Monday, December 21, 2015

பெண்களை அர்ச்சகராக நியமிக்கவேண்டும் - ரவிக்குமார்( 26.09.2008 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் வெளியான கட்டுரையின் ஒரு பகுதி )

2008 செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி நீதிபதி கே.சந்துரு  வழங்கியுள்ள தீர்ப்பு முக்கியமானது (W.P.(MD) No. 9704 of 2007 M.P. (MD) Nos. 1 of 2007 and 1 of 2008). மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகாவைச் சேர்ந்த நல்லுத்தேவன் பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு துர்க்கையம்மன் கோயிலில் பூசாரியாக பணிபுரிந்து வந்த பின்னியக்காள் என்பவர் தொடுத்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு அது. அந்தக் கோயிலில் பின்னியக்காளின் தந்தை பின்னத்தேவர் என்பவர் பூசாரியாக பணியாற்றி வந்தார். அவர் 2004ஆம் ஆண்டுவாக்கில் நோய்வாய்ப்பட்ட நிலையில் அவரது ஒரே மகளான பின்னியக்காள் கோயில் பூஜைகளை செய்து வந்தார். பின்னத்தேவர் 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இறந்து விட்டார். அவருக்குப் பிறகு தொடர்ந்து பின்னியக்காளே கோயில் பூஜைகளை நடத்தி வந்தார். இந்நிலையில் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் பின்னத்தேவருக்கு ஆண் வாரிசு எவரும் இல்லாத காரணத்தால் பூஜை செய்யும் உரிமை அவரது குடும்பத்தைச் சார்ந்த பிற தாயாதிகளுக்குத்தான் வரவேண்டும். அதை ஒரு பெண் செய்யக்கூடாது என்று பிரச்சனை கிளப்பினார். அதற்கு அந்த ஊர்க்காரர்களும் ஆதரவு தெரிவித்தார்கள். இதனிடையே தாசில்தார் முன்னிலையில் கிராமத்தார்களின் கூட்டம் நடத்தப்பட்டு அந்தக் கோயிலின் பூசாரியாக ஆண் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அந்த முடிவு செல்லாது என அறிவித்துத் தன்னையே தொடர்ந்து பூசாரியாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று பின்னியக்காள் நீதிமன்றத்தைக் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி திரு. சந்துரு அவர்கள் அந்தக் கோயிலில் பூசாரியாக பெண் ஒருவர் இருக்கக்கூடாது என சட்டம் எதுவும் இல்லை. இந்த விஷயத்தைத் தாசில்தார் தீர்மானிக்க முடியாது. அதுமட்டுமல்லாமல் அந்தக் கோயிலின் வழிபாட்டுக்குரிய தெய்வமாகப் பெண் தெய்வமான துர்க்கையம்மன்தான் உள்ளது. அந்தத் தெய்வத்துக்கு பூஜை செய்ய ஒரு பெண்ணுக்கு அனுமதி மறுப்பது வேடிக்கையாக இருக்கிறது என்று தனது தீர்ப்பில் கூறியிருக்கிறார்.

‘‘அதிர்ஷ்ட வசமாக இந்தக் கோயில் ஆகம விதிகளுக்கு உட்பட்ட ஒன்று அல்ல. இந்தியாவின் தென் பிராந்தியங்களில் அமைந்துள்ள உப பண்பாடுகளைச் சேர்ந்த தெய்வங்கள் மனு ஸ்மிருதியின் தளைகளிலிருந்து விடுபட்டவையாகும். எனவே பெண்ணை வீட்டு வேலைகளோடு மட்டுமே அடக்கி வைத்திருக்கும் நிலைமை இங்கு எழவில்லை. புகழ் பெற்ற தத்துவ அறிஞர் ஒருவர் குறிப்பிட்டதுபோல பெண்கள்தான் இந்த பிரபஞ்சத்தின் பாதியை ஆண்டுகொண்டிருக்கிறார்கள். மனிதகுலம் முன்னேறிச் செல்லவேண்டுமென்றால் அது ஆண், பெண் என்ற இரண்டு கால்களாலும் நடந்தால்தான் சாத்தியம். கடவுளின் சன்னதிகள் ஆண், பெண் பாகுபாடுகளிலிருந்து விடுபட்டு சுதந்திரமானவையாக விளங்க வேண்டும்’’ என்று தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள அவர், பின்னியக்காளே தொடர்ந்தும் அந்தக் கோயிலில் பூசாரியாக பணி புரியலாம் எனக் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டுக் கோயில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தைத் தமிழக முதல்வர் மாண்புமிகு கலைஞர் அவர்கள் கொண்டு வந்திருக்கிறார். அந்தச் சட்டம் குறித்துத் தமிழக சட்டப்பேரவையில் பேசியபோது, ‘‘இந்து அறநிலையத்துறைக்கு உட்படாத கிராமக் கோயில்களுக்கும்கூட இந்தச் சட்டம் பொருந்தக்கூடியதாக அமைக்கப்பட வேண்டும். அதுமட்டுமல்லாமல் பெண்களும் அர்ச்சகராவதற்கு இந்தச் சட்டத்தில் வகை செய்யப்பட வேண்டும்’’ என்று நான் கோரிக்கை விடுத்தேன். இப்போது அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தையேகூட நடைமுறைப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் இருக்கிறது. 

