Sunday, December 23, 2012

வேண்டாம் கற்பழிப்பு : வேண்டாம் மரணதண்டனை






உலகமே அதிர்ச்சியடையும்விதமாக டெல்லியில் ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவி ஒருவர் ஆறு ஆண்களால் பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்தப்பட்டு பேருந்திலிருந்து தூக்கி வீசப்பட்டிருக்கிறார்.அந்தப் பெண் இப்போது மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார்.இந்த சம்பவம் குறித்த செய்திகள் வெளியானதிலிருந்து நாடெங்கும் போராட்டங்கள் நடந்துவருகின்றன. கற்பழிப்புக்கான தண்டனையை அதிகரிக்கவேண்டும், சட்டங்களைக் கடுமையாக்கவேண்டும் என்ற குரல்கள் தீவிரமாக எழுந்துள்ளன. அதன் விளைவாக பெண்கள் தொடர்பான சட்டங்களை சீராய்வு செய்து பரிந்துரைகளை வழங்குவதற்காக ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஜே.எஸ்.வர்மா தலைமையில் மூவர் குழு ஒன்றை மத்திய அரசு நியமித்துள்ளது.

டெல்லியில் நடைபெற்ற சம்பவத்தைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் பெண்கள் மீதான வன்முறைகள் ஊடக கவனத்தைப் பெற்றுள்ளன.அண்மையில் தூத்துக்குடியில் புனிதா என்ற 12 வயது சிறுமி கற்பழிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.அதன் பின்னர் நாகை மாவட்டத்தில் தலைஞாயிறு வட்டத்துக்குட்பட்ட புத்தூர் பஞ்சாயத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமி ஒருத்தியும் பாலியல் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறாள்.இந்த சம்பவங்கள் நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பு விழுப்புரம் மாவட்டம் காந்தலவாடியைச் சேர்ந்த கல்லூரி மாணவி பிரியா கடலூரில் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.

இத்தகைய மிருகத்தனமான கொடுமைகளுக்கெதிராக டெல்லியில் தன்னெழுச்சியான போராட்டங்கள் நடைபெற்றுவருவதைப் போல தமிழ்நாட்டில் போராட்டங்கள் நடக்கவில்லை.இது தமிழ்ச் சமூகத்தில் புரையோடியிருக்கும் ஆணாதிக்க மனோபாவத்தையே காட்டுகிறது.அந்த மனோபாவம் பெண்களுக்கு மட்டும் எதிரானதல்ல, குழந்தைகள், தலித் மக்கள் உள்ளிட்ட நலிந்த பிரிவினர் எல்லோருக்கும் எதிரானதாகும்.
.
இந்திய தண்டனைச் சட்டம் , குற்றவியல் நடைமுறைச் சட்டம் ஆகியவை மட்டுமின்றி பெண்களின் உரிமைகளுக்கென பல்வேறு சிறப்புச் சட்டங்களை அரசு இயற்றியுள்ளது.குழந்தைத் திருமணத் தடுப்புச் சட்டம், 1929;விபச்சாரத் தடுப்புச் சட்டம் 1956 ;வரதட்சணை தடுப்புச் சட்டம், 1961;பெண்களை இழிவாக சித்திரிப்பதைத் தடுக்கும் சட்டம், 1986 ;பாலியல் தொந்தரவு தடுப்புச் சட்டம், 2000 ;குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டம், 2005 என்பவை அவற்றுள் சில. கடந்த மாதம் மத்திய அரசு இன்னொரு சிறப்புச் சட்டத்தையும் இயற்றியிருக்கிறது. பாலியல் வன்முறைகளிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் 2012 என்பதே அது.

பெண்களைப் பாதுகாப்பதற்காக இத்தனை சிறப்புச் சட்டங்கள் இருந்தாலும் பெண்கள் மீதான வன்முறையின் அளவு ஆண்டுதோறும் கூடிக்கொண்டே போவதற்கு முதன்மையான  காரணம் பெண்களின் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு நாட்டில் இல்லாததே ஆகும். தமிழக அரசின் குற்ற ஆவண அமைப்பின் (எஸ்.சி.ஆர்.பி) புள்ளிவிவரத்தின் படி 2011 ஆம் ஆண்டில் 152 வரதட்சணை வழக்குகள் பதிவாகியுள்ளன. பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டது தொடர்பாக 1467 வழக்குகளும், பாலியல் தொந்தரவு தொடர்பாக 464 வழக்குகளும், கணவன் மற்றும் உறவினர்களால் பெண்கள் சித்திரவதைக்கு ஆளானது தொடர்பில் 1812 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

2011 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 677 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன. தமிழ்நாட்டிலேயே விழுப்புரம் மாவட்டம்தான் இதில் முதலிடம் வகிக்கிறது. அங்கு 86 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு எதிரான வன்முறையிலும் கூட விழுப்புரம் மாவட்டம்தான் முதலிடம் வகிக்கிறது.


