Sunday, December 9, 2012

இட ஒதுக்கீடு மட்டுமே தீர்வாகாது - ரவிக்குமார்




இந்திய சமூகத்தின் கொடுங்கனவுகளில் ஒன்றாக இருப்பது "இட ஒதுக்கீடு".  அது, இன்றைய இளைய தலைமுறையினரின் அகராதியில் கெட்டவார்த்தையாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.  நீதியையும். அநீதியையும் இடம் மாற்றி வைத்து அதையே தர்மம் என நம்பச்செய்த  கருத்தியலின் ஆதிக்கம் தொடர்ந்து கொண்டிருப்பதால் பாதிக்கப்பட்டவர்களின் குரல் இப்போதும் இந்திய சமூகத்தின் மனசாட்சியைத் தொட முடியவில்லை.  

பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான மண்டல் குழு பரிந்துரைகளை செயல்படுத்துவது குறித்த வழக்கில் ஒன்பது நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு அந்த வழக்கின் வரம்புக்கு அப்பால் சென்று எஸ்.சி./எஸ்.டி. பிரிவினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்கக்கூடாது எனவும், அப்போது நடைமுறையில் இருந்த இடஓதுக்கீடு ஐந்து ஆண்டுகளுக்கு மட்டும் தொடரலாம் எனவும் கூறியது.  அதை எதிர்த்து நாடெங்கும் எழுந்த தலித் மக்களின் போராட்டங்களின் விளைவாக அரசியல் அமைப்புச் சட்டத்தில் 77 ஆவது சட்டத்  திருத்தத்தை மத்திய அரசு கொண்டுவந்தது.  அதன் மூலம் பதவி உயர்வில் இடஒதுக்கீடு தொடர்வதற்கு வழிவகை செய்யப்பட்டது.  ஆனால், அதை எதிர்த்து பல்வேறு வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டன. அந்த வழக்குகள் எல்லாவற்றையும் ஒன்றிணைத்து  ஒரே வழக்காக உச்சநீதி மன்றம் விசாரித்தது.  நாகராஜ் எதிர் இந்திய அரசு என அறியப்படும் அந்த வழக்கில் உச்சநீதி மன்றம், பதவி உயர்வில்  இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசியல் அமைப்புச் சட்டத் திருத்தம் செல்லுபடியாகும் என குறிப்பிடப்பட்டது.  ஆனால் அப்போதும்கூட இடஒதுக்கீட்டு எதிர்பாளார்கள் ஓய்ந்துவிடவில்லை. அவர்கள் மேலும் மேலும் புதிய வழக்குகளை தொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.  அதன் காரணமாக கடந்த 20 ஆண்டுகளாக எஸ்/எஸ்.டி பிரிவினர் பதவி உயர்வில் இடஒதுக்கீட்டைப் பெற முடியாமல் வஞ்சிக்கப்படுகிறார்கள்.

நாகராஜ் வழக்கில் ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்சநீதி மன்றத்தின் அமர்வு அரசியல் அமைப்புச் சட்ட திருத்தத்தை ஏற்றுக் கொண்ட அதே நேரத்தில் மூன்று விஷயங்களை சுட்டிக் காட்டியிருந்தது.  பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்கும்போது எஸ்.சி./எஸ்.டி. பிரிவினர் பின்தங்கிய நிலையில்தான் உள்ளனர் என்பதை மாநில அரசு உறுதிபடுத்திக் கொள்ளவேண்டும்.   அவர்களது பிரதிநிதித்துவம் போதுமான அளவில் இல்லை என்பதையும், பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்கப்படுவதால் பொதுவான நிர்வாகத்  திறன் பாதிக்கப்படவில்லை என்பதையும் மாநில அரசு உறுதிசெய்துகொள்ளவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.  பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டங்களை மாநில அரசுகள் இயற்றிக்கொள்ள வேண்டும் என்றும் அது கூறியிருந்தது.  அதன் அடிப்படையில் உத்திரபிரதேச மாநிலத்தில் மாயாவதி ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தார். அந்த சட்டம் இப்போது உச்சநீதி மன்றத்தால் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.  நீதிமன்றத்தின் தீர்ப்பைப் பாராளுமன்றத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளும் கண்டித்தன. புதிய சட்டத் திருத்தம் ஒன்றைக் கொண்டுவர வேண்டும் என்றும் கோரின. அதனால்தான் , அண்மையில் பிரதமர் தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்களின் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு அடுத்த நாளே அதற்கான மசோதாவைப் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்போவதாகக் கூறிவந்த காங்கிரஸ் அரசு அதற்கான எந்த நடவடிக்கையையும் இதுவரை எடுக்கவில்லை.   

