Saturday, November 27, 2010

நீல முத்தம் - அனார்

முத்தம் விசித்திரமான
நீலப் பறவையாக அலைகிறது
அூர்வமும் பிரத்தியேகமானதுமான பொழுதின்
நீல மின்னல்களை
என் ரகசிய வானத்தில் நீ கண்டதில்லையா
அளவுகளைத் தாண்டி நீண்டு செல்லும்
முத்தம் தேவதை

நீல இருளின் நடு ஆகாயத்தில் எனது முத்தம்
முழு நிலா

முழுவதுமாக நனையும்போது
நீ உணர்வதில்லையா
எனது முத்தம் சீரான மழையென
பயிற்சிகளைப் ூரணப்படுத்தியிருக்கும்
சிப்பாய்களைப்போல
மிடுக்கும் ஒழுங்குமாக
அவை ஆயத்தங்களுடனிருக்கின்றன
முத்தம் கனவின் உண்மை
உண்மையின் கனவு
காயாத கசிவுடன் கண்ணாடியில் படிந்திருக்கிறது
மெல்லிய நீலத்துடன்
எரியத் தொடங்குகிறது நெருப்பு
சதைகளாலான பெருகும் விருட்சத்தில்
பெயரிடமுடியாத கனி பழுத்திருக்கிறது
அதன் மென்மைகளோடும்
ஈரப்பதமோடும்
மென் நீலமெனத் தீராமல் படர்கிறது
கம்பீரமாக
பளபளப்பாக
கூர்மையான வாள்
என் உறையிலிருக்கிறது
அச்சங்கள் எதுவுமற்று

1 comment: