Tuesday, December 4, 2012

”இறந்துபோன அம்மாவைப் பார்ப்பதைவிடவும் துயரமானது எரிக்கப்பட்ட வீட்டைப் பார்ப்பது ” - ரவிக்குமார்






தர்மபுரிக்கு அருகில் தலித் மக்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து உடனடியாக இங்கே ஆய்வு மேற்கொள்ளும் உங்களை நான் பாராட்டுகிறேன். பல்கலைக்கழகத்தில் இப்படி மாணவர்கள் விவாதிப்பது ஒருவிதத்தில் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இன்னொருபுறம் இது என்னை அச்சமடையவைக்கிறது. ஒரு வன்முறை சம்பவம் எப்படி கருத்தரங்கப் பொருளாக மாறுகிறது என்பதை நினைத்து நான் அச்சப்படுகிறேன். எல்லாம் அமைப்பின் பகுதிகளாக மாற்றப்படுகின்றனவா என்று எனக்குள் கேட்டுக்கொள்கிறேன். விபத்து என்பது எப்படி போக்குவரத்தின் அங்கமாக மாறிவிட்டதோ அப்படி எதிர்ப்பும் இப்போது அமைப்பின் அங்கமாக மாறுகிறதோ என கவலைகொள்கிறேன். முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் உங்களைப்போல நானும் மாணவனாக இருந்தேன். அண்ணாமலைப் பல்கலைக்க்ழகத்தில் படிக்கும்போதுதான் இதே தர்மபுரி பகுதியில் நக்ஸலைட்டுகள் போலீஸால் வேட்டையாடப்பட்டார்கள். அப்போது அதைப்பற்றி கருத்தரங்கு நடத்தலாமென எங்களுக்குத் தோன்றவில்லை. நாமும் போராடுகிறவர்களோடு இணையவேண்டும் என்றுதான் தோன்றியது. அது சாகசத்தின்மேல் ஏற்பட்ட ஈர்ப்பாக இருக்கலாம். நாங்கள் அப்படித்தான் இருந்தோம். ஆனால் இன்று இங்கெ இருக்கும் மாணவர்கள் வன்முறையை ஒரு ஆய்வுப் பொருளாக எடுத்துக்கொண்டிருக்கிறீர்கள்.

ஈழத்துக் கவிஞர் விலவரத்தினம் தனது அனுபவம் ஒன்றைச் சொன்னார். ஒரு இரவு தனது வீட்டில் குடும்பத்தோடு படுத்திருக்கிறார். திடீரென அவரது மனைவி ‘ ஏதோ கெட்டது நடக்கப் போகிறது. நாம் இங்கே இருக்கவேண்டாம்’ எனச் சொல்லி எல்லோரையும் வெளியில் அழைத்து வருகிறார். அன்றிரவு உறவினர் வீட்டில் படுத்திருக்கிறார்கள். நள்ளிரவு கடந்ததும் பெரியதொரு வெடி சப்தம். வெளியில் வரப் பயந்து வீட்டிலேயே இருக்கிறார்கள். விடிந்தபின் பார்த்தால் சிங்கள விமானப் படையின் குண்டு வீச்ச்சில் விலவரத்தினத்தின் வீடு தரைமட்டமாகிக் கிடக்கிறது. அழுது அரற்றுகிறார்கள். அவர் தனது சட்டைப் பையைத் துழாவுகிறார்., வீட்டின் சாவி கையில் அகப்படுகிறது. எடுத்துப் பார்க்கிறார். அவரது மகன் சொல்கிறான்’ வீடே போய்விட்டது. எதற்கு இந்த சாவி? அதையும் வீசி எறியுங்கள்’ . வில்வரத்தினம் தன் மகனிடம் சொல்கிறார்’ இல்லையப்பா, நமக்கு ஒரு வீடு இருந்தது என்பதற்கு இந்த சாவிதான் சாட்சி.இதை வீசி எறியக்கூடாது’. தமிழ்நாட்டில் அப்படி நூற்றுக்கணக்கான சாவிகள் தலித் மக்களிடம் இருக்கின்றன. நாளை நீங்களெல்லாம் கள ஆய்வுக்காக தர்மபுரி போக இருப்பதாக அறிந்தேன். அங்கே அதுபோன்ற சாவிகள் இருநூறுக்கும் அதிகமாக இருக்கின்றன. அங்கிருக்கும் அந்த மக்களிடம் அந்த சாவிகளை வாங்கிப் பாருங்கள். அந்த சாவிகளைக்கொண்டு சாதியவாதிகளின் அடைத்துக்கிடக்கும்  மனங்களைத் திறக்க முடியுமா என்று முயற்சித்துப் பாருங்கள்.