எஸ்.சி./எஸ்.டி. பிரிவினர் சமூகத்தில் பின்னடைந்த நிலையில்தான் உள்ளனர் என்பதற்கு புதிதாக ஆராய்ச்சி எதையும் செய்யத்தேவையில்லை.  இந்தியாவில் ஏழை மக்களில் 50 விழுக்காட்டினர் இந்த பிரிவைச் சேர்ந்தவர்கள்தான்.  எஸ்.சி. மக்களில் 75 சதவீதத்தினர் வறுமைக்கோட்டிற்க்கு கீழே உள்ளனர்.  பொதுவான கல்வி நிலைக்கும் எஸ்.சி./எஸ்.டி. பிரிவினரின் கல்வி நிலைக்கும் இடையே சுமார் 11 சதவீதம் இடைவெளி உள்ளது.  இந்த புள்ளி விவரங்கள் யாவும் மத்திய அரசு அண்மையில் மேற்கொண்ட சர்வே ஒன்றில் கண்டறியப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.  இதை டைம்ஸ் ஆப் இந்தியா நாளேடு 12.04.2011 அன்று  வெளியிட்டுள்ளது.  மண்டல் குழு பரிந்துரை குறித்த உச்சநீதி மன்ற தீர்ப்பின்போதும், அதன்பிறகு பி.வி. சின்னையா வழக்கின் தீர்ப்பிலும் உச்ச நீதிமன்றம் எஸ்.சி./எஸ்.டி. பிரிவினர் பின்னடைவான நிலையில்தான் உள்ளனர் என்று உறுதிபடுத்திஉள்ளது.  க்ரீமி லேயர் என்ற வகைப்பாடு கூட அவர்களுக்கு பொருந்தாது  என்று அசோக்குமார் தாக்கூர் எதிர் இந்திய அரசு என்ற வழக்கில் 2008ஆம் ஆண்டு உச்ச நீதி மன்றம் தெளிவுபடுத்தி உள்ளது.  அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படும் என்.சி.ஆர்.பி அறிக்கைகளும் கூட எஸ்.சி./எஸ்.டி. மக்களுக்கு எதிரான குற்றங்கள் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக்கொண்டு இருக்கின்றன என்பதையே எடுத்துக் காட்டுகின்றன.  இந்த சூழலில் அவர்கள் இன்னும் பின்தங்கிய நிலையில்தான் இருக்கிறார்கள் என்று உத்திரவாதப்படுத்தவேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறி இருப்பது ஏற்கனவே இருக்கும் தீர்ப்புகளைப் படிக்காததன் வெளிப்பாடு என்றுதான் எண்ணவேண்டியுள்ளது. 
எஸ்.சி./எஸ்.டி. பிரிவினர் நிர்வாகப் பதவிகளில் போதுமான அளவில் இடம்பெற்று இருக்கிறார்களா என்பதை உறுதிசெய்துகொள்ளவேண்டும் என்ற கருத்தும்கூட தற்போது மத்திய மாநில அரசுகள் வெளியிட்டுவரும் புள்ளிவிவரங்களை அறியாமல் சொல்லப்பட்ட ஒன்றுதான்.   தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால் இங்கு இருக்கும் எஸ்.சி./எஸ்.டி. பிரிவினரின்  மக்கள் தொகைக்கு ஏற்ப பணியிடங்களில் அவர்களது பங்கேற்பு இல்லை என்பது வெளிப்படையான உண்மையாகும். 2004 ஆம் ஆண்டு புள்ளி விவரத்தின்படி குரூப் ஏ பதவிகளில் 10 விழுக்காடும் குரூப் பி பதவிகளில் 12 விழுக்காடும், குரூப் சி பதவிகளில் 15 விழுக்காடும்தான் அவர்கள் உள்ளனர்.  19 விழுக்காடு இருக்க வேண்டிய இடத்தில் அவர்களுக்கு வழங்கப்பட்டிருப்பது இந்த இடங்கள் மட்டும்தான்.  சமூக நீதிக்கு பேர்போன தமிழ்நாட்டிலேயே இந்த கதி என்றால் பிற மாநிலங்களைப்பற்றி சொல்லவே தேவையில்லை.  மத்திய அரசு பணியிடங்களிலும் கூட எஸ்.சி./எஸ்.டி. பிரிவினருக்கு முழுமையான இடஒதுக்கீடு ஒதுபோதும் வழங்கப்பட்டதில்லை.  மத்திய அரசில் இருக்கும் 88 செகரட்டரி பதவிகளில் ஒருவர்கூட தலித் இல்லை.  66 அடிஷனல் செகரட்டரி பதவிகளில் ஒரே ஒரு தலித் மட்டும் இருக்கிறார்.  249 ஜாயின்ட் செகரட்டரி பதவிகளில் 13 பேர் மட்டுமே எஸ்.சி. வகுப்பைச் சார்ந்தவர்கள்.  471 டைரக்டர் பதவிகளில் 31 பேர் மட்டுமே எஸ்.சி. பிரிவைச் சேர்ந்தவர்கள்.  இதுதான் மத்திய அரசு இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தும் லட்சணமாகும் . 

பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்கும்போது நிர்வாகத்திறன் பாதிக்கப்படக்கூடாது என்று உச்சநீதிமன்றம் குறிப்பிட்டிருப்பது தகுதி திறமை என்ற பெயரால் புறக்கணிக்கப்படும் எஸ்.சி./எஸ்.டி. பிரிவினரை மேலும் கேவலப்படுத்தவே வழிவகுக்கும்.  தற்போதைய நிர்வாக அமைப்பில் பதவி உயர்வுக்காக பரிசீலிக்கப்படும் ஒருவர் அதற்கான குறைந்தபட்ச தகுதிகளை கொண்டவராகத்தான் இருப்பார்.  எனவே எஸ்.சி./எஸ்.டி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதால் நிர்வாகத்திறன் பாதிக்கப்பட்டுவிடும் என்பதுபோன்ற ஒரு எண்ணத்தை ஏற்படுத்துவது எந்த வகையிலும் ஏற்கத்தக்கதல்ல.  மத்திய அரசு பணிகளாக இருந்தாலும் சரி மாநில அரசு பணிகளாக இருந்தாலும் சரி தமக்குக்  கிடைத்த வாய்ப்பை மிகச் சிறப்பாக பயன்படுத்தி தமது திறமையை தலித் அதிகாரிகள் உறுதிபடுத்திவந்துள்ளனர்.  முறைகேடுகளிலும், ஊழல் குற்றச்சாட்டுகளிலும், நாட்டைக் காட்டிக்கொடுக்கும் சதிகளிலும்  சிக்கி இருக்கும் அதிகாரிகளது பட்டியலை எடுத்து அதில் எஸ்.சி./எஸ்.டி. பிரிவினர் எவ்வளவு பேர் இருக்கின்றார்கள் என்று பார்த்தால் இதை நாம் புரிந்து கொள்ளலாம்.  எனவே, நிர்வாகத் திறமை என்று பொத்தாம்போதுவான காரணத்தைச் சொல்லி இடஒதுக்கீட்டை மறுப்பது எந்த வகையிலும் சரியாக இருக்காது.

எஸ்.சி./எஸ்.டி. பிரிவினிரின் பிரச்சனைகளுக்கு இடஒதுக்கீடே தீர்வாகிவிடாது.  ஏனென்றால் அரசு வேலை வாய்ப்புகளில் மட்டும்தான் இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது.  அதிலும்கூட பல பதவிகள் இடஒதுக்கீட்டு வரம்புக்குள் வருவதில்லை.  தனியார் துறையில் இட ஒதுக்கீடு இல்லாத நிலையில் நாட்டிலிருக்கும் பத்து விழுக்காடு பணிகளில் மட்டும்தான் இன்று இட ஒதுக்கீடு உள்ளது. .  இதனை உணர்ந்து தான் 2002 ஆம் ஆண்டு மத்திய பிரதேச மாநிலம் போபால் நகரத்தில் கூடிய தலித் அறிவுஜீவிகள்  பிரகடனம்  ஒன்றை வெளியிட்டார்கள்.  போபால் பிரகடனம் என அழைக்கப்படும் அதில் 21 அம்ச செயல்திட்டம் ஓன்று முன்வைக்கப்பட்டது. நாட்டின் பொது வளங்களில் தலித் மக்கள் தமக்குரிய பங்கை அடைந்தாகவேண்டும் என்ற அறைகூவலை அது முன்வைத்தது.  முதலில் அதை  ஆர்வத்தோடு வரவேற்ற தலித் கட்சிகள் அதற்குப்பிறகு அதை மறந்துவிட்டன.  அதனால்தான் இன்று இடஒதுக்கீட்டையும் காப்பாற்ற முடியாத இக்கட்டான நிலையில் அவை சிக்கித்தவிக்கின்றன.  போபால் பிரகடனத்தைச் செயல்படுத்த தலித் இயக்கங்கள் இப்போதாவது குரல் கொடுக்க வேண்டும்.  இல்லாவிட்டால் இப்போதிருக்கும் இட ஒதுக்கீட்டு உரிமையும் பறிபோவது நிச்சயம். 

No comments:

Post a Comment