Friday, November 5, 2010

வாட்டர் பாக்கெட்டுகளை தடை செய்க

04.05.2010








சிறப்புக் கவன ஈர்ப்பு


சென்னை, இராயபுரம் தனியார் சேமிப்புக் கிடங்கில் காலாவதியான
உணவுப் பொருட்களைப் பதுக்கி வைத்து பொதுமக்களுக்கு
விற்பனை செய்து வருவதைத் தடுக்கக் கோருதல்


திரு. து. ரவிக்குமார்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இது கோடைக் காலம் என்பதனால். இன்றைக்கு பெரும்பாலோர், கிராமப் பகுதி மக்கள்கூட பாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீரை வாங்கி அருந்துவது சகஜமாக மாறிவிட்டது.  அப்படி பாட்டில்களில் அடைத்து விற்கப்படுகிற குடிநீர் Mineral water  என்று பொதுவாக அழைக்கப்பட்டாலும், Mineral water தயாரிக்கின்ற  தொழில்நுட்பத்தின் அடிப்படையில் அது தயாரிக்கப்படுவதில்லை. அந்த பாட்டில்களை எடுத்துப் பார்த்தால், அதில் Packaged Drinking Water  என்று மட்டும்தான் அச்சடித்திருக்கிறார்கள்.  Mineral water -க்கு காசு வாங்கிக்கொண்டு வெறுமனே குடிநீரை பாட்டில்களிலே அடைத்து விற்கிறார்கள்.  இது பெரும்பாலோருக்குத் தெரிவதில்லை.  அதுமட்டுமல்லாமல், அந்தக் குடிநீரை எந்தத் தேதி வரையில் பயன்படுத்தலாம் என்பதை அச்சிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், அந்தத் தேதி பெரும்பாலான குடிநீர் பாட்டில்களிலே இருப்பதில்லை.  இப்படி காலாவதியான குடிநீரை அருந்துவதால், கோடைக் காலத்திலே அதிகமான நோய்கள் மக்களுக்குப் பரவிக்கொண்டிருக்கின்றன.
அதுமட்டுமல்லாமல், பாலிதீன் பாக்கெட்டுகளிலே குடிநீர் அடைத்து விற்கப்படுகிறது,  வாட்டர் பாக்கெட்டுகள்.  இன்றைக்கு சென்னை மாநகராட்சி அதைத் தடை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கிறது என்ற செய்தியைப் பார்த்தோம். இந்த வாட்டர் பாக்கெட்டுகள்  மிக, மிக சுகாதாரக் கேட்டை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றன.  அதிலும் குறிப்பாக, பேருந்து நிலையங்களிலே அல்லது பேருந்து சென்று நிற்கின்ற இடங்களிலே இந்த குடிநீர் பாட்டில்களும், வாட்டர் பாக்கெட்டுகளும் மிக அதிக அளவில் விற்பனை செய்யப்படுகின்றன.  இந்த வாட்டர் பாக்கெட்டுகளை முழுமையாகத் தடை செய்வதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன்.  அதுமட்டுமல்லாமல், இந்தக் கோடைக் காலத்திலே குளிர்பானங்கள். பெரும்பாலும் பன்னாட்டு நிறுவனங்களால் பயன்படுத்தப்படுகிறது.  அவர்கள்தான் உற்பத்தி செய்கிறார்கள்.  அவர்கள் இங்கே லைசென்ஸ்  பெற்றுவிட்டு, ஒரு குறிப்பிட்ட அளவு தண்ணீரை மட்டுமே உறிஞ்சுவதற்கு லைசென்ஸ்  பெற்றுவிட்டு, இலட்சக்கணக்கான லிட்டர் அதிகமாக உறிஞ்சுகிறார்கள் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், அவர்கள் அதிலே குறிக்கப்பட்டிருக்கின்ற சுகாதார நெறிமுறைகள் எதையும் பின்பற்றுவது கிடையாது.  அதுமட்டுமல்லாமல், வெளியிலே போகும்போது, அந்த பாட்டில்களிலே வேறு விதமான குளிர்பானங்களைக்கூட அடைத்து அந்த பிராண்டுகளிலே விற்கின்ற ஒரு வழக்கமும் இருக்கிறது.  அதேபோல குளிர்பானங்கள், இவற்றிலே நடைபெறுகின்ற இந்த முறைகேடுகளை அரசு விழிப்போடு இருந்து தடுத்து நிறுத்த வேண்டும்.  இன்னொன்று, உணவுப் பொருட்களிலே இன்றைக்கு அதிகமாக நாம் கோழி இறைச்சியைப் பயன்படுத்துகின்றோம்.  அதிலே இன்றைக்குப் பன்னாட்டு நிறுவனங்கள் . . .

மாண்புமிகு பேரவைத் தலைவர்: திரு. ரவிக்குமார், உரையை முடியுங்கள். இன்னும் நிறைய அலுவல்கள் உள்ளன, முடியுங்கள்.

திரு. து. ரவிக்குமார்: K.F.C.- Kentucky Fried Chicken  போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் வந்திருக்கிறார்கள்.  அவர்கள் எல்லாம் தங்கள் நாடுகளில் காலாவதியாகிப் போன அந்தக் கோழி இறைச்சியை இங்கே கொண்டு வந்து விற்பனை செய்கிறார்கள் என்கின்ற செய்திகள் அவ்வப்போது வந்துகொண்டிருக்கின்றன.  எனவே, இந்தக் குடிநீர் பாக்கெட்டுகளை, பாட்டில்களை விற்பதையும், இதேபோன்ற கோழி இறைச்சிகளை விற்பதையும், குளிர்பானங்கள் விற்பதையும் அரசு விழிப்போடு கண்காணித்து, அத்தகைய முறைகேடுகள் செய்பவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் வலியுறுத்தி அமைகின்றேன்.

No comments:

Post a Comment