தர்மபுரிக்குச் செல்லும்போது அங்கே எரிந்து கிடக்கும் வீடுகளில் என்னென்ன பொருட்கள் சேதமடைந்தன என்று கணக்கெடுக்காதீர்கள் .அது வருவாய்த் துறையினரின் வேலை. எரிக்கப்பட்ட வீட்டின் முன்னால் ஐந்து நிமிடம் நில்லுங்கள், அந்த இழப்பை உணர்ந்துபாருங்கள். ஒரு மனிதரின் இழப்பில் மிகவும் துயரம் தருவது அம்மாவின் மரணம். கண்ணெதிரில் அம்மாவின் சடலத்தைப் பார்ப்பதுபோல துயரமானது  வெறெதுவும் இருக்கமுடியாது. நீங்களெல்லாம் வயதில் இளையவர்கள், அந்தத்  துயரம் உங்களில் பலருக்குத் தெரியாது. அம்மாவின் சடலத்தைப் பார்ப்பதைவிடவும் துயரமானது எரிக்கப்பட்ட வீட்டைப் பார்ப்பது. ஒரு வீடு எரிக்கப்படும்போது ஆடைகள் எரிந்துபோகின்றன, உடைமைகள் எரிந்து போகின்றன, கல்விச் சான்றிதழ்கள் எரிந்துபோகின்றன, பணம், நகைகள் சாம்பலாகின்றன. அவற்றையெல்லாம் திரும்பவும் வாங்கிக்கொள்ளலாம். ஆனால் ஒரு வீட்டோடு சேர்ந்து எரிந்து போகும் நினைவுகளை எப்படி திரும்பப் பெறுவது? ஒரு வீட்டோடு வைத்து எரிக்கப்படும் கனவுகளை எப்படித் திரும்பப் பெறுவது? அம்மாவின் சடலத்தைப் பார்ப்பதைவிடவும் துயரமானது எரிக்கப்பட்ட வீட்டைப் பார்ப்பது. அந்தத் துயரத்தை நீங்கள் உணரமுடியுமா என நாளைக்கு நீங்கள் முயற்சித்துப் பாருங்கள்.

அந்த தர்மபுரியில் அதே நாயக்கன்கொட்டாய் கிராமத்தில் 1984 ஆம் ஆண்டு 'தர் மபுரி எதிரொலிகள் ' என்ற எனது முதல் கவிதைத் தொகுப்பு வெளியிடப்பட்டது. அப்பு, பாலன் சிலை திறப்பில் ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த தோழர்களை, அவர்கள் இசைத்த புரட்சிப் பாடல்களை எண்ணிப் பார்க்கிறேன். திரும்பிய திசையெல்லாம் செங்கொடிகள் அசைந்த ஊர்கள். இப்போது அதே கிராமங்களில் தலித்துகளின் வீடுகளை எரித்த நெருப்பு செங்கொடிகளை விடவும் சிவப்பாக மேலெழுந்துள்ளன. இந்த நாட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன மிச்சம் இருக்கிறது? அவர்களது போராட்ட வடிவங்களும் அமைப்பின் அங்கங்களாக மாறிவிடும்போது அவர்கள் தம்மைத் தாமே மாய்த்துக்கொண்டு அழிவதுதவிர வேறென்ன வழி இருக்கிறது?

நேற்று  நான் ஒரு டிவி சேனலின் விவாதத்தில் கலந்துகொண்டேன். இப்போது திரைப்படங்களைப் போலவே  ’டாக் ஷோ’க்களும் கவனம் பெற்று வருகின்றன. அவற்றை எப்படி ’ஸ்பைஸியாக’ அமைப்பது என்ற வித்தை நமது ஊடகத் துறையினருக்கு அத்துப்படியாகிவிட்டது. இப்படியான ‘டாக் ஷோக்கள்’ அதில் கலந்துகொள்பவர்களின் சாமர்த்தியத்தைக் காட்டிக்கொள்ளும் வார்த்தை யுத்தங்களாக மாறிவிடும்போது அவற்றால் என்ன பயன் ? இதோ இங்கே நான் உங்கள் முன்னால் பேசுவதும்கூட ஒரு ‘பெர்ஃபார்மன்ஸாக’ மாறிக்கொண்டிருக்கிறது. இதனால் அங்கே வன்முறையால் பாதிக்கப்பட்ட தலித்துகளுக்கு என்ன பயன் ?
நான் இப்படிப் பேசும்போது ‘இதென்ன இவனொரு சினிக்காக இருக்கிறான்’ என்று உங்களுக்குத் தோன்றலாம். ஆமாம். அது உண்மைதான், உங்களையும் இதேபோல அவநம்பிக்கைகொள்ளுங்கள் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் சூழலின்மீது அருவருப்பு கொள்ளுங்கள், உங்கள் வகுப்பறையை, பல்கலைக்கழகத்தை வெறுங்கள். அத்தகைய அருவருப்பு உங்களுக்கு ஏற்பட்டால் நீங்கள் மனிதர்களாகத் தொடங்கிவிட்டீர்கள் என அர்த்தம்.  மனிதர்களாக உங்களை மறுபடியும் சந்திக்க விரும்புகிறேன், இப்போது விடை பெறுகிறேன்.

( 04.12.2012 செவாய் அன்று பாண்டிச்சேரிப் பல்கலைக்கழகத்தின் இதழியல் துறை மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசியதன் சுருக்கம் )

4 comments:

  1. மனதில் தைக்கும் ஆழ்ந்த எழுத்து.

    ReplyDelete
  2. இன்றைய இந்தியாவுக்கு அத்யாவசிய தேவை. ‘டார்ட்’ சட்டம் தர்மத்தின் அடிப்படையில். வினையறுத்தவனை வினை அறுக்கும். வினை தீர்த்தான், அரசு இயந்திரம். இந்தியாவில் மனுஸ்மிருதியிலும், அர்த்த சாஸ்திரத்திலும் காணக்கிடைக்கிறது. அது இங்கிலாந்தில் வித்திட்டதே 17ம் நூற்றாண்டில். நல்ல சட்ட திட்டங்கள். இந்தியாவில் 1860லிருந்தே ஐ.பி.சி.யில் அதனுடைய வித்து இருந்தாலும், பல தீர்ப்புகள் இருந்தாலும், நமது அரசியல் சாஸன ஷரத்து 300ல் அதற்கு ஆதரவு இருந்தாலும், இன்றளவும் அதை நாம் சரியாக பரிசோதிக்கவில்லை. நான் மாணவனாக இருந்த காலத்தில் சென்னை சட்டக்கல்லூரியில் டார்ட் சட்டத்துக்கு ஆதாரத்துடன் பாடம் எடுத்த பேராசிரியர் அருணாசலம் அவர்களை நினைத்துக்கொள்கிறேன். என் குறிப்புக்கடுதாசிகளையும், கையில் உள்ள சட்டநூல்களையும் நோக்கினேன். பல மணி நேர வேலை இருக்கிறது. மற்ற எல்லா வேலையும் நின்று விடும்.ஆகவே, ஒரு சின்ன முன்மாதிரி கேசை சொல்லி நிறுத்துகிறேன். மற்றவர்கள் காரியத்தில் இறங்கப்போவது இல்லையானால், நான் மேலும் எழுதுவது வியர்த்தமாகப் போகலாம்.
    உங்களுக்கு தனி மடலில் இணைய தளத்தில் கிடைக்கும் கட்டுரைகளை அனுப்பலாம். பிடிபடுவது முதலில் கஷ்டம். பிறகு எளிது. வசதி எப்படி?

    இங்கிலாந்து வழக்கு:Donoghue v. Stevenson. (1932) A.C. 562.)
    ‘Single most important decision in the history of the law of torts'? but even as the "most important decision in all the common law...’

    டோனாக்ஹ் மாமி வாங்கிய ஜிஞ்சர் பீர் பாட்டிலில் நத்தை. குடித்த அருவருப்பு: வயிறு கோளாறு. நஷ்ட ஈடு கேட்டார். ஜெயித்தார்.
    கடந்த 60 வருடங்களில் சட்டம் மேன்மை ஆகியிருக்கிறது. இந்த வழக்கு சின்னது. கோட்பாடு அதர்மபுரியில் அமல் ஆகக்கூடும்.
    இந்தியா:
    1860 ஆண்டில் இயற்றப்பட்ட இ.பி.கோ. 500: ஒருவர் மற்றொருவரை மானநஷ்டம் செய்தால்/ அவமான சுவரொட்டி/ பதிவு செய்தால் இரு வருடம் வரை சிறை. அபராதமும் விதிக்கலாம்.
    கோட்பாடு அதர்மபுரியில் அமல் ஆகக்கூடும். இ.பி.கோ. 357(1) ன் படி ஒரு குற்றவாளியை தண்டிக்கும் போது அவன்/அவள் இழைத்த குற்றத்தால் இன்னல் பட்டவர்களுக்கு நஷ்டஈடு கொடுக்கச்சொல்லலாம். இ.பி.கோ. 357(3) படி இன்னம்பட்டவர்களுக்கு ஆறுதல் ஈடு கொடுக்கச்சொல்லலாம்.

