற்றவகையில் வட்டாரங்கள் பிரிக்கப்படுதல் என்பன தீர்மானங்களாக எடுக்கப்பட்டன. இவர்கள் மத்தியில் இருந்து உருவான சட்டத்தரணி ஜே.டி.ஆசீர்வாதம் மாநாட்டிற்கு தலைமை வகித்திருந்தார்.
இக்காலகட்டத்தில் இடது சாரிக்கட்சிகளும் வடக்கே வளர்ச்சியுற ஆரம்பித்தன. 1940-இல் லங்கா சமசமாஜக் கட்சியிலிருந்து ஸ்ராலினை ஆதரித்தவர் வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து வெளியேறியவர்கள், 1943-இல் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கினர். இக்கம்யூனிஸ்ட் கட்சி மு. கார்த்திகேயனால் யாழ்ப்பாணத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட போது தாழ்த்தப்பட்டவர்கள் மத்தியில் இருந்தும் கம்யூனிஸ்ட்டுகள் உருவாகினர். டொமினிக் ஜீவா, டானியல், எம்.எல். சுப்பிரமணியம், கே. பசுபதி போன்றவர்கள் இவர்களில் முக்கியமானவர்களாக விளங்கினர். இவர்கள் கம்யூனி°ட் கட்சியில் அங்கம் வகித்த அதே வேளை, தாழ்த்தப்பட்டவர்கள் என்ற வகையில் மகாசபையிலும் அங்கம் வகித்தனர். எனினும், மகாசபையின் ஆதிக்கம் இவர்கள் கைகளில் இருக்கவில்லை. மாறாக சற்று மிதவாதிகளான ஏனையவர்களின் கைகளிலேயே இருந்தது. இம்மிதவாதிகள் தீவிர போராட்டங்கள் எவற்றையும் ஆதரிக்கவில்லை. மகஜர்கள், வேண்டுகோள்கள் என்பவற்றினூடாக தாழ்த்தப்பட்டவர்களில் இருந்து தோன்றிய உயர் பிரிவினருக்கு சலுகைகளைப் பெற்றுக் கொடுப்பதே இவர்களின் நோக்கமாக இருந்தது. இவ்விரு பிரிவினருக்குமிடையிலான முறுகல் நிலை சபைக்குள் தொடர்ச்சியாக இருந்து வந்தது. ஏற்கனவே யாழ்ப்பாணம் வில்லூன்றி மயானப் பிரச்சினை இம் முறுகல் நிலையை வெளிக்காட்டியிருந்தாலும், 1947 தேர்தலே அதிகளவில் வெளிக் காட்டியிருந்தது.
1944-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24-ம் திகதி சாதி அடிப்டையிலான வழக்கத்திற்கு மாறாக ஆரியகுளத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட ஒருவரின் உடல் யாழ் வில்லூன்றிமயானத்தில் எரிக்கப்பட்டபோது உயர்சாதியினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். இதனால் முதலி சின்னத்தம்பி என்பவர் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியாகினார். இப் போராட்டத்திற்கு மகாசபையில் கம்யூனிஸ்ட்டுகள் ஆர்வம் காட்டிய அளவிற்கு மிதவாதிகள் ஆதரவு காட்டவில்லை. இப்பிரச்சினை தொடர்பான வழக்கில் சமசமாஜக் கட்சியின் தலைவர்களான சி. தர்மகுலசிங்கம், வி. சிற்றம்பலம் போன்றோர் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக வாதாடினர்.
