Monday, November 15, 2010

நீரால் அழிந்தது - ரவிக்குமார்
2008 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் கடுமையான மழை வெள்ளத்தால் கடலூர் மாவட்டம் உள்ளிட்ட பதினோரு கடலோர மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. எனது காட்டுமன்னார்கோயில் தொகுதி அதில் மோசமாகப் பாதிக்கப்பட்டது. அப்போது நான் இந்தியா டுடே பத்திரிகையில் எழுதிய கட்டுரை இது. நான் இந்தக் கட்டுரையின் இறுதியில் எழுதியிருப்பதைப் பாருங்கள். ' குடிசைகள் இல்லாத தமிழ்நாட்டை ' உருவாக்கவேண்டும் என நான் பலமுறை சட்டப்பேரவையில் வலியுறுத்தி வந்துள்ளேன். ஆனால் இக்கட்டுரை வெளியான பிறகு இதில் நான் கேட்டுக்கொண்டிருப்பது போலவே பாராளுமன்றத் தேர்தலின்போது தேர்தல் வாக்குறுதியாக ' குடிசைகள் ஒழிப்பை' தி.மு .க முன்வைத்தது. அதற்கான விவரங்களை நான்தான் கொடுத்தேன். அதன் தொடர்ச்சியாகவே இருபத்தொரு லட்சம் கான்கிரீட் வீடுகளைக் கட்டுகிற ' கலைஞர் வீடு வழங்கும் திட்டம் ' தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. இந்தத் திட்டத்தில் கட்டப்பட்ட முதல் வீட்டை முதல்வர் கலைஞர் எனது தொகுதியில் இருக்கும் வல்லம்படுகை கிராமத்தில் பயனாளிக்கு வழங்கினார். ‘ வலுவின்மையிலும் நெகிழ்விலும் நீருக்கு ஒப்பாக எதையும் சொல்ல முடியாது; என்றாலும் வலியதையும் கடினத்தையும் தாக்குவதில் நீருக்கு நிகராக எதுவும் இல்லை’ என்கிறது லாவோ ட்சுவின் கவிதையொன்று. அண்மையில் தமிழகத்தைத் தாக்கிய  மழை,வெள்ளத்தைப் பார்த்தவர்கள் இந்தக் கவிதை எந்த அளவுக்கு உண்மை என்பதை உனர்ந்திருப்பார்கள்.இந்த மழை,வெள்ளத்தால் தமிழகத்தின் பதினோரு மாவட்டங்களில் சுமார் இரண்டு கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 189 பேர் உயிரிழந்துள்ளனர். 4,997 கால்நடைகள் இறந்துள்ளன. 5,06,675 குடிசைகள் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. 4,93,970 குடிசைகள் பகுதியாகச் சேதமடைந்துள்ளன. 1597 கிராமங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன என உள்ளாட்சித்துறை அமைச்சர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள துணைக்குழு கூறியுள்ளது.
வெள்ள நிவாரணப் பணிகளை மாநில அரசும், மாவட்ட நிர்வாகங்களும் வேகமாகச் செய்துவருவதை எவரும் மறுக்கமுடியாது.முதல்வர் இதில் தனிப்பட்ட அக்கறை எடுத்துக்கொண்டு மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தைக் கூட்டி ஆணைகளைப் பிறப்பித்திருக்கிறார்.முழுமையாக பாதிப்படைந்த குடிசைகளுக்கு மட்டுமின்றி பகுதியளவு சேதமடைந்த குடிசைகளுக்கும்கூட இரண்டாயிரம் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.வெள்ளப் பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு இலவச பாடப் புத்தகங்களும், சீருடைகளும் வழங்க உத்தரவிட்டிருப்பது முதல்வரது நுண்ணுணர்வுக்குச் சான்றாகும்.இப்படி செயல்பட்டும்கூட ஆங்காங்கே அதிருப்திக் குரல்கள் எழுந்தே வருகின்றன.நிவாரணத்தொகையை அதிகரிக்கவேண்டும், வெள்ளத்தைத் தவிர்ப்பதற்கு நிரந்தரத் தீர்வு காணவேண்டும் என அரசியல் கட்சிகளும், விவசாய அமைப்புகளும் போராட்டங்களை நடத்தி வருகின்றன.
 இப்படியான மழை, வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக மத்திய அரசு ‘ பேரிடர் நிவாரண நிதி ’ என ஒரு நிதியை உருவாக்கி அதைச் செலவிடுவதற்கு வழிகாட்டு நெறிமுறைகளையும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிதியில் எழுபத்தைந்து சதவீதத்தை மத்திய அரசும் மீதமுள்ள இருபத்தைந்து சதவீதத்தை மாநில அரசும் கொடுக்க வேண்டும். இப்போதும்கூட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பேரிடர் நிவாரண நிதிக்கான வழிகாட்டுதலின்படிதான் நிவாரண உதவிகள் வழங்கப்படுகின்றன.தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை எண். 630 நாள்: 29.10.2007 என்பதுதான் இதற்கான அடிப்படை வழிகாட்டுதலை அளிப்பதாக உள்ளது. அதில் மக்களுக்குச் சாதகமான சில திருத்தங்களைச் செய்து மேலும் சில அரசாணைகளை மாநில அரசு இப்போது பிறப்பித்துள்ளது.அதிகாரிகள் இந்த அரசாணைகளின்படி நிவாரணம் வழங்காமல் பொத்தாம் பொதுவாக கொடுப்பதால்தான் இப்போது பிரச்சனை எழுந்துள்ளது.