தமிழ்நாட்டில் மடங்கள், சமணக் கோயில்கள் உட்பட இந்து அறநிலையத்துறையின் கீழ் 38,422 கோயில்கள் உள்ளன. அதில் ஆண்டுக்கு பத்து லட்சத்திற்கும் அதிகமாக வருமானம் வருகிற கோயில்கள் 160. பத்தாயிரத்துக்கும் குறைவாக வருமானம் வருகிற கோயில்கள் 34,415 ஆகும். இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் வராத கிராமக்கோயில்கள் எவ்வளவு உள்ளன என்பது துல்லியமாகக் கணக்கிடப்படவில்லை.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற தமிழக அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள ஆறு மையங்களில் அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்பட்டது. அதில் மொத்தம் 207 பேர் பயிற்சி பெற்றுள்ளனர். அவர்களில் நாற்பது பேர் ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்தவர்கள், ஐம்பத்தைந்து பேர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பையும், எண்பத்தெட்டு பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பையும், இருபத்துநான்கு பேர் இதர வகுப்புகளையும் சேர்ந்தவர்கள். அவர்களுள் பெண்கள் எவரும் கிடையாது.

ஆகம விதிகளின்படி பூஜை செய்வது பரம்பரை உரிமையாக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. வேத காலத்தில் பெண்களும் ஆண்களுக்கு சமமாக உரிமை பெற்றிருந்தார்கள் எனச் சொல்லப்பட்டாலும், அதற்குப் பிறகு பெண்களுக்கு வேதங்களைப் படிப்பதற்கான உரிமை மறுக்கப்பட்டது. அதனால் பூஜை செய்கிற உரிமையையும் அவர்கள் இழந்தார்கள். இன்று ஆண்களுக்குச் சமமாக அனைத்துத் துறைகளிலும் அவர்கள் உரிமைகளையும், வாய்ப்புகளையும் பெற்றபோதிலும் மதம் சார்ந்த நிறுவனங்களுக்குள் அவர்கள் பாரபட்சமாகவே நடத்தப்படுகிறார்கள். அதன் ஒரு அடையாளம்தான் பெண்கள் அர்ச்சகராக முடியாது என்ற நிலைமை ஆகும்.

நீதிபதி சந்துரு அவர்கள் அளித்துள்ள இந்தத் தீர்ப்பு நல்லுத்தேவன்பட்டி கிராமத்தில் உள்ள துர்க்கையம்மன் கோயிலுக்கானதுதான் என்றபோதிலும், அதை அனைத்துக் கோயில்களுக்கும் பொருத்திப்பார்க்க முடியும். தென்னிந்தியாவில் உள்ள கோயில்கள் மனுஸ்மிருதியில் இருந்து விடுபட்டவை என்று அவர் கூறியிருப்பது மிகவும் முக்கியமானதொரு கூற்றாகும். தற்போது உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் இந்தத் தீர்ப்பை தமிழக அரசு எடுத்துக்கூறுவது பயனுள்ளதாய் இருக்கும்.

இன்றைய சூழலில் பாதுகாப்பு போன்ற காரணங்களைச் சொல்லி அரசாங்கங்கள் உருவாக்குகிற சில சட்டங்கள் ஜனநாயகத்தின் எல்லையை சுருக்கிக் கொண்டிருக்கிற நிலையில் இத்தகைய தீர்ப்புகளே அதை விரிவுபடுத்தவும், வலிமையாக்கவும் உதவுகின்றன. நீதிபதி சந்துரு அவர்களே, இப்படியான தீர்ப்புகள் பலவற்றை தொடர்ந்து நீங்கள் வழங்க வேண்டும். இந்திய நீதித்துறையில் புகழ் பெற்று விளங்கிய நீதிபதிகளின் வரிசையில் உங்கள் பெயரும் இடம் பெறுவது தமிழர்களுக்கு, தமிழ் நாட்டுக்குப் பெருமை.

-----------------------------

No comments:

Post a Comment