மகாசபை உருவான காலம் இரண்டாம் உலக யுத்தக் காலமானபடியால் இலங்கையின் தேர்தல்கள் அனைத்தும் ஒத்திப்போடப்பட்டன. இதனால் 1947 வரை தேர்தல்கள் குறிப்பாக சட்டசபைக்கான தேர்தல்கள் பிற்போடப்பட்டன. 1947-ம் ஆண்டு புதிய சோல்பரி யாப்பின் கீழ் தேர்தல் நடைபெற்றது. இந்நாட்டில் இருபெரும் சக்திகளாக தமிழ்க் காங்கர° கட்சியினரும், போட்டியிட்டனர். மூன்றாவது சக்திகளாக இடது சாரிகள் விளங்கினர். தேர்தலில் யாருக்கு வாக்களிக்கப்பது என்பது தொடர்பாக மகாசபைக்குள் குழப்பநிலை காணப்பட்டது. தமிழர் காங்கிரஸ் கட்சியை எதிரியாக கருதியமையினால் அதற்கு வாக்களிப்பது தொடர்பாகவே முரண்பாடு காணப்பட்டது. மிதவாதிகள் .தே.கட்சிக்கு ஆதரிப்பதிலேயே அக்கறை காட்டினார். .தே.. ஆட்சி அமைக்கக் கூடிய நிலை இருப்பதனால் உடன் கலுகைகளைப் பெறுவது இலகுவாக இருக்கும் என அவர்கள் கருதினர். குறிப்பாக நியமன சட்டசபை பிரதிநிதித்துவம் வழங்கப்படும் என .தே.சட்சியினர் ஏற்கனவே ஆசை காட்டியிருந்தனர். மாறாக மகாசபையில் இருந்த கம்யூனி°டுகள் இடதுசாரிக் கட்சிகளை ஆதரிப்பதையே நோக்கமாக கொண்டிருந்தனர். இம் முரண்பாடுகள் பெரிதாக வளர்ச்சியடைந்தால் இறுதியில் மகாசபை அமைப்பு ரீதியாக எவருக்கும் ஆதரவாக பிரச்சாரம் செய்வதில்லை எனத் தீர்மானித்தது. எனினும் மிதவாதிகளில் பெரும்பான்மையோர் .தே. சார்பாக பிரச்சாரம் செய்தனர். குறிப்பாக சபையின் முக்கிய தலைவர்களில் ஒருவரான முதலியார் இராசேந்திரா, .தே.கட்சிக்காக நேரடிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். குறிப்பாக சபையின் பெரும்பான்மை .தே. கட்சிக்கு சார்பாகவே பிரச்சாரத்தில் ஈடுபட்டது மகாசபையில் இருந்த இடது சாரிகளில் பெரும்பான்மையோர் கம்யூனிஸ்ட் கட்சிக்காக பிரச்சாரம் செய்தனர்.
மகாசபையின் பெரும்பான்மை .தே.கட்சிக்கு சார்பாக இருந்ததினால் தாழ்த்தப்பட்டவர்கள் தமிழ்த் தேசியத்திற்கு எதிரானவர்கள் என முதன் முதலாக முத்திரை குத்தப்பட்டது. ஏனெனில் இத் தேர்தல், தமிழ்த் தேசியம் வலிமையானதா இல்லையா என்பதை பரிசீலிக்கும் ஒரு தேர்தலாகவே குடாநாட்டில் கணிக்கப்பட்டது. இதனால் தமிழ்த் தேசிய சக்திகளும், தாழ்த்தப்பட்டவர்களும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு இரு துருவங்களாகினர்.
உண்மையில் இவ் இரு துருவ நிலைக்கு தாழ்த்தப்பட்டவர்களின் அமைப்புகளை விட தமிழ்த் தேசியத்தை முன்னெடுத்த அமைப்பு என்ற வகையில் தமிழ்க் காங்கிரஸ் கட்சியே அதிகபொறுப்பினை எடுத்திருக்க வேண்டும். ஒரு ஒடுக்கப்பட்ட சமூகமாக இருப்பதனால் தேசிய சக்திகளே முதலில் ஆதரவுக் கரத்தினை நீட்டியிருக்க வேண்டும். அவர்கள் நீட்டாதது துரதி°டமானது. அவ்வாறு நீட்டுவதற்கு ஜீ.ஜீ. பொன்னம்பலத்தினதும், தமிழ் காங்கர° கட்சியினரதும் உயர் சாதித் தடிப்பு விட்டுக்கொடுக்கவில்லை.
