Thursday, December 6, 2012

காவிரியில் தண்ணீர் வராது ?

உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாட்டுக்குக் காவிரியில் தண்ணீர் திறந்துவிட முடியாது என கர்நாடக அரசு அறிவித்துள்ளது. கர்நாடகாவில் இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தங்கள் நகரங்களுக்குக் குடிதண்ணீருக்கும், தமது மாநிலத்தில் பயிர்செய்யப்பட்டிருக்கும் பயிர்களைக் காப்பாற்றுவதற்கும் தம்மிடம் உள்ள தண்ணீர் போதாது . எனவே தமிழகத்துக்குத் தண்ணீர் தர முடியாது என கர்நாடக  அரசு கூறியுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு வந்ததுமே கர்நாடகத்தில் இருக்கும் வாட்டாள் நாகராஜ் உள்ளிட்ட கன்னட அமைப்பைச் சேர்ந்தவர்கள் பல்வேறு போராட்டங்களை அறிவித்தனர். அவர்களின் அழுத்தமே கர்நாடக அரசு தற்போதைய  முடிவை எடுப்பதற்குக் காரணம். 

தமிழ்நாட்டின் நிலை என்ன என்கிற மிகப்பெரிய கேள்வி இப்போது எழுந்துள்ளது. மத்திய அரசு பிறப்பிக்கும் நியாயமான உத்தரவுகளை நிறைவேற்ற ஒரு மாநில அரசு மறுக்கும்போது அந்த மாநில அரசை முடக்கி வைப்பதற்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 365 ஐப் பயன்படுத்த வழிவகை உள்ளது. ஆனால் இந்தப் பிரிவைப் பயன்படுத்த மத்திய அரசோ குடியரசுத் தலைவரோ முன்வரப்போவதில்லை.

இந்தக் கோரிக்கையை நாம் ஏன்  எழுப்பக்கூடாது என நான் வினவியபோது " இது நடைமுறை சாத்தியம் அற்றது. அப்படி மாநில அரசை முடக்கினால் அது கர்நாடகத்தில் உள்ள பி.ஜே.பி அரசை வலுப்படுத்திவிடும் " என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார். அடுத்து வரப்போகும் தேர்தலை மனதில் கொண்டுதான் அங்கிருக்கும் அரசு அவ்வாறு செயல்படுகிறது. இதில் பி.ஜே.பி கட்சியின் திட்டத்தை மட்டுமே மனதில் கொண்டு நாம் இந்த பிரச்னையை அணுகமுடியுமா ?

இந்தப் பிரச்னையை நீதிமன்றத்தின்மூலம் மட்டும் தீர்த்துவிட முடியாது. தமிழக மக்களின்  உணர்வை மத்திய அரசு புரிந்துகொள்ளும் விதமான போராட்டங்களை இனியாவது தமிழக அரசியல் கட்சிகள் அறிவிப்பார்களா ? 

1 comment:

  1. காவிரிக்காக ஒன்றுபட்டு நிற்கிறது கர்நாடகம்.
    தலைக்கேறிய சாதிவெறியில் அணிகள் அமைக்கிறது தமிழ்நாடு.
    எப்படி வரும் காவிரி தண்ணீர்?.
    கர்நாடகாவில் தமிழர் அல்லாதவர்.
    தமிழ்நாட்டில் தலித் அல்லாதவர்.
    வாழ்க தமிழ்நாடு.
    -ஜானகி ராஜா

    ReplyDelete