நாட்டின் மக்கள் தொகையில் ஐம்பது விழுக்காட்டினராக இருந்தாலும் பெண்களுக்கு எதிராகப் பல்வேறு அநீதிகள் இழைக்கப்படுவதைப் பார்க்கிறோம். அவர்கள் சமூகத்தின் மேல்தட்டில் இருந்தாலும் கொடுமைகளுக்கு ஆளாகி வருகிறார்கள்.தலித் சமூகத்தைச் சேர்ந்த பெண்களோ ஆணாதிக்க வன்முறைகளை மட்டுமின்றி சாதிய வன்கொடுமைகளையும் எதிர்கொள்ளவேண்டியிருக்கிறது. பெண் என்றால் பேயும் இரங்கும் எனச் சொல்லப்படுவதுண்டு. ஆனால், தலித் பெண்களுக்கு எவரும் இரக்கம் காட்டுவதில்லை.அவர்கள் பாதிக்கப்படும்போது நீதி தேவதையும்கூட பாராமுகமாக இருந்துவிடுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்னால் கடலூர் மாவட்டத்தில் சாதி வெறியர்களால் மிகவும் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட கீழ் குமாரமங்கலம் விக்டோரியா( 1998), கோ.ஆதனூர் பொன்னருவி(1999), மேலப்பாலையூர் சகுந்தலா(1999), செல்லஞ்சேரி சிவகாமி (1999) ஆகிய வழக்குகளில் உரிய நீதி கிடைக்கவில்லை. சில நாட்களின் முன் நிகழ்ந்த பிரியாவின் படுகொலை இப்போதும் அதே நிலைதான் நீடித்துக்கொண்டிருக்கிறது என்பதற்கு இன்னுமொரு சாட்சியாக இருக்கிறது.தூத்துக்குடி, தலைஞாயிறு, காந்தலவாடி ஆகிய இடங்களில் பாதிக்கப்பட்டவர்களை மாவட்ட ஆட்சியரோ, அமைச்சர்களோ , மாநில மகளிர் ஆணையத்தின்தலைவியோ நேரில் சந்தித்து ஆறுதல்கூட சொல்லவில்லை.      

அண்மைக்காலமாக தமிழகத்தில் அதிகரித்துவரும்கௌரவக் கொலைகள்பெண்களுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளன. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல தற்போது சில பிற்போக்குச் சக்திகள் காதல் திருமணங்களைத் தடை செய்யவேண்டும் என்று கூக்குரல் எழுப்பி வருகின்றன. பெண்கள் தமது வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் உரிமையை மறுக்கும் இந்தப் பிரச்சாரம் பெண்களின் முன்னேற்றத்துக்கு மிகப்பெரும் சவாலாக உருவெடுத்திருக்கிறது. பெண் ஒருவர் முதலமைச்சராக இருக்கும் தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருவதும், பெண்களின் உரிமைகளுக்கு எதிராகப் பிற்போக்கு சக்திகள் அணிவகுப்பதும் கவலைதருவதாக உள்ளது. இவற்றைக் கட்டுப்படுத்துவதில் அரசு மெத்தனமாக இருப்பது அனைவரையும் அதிச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

இந்திய அளவில் 2011 ஆம் ஆண்டில் நிகழ்ந்துள்ள குற்றங்களின் எண்ணிக்கையைவைத்துப் பார்க்கும்போது உத்தரப் பிரதேச மாநிலம் நாட்டிலேயே முதலிடம் வகிக்கிறது. நாடு முழுதும் நடைபெற்ற குற்றங்களில் 33.4% குற்றங்கள் அங்கு நடந்துள்ளன. அதற்கு அடுத்தபடியாக தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்தியா முழுதும் நடைபெற்ற குற்றங்களின் எண்ணிக்கையில் 11.5% குற்றங்கள் தமிழ்நாட்டில் நடந்துள்ளன.
 

டெல்லி சம்பவத்தைத் தொடர்ந்து கற்பழிப்புக் குற்றத்துக்கு தூக்கு தண்டனை விதிக்கவேண்டும் என சிலர் கோரி வருகின்றனர். பெண்கள்மீதான குற்றங்களின் குரூரத் தனமையைப் பார்க்கும்போது அவர்களது கோரிக்கை நியாயமானதாகவே தோன்றும்.எனினும், தண்டனையை அதிகரிப்பதால் மட்டும் குற்றத்தைக் குறைத்துவிட முடியாது. ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் மரண தண்டனை எந்தவொரு குற்றத்தையும் குறைத்துவிடவில்லை. எனவே, கற்பழிப்புக்கும் மரண தண்டனை கொடுக்கவேண்டும் என்பது பெண்களுக்கு எதிரான வன்முறையைக் கட்டுப்படுத்த உதவாது.இவ்வாறு கோருவதைவிடவும், தற்போது இருக்கும் பெண்களுக்கான பாதுகாப்புச் சட்டங்களை  சரியாக நடைமுறைப் படுத்துவதும் அவைகுறித்த விழிப்புணர்வை காவல் துறை உள்ளிட்ட அரசுத் துறைகளைச் சேர்ந்தவர்களிடையே உருவாக்குவதும்தான் உடனடித் தேவை.



5 comments:

  1. நகர்புறத்தில் ஆடவரின் கற்பனைச் சிந்தனையின் காரணமாக வல்லுறவு நிகழ்கின்றது. கிராமங்களில் நிலக்கிழமையின் அடிமைத்தனத்தால் வல்லுறவு நிகழ்கின்றது. இந்த வல்லுறவுகளில் ஈடுபடுவோர் குமுகத்தின் எல்லாத் தரப்பைச் சார்ந்தவர்களும் இருக்கிறார்கள் என்றாலும் அகப்படுவது என்னவோ கீழ்த்தட்டு நிலையில் உள்ளவர்கள்தாம். மேல்தட்டில் உள்ளோர் பணம் கொடுத்து தப்பிவிடுகின்றனர். நல்ல அறக்கருத்துகள் மட்டுமே இக்க்குற்றச் செயலைக் குறைக்கத் தகுந்தன, தண்டனைகள் அல்ல.


    சேசாத்திரி

    ReplyDelete
  2. தங்களது கருத்துகளை வழிமொழிகின்றேன்.

    மூத்தோர் சொல் கேளாமை,
    பெற்றோருடன் வாழாமை,
    உடன்பிறந்தோர் இல்லாமை,
    தட்டிக்கேட்க ஆள்இல்லாமை
    இவைகளே காரணம்.
    பள்ளிகளில் நீதிக்கதைகள் போதிக்கப்படுவதே இல்லை.

    அன்பன்

    கி.காளைராசன்

    ReplyDelete
  3. குற்றவாளிக்கு மரண தண்டனையைவிடக் கொடியதாக ஏதேனும் இருந்தால் கொடுக்க வேண்டும். இப்படிப் பட்ட கொடுமைக்காரர்களை விசாரணையே இல்லாமல் பிடித்தவுடன் தண்டிக்கும்படி சட்டம் கடுமையாக்கப் பட வேண்டும்.

    அதோடு இல்லாமல் சேஷாத்ரியின் கருத்தையும் ஆமோதிக்கிறேன். பள்ளிகளில் நீதி போதனை என்னும் வகுப்புகள் எப்போது தடை செய்யப்பட்டனவோ அப்போதிலிருந்தே சமுதாயம் சீரழிவை நோக்கிச் சென்றுவிட்டது. மேலும் மது அருந்துவது வேறே. பள்ளி மாணவர்கள் கூட மது அருந்துகின்றனர். மதுவை இந்தியா முழுதும் தடை செய்ய வேண்டும். ஆனால் இது இயலாத ஒன்று. குறைந்த பக்ஷமாகக் கட்டுப்பாடாவது கொண்டு வர வேண்டும். பெண்கள் எந்த வகையில் அவமானப் படுத்தப்பட்டாலும் அவமானம் செய்தவர்களைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்.
    - Geetha Sambasivam

    ReplyDelete
  4. நட்புடன் ரவிக்குமாருக்கு....
    மேற்குறிப்பிட்ட விடயங்கள் சார்ந்த தங்களின் கட்டுரைகளில் நீங்கள் "கற்பழிப்பு' என்ற ;சொல்லை தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றீர்கள்... இது நீங்கள் பிரக்ஞையின்மையாக எழுதுகின்றீர்கள் என்றே நினைக்கின்றேன்... ஆகவே பிரக்ஞைபூர்வமாக "வன்புணர்வு" என்ற சொல்லைப் பயன்படுத்துவது "கற்பு" என்ற கற்பனைபயிலிருந்து ஆண்கள் விடுபடவும் பெண்கள் பாதுகாக்கப்படவும் வழியேற்படுமல்லவா....?
    நன்றி நட்புடன் மீராபாரதி

    ReplyDelete
  5. thandanaikal mattum manithanai matri vidathu pengal namaku adimai anavarl yandru ninaikum aanathika mananilai ozhiya vendum, matrum pengalai oru pothai porula kattum odagangal tham pokai matri kollavendum, oru anum pennum sernthu pesikondu irupathu thavarendru ninaikindra makkalin mananilai maravendum, apothu than penkaluku yethirana vankodumaikal kuraiyum......
    PORIYALAR SARATHI.

    ReplyDelete