ஆனால் சமூகத்திற்கு மாறான தாழ்த்தப்பட்டவர்கள் ஏற்கனவே ஆதவுக் கரத்தினை நீட்டியிருந்தும் ஜீ.ஜீ. பொன்னம்பலம் உதறித் தள்ளினார். 1945 நோல்பரிக் குழுவினர் விசாரணை நடத்திய போது மகாசபை தாழ்த்தப்பட்ட மக்கள் சார்பாக தனியான சாட்சியம் அளித்து தமிழர் ஒற்றுமையைக் குழுப்ப வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார். இது தொடர்பான ஒரு கூட்டம் மகாசபையால் யாழ்ப்பாணத்தில் கூட்டப்பட்டது. அதற்கு ஜீ.ஜீயும் வருகை தந்திருந்தார். அக்கூட்டத்தில் வைத்து ஜீ.ஜீ.யின் சாட்சியத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் நலம், கல்வி, தொழில், தீண்டாமை போன்ற விடயங்களும் இடம் பெற்றால் தாம் தனியாக சாட்சியம் அளிப்பதை கைவிடுவதாக மகாசபையினர் கூறினர். ஜீ.ஜீ. இதனை ஏற்றுக் கொள்ளவில்லை. மகாசபையினர் தனியாக சாட்சியமளிப்பதாக முடிவெடுத்தனர்.
தமிழ்த் தேசியம் முதற் தடவையாகத் தாழ்த்தப்பட்டவர்களை இணைப்பதில் தோற்றுப்போனது.
இரண்டாவது சந்தர்ப்பம், 1947 தேர்தலின் போது இடம் பெற்றது. தேர்தல் அறிக்கைகளில் .தே.. தீண்டாமைக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்ததோடு, அவர்கள் நலன் சார்ந்த பல திட்டங்களையும் முன்வைத்தது. அத்தோடு தேர்தலின் பின்னர் நியமன சட்டசபை பிரதிநிதித்துவம் வழங்குவதாகவும் உறுதியளித்தது. ஆனால் .தே..வின் அளவுக்கு கூட தமிழ்க் காங்கிரஸ் கட்சியினர் எதையும் முன்வைக்கவில்லை. தாழ்த்தப்பட்டவர்களை வேட்பாளர்களாக நிறுத்தவும் இல்லை.
.தே.. தான் உறுதியளித்த படியே தேர்தலின் பின்னர், முதலியார் இராசேந்திராவை செனட்டராக்கியது. தமிழ்த் தேசியம் இரண்டாவது தடவையும் தாழ்த்தப்பட்டவர்களை இணைப்பதில் தோல்வி கண்டது.
மறுபக்கத்தில் மகாசபையினரும் அதில் அதிகம் பங்கு வகித்த இடது சாரியினரும் வளர்ந்து வரும் தமிழ்த் தேசியத்தை அடையாளம் காணத்தவறினர். இவ்வொடுக்கு முறைகளும் அதற்கு எதிரான போராட்டங்களும் இவர்களுக்கு  கேலிக்குரிய விடயங்களாகவே விளங்கின.
தேசிய இன ஒடுக்குமுறைகள் பூதம் போல வளர்ந்து இவர்களையும் கொள்ளை கொண்டபோது அரசியல் இவர்களை விட்டு மிகத் தொலைவிற்கு சென்று விட்டிருந்தது.
விளைவு தமிழ் மக்கள் மத்தியில் இருந்து மட்டுமல்ல தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் இருந்தும் கூட இவர்கள் அடையாளம் காணாமல் தூக்கி வீசப்பட்டனர்.
( கொழும்புவிலிருந்து வெளியான சரிநிகர் ஏட்டில் பிரசுரமான இக்கட்டுரை 1997 ஆம் ஆண்டு தலித் இதழில் மீள்பிரசுரம் செய்யப்பட்டது )

No comments:

Post a Comment