 அரசாணை எண். 630 பிரிவு 1(மீ)ன் படி துணிமணிகள் இழப்புக்காக குடும்பம் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாயும், பாத்திரங்கள் மற்றும் வீட்டுச் சாமான்கள் இழப்புக்காக ஆயிரம் ரூபாயும் வழங்கவேண்டுமெனக் கூறப்பட்டுள்ளது. இதன்படி பார்த்தால் முழுமையாக பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்துக்கும் கூடுதலாக மேலும் இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்பட வேண்டும்.அதுபோலவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் குயவர்கள், தச்சர்கள் உள்ளிட்ட கைவினைஞர்களுக்கு அவர்களது பொருட்கள் எந்தளவு பாதிக்கப்பட்டுள்ளது என்பதைக் கணக்கெடுத்து ஒவ்வொருவருக்கும் இரண்டாயிரம் ரூபாய்வரை நிவாரணம் வழங்கவேண்டும். நெசவாளர்களுக்கு அவர்களது தறிகள் பாதிக்கப்பட்டிருந்தால் அதற்காக ஆயிரம் ரூபாய் முதல் இரண்டாயிரம் ரூபாய்வரை வழங்கவேண்டும் என இந்த அரசாணையின் பிரிவு 9ல் கூறப்பட்டுள்ளது. தற்போது செய்யப்பட்டுள்ள கணக்கெடுப்பில் இந்த அம்சங்கள் விடுபட்டுள்ளன.
கிராமப்பகுதிகளில் வேலையற்ற இளைஞர்கள் பலர் சுயதொழிலாக மீன் குட்டைகள்,எறால் குட்டைகள் போன்றவற்றை வைத்திருக்கிறார்கள்.நாகை மாவட்டத்தில் இது அதிகம். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மீன் குட்டைகள், எறால் குட்டைகள் சேதமடைந்திருந்தால் அதைக்கணக்கிட்டு அதன் உரிமையாளர்கள் மானியம் எதுவும் பெறாதவர்களாக இருப்பின் அவர்களுக்கு நான்காயிரம் ரூபாய் வரை இழப்பீடு வழங்கலாமென இந்த அரசாணையின் பிரிவு 8(தீ)ல் கூறப்பட்டுள்ளது.ஆனால் இப்படியான கணக்கெடுப்பு எதுவும் செய்யப்படவில்லை என மக்கள் குறைபட்டுக்கொள்கின்றனர்.
 வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சேதமடைந்த பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 7,500 ரூபாய் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதாவது ஏக்கர் ஒன்றுக்கு மூவாயிரம் ரூபாய். இது மத்திய அரசு கூறியிருப்பதைக் காட்டிலும் அதிகம் என்பது உண்மைதான்.ஆனால் இன்றைய நிலையில் இது விவசாயிகளுக்கு போதுமான நிவாரணம் அல்ல.ஒரு ஏக்கர் நெல் சாகுபடி செய்ய குறைந்தது பத்தாயிரம் ரூபாயாவது செலவு செய்யவேண்டியிருக்கிறது என அவர்கள் கூறுகின்றனர்.. அப்படிப்பார்த்தால் ஹெக்டேருக்கு இருபத்தைந்தாயிரம் ரூபாய் நட்டம். எனவே நிவாரணத் தொகையை குறைந்தது 15,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானதுதான்.அதுமட்டுமல்லாமல் அந்த விவசாயிகளுக்கு  விதை, இடுபொருட்கள், பூச்சி மருந்துகள் முதலியவற்றையும் மானிய விலையிலாவது  வழங்குவதற்கு அரசு முன்வரவேண்டும்.