    நான் சொன்னது அரிச்சுவடி. கணிசமான நண்பர்கள் கேட்டால், தொடர நினைக்கலாம்.
    வர, வர , கை வலி அதிகம். பகிர்ந்து கொள்ள ஆர்வம் கூடுகிறது.
    நன்றி, வணக்கம்.
    இன்னம்பூராம்
    05 12 2012

    ReplyDelete
  3. சற்று நேரத்திற்கு முன் கலைஞர் தொலைக்காட்சியில் சுப.வீரபாண்டியன் அவர்கள் 9 மணி நிகழ்ச்சியில் தர்மபுரிக் கொடுமை பற்றிப் பேசினார். 278 கான்கிரீட் கட்டிடங்கள் ஆறு மணி நேரத்திற்குக் காவல்துறைகூட தடுக்காமல் திட்டமிட்டு எரிக்கப்பட்டன என்று கூறினார். பீரோக்களில் வைக்கப்பட்டிருந்த பணம், நகை, பட்டுப்புடவை போன்றவை கொள்ளையடிக்கப்பட்ட பின் எரிக்கப்பட்டது திட்டமிட்ட நடவடிக்கை என்பதற்குக் காட்டு என்றார். இது உணர்ச்சிக்கொந்தளிப்பில் ஒரு கணத்தில் எழுந்ததன்று என்றும் சொன்னார்.
    பாடப்புத்தகங்கள் எரிக்கப்பட்டது கல்வியை அழிக்க என்று அவர் சொல்லியது மிகைப்படுத்தப்பட்டது போல் தோன்றியது. கொள்ளை அடித்தவர்களுக்குப் பிற பொருட்கள் பற்றி என்ன கவலை இருந்துவிடப்போகிறது. புத்தகம் அவர்களுக்குப் பயன் இல்லாதது. அவவளவுதான்.
    பேச்சில் ஒரு தெளிவு இதுவரை இருந்தது. ஆனால் இறுதியில் முத்தாய்ப்புக் குரலில் இதன் முடிவு திராவிடம் வெல்லும்; சாதியம்தோற்கும் என்று அவர் முடித்ததின் பொருள் தான் புரியவில்லை!
    தொல்.திருமாவளவன் அவர்கள் பேட்டியிலிருந்து திராவிட தேசிய கட்சிப்பாகுபாடில்லாமல் ஆதிக்க சாதிகள் கூட்டு என்று அறியமுடிந்தது.
    இவர் திராவிடம் வெல்லும் சாதியம் தோற்கும் என்கிறார்! எல்லோரும் கூட்டுச் சேரும்போது சாதியம் தோற்கும் என்பது பேச்சோடு நிற்கவேண்டியதுதான்.
    அன்புடன்
    சொ.வினைதீர்த்தான்.

    ReplyDelete
  4. இல்லாத சாதிக்காக மண்டையைக் கசக்குவதை விட, இருக்கிற சாதிக்கு மண்டை
    உடைப்பது மேல். ஆண், பெண் என இரு சாதிகள் இருப்பது கண்கூடு. அதிலே
    பெண்சாதிக்குச் சற்று அல்லது அதற்கும் கீழான நிலை. முதலில் நாம் நம்
    வீட்டுப் பெண்களுக்கான உரிமைகளைக் கொடுக்க முன் வருதல் வேண்டும்.

    அப்படிக் கொடுக்கிற போது, அண்டை வீட்டாரும் கொடுத்தாக வேண்டிய சூழல்
    வரும். அப்படியாக பெண் சாதி மேம்படுகிற போது எல்லாமும் மேம்படும்.
    இந்தியா என்கிற நாடு தழைக்க அதுதான் இன்றியமையாதது.
    -பழமைபேசி

    ReplyDelete