Saturday, December 8, 2012

ஈழத்தில் மீண்டும் சிங்கள இனவெறி ஆட்டம் - தொல்.திருமாவளவன்




கடந்த சில நாட்களாக ஈழத்தில் சிங்கள இனவெறியாட்டம் மீண்டும் தலைவிரித்தாடத் தொடங்கியுள்ளது.  யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு காவல்துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அதைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.  அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாண நகரில் புகுந்து 25க்கும் மேற்பட்ட தமிழர்களை சிங்கள காவல்துறை கைது செய்துள்ளது.  அவர்கள் எங்கு வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற விவரமும் வெளியிடப்படவில்லை.
மாவீரர் நாள் கடைப்பிடிக்க முயற்சித்தார்கள் என்ற குற்றச்சாட்டின்பேரில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள்மீது தாக்குதல் நடத்தி அவர்களில் பலரை இலங்கை காவல்துறையின் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாண நகரில் புகுந்து இருபத்தைந்துக்கும் அதிகமான தமிழ் இளைஞர்களையும் கைதுசெய்துள்ளனர். கைதுசெய்யப்பட்டிருப்பவர்கள் எங்கு வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற தகவலும் சரிவர அறிவிக்கப்படவில்லை. 
கொழும்பு நகரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு என்னவிதமான விசாரணையை மேற்கொண்டிருக்கிறது என்பதும் அறிவிக்கப்படாத நிலையில் கைது செய்யப்பட்டவர்களின் உற்றார் உறவினர் அச்சத்தில் உள்ளனர். 
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயிலும் அபராஜிதன் தர்மராஜா (24) ஜனஹன் செல்வராசா (25) சஞ்சீவன் கனகராசா (24) ப்ரசன்னா சத்தியமூர்த்தி (26) சபேஸ்வரன் பரந்தாமன் (24) சசிகாந்த் சின்னையா (25) ஆகிய ஆறு மாணவர்களும் கடந்த வியாழனன்று பல்கலைக்கழக நிர்வாகத்தால் போலீஸிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர ஏற்கனவே மூன்று மாணவர்களை சிங்களப் போலீஸ் கைது செய்திருக்கிறது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தலைவர் எஸ்.பவானந்தன், அறிவியல் புல மானவர் சங்கத் தலைவர் எஸ்.வேணுராஜ் ஆகியோர் தாங்கள் கைது செய்யப்படுவோம் என்ற அச்சத்தில் யாழ்ப்பாணத்தில் இருக்கும் இலங்கை மனித உரிமைக் கமிஷன் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதனிடையே வல்வெட்டித்துறை சிதம்பரக் கல்லூரியைச் சேர்ந்த பதினெட்டு வயது மாணவர் ஒருவரைக் காணவில்லை எனத் தெரியவந்துள்ளது.
இதனால் வெகுண்டெழுந்த தமிழ் மக்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.  முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குப் பிறகு இவ்வளவு பெரிய ஆர்ப்பாட்டம் நடந்ததில்லை என்ற அளவுக்கு மக்கள் அதில் பங்கேற்றுள்ளனர்.  அதைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் நகருக்குள் தமிழர்களை வீடு புகுந்து வேட்டையாடும் நடவடிக்கையில் சிங்கள காவல்துறை இறங்கியுள்ளது.  நேற்று முன்தினம் 25க்கும் மேற்பட்ட தமிழர்கள் சிங்கள காவல்துறையால் பிடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இராஜபக்சேவின் போர்க் குற்றங்கள் ஒவ்வொரு நாளும் அம்பலப்பட்டுவரும் நிலையில், சர்வதேச நாடுகளின் அழுத்தம் அதிகரித்துவரும் சூழலில் மீண்டும் இனவெறி நடவடிக்கையில் இலங்கை அரசு ஈடுபட்டிருப்பது எதற்கும் கட்டுப்படாத அதன் போக்கையே காட்டுகிறது.  ஏற்கனவே போதுமான நடவடிக்கை எடுக்கப்படவில்லையென ஐ.நா. உள் அறிக்கை ஒப்புக்கொண்டிருக்கும் நிலையில் மேலும் மேலும் தமிழர்கள் வேட்டையாடப்படுவதை வேடிக்கை பார்க்கக் கூடாது.  இந்திய அரசு உடனடியாக இலங்கை அரசை எச்சரிக்க வேண்டுமெனவும் பொய்க்குற்றச்சாட்டுகளின்பேரில் கைது செய்யப்படிருக்கும் மாணவர்களையும் தமிழ் மக்களையும் விடுவிக்க வலியுறுத்த வேண்டும் என்றும் இந்தியப் பேரரசை விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது.

இவண்
தொல்.திருமாவளவன்

No comments:

Post a Comment