இயற்கைப் பேரிடர்கள் வந்தால் அதனால் அதிகம் பாதிக்கப்படுவது நிலமற்ற ஏழை விவசாயக் கூலிகள்தான். அவர்களுக்கு உடனடியாக வேலை எதுவும் கிடைக்காது என்பதால் அரசு அளித்த பத்து கிலோ அரிசி தீர்ந்ததும் அவர்கள் பட்டினியை எதிர்நோக்கவேண்டியிருக்கும். அதைக் கருத்தில்கொண்டுதான் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் விவசாயக் கூலிகளுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் விதமாக குறைந்தது பத்து நாட்கள்,அதுவும் நாளொன்றுக்கு குறைந்த பட்ச ஊதியமான 80 ரூபாய் கிடைக்கும் வகையில் வேலைவாய்ப்பு வழங்கப்படவேண்டும் என இந்த அரசாணையின் பிரிவு 6ல் குறிப்பிட்டிருக்கிறார்கள்.அந்த ஊதியத்தில் ஒரு பகுதியை தானியமாக வழங்கவேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.  வெள்ள சேதத்தின் தீவிரத்தைக் கணக்கில் கொண்டு வெள்ளம் பாதித்த கிராமங்கள் அனைத்திலும் குறைந்தது முப்பது நாட்களுக்கு தேசிய வேலை உறுதித் திட்டத்தின்கீழ் வேலை வழங்க வகை செய்தால் அது விவசாயக் கூலிகளுக்கு உதவியாக இருக்கும்.இந்தத் திட்டத்தில் போதுமான அளவு நிதி செலவிடப்படவில்லை என ஏற்கனவே மத்திய தணிக்கைத்துறை கூறியுள்ள நிலையில் அந்தக் குறையைக் களைவதற்கும் இதை வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இந்திரா ஆவாஸ் யோஜனா திட்டத்தில் கட்டப்பட்ட தொகுப்பு வீடுகளில் பெரும்பாலானவை குடிசை வீடுகளைவிட மோசமான நிலையில் உள்ளன என்பதை அனைவருமே அறிவார்கள். ஆனால் அந்த வீடுகளைக் கல்வீடுகளாகக் கருதி தற்போது ஆயிரம் ரூபாய்தான் நிவாரணம் வழங்கப்படுகிறது.பெரும்பாலான இடங்களில் இந்த வீடுகளை உள்ளே வைத்து அதைச் சுற்றி மண் சுவர் எழுப்பி கூரைவேய்ந்து வைத்திருக்கிறார்கள்.‘ பக்கா வீடுகள்‘ என வகைப் படுத்தப்படும் இந்த வீடுகள் ஐம்பது சதவீதத்துக்குமேல் சேதமடைந்திருந்தால் இருபத்தைந்தாயிரம் ரூபாய் வழங்கவேண்டுமென அரசாணை சொல்கிறது.சேதத்தை மதிப்பிட பொதுப்பணித்துறை பொறியாளர் வரவேண்டும். அவர் வந்து சான்றளித்து நிவாரணம் வழங்க கால தாமதம் ஏற்படுமென அதிகாரிகள் சொல்கிறார்கள்.இத்தகைய நடைமுறைப் பிரச்சனை இருப்பது உண்மைதான் எனினும் அதற்காக பாதிக்கப்பட்ட இந்த மக்கள் வெறும் ஆயிரம் ரூபாய் மட்டும் பெறுவது எவ்விதத்திலும் நியாயமல்ல.

     இந்தியாவிலேயே குடிசை வீடுகள் நிறைந்துள்ள மாநிலமாகத் தமிழகம் இருக்கிறது. தற்போதைய வெள்ளத்தில் பத்து லட்சத்துக்கும் அதிகமான குடிசைகள் பாதிக்கப்பட்டிருப்பதை மாநில அரசே புள்ளி விவரமாக வெளியிட்டுள்ளது. தற்போது மாநில அரசால் அளிக்கப்படும் ஆயிரம் அல்லது இரண்டாயிரம் ரூபாய் நிவாரணத்தைக் கொண்டு இந்தக் குடிசைகளை சீர்படுத்த முடியாது. இந்நிலையில் ஆண்டுதோறும் இந்தக் குடிசைகளுக்கு ஆயிரம், இரண்டாயிரம் என நிவாரணம் வழங்குவதைவிடவும், இந்தப்பிரச்சனைக்கு நிரந்தரமாகத் தீர்வுகாணும் வகையில் இந்தக் குடிசைகள் அனைத்தையும் மாற்றிவிட்டுத் தரமான கான்கிரீட் வீடுகளை அமைத்துத்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளமான பகுதிகளில் நகரப்பகுதிகளில் இருப்பதைப்போல அடுக்குமாடி குடியிருப்புகளை அமைத்துத்தந்தால் வெள்ளப்பாதிப்பிலிருந்து அவர்களைக் காப்பாற்றுவதோடு மனைப்பட்டா இல்லை என்கிற பிரச்சனையும் தீர்க்கப்படும்.
    இன்னும் ஒருசில மாதங்களில் நாடளுமன்றத் தேர்தல் வரப்போகிறது. தேர்தல் வாக்குறுதியாக எதைச் சொன்னால் ஓட்டு வாங்கலாம் என அரசியல் கட்சிகள் தலையைப் பிய்த்துக்கொண்டிருக்கின்றன. பயங்கரவாதம் பற்றிப் பேசியே மக்களை மயக்கிவிடலாம் என அவர்கள் எண்ணக்கூடும். குடிசைகளை ஒழிப்போம். கான்கிரீட் வீடுகளை வழங்குவோம் என அவர்கள் பொய்யாகவாவது ஒரு வாக்குறுதியை வழங்கக்கூடாதா?நன்றி:இந்தியா டுடே 11.12.2208

No comments:

